Monday, September 5, 2011

Arunachaleswarar Temple at Tiruvannamalai (Pancha Bhoota Stalam, Paadal Petra Stalam)

அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்
அப்பர், சம்பந்தர்
தேவாரப்பதிகம்,
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன் பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம் முழவதிரும் அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே.
-திருஞானசம்பந்தர்
தேவாரப்பதிகம் பெற்ற நடுநாட்டு தலங்களில் 22வது தலம்.
திருவிழா:
கார்த்திகை மாதம் பிரம்மோற்சவம் கார்த்திகை தீபம் 10 நாட்கள் திருவிழா, மாசி மகா சிவராத்திரி *தை மாதம் மாட்டுப்பொங்கல் திருவூடல் உற்சவம் சுவாமி ஊஞ்சல் ஆடும் உற்சவம் *மாதா மாதம் இத்தலத்தில் பிரம்மோற்சவம் நடைபெறும். *இங்கு ஆடிப்பூரம் அன்று தீ மிதி திருவிழா அம்மன் சந்நிதி முன்பாக நடக்கும் இது போல் வேறு எந்த சிவ தலத்திலும் தீ மிதி திருவிழா நடப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. *தினசரி 6 கால பூஜை *மாசி மகத்தன்று பள்ளி கொண்டாபட்டு என்ற ஊருக்கு சுவாமி சென்று ஆற்றில் தீர்த்தவாரி செய்து வருவார்.(சிவபெருமானே வள்ளாள மகராஜனுக்கு பிள்ளையாக பிறந்து அவர் இறந்தவுடன் ஈமக்கிரியை செய்த வரலாற்றைக் குறிப்பது இத்திருவிழா) *தை மாதம் 5 ந் தேதி சுவாமி சுற்றுவட்டாரக் கோயில்களில் காட்சி தருவார். அதன்படி தை மாதம் 5ந்தேதி மணலூர் பேட் என்ற ஊருக்கு சென்று சுவாமி காட்சி தருவார். *தை மாதம் ரதசப்தமி அன்று கலசப்பாக்கம் என்ற ஊரில் அண்ணாமலையார் காட்சி தருவார். *பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம் 6 நாட்கள் *வருடத்தின் அனைத்து மாதங்களிலும் ஏதாவது திருவிழா இத்தலத்தில் நடந்வண்ணமே இருக்கும். *ஒவ்வொரு மாதமும் பிரதோசம் மிகவும் சிறப்பாக நடைபெறும். *தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்களில் விசேச பூஜைகள்
 தல சிறப்பு:
*லிங்கமே மலையாக அமைந்த மலை *தென்னிந்தியாவின் மிகச் சிறந்த சிவதலமாக திகழும் சிவ தலம் *பஞ்சபூத தலங்களில் முக்கியமான அக்னி தலம் இது. *நினைத்தாலே முக்தி தரும் திருஅண்ணாமலை என சிறப்பு பெற்ற தலம். *நான் என்ற அகந்தை அழிந்த தலம் *உண்ணாமுலையம்மன் சிவபெருமானிடம் இடப்பாகம் பெற கிரிவலம் வந்து தவம் செய்த தலம் *பார்வதிக்கு சிவபெருமான் தன் உடம்பில் சரிபாதியாக இடப்பாகம் தந்து ஜோதி சொரூபமாய் காட்சி தந்த தலம். *அருணகிரிநாதர் பிறந்து வளர்ந்து வாழ்ந்து முக்தி அடைந்த தலம் *அருணகிரிநாதர் வாழ்க்கை வெறுப்புற்று தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது முருகனே வந்து காப்பாற்றி திருப்புகழ் பாட உத்தரவிட்ட தலம் *எல்லா சிவதலத்திலும் மூலவர் பின்புறமுள்ள லிங்கோத்பவர் தோன்றிய தலம். *9 கோபுரம் 7 பிரகாரங்களுடன் 25 ஏக்கரில் அமைந்துள்ள மிகப்பெரிய தலம் *தென்னிந்தியாவலேயே 2 வது உயரமான கோபுரம்(217 அடி) கொண்ட அற்புத அழகு கொண்ட தலம். *தமிழகத்தின் திருப்பதி என்று போற்றப்படுமளவுக்கு லட்சோபலட்சம் பக்தர்கள் தினந்தோறும் வந்து வழிபடும் அதி அற்புத சக்தி வாய்ந்த சிவ தலம். *6 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் இது. சேர சோழ பாண்டிய வைசாள மன்னர்களால் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணி செய்யப்பட்ட மிகப்பழமையான திருக்கோயில் இது. *ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த தற்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறப்பு வாய்ந்த மலை. *சேஷாத்திரி சுவாமிகள், ரமண மக ரிஷி, விசிறி சாமியார் போன்ற எண்ணற்ற ஞானிகள் வாழ்ந்து முக்தியடைந்த தலம் கிரிவல சிறப்பு : கார்த்திகை மாதம் கிருத்திகை நாளன்றுதான் பார்வதிக்கு சிவன் இடப்பாகம் அளித்தார் என்பதால் அன்றைய தினம் சுற்றுவது சிறப்பு முனிவர்களும் ஞானிகளும் சித்தர்களும் ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பின்போதும் பிரதோச காலத்திலும் மலை வலம் வந்தார்களாம். எனவே அந்த நாளில் கிரிவலம் சுற்றுவது நல்லது. சந்திரன் பவுர்ணமி அன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகஅளவில் பெற்று பூர்ண நிலவாக சந்திரன் நிறைந்த உயிர்சக்திகளை தருகிறார்.இதனால் பவுர்ணமி அன்று கிரிவலம் வருதல் நல்லது. இந்த கோயில் அக்னி கோயில். அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை. இந்த கோயிலில் செவ்வாய் கிழமை அன்று மட்டும் சிறப்பு பூஜைகள் நடக்கும்.அன்றும் கிரிவலம் வரலாம். ஞாயிறு சிவபதவிகள் கிடைக்கும் திங்கள் இந்திர பதவி கிடைக்கும் செவ்வாய் கடன் வறுமை நீங்கும், தொடர்ந்து வரும் ஏழு பிறப்புகளையும் நீக்கி சுபிட்சம் பெறலாம். புதன் கலைகளில் தேர்ச்சியும் முக்தியும் பெறலாம் வியாழன் ஞானிகளுக்கு ஒப்பான நிலையை அடையலாம் வெள்ளி விஷ்ணு பதம் அடையலாம் சனி நவகிரகங்களை வழிபட்டதன் பயன் கிடைக்கும். அம்மாவாசை மனதில் உள்ள கவலைகள் போகும். மனநிம்மதி கிடைக்கும். 48 நாட்கள் விரதமிருந்து அதிகாலையில் கணவனும் மனைவியும் நீராடி மலை வலம் வந்தால் மகப்பேறு கிடைக்கும்.
அண்ணாமலை பெயர்க் காரணம் :
அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பெயர். அண்ணா என்றால் நெருங்கவே முடியாது என்று பொருள் தரும்.பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது.
மலை : கயிலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு. ஆனால் லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு. இந்த மலைதான் இத்தலத்துக்கே மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகிறது. திருவண்ணாமலை கிரிவலம் என்பது புகழ் பெற்றது. இந்த மலையையே சிவலிங்கமாக கருதி சித்தர்கள் முனிவர்கள் ஞானிகள் எல்லோரும் வழிபட்டுள்ளனர்.உலகம் தோன்றிய காலத்திலிருந்தே இம்மலை உள்ளதாம்.கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும் திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும் துவாரயுகத்தில் பொன்மலையாகவும் இப்போது கலியுகத்தில் கல்மலையாகவும் உள்ளது.
இம்மலைக்கு காந்த சக்தி இருப்பதாக (காந்த மலை)புவியியல் வல்லுனர்களும் ஆராய்ந்து கூறியுள்ளனர். கிரிவலம் செல்லும்போது எங்காவது துவங்கி எங்காவது முடிக்கக்கூடாது. மலையைச் சுற்றி 14 கி.மீ. பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லக்கூடாது.
கிரிவலப்பாதையில் எட்டு திசைகளுக்கும் ஒவ்வொரு லிங்கம் இருக்கும். 1.இந்திர லிங்கம் 2.அக்னி லிங்கம் 3. எமலிங்கம் 4. நிருதி லிங்கம் 5. வருண லிங்கம் 6. வாயுலிங்கம் 7.குபேர லிங்கம் 8. ஈசான லிங்கம் ஆகியவற்றை வணங்கி செல்ல வேண்டும். மலையை ஒட்டிய பக்கம் செல்லாது இடதுபக்கமாகவே செல்லவேண்டும்.நம்மோடு சித்தர்களும் நடந்து வருவார்களாம்.அவர்கள் தான் நம் மனதில் நினைப்பதை இறைவனிடம் கொண்டு சேர்ப்பார்களாம்.பேசிக்கொண்டு செல்லக்கூடாது.இறைவனை நினைத்தபடியே அண்ணாமலைக்கு அரோகரா என்று மனதில் நினைத்தபடியே நடக்க வேண்டும்.சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மலையைப்பார்த்து கைகூப்பி வணங்க வேண்டும். வணங்கி விட்டு வேறு திசை பார்க்காது வானத்து நிலவை ஒருதரம் பார்த்தல் அவசியம். இம்மலையை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் செய்கின்றனர்.

இத்தலத்தில் வழிபட்டால் மனத்துயரம் நீங்கும்.கேட்கும் வரங்களை எல்லாம் தரும் மூர்த்தியாக அருணாச்சலேசுவரர் உள்ளார். கல்யாண வரம் வேண்டுவோர் , குழந்தை வரம் வேண்டுவோர், வியாபாரத்தில் விருத்தியடைய விரும்புவோர், உத்தியோக உயர்வு வேண்டுவோர்., வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்பு வேண்டுவோர் என்று எந்த வேண்டுதல் என்றாலும் இத்தலத்து ஈசனிடம் முறையிட்டால் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

உடல் ரீதியாக பலம் குன்றியவர்கள், பிணி கண்டவர்கள், பிரிந்து வாழும் தம்பதிகள், அண்ணன் தம்பிகள் பிரச்னைகள் என்று அனைத்து தரத்து பிரச்சனைகளையும் போக்கும் தலம். மேலும் இந்த ஈசனை வணங்குவோர்க்கு வாழ்வில் ஏற்படும் தடைகள் நீங்கும்.

குறிப்பாக மனை அமைதி வேண்டுவோர் இத்தலத்தல் லட்சக்கணக்கில் பிரார்த்தனை செய்கின்றனர்.இத்தலத்தில் ஈசனை வழிபட்டால் முக்தி கிடைக்கும். 
தல வரலாறு:
விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரிவன் என்ற போட்டி ஏற்பட்டது. சிவபெருமானிடம் இருவரும் சென்று கூற அவரோ யார் எனது அடி முடியை க் கண்டு வருகிறீர்களோ அவர்தான் பெரியவர் என்று தெரிவித்து விட்டார்.ஜோதிப் பிளம்பாக சிவபெருமான் காட்சி தந்தார். அந்த ஜோதியே நெருப்பு மலையாக மாறியது. இதுவே கோயிலின் பின்னணியிலுள்ள திருவண்ணாமலையாகும்.
சிவனின் அடியை காண்பதற்காக, விஷ்ணு வராக(பன்றி)அவதாரமெடுத்து பூமிக்குள் சென்றார். அது போய்க் கொண்டே இருந்தது. திரும்பி வந்து முடியவில்லை என்று சிவபெருமானிடம் ஒப்புக்கொண்டார்.
அடுத்ததாக பிரம்மா, அன்னப்பறவை உருவெடுத்து சிவபெருமானின் முடியை கண்டு வர கிளம்பிப்போனவர், அது முடியாது எனத் தெரிந்தவுடன் திரும்ப வந்து தாழம்பூவை சாட்சி சொல்ல வைத்து சிவபெருமானிடம் தான் தங்களது முடியைக் கண்டேன் என்றார்.பிரம்மன் பொய் சொன்னது அறிந்து உனக்கு பூமியில் கோயிலோ பூஜையோ கிடையாது என சாபமிட்டார்.விஷ்ணு உண்மையை கூறியதால் தனக்கு சமமாக பூமியில் கோயிலும் பூஜையும் கிடைக்க வரம் அளித்தார்.பொய் சொன்ன தாழம்பூவை தன்னை தீண்டக்கூடாது என்று சபித்தார். அதனால்தான் இன்றும் சிவதலங்கள் எதிலுமே  தாழம்பூவை மட்டும் படைக்கவே மாட்டார்கள்.

அத்துடன் மற்றொரு வரலாறும் இத்தலத்திற்கு உண்டு.
பிருங்கி முனிவர் தியை வணங்காமல் சிவனை மட்டுமே வணங்கி வந்தார். அவருக்கு, சிவமும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக சிவன் அம்பிகையை பிரிவது போல ஒரு லீலை நிகழ்த்தினார். அவள் இத்தலத்தில் அவருடன் மீண்டும் இணைய தவமிருந்தாள்.
அவளுக்கு காட்சி தந்த சிவன், தனது இடது பாகத்தில் ஏற்று, அர்த்தநாரீஸ்வரராக காட்சிகொடுத்தார். பிருங்கி உண்மையை உணர்ந்தார். இந்நிகழ்வு ஒரு சிவராத்திரி நாளில் நிகழ்ந்தது. இவ்வாறு சிவன் அர்த்தநாரீஸ்வர வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய தலம் இது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லிங்கமே மலையாக அமைந்த மலை தென்னிந்தியாவலேயே 2 வது உயரமான கோபுரம்(217 அடி) கொண்ட அற்புத அழகு கொண்ட தலம். இந்த மலையை கீழ் திசையில் இருந்து பார்த்தால் ஒன்றாகத் தெரியும்.இது ஏகத்தை குறிக்கும்.மலை சுற்றும் வழியில் இரண்டாக தெரியும்.இது அர்த்தநாரீசுவரரை குறிக்கும்.மலையின் பின்னால் மேற்கு திசையில் பார்த்தால் மூன்றாக தெரியும்.இது மும்மூர்த்திகளை நினைவு படுத்தும். மலை சுற்றி முடிக்கும்போது ஐந்து முகங்கள் காணப்படும். அது சிவபெருமானின் திருமுகங்களை குறிக்கும்.
விஞ்ஞானம் அடிப்படையில்: நாட்களில் நிலவின் ஒளி மலை மீதும், மலையிலுள்ள மூலி‌கை செடிகள் மீதும் பட்டு பிரதிபலிக்கிறது. அந்த நாட்களில் மலையை சுற்றி வந்தால் மலையிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் நம்மீது பட்டு உடலும் உள்ளமும் தூய்மையடைகிறது. மலையைச் சுற்றும் போது கைகளை வீசிக் கொண்டு நடக்காமல் சாதாரணமாக நடந்து செல்ல வேண்டும். 
போன்:+91-4175 252 438.


No comments:

Post a Comment