Saturday, September 17, 2011

Paridiyappar Temple at Paridiyappar Kovil (Saliyamangalam) near Thanjavur (Paadal Petra Stalam)

அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:பாஸ்கரேஸ்வரர், பரிதியப்பர்
அம்மன்:மங்களாம்பிகை
பாடியவர்கள்:சம்பந்தர், அப்பர், சுந்தரர் .
தேவாரப்பதிகம்:
நீர்புல்கு புன்சடை நின்றிலங்க நெடுவெண் மதிசூடித் தார்புல்கு மார்பில் வெண்ணீறு அணிந்து தலையார் பலிதேர்வார் ஏர்புல்கு சாயலெழில் கவர்ந்த இறைவர்க்கு இடம்போலும் பார்புல்கு தொல்புகழால் விளங்கும் பரிதிந் நியமமே.
-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 101வது தலம்.

தலபெருமை:பிதுர் தோஷ பரிகார தலம்: தட்சன் யாகம் நடத்திய போது சிவனின் அனுமதியின்றி சூரியன் யாகத்தில் கலந்து கொண்டான். இதனால் அகோரவீரபத்திரரால் சூரியன் தண்டிக்கப்பட்டான். தோஷமும் ஏற்பட்டது. சூரியன் தன் தோஷம் போக்க 16 சிவத்தலங்கள் சென்று வழிபாடு செய்தான். அதில் சங்கரன்கோவில், தலைஞாயிறு, சூரியனார் கோவில், திருமங்கலக்குடி, வடஇந்தியாவில் உள்ள கோனார்க் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
ஆயுள்விருத்தி தலம்: மார்க்கண்டேயன் இங்கு அருவ வடிவில் தினமும் சிவபூஜை செய்வதாக ஐதீகம். நோயினால் நீண்ட நாள் பாதிக்கப்பட்டவர்கள், தீராத நோயினால் அவதிப்படுபவர்கள் இங்கு வழிபாடு செய்து பலனடைகிறார்கள். 60,70,80 வயதானார்கள் இத்தலத்தில் "சஷ்டியப்தபூர்த்தி' திருமணம் செய்வதால் அவர்களது ஆயுள் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
பிரமசர்மா என்பவனும் அவரது மனைவி சுசீலையும் தாங்கள் செய்த பாவத்தினால் பருந்தும் கிளியுமாக மாற சாபம் பெறுகின்றனர். இவர்கள் தாங்கள் செய்த பாவத்தை மன்னிக்க இத்தலம் வந்து பிரார்த்தனை செய்து சாபவிமோசனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தல வரலாறு:பரிதி என்று அழைக்கப்படும் சூரியன் கொடிய நோயினால் பாதிக்கப்படுகிறான். நோயிலிருந்து தன்னை காக்க சிவனிடம் வேண்ட, இத்தலம் வந்து தீர்த்தம் உண்டாக்கி, சிவலிங்கம் அமைத்து தன்னை வழிபட்டால் நோய் விலகும் என்கிறார் சிவன். சூரியனும் அதன்படி செய்ய, அவனது நோய் நீங்கியது. இதனால் இங்குள்ள இறைவன் பரிதியப்பர், பரிதீசர், பாஸ்கரேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
இத்தலத்திற்கு இன்னொரு வரலாறும் உண்டு.ராமபிரானின் முன்னோர்களான சூரிய குளத்தில் தோன்றிய சிபி சக்கரவர்த்தி, வயதான காலத்தில் மகனிடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சிவத்தலங்களை தரிசிக்க புறப்பட்டான். (இவன் புறாவிற்காக தன் சதையை கொடுத்தவன்). அப்போது இந்த இடத்திற்கு வந்ததும் அசதியின் காரணமாக இளைப்பாறினான்.
குதிரைச்சேவகன் குதிரைக்கு புல் சேகரித்து கொண்டிருந்தான். புல்லுக்காக பூமியை தோண்டியபோது, அவன் கையிலிருந்த ஆயுதம் சூரியனால் அமைக்கப்பட்டு, பூமிக்குள் இருந்த லிங்கத்தின் மீது பட்டது. உடனே லிங்கத்திலிருந்து ரத்தம் பீறிட்டது. இதனை அறிந்த மன்னன் அந்த இடத்தை தோண்டுமாறு உத்தரவிட்டான். உள்ளிருந்து சூரிய லிங்கம் வெளிப்பட்டது. அதற்கு அபிஷேகம் ஆராதனை செய்து வழிபட்டான். இதை நினைவு படுத்தும் வகையில் இன்றும் கூட சிவலிங்கத்தில் ரத்த வடு உள்ளது.
லிங்கம் இந்த இடத்திற்கு எப்படி வந்தது என்பதை ஒரு முனிவர் மூலம் அறிந்து, அந்த இடத்தில் கோயில் கட்டினான்.
சூரியனால் அமைக்கப்பட்ட லிங்கம் சூரிய குல மன்னனால் வெளி உலகிற்கு தெரிய வந்தது. இந்த லிங்கத்திற்கு சூரியபகவான் ஆண்டுதோறும் பங்குனி 18,19,20 தேதிகளில் தன் கதிர்களை வீசி சூரிய பூஜை செய்கிறான்

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இந்த லிங்கத்திற்கு சூரியபகவான் ஆண்டுதோறும் பங்குனி 18,19,20 தேதிகளில் தன் கதிர்களை வீசி சூரிய பூஜை செய்கிறான். சிவன் எதிரில் சூரியபகவான் நின்று சிவதரிசனம் செய்யும் கோலம் வேறு எங்கும் காண இயலாது. 3 சண்டிகேஸ்வரர் பிரகாரத்தில் அருள்பாலிக்கின்றனர். சிவனின் பின்புறம் கோஷ்டத்தில் மகாவிஷ்ணுவும் ஆஞ்சநேயரும் அருகருகே அருள்பாலிப்பது சிறப்பு.


இத்தலத்தில் சூரியனுக்கு தோஷம் நிவர்த்தி ஆனதால், இது பிதுர் தோஷ பரிகார தலமாக விளங்குகிறது.
ஜாதகரீதியாக எந்த கிரகத்தினாலும் பிதுர் தோஷம் ஏற்பட்டாலும் இத்தலத்தில் பரிகாரம் செய்யலாம்.
மேலும் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், சூரிய திசை நடப்பவர்கள், சிம்ம லக்னம், சிம்மராசியில் பிறந்தவர்கள், சித்திரை, ஆவணி, ஐப்பசி மாதங்களில் பிறந்தவர்கள், தமிழ் மாதத்தின் முதல் தேதியில் பிறந்தவர்கள் ஆகியோர் தமிழ் மாத வளர்பிறையில் வரும் முதல் ஞாயிற்று கிழமையில் சிவனையும் சூரியனையும் வழிபட்டால் அவர்களுக்குள்ள தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

போன்: +91- 4372-256 910.

No comments:

Post a Comment