Tuesday, September 20, 2011

Thiruthalinathar Temple at Tiruppattur (Karaikkudi) (Paadal Petra Stalam)

அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில்

மூலவர்:திருத்தளி நாதர்
அம்மன்:சிவகாமி
பாடியவர்கள்:சம்பந்தர், அப்பர், அருணகிரியார்
தேவாரப்பதிகம் 
நாற விண்ட நறுமா மலர்க்கவ்வித் தேறல் வண்டு திளைக்குந் திருப்புத்தூர் ஊறல் வாழ்க்கை உடையார் அவர்போலும் ஏறுகொண்ட கொடியெம் இறையாரே.
-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற பாண்டியநாட்டுத்தலங்களில் இது 6வது தலம்

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அஷ்ட பைரவர் தலம்
இத்தலத்தில் உள்ள நடராஜர் கவுரி தாண்டவ கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்குள்ள தலவிநாயகரின் திருநாமம் பொள்ளாப்பிள்ளையார்.
வால்மீகி தவம் செய்த இடத்தின் வடிவம், கருவறைக்கு பின்புறம் உள்ளது. இந்திரனின் மகன் ஜெயந்தன் கந்தபுராணத்தில் முக்கிய பாத்திரம். இவனை பத்மாசுரன் கடத்தி வந்து சிறையில் அடைத்தான்.
தாயின் மானம் காக்க சிறைப்பட்ட ஜெயந்தனை சூரபத்மனிடம் போரிட்டு மீட்டார் முருகன். இவனுக்கு இக்கோயிலில் தனிச்சன்னதி இருக்கிறது.
இவனுக்கு சித்திரை மாதத்தில் இங்கு விழா எடுக்கப்படுகிறது. மகாவிஷ்ணு இத்தலத்தில் திருத்தளிநாதரை வழிபட்டுள்ளார். இவரும் யோகநிலையில், சுவாமிக்கு பின்புறம் தனிசன்னதியில் காட்சி தருகிறார். இவர், "யோகநாராயணர்' என்று அழைக்கப்படுகிறார். ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சநேயர் உடன் இருக்கின்றனர்.
ராகு கேது தோஷம் நீக்கும் திருநாகேஸ்வரர் சன்னதியும் இங்குள்ளது. ராகு காலத்தில் இவரை வணங்குகின்றனர். சுப்பிரமணியர் வடக்கு நோக்கியபடி வள்ளி, தெய்வானை யுடன் காட்சி தருகிறார்.
இவரை, அருணகிரியார் திருப்புகழில் பாடியுள்ளார். நடராஜர் கவுரிதாண்டவ கோலத்தில் உள்ளார். தெட்சிணாமூர்த்தி சீடர்கள் இல்லாமல் உள்ளார்.
நவக்கிரக மண்டபத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலையில் உள்ளன. இப்படி, பலதரப்பட்ட விசேஷங்களை அடக்கியது இந்தக்கோயில்.

தலபெருமை:சிவ பக்தனான இரண்யாட்சகனுக்கு அந்தகாசுரன், சம்பாசுரன் என இரண்டு மகன்கள் பிறந்தனர். இவர்கள் சிறந்த சிவபக்தர்களாக இருந்தாலும், தேவர்களுக்கு பெரும் துன்பம் கொடுத்தனர். தேவர்கள் சிவபெருமானை துதித்தனர். சிவன் தனது அம்சமாக விஸ்வரூபம் எடுத்து வந்தார். அந்தகாசுரன், சம்பகாசுரனை வதம் செய்தார். இவரே பைரவர் ஆவார்.
அசுரர்கள் என்றாலும் அவர்கள் பக்தர்கள் என்பதால் பைரவருக்கு தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க இங்கு சிவலிங்க பூஜை செய்தார். இவரே இத்தலத்தில் "யோகபைரவராக' காட்சி தருகிறார்.
இவர் வலக்கரத்தில் சிவலிங்கத்தை வைத்து, கால்கட்டை விரலை தரையில் ஊன்றியபடி யோகநிலையில் காட்சி தருகிறார். இவருக்கு வெண்ணிற பட்டாடை அணிவித்து அலங்கரிப்பது விசேஷம்.
யோக நிலையில் இருப்பதால் இவருக்கு "நாய்' வாகனம் கிடையாது. கிரக தோஷங்கள் நீங்க நவக்கிரக தலங்களுக்கு செல்ல முடியாவிட்டால், இங்குள்ள யோக பைரவரை வணங்கினால் போதும். "ஆபத்துத்தாரண பைரவர்' என்று அழைக்கப்படும் இவர் எல்லா தோஷங்களையும் நீக்குவார் என்பது ஐதீகம்.
தேய்பிறை, வளர்பிறை அஷ்டமி தினங்களில் பைரவருக்கு வாசனைப்  பொருட்கள் வைத்து வழிபடுகிறார்கள். சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமையன்று, இவருக்கு ஒரு நாள் விழா நடக்கிறது. அப்போது பைரவர் உற்சவர் குதிரை வாகனத்தில் புறப்பாடாகிறார். கார்த்திகையில் சம்பகசஷ்டி விழாவின்போது ஆறு நாட்கள், "அஷ்டபைரவ யாகம்' நடக்கிறது. இந்த யாகம் மிகவும் விசேஷமானது. 

தல வரலாறு:முன்னொரு காலத்தில் கொலை, கொள்ளை போன்ற பாவச்செயல்களில் ஈடுபட்டு வந்த வால்மீகி, தன்னை திருத்திக்கொள்ள வேண்டி கொன்றை மரங்கள் நிறைந்த ஒரு வனத்தில் சிவனை நோக்கி கடுந்தவம் இருந்தார். நீண்டகாலம் தவம் செய்ததால், அவர் அமர்ந்திருந்த இடத்தை சுற்றிலும் கரையான்கள் புற்று கட்டின. அவரது தவத்தை மெச்சிய சிவன் அவருக்கு காட்சி கொடுத்தார்.
புற்றில் இருந்த வால்மீகிக்கு காட்சி கொடுத்ததால், இவர் "புற்றீஸ்வரர்' எனப்பட்டார். அவ்வாறு காட்சி கொடுத்ததின் அடிப்படையில் எழுப்பப்பட்ட தலமே இது.
புற்றின் முன் சிவன் காட்சி தந்ததால், "புத்தூர்' என்று அழைக்கப்பட்ட இத்தலம், பின்னர் "திரு' என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு, "திருப்புத்தூர்' ஆனது. பிற்காலத்தில், இவ்விடத்தில் மன்னர்கள் கோயில் கட்டினர்.

குடும்பம் செழிக்க, செய்த பாவத்திற்கு மன்னிப்பு கிடைக்க இங்கு வேண்டிக்கொள்ளலாம். சுவாமிக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து விசேஷ பூஜை செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

போன்: +91- 94420 47593.


No comments:

Post a Comment