Thursday, September 29, 2011

Palaasavana Nathar Temple at Tirunaaloor Mayaanam near Kumbakonam (Paadal Petra Stalam)

அருள்மிகு பலாசவனநாதர் திருக்கோயில்


மூலவர்:ஞானபரமேஸ்வரர், பலாசவனநாதர்
அம்மன்: ஞானாம்பிகை, பெரிய நாயகி
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
தேவாரபதிகம் பத்துத் தலையோனைப் பாதத் தொருவிரலால் வைத்து மலையடர்த்து வாளோடு நாள் கொடுத்தான் நத்தி னொலியோவா நாலூர் மயானத்தென் அத்தனடி நினைவார்க்கு அல்லல் அடையாவே.
 -திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 96வது தலம். 

தல சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆபத்தம்ப முனிவர் பூசித்தது. நான்கு வேதங்களும் வழிபட்ட சிறப்பினது. இலிங்கத்தின் திருமுடியில் சில வேளைகளில் பாம்பு ஊர்வதாகக் கூறுகின்றனர்.

சோழர்காலத்து ஏகதளக் கற்றளியாகிய இக்கோயில் மிக்க கலையழகுடையது. சோழர் காலக் கலைப்பணியைச் சேர்ந்தது.
முதல் ஆதித்தன் காலத்துத் திருப்பணியைப் பெற்றது. கருவறை சதுரமானது.
சிகரம் உருண்டைவடிவுடையது. தூண்களும் போதிகைகளும் சிற்ப அழகு உடையவை.

தல வரலாறு: சோழர் காலத்தில் சதுர்வேதி மங்கலமாக இருந்த ஊர், தமிழில் "நால்வேதியூர்' என்று வழங்க தொடங்கி "நாலூர்' என்று மருவி இருக்கலாம்.  வேதங்களில் சிறப்புற்று விளங்க இத்தலம் வந்து பூஜித்தால் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.
நான்கு மயானங்களில் இதுவும் ஒன்று.
மற்ற மூன்றும்
1. கச்சி மயானம்,
2. கடவூர் மயானம்.
3. காழி மயானம் என்பவை.

திருமணத்தடை நீங்க, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனை பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் சிவனுக்கும் அம்மனுக்கும் வஸ்திரம் சாற்றி, அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

போன்: +91 94439 59839

Chakravaheswarar Temple at Tiruchakrapalli (Aiyanpettai) near Kumbakonam (Paadal Petra Stalam)

அருள்மிகு சக்கரவாகேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:சக்கரவாகேஸ்வரர்
அம்மன்:தேவநாயகி
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்
தேவாரபதிகம் மின்னினார் சடைமிசை விரிகதிர் மதியமும் பொன்னினார் கொன்றையும் பொற்கிளர் அரவமும் துன்னினார் உலகெலாம் தொழுதெழு நான்மறை தன்னினார் வளநகர் சக்கரப் பள்ளியே.
-திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 17வது தலம். 

தல சிறப்பு:  இங்கு மூலர் சுயம்புலிங்கமாக உயர்ந்த தோற்றத் துடன் அருள்பாலிக்கிறர். அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய தலம்.

இந்திரன் குமாரனான ஜயந்தனும் தேவர்களும் பூசித்த தலம். திருமால் இத்தல இறைவனை வழிபட்டு சக்கராயுதம் பெற்றதனால் இத்தல இறைவனுக்கு சக்கரவாகேஸ்வரர் என்றும், ஊர் சக்கரப்பள்ளி என்றும் பெயர்.
சப்த தலங்களில் இத்தலமும் ஒன்றாகும். பிராமி, மகேஸ்சுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, மாகேந்திரி, சாமுண்டி முதலிய சப்தமாதர்கள் வழிபட்ட தலம்.
சயந்தனும் தேவர்களும் வழிபட்ட தலம்.

தல வரலாறு:  திருமால் அம்மனை வழிபட்டுச் சக்கராயுதம் பெற்ற தலம். சக்கரவாளப் பறவை வழிபட்ட தலம் என்றும் கூறுவர். "" வண்சசக்கிரம் மால் உறைப்பால் அடிபோற்றுக் கொடுத்தபள்ளி' என்பது இத் தலபுராண வரலாற்றை உறுதிப்படுத்தும்.

திருமணத்தடை நீங்கவும், செல்வ வளம் செழிக்கவும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

போன்: +91-4374-311 018

Tuesday, September 27, 2011

Pasupateeswarar Temple at Avur (Papanasam) near Kumbakonam (Padal petra stalam)

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:பசுபதீஸ்வரர், அஸ்வந்தநாதர், ஆவூருடையார்.
அம்மன்:மங்களாம்பிகை, பங்கஜவல்லி
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்
தேவாரபதிகம் 
நீறுடை யார்நெடு மால்வணங்கு நிமிர்சடை யார்நினை வார்தம் உள்ளம் கூறுடை யாருடை கோவணத்தார் குவலயம் ஏத்த இருந்தவூராம் தாறுடை வாழையிற் கூழைமந்தி தருகனி யுண்டுமிண் டிட்டினத்தைப் பாறிடப் பாய்ந்து பயிலுமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடு நாவே.
-திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 21வது தலம்.

தல சிறப்பு: இங்கு மூலவர் பசுபதீசுவரர் சுயம்புலிங்கவடிவில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் 5 பைரவர்கள் சிவனை நோக்கி நின்ற கோலத்தில் அருளுகின்றனர். எனவே இத்தலம் "பஞ்ச பைரவர்' தலம் என அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் மங்களாம்பிகை, பங்கஜவல்லி என இரண்டு அம்மன் அருள்பாலிக்கின்றனர். இதில் மங்களாம்பிகை குளத்திலிருந்து எடுத்துப் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். பங்கஜவல்லி அம்மன் மிகவும் பழைமையானது. தேவாரத்தில் "பங்கயமங்கை விரும்பும் ஆவூர்,' என்று வருகிறது. ஆனால் இங்குச் சிறப்பு மங்களாம்பிகை சந்நிதிக்கே. இத்தல முருகன் வில்லேந்திய வேலனாகக் காட்சியளிக்கிறார்.

தலபெருமை:ஆவூர் ஊர்ப்பெயர், பசுபதீச்சரம் கோவிற்பெயர். இத்தலம் மாடக் கோவிலாக விளங்குவது. இவ்வூருக்கு அசுவத்தவனம் என்றும், இறைவன் விளங்கும் விமானம் அழகியமலை உச்சியைக்  கொண்டுள்ளதால் மணிகூடம் என்றும் வழங்கப்படுகிறது.
திருக்கயிலாய மலையிலிருந்து வாயுதேவனால் கொண்டுவரப்பட்ட இரண்டு மலைத்துண்டுகளில் ஒன்று நல்லூரிலும், ஒன்று இவ்வூரிலும் தங்கியதாகக் கூறப்படுகிறது.
பிரமன், சப்தரிஷிகள், கணங்கள், தேவர், இயக்கர், கந்தருவர், இந்திரன், சூரியன், நவக்கிரகங்கள், திருமால், தசரதர் முதலியோர் வழிபட்டு அருள்பெற்ற தலம்.
தர்மத்துவஜன் என்னும் அரசன் பிரமதீர்த்தத்தில் மூழ்கிக் குட்டநோய் நீங்கப் பெற்ற தலம்.
இத்தல முருகன் வில்லேந்திய வேலனாகக் காட்சியளிக்கிறார்.
சங்க காலத்தில் இவ்வூர் மிக்க சிறப்புடையவூராக விளங்கியது. ஆவூர்கிழார், ஆவூர்மூலங்கிழார், பெருந்தலைச் சாத்தனார் முதலிய பெரும் புலவர்களைத் தந்த ஊர் இதுவாகும்.

தல வரலாறு:பூலோகத்திற்கு வந்த பராசக்தி, தவம் செய்வதற்காக இங்கு தங்கினாள். அப்போது இந்த இடம் வனமாக காட்சியளித்தது. அந்த வனத்திற்கு வந்த தேவர்கள் மரம், செடி, கொடிகளாக மாறி அன்னையை வழிபட்டு வந்தனர்.
பராசக்தியின் தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் ஜடாமுடியுடன் காட்சி தந்தார். எனவே இத்தல இறைவனுக்கு "கவர்தீஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது. இந்த வனத்தின் பெருமையை காமதேனுவின் கன்றான "பட்டி' என்ற பசு உணர்ந்தது.
ஒரு லிங்கம் அமைத்து தனது பாலால் அபிஷேகம் செய்தது. அதற்கு காட்சியளித்த சிவனிடம், அந்த தலத்திலேயே நிரந்தரமாக தங்குமாறு கேட்டுக்கொண்டது. பசு வழிபட்ட தலமாதலால் இறைவன் "பசுபதீஸ்வரர்' என்றும் அழைக்கப்பட்டார்.
வசிட்டரால் சாபம் பெற்ற காமதேனு, பிரமன் அறிவுரைப்படி உலகிற்கு வந்து இங்கு வழிபட்டுச் சாபம் நீங்கிய தலம்.. (காமதேனு உலகிற்கு வந்த இடம் - கோ+வந்த + குடி கோவந்தகுடி ஆயிற்று) கொடிமரத்தில் பசு, சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்து வழிபடும் சிற்பமுள்ளது.
மணிகூடம், அசுவத்தவனம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள்.
கயிலையிலிருந்து, ஆதிசேடனுடன் போட்டியிட்டு வாயுதேவனால் கொண்டு
வரப்பட்ட இருமலைச் சிகரங்களில் ஒன்று நல்லூரிலும் மற்றது ஆவூரிலும் தங்கியதாகப் புராணவரலாறு கூறகிறது.

திருமணத்தடை நீங்கவும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.  பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். அன்னதானம் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

போன்: +91 94863 03484
 

Naganathar Temple at Tirunageswaram near Kumbakonam (Navagraha Stalam,Paadal Petra Stalam)

அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:நாகேஸ்வரர், நாகநாதர்
அம்மன்:பிறையணி வானுதலாள் (கிரிகுஜாம்பிகை தனி சன்னதி)
பாடியவர்கள்: சுந்தரர்
தேவாரப்பதிகம்
அரைவிரி கோவணத்தோடு அரவார்த்தொரு நான்மறைநூல் உரைபெரு கவ்வுரைத்தன்று உகந்தருள் செய்ததென்னே வரைதரு மாமணியும் வரைச்சந்த கிலோடும் உந்தித் திரைபொரு தண்பழனத் திருநாகேச் சரத்தானே.
-சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 29 வது தலம். 

தல சிறப்பு:இங்கு மூலவர் நாகேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் ராகு பகவானுக்கு பாலபிஷேகம் செய்யும்போது , பால் நீல நிறத்தில் மாறுகிறது. இக்கோயிலில் ஒரே சன்னதியில் கிரிகுஜாம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் காட்சி தருகின்றனர். பொதுவாக ராகு மனித தலை, நாக உடலுடன்தான் காட்சி தருவார். ஆனால், இக்கோயிலில் மனித வடிவில் காட்சி தருகிறார்.

ராகு குட்டித்தகவல்: அதிதேவதை - பசு பிரத்யதி தேவதை - நாகம் நிறம் - கருமை வாகனம் - சிம்மம் தானியம் - உளுந்து மலர் - மந்தாரை ரத்தினம் - கோமேதகம் வஸ்திரம் - நீலம் நைவேத்யம் - உளுந்துப்பொடி சாதம் நட்புவீடு - மிதுனம், கன்னி, துலாம் பகைவீடு - கடகம், சிம்மம் ராசியில் தங்கும் காலம் - 1 1/2 வருடம்

தலபெருமை:
முத்தேவியர் தரிசனம்: அம்பாள் பிறையணியம்பாள் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் தவிர, இக்கோயிலில் ஒரே சன்னதியில் கிரிகுஜாம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் காட்சி தருகின்றனர். பிருங்கி முனிவருக்காக இங்கு முத்தேவியரும் காட்சி தந்தனர். இதன் அடிப்படையில் இச்சன்னதியில் முத்தேவியரும் காட்சி தருகின்றனர். மார்கழியில் இந்த மூன்று அம்பிகைக்கும் புனுகு சாத்துகின்றனர். அப்போது 45 நாட்கள் இந்த அம்பிகையரை தரிசிக்க முடியாது. இந்நாட்களில் அம்பிகையின் சன்னதி முன்புள்ள திரைச்சீலைக்கே பூஜை நடக்கிறது. தை கடைசி வெள்ளியன்று இவரது சன்னதி முன்மண்டபத்தில் அன்னம், காய்கறி, பழங்கள் போன்றவற்றை படைக்கின்றனர். இவளது சன்னதியில் பாலசாஸ்தா, சங்கநிதி மற்றும் பதுமநிதியும் இருக்கின்றனர். இங்கு முத்தேவியரை வணங்கி, இவர்களை வழிபட குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

ராகு வரலாறு: ராகு பகவான், சுசீல முனிவரால் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க இத்தலத்து இறைவனை வழிபட்டார். எனவே இத்தலத்து இறைவன் "நாகநாதர்' எனப் பெயர் பெற்றார். அன்று முதல் இது ராகு தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. சிறந்த சிவபக்த கிரகமாகிய ராகு, ராமேஸ்வரம் மற்றும் காளஹஸ்தி ஆகிய இடங்களில் மேன்மை பெற்று விளங்குகிறது. இருந்த போதிலும் இத்தலத்தில் ராகுபகவான் தனது மனைவிகளான சிம்ஹி, சித்ரலேகாவுடன் மங்கள ராகுவாக தம்மை வழிபடுவோருக்கு பல  நலன்களையும் அருளும் தருவது சிறப்பு.  நாகத்திற்கு சிவன் அருள் செய்த தலமென்பதால், நவக்கிரகங்களில் ஒருவரான ராகு, இத்தலத்தில் சிவனை வழிபட தேவியருடன் வந்தார். தினமும் சிவதரிசனம் பெற வேண்டி இங்கேயே மனைவியருடன் தங்கி விட்டார். பிற்காலத்தில், ராகுவுக்கு இங்கு தனிச்சன்னதி எழுப்பப்பட்டது. இவருடன் நாகவல்லி, நாககன்னி என்ற மனைவியரையும் சேர்த்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர் அனுக்கிரஹம் புரியும் "மங்கள ராகு'வாக அருளுவது விசேஷம். பொதுவாக ராகு மனித தலை, நாக உடலுடன்தான் காட்சி தருவார். ஆனால், இக்கோயிலில் மனித வடிவில் காட்சி தருகிறார். ராகுவை, இந்த கோலத்தில் காண்பது அபூர்வம். கிரகங்களில் ராகு பகவான் யோககாரகனாவார். இவரை வணங்கிட யோகம், பதவி, தொழில், வளமான வாழ்வு, எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன், வறுமை, நோய் நீக்கம், கடன், வெளிநாட்டு பயண யோகம் ஆகியவற்றை அருள்வார்.

தோஷ பரிகாரம்: இத்தலம் ராகு தோஷ பரிகார தலமாக இருக்கிறது.
நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். இதனால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை இருக்கிறது. பாலபிஷேகத்தின்போது, பால் நீல நிறத்தில் மாறுவது கலியுகத்திலும் நாம் காணும் அதிசயம். தினமும் காலை 9.30, 11.30, மாலை 5.30 மணி மற்றும் ராகு காலங்களில் இவருக்கு பாலபிஷேகம் செய்யப்படுகிறது. ராகு பகவான்,   இத்தலத்தில் சிவராத்திரியின் போது சிவனை வழிபட்டு அருள்பெற்றாராம். இதன் அடிப்படையில் தற்போதும் சிவராத்திரியின் போது, இரண்டு கால பூஜையை ராகுவே செய்வதாக ஐதீகம். சிவராத்திரி மற்றும் ராகு பெயர்ச்சியின்போது மட்டும் ராகு பகவான் உற்சவர் வீதியுலா செல்கிறார்.
ராகு பெயர்ச்சி விசேஷ பூஜை: ராகுபெயர்ச்சியின் போது  பரிகார பூஜை செய்து கொள்ளலாம்.

சிறப்பம்சம்: கிரிகுஜாம்பிகை சன்னதியில் விநாயகரும், அருகில் ராகுபகவான், "யோகராகு' என்ற பெயரிலும் இருக்கின்றனர். எனவே, இவர் இப்பெயரில் அழைக்கப்படுகிறார். கேதுவிற்கு அதிபதி விநாயகர். இந்த விநாயகரையும், யோக ராகுவையும் வணங்கினால் ராகு,கேது தோஷம் நிவர்த்தியாவதாக நம்பிக்கை.

தல வரலாறு:சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்தார் பிருங்கி முனிவர். இதனால் கோபம் கொண்ட பார்வதி சிவனிடம் அர்த்தநாரீஸ்வர வடிவம் வேண்டி கடும் தவம் புரிந்தாள். பார்வதியின் தவத்திற்கு மகிழ்ந்த இறைவன், அவளுக்கு தன் உடலில் பாதி கொடுத்து உமையொருவரானார். அர்த்தநாரீஸ்வர வடிவம் உலகின் பல பகுதிகளில் அமைய வேண்டும் என வேண்டினாள். அதன்படி இத்தலத்தில் அர்த்தநாரீஸ்வர வடிவில் சிவ பார்வதி காட்சியளிக்கின்றனர். மூலவர் நாகேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்மன் பிறையணி வானுதலாள்.
சுசீலர் என்ற முனிவரின் மகன் சுகர்மன். ஒருசமயம் அவன் வனத்தின் வழியே சென்று கொண்டிருந்தபோது, நாக அரசனான தக்ககன் என்ற பாம்பு தீண்டியது. இதையறிந்த முனிவர் கோபம் கொண்டார். தன் மகனை தீண்டிய தக்ககன் மானிடனாக பிறக்கும்படி சபித்துவிட்டார். சாபவிமோசனம் பெற, தக்ககன் காசிப முனிவரிடம் ஆலோசனை கேட்டான். "பூலோகத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவபூஜை செய்து வழிபட்டால் சாபம் நீங்கும்' என்றார் அவர். அதன்படி பூமிக்கு வந்த தக்ககன், சிவலிங்க பூஜை செய்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார். இவரே இத்தலத்தில் அருளுகிறார். நாகமாகிய தக்ககனுக்கு அருளியதால் இவர், "நாகநாதர்' என பெயர் பெற்றார்.

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். இத்தலம் ராகு தோஷ பரிகார தலமாக இருக்கிறது.
நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். இதனால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை இருக்கிறது.
சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

போன்:  +91- 435-246 3354, 94434 - 89839

Veeratteswarar Temple at Tirukkandiyur near Tanjavur (Paadal Petra Stalam, Veeratta Stalam

அருள்மிகு பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கோயில்

மூலவர்:பிரம்மசிரகண்டீசுவரர் , வீரட்டேஸ்வரர், பிரமநாதர், ஆதிவில்வவனநாதர்
அம்மன்: மங்களாம்பிகை
பாடியவர்கள்: திருநாவுக்கரசர், சம்பந்தர், அருணகிரிநாதர்
தேவாரப்பதிகம் 
பண்டங் கறுத்ததொர் கையுடையான் படைத்தான் தலையை உண்டங் கறுத்ததும் ஊரொடு நாடவை தானறியும் கண்டங் கறுத்த மிடறுடை யான்கண்டி யூரிருந்த தொண்டர் பிரானைக் கண்டீர் அண்டவாணர் தொழுகின்றதே.
-திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 12வது தலம். 

தல சிறப்பு:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சூரியன் வழிபட்ட தலமாதலால் மாசிமாதம் 13, 14, 15ம் தேதிகளில் மாலை 5.45 மணி முதல் 6.10 மணி வரை சூரிய ஒளி சுவாமி மீது படுகின்றது. இத்தலம் அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்று.

மாப்பிள்ளை விருந்து:  சிவனுக்குரிய சப்தஸ்தான தலங்களில் ஐந்தாவது தலமான இங்கு, சிவன் மேற்கு நோக்கியிருக்கிறார். மாசியில் 13, 14, 15 ஆகிய நாட்களில் மாலை வேளையில், சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும். திருவையாறில் அவதரித்த நந்திதேவருக்கு, சதாசபர் தன் மகள் ஊர்மிளாவை திருமழபாடி தலத்தில் திருமணம் செய்து கொடுத்தார். இந்த விழாவின் போது, திருவையாறு ஐயாறப்பர், அம்பாள் அறம் வளர்த்தநாயகி, நந்திதேவர், ஊர்மிளா ஆகிய நால்வரும் இங்கு எழுந்தருளுவார். அப்போது, நந்திதேவருக்கு மங்கள ஸ்நான (புனிதப்படுத்தும் அபிஷேகம்) சடங்கு நடக்கும். அதன்பின், ஒரு கூடை நிறைய சாதம் வைத்து மணமகனுக்கு விருந்து கொடுப்பர்.


தலபெருமை:தண்டபாணி சந்நிதி தனி கோயிலாக மண்டபத்துடன் உள்ளது. இம்மண்டபம் வெளவால் நெத்தி மண்டப அமைப்புடையது. சப்தஸ்தானத் திருவிழாவில்(ஏழூர் திருவிழாவில்) சுவாமி இங்கிருந்து புறப்பட்டு செல்லும்.
வழக்கமாக சிவன் கோயில்களில் துவாரபாலகர்களாக இருக்கும் சண்டி, முண்டி இங்கில்லை. இவர்களுக்குப் பதிலாக முருகப்பெருமானே இங்கு ஞானகுரு, ஸ்கந்த குருவாக துவாரபாலர்கள் இடத்தில் இருக்கிறார். தந்தைக்கு மகனே இங்கு காவலாக இருப்பதாக ஐதீகம். அருகில் சதாசப மகரிஷி உள்ளார். அம்பாள் மங்களாம்பிகை, தனிச்சன்னதியில் இருக்கிறாள். பிரகாரத்திலுள்ள வள்ளி தெய்வானையுடன் உள்ள சுப்பிரமணியருடன் மயில் வாகனம் இல்லை. ஒரே சன்னதியில் அடுத்தடுத்து 7 விநாயகர்கள் உள்ளனர். சிவன் சன்னதி கோஷ்டத்தில் உள்ள துர்க்கை, பிரயோகச் சக்கரம் வைத்திருக்கிறாள். நவக்கிரக சன்னதியில் சூரியன், உஷா, பிரத்யூஷாவுடன் இருக்கிறார். மற்ற அனைத்து கிரகங்களும், சூரியனை பார்த்தபடி உள்ளனர். தவறு செய்து விட்டு வருந்துவோர், மன நிம்மதிக்காகவும், திருமண, புத்திர தோஷம் உள்ளோரும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
பிரம்மா, சரஸ்வதி: பிரம்மாவின் தவத்திற்கு துணையாக சரஸ்வதியும் இங்கு வந்தாள். இதனடிப்படையில் பிரகாரத்தில் சரஸ்வதியுடன் பிரம்மாவிற்கு சன்னதி உள்ளது.தலையெழுத்து
சரியில்லை என வருந்துவோர் பிரம்மாவிற்கும், படிப்பில் சிறப்பிடம் பெற விரும்புவோர் சரஸ்வதிக்கும் வெண்ணிற ஆடை அணிவித்து, தாமரை மலர் வைத்து வழிபடுகிறார்கள். பிரம்மா, நவக்கிரகங்களில் கேதுவிற்கு அதிபதி, குரு பகவானுக்கு ப்ரீத்தி ÷தவதையாகத் திகழ்கிறார். குரு பலன் இருந்தால்தான் திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கேது பலன் நன்றாக இருந்தால் ஞானம் உண்டாகும். எனவே, இந்த பலன்கள் கிடைக்க பிரம்மா சன்னதியில் நெய் தீபமேற்றி வேண்டிக் கொள்கிறார்கள்.

தல வரலாறு:பிரம்மா ஒருசமயம் தான் படைத்த ஒரு பெண்ணின் மீதே ஆசை கொண்டார். அப்பெண், தன்னை பிரம்மாவிடம் இருந்து காக்கும்படி அம்பிகையிடம் முறையிட்டாள். அம்பாள், சிவனை வேண்ட, கோபம் கொண்டவர் உக்கிரமாக பைரவர் வடிவம் எடுத்துச் சென்றார். பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் வெட்டி விட்டார். தவறுணர்ந்த பிரம்மா, மன்னிப்பு கிடைக்க சிவனை ÷வண்டி தவமிருந்தார். சிவன், அவரை மன்னித்தருளினார். பின், அவரது வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார். பிரம்மாவின் சிரம் (தலை) கொய்தவர் என்பதால் இவர், "பிரம்மசிரகண்டீஸ்வரர்' என்று பெயர் பெற்றார். அட்டவீரட்டானத் தலங்களில் முதலாவது தலம் இது.

பிரதோஷ தலம்: இங்கு தங்கியிருந்த சதாசபர் என்ற மகரிஷி, ஒவ்வொரு பிரதோஷ நாளிலும், எத்தனை வேலை இருந்தாலும் காளஹஸ்தி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஏதேனும் ஒரு பிரேதாஷ நாளில், காளஹஸ்தி செல்ல முடியாவிட்டால், தன் உயிரை விட்டுவிடுவதாகவும் சபதம் செய்திருந்தார். ஒரு பிர÷தாஷத்தன்று சிவன் அவரை சோதிக்க பெரும் இடியுடன் மழையை உண்டாக்கினார். இதனால் வருந்தியவர் கோயிலில் அக்னி வளர்த்து, அதனுள் குதித்து தன் உயிரை மாய்க்கச் சென்றார். அவ்வேளையில் அவருக்கு காட்சி தந்த சிவன், "தலம் எதுவானாலும் எங்கும் நானே இருக்கிறேன்!' என்று உணர்த்தினார். மகரிஷி உண்மை உணர்ந்தார். அறியாமை, மந்த புத்தி உள்ளவர்கள் பிரதோஷ நாளில் இங்கு சிவதரிசனம் செய்வது நல்ல பலன் தரும்.

பிரம்மகத்தி தோஷம் நீங்கவும், அழகு வேண்டியும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

போன்: +91-4362-261 100, 262 222



Koteeswarar Temple at Tirukkottaiyur near Kumbakonam (Paadal Petra Stalam)

அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோயில்

மூலவர்: கோடீஸ்வரர், கைலாசநாதர்
அம்மன்: பந்தாடு நாயகி
பாடியவர்கள்: திருநாவுக்கரசர் 
தேவாரப்பதிகம் 
பொடியாடு மேனிப் புனிதன் கண்டாய் புட்பாகற் காழி கொடுத்தான் கண்டாய் இடியார் கடுமுழக்கே ஊர்ந்தான் கண்டாய் எண்திசைக்கும் விளக்காகி நின்றான் கண்டாய் மடலார் திரைபுரளும் காவிரி வாய் வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய் கொடியாடு நெடுமாடக் கொட்டை யூரில் கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.
-திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 44வது தலம்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

விசேஷமான நவக்கிரக மண்டபம்: இத்தலத்தில் வாகனங்களில் எழுந்தருளிய நவக்கிரகங்களை காணலாம். எல்லா கிரகங்களும் மிகச்சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவற்றைக்காணவே கண்கோடி வேண்டும். இதுபோன்ற நவக்கிரக சன்னதிகள் தமிழகத்தில் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளன.

தலபெருமை:கல்வி அபிவிருத்தியை தரும் தீர்த்த ஸ்தலம் .
மார்க்கண்டேயர் வழிபட்ட தலம்.
ஆமணக்கு கொட்டைச்செடியின்கீழ் லிங்கம் வெளிப்பட்டதால் ஊர் கொட்டையூர் என்று பெயர் பெற்றது.
பத்திரியோகி முனிவருக்கு இறைவன் கோடிவிநாயகராக, கோடி அம்மையாக, கோடி முருகனாக, கோடி தம் திருவுருவாக காட்சி தந்ததால் இறைவன் கோடீஸ்வரர் எனப்பட்டார்.
மூலவர் மீது பாணம் முழுவதிலும் கொட்டை கொட்டையாக - காய்ந்தமாதிரி காணப்படுகிறது.
இங்கே அம்பாள் பந்தாடுநாயகி என அழைக்கப்படுகிறாள். அம்பாள் சிலையின் ஒரு கால் பந்தை உதைப்பது போன்ற தோற்றத்தில் உள்ளது. செய்த பாவங்களை தன் காலால் எட்டி உதைத்து அருள்செய்பவள் என்ற பொருளில் இவ்வாறு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள் பதக்கங்கள் பெறுவதற்காக இந்த அம்மனை வழிபட்டு செல்கின்றனர். இங்குள்ள அமுதக்கிணறு தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டால் புறத்தூய்மை மட்டுமின்றி அகத்தூய்மையும் கிடைப்பதாக நம்பிக்கை. கல்வி, அறிவு, ஒழுக்கம் ஆகியவற்றை இந்த தீர்த்தம் தருவதாக நம்பிக்கை. * "கொட்டையூரில் கால் வைத்தால் கட்டை' என்பது பழமொழி. இத்தலத்தில் பாவம் செய்தவர்கள் கால் வைத்தால் அந்தப்பாவம் கோடி அளவு பெருகிவிடும். புண்ணியம் செய்தவர்கள் கால் வைத்தால் அதே போல கோடி அளவு கூடிவிடும். எனவே பாவம் செய்தவர்கள் இத்தலத்திற்கு ஒரு காலத்தில் வராமலே இருந்தார்கள். அவர்களுக்கு பந்தாடு நாயகி ஆறுதல் கூறி பாவங்களை உதைத்து எறிந்தாள். தீராத பாவம் செய்தவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு மனம் திருந்தி செல்லலாம்.


தல வரலாறு:திரிஹர்த்த தேசத்தை ஆண்டவர் சத்தியரதி. இவரது மகன் சுருசி ஒரு சாபத்தின் காரணமாக பிசாசு வடிவம் பெற்றான். இவனது உருவைக்கண்டு ஊரே நடுங்கி ஓடியது.
தன்னைக் கண்டாலே ஓடும் மக்களை தன்வசம் மீண்டும் இழுக்க அவன் சிவபெருமானை வணங்கினான். அவரது அருளாசியின்படி கொட்டையூர் என்ற தலத்திற்கு சென்று வணங்கும்படி கூறினார். அவனும் கொட்டையூருக்கு வந்து இங்குள்ள தீர்த்தத்தில் மூழ்கினான். இந்த தீர்த்தம் ஏரண்ட முனிவரால் உருவாக்கப்பட்டது.
இதை அமுதக்கிணறு என்கிறார்கள். இந்தக் கிணற்று நீரில் நீராடி முன்பைவிட வனப்பான உருவம் பெற்றான். இப்போதும் இந்தக்கிணறு இங்கு உள்ளது.
பல பெண்கள் இந்தக்கிணற்று நீரை தங்கள் தலையில் தெளித்து அழகிய வடிவம் பெறலாம் என நம்புகிறார்கள்.

தோஷ தொல்லை, அழகிய வடிவம் பெற இத்தலத்தில் பிரார்த்திக்கலாம். இத்தலத்தில் நீராடி, தங்கள் தலையில் தெளித்து அழகிய வடிவம் பெறலாம்.


போன்: +91 435 245 4421

Monday, September 26, 2011

Pushpavana Naathar at Tiruppoonthuruthi near Kumbakonam (Paadal petra stalam)

அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:புஷ்பவனேஸ்வரர், ஆதிபுராணர், பொய்யிலியர்
அம்மன்:சௌந்தரநாயகி, அழகாலமர்ந்த நாயகி
பாடியவர்கள்: திருநாவுக்கரசர் , அருணகிரிநாதர், ராமலிங்க அடிகள்
தேவாரபதிகம் 
அதிரர் தேவர் இயக்கர் விச்சாதரர் கருத நின்றவர் காண்பரி தாயினான் பொருத நீர்வரு பூந்துருத் திந்நகர்ச் சதுரன் சேவடிக் கீழ்நாம் இருப்பதே
-திருநாவுக்கரசர்
தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 11வது தலம்.

தல சிறப்பு: இத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சப்தஸ்தான தலங்களில் ஆறாவது த லம். அப்பரால் மடம் அமைக்கப்பட்ட சிறப்புடையது. அப்பரும் சம்பந்தரும் உழவாரத்தொண்டு செய்த தலம். அப்பருக்கு இறைவன் காட்சி தந்த தலம். இத் தலத்தில் நந்தி விலகியுள்ளது. கோஷ்டமூர்த்தங்களில் வீணா தெட்சிணாமூர்த்தி திருமேனி மிகவும் சிறப்பானது. மகிடனை யழித்த பாவத்தைப்போக்க ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் துர்க்கையும், அமர்ந்த கோலத்தில் அப்பர் பெருமானும் பூந்துருத்தி காடவநம்பியின் திருவுருவமும் தரிசிக்கச் சிறப்புடையன. பூந்துருத்தி காடவநம்பியின் அவதாரத்தலம். காசிபமுனிவரின் கடும் தவத்திற்கு மகிழ்ந்து இறைவன் இங்குள்ள கிணற்றில் 13 கங்கையையும் பொங்கி எழச்செய்து ஆடி அமாவாசை அன்று காட்சி தந்த தலம். இங்கு அமாவாசை கிரிவலம் சிறப்பு.

தலபெருமை:
இந்திரன், திருமால், லட்சுமி, சூரியன், காசிபர் ஆகியோர் வழிபட்ட தலம். இந்திரன் மலர்வலம் அமைத்து வழிபாடு செய்து உடல்நலம் பெற்றான். கழுகு உருவம் பெற்ற விஞ்ஞயர் இருவர் இத்தலத்தை அடைந்து மலர் வழிபாடு செய்து தம் உண்மை உருவம் பெற்றனர்.
ஆற்றிடைக் குறையிலுள்ள ஊர்கள் "" துருத்தி'' என்று பெயர் பெறும். இத்தலம் காவிரிக்கும் குடமுருட்டிக்கும் இடையில் உள்ளதால் இப்பெயர் பெற்றது. (மயிலாடுதுறைக்குப் பக்கத்தில் உள்ள ஒரு தலமும் (குத்தாலமும்) துருத்தி என்று வழங்கப்படுகிறது).
அப்பர் உழவாரத்தொண்டு செய்த தலமென்று எண்ணி, காலால் மிதிக்கவும் அஞ்சி வெளியில் நின்ற ஞானசம்பந்தருக்கு இறைவன் நந்தியை விலகச் செய்து காட்சி தந்ததாகத் தலபுராணம் கூறுகிறது. ஞானசம்பந்தரின் பல்லக்கை அப்பர் பெருமான் தன் தோளிற் சுமந்த தலம். இவ்விடம் சம்பந்தர்மேடு என்று சொல்லப்படுகிறது. திருவாலம் பொழிலுக்குப் பக்கத்தில் வெள்ளாம்பரம்பூரையடுத்து இம் மேடு உள்ளது. அங்கு இருவருக்கும் கோயில் கட்டப்பட்டு, விழா நடைபெறுகிறது.
அப்பர் அமைத்த ""திங்களும் ஞாயிறும் தோயும் திருமடம்'' என்று புகழப்படும் திருமடம் உள்ளதலம். இத்திருமடம் கோயிலுக்கு எதிரில் சற்றுத் தள்ளி  உள்ளது. ஊர் பெரியது. மேலை, கீழை என இருபிரிவாகவுள்ளது. மேலைப்பூந்துருத்தியில்தான் கோயில் உள்ளது.

முற்காலத்தில் அகத்தியர் காகம் கவிழ்க்க அதிலிருந்து  தோன்றிய காவிரியான ஆறாக கிழக்கு நோக்கி ஓடி, செந்தலையிலிருந்து அந்திலி, வெள்ளாம்பிரம்பூர், ஆற்காடு, கண்டியூர், திருச்சோற்றுத்துறை, திருப்பழனம், திருவையாறு, திருநெய்த்தானம், சாத்தனூர் வரை சூழ இடைப்பட்ட இடங்களில் கடல்போல் தேங்கி நின்றுவிட்டது. இதற்கிடையில் உள்ள கோனேரிராஜபுரம், கருப்பூர், நடுக்காவேரி, திருவாலம்பொழில், திருப்பூந்துருத்தி முதலிய ஊர்கள் எல்லாம் நீர்நிலையில் மூழ்கி இருந்தன.
இந்திரன் ஐயாறப்பரை வழிபட்டு காவிரியை அவர் அருளால் கிழக்கு நோக்கி அழைத்துச்சென்று கழுமலப் பூங்காவை வளப்படுத்தினான். அவ்வாற காவிரி கிழக்கு நோக்கி ஓடுகையில் முதலில் காணப்பட்ட நிலப்பகுதி கண்டியூர். பின்னர் ஆற்று வண்டலும் மணலும் படிந்ததாய் தோன்றியது திருப்பூந்துருத்தி. அதற்கு மேற்கே ஆலமரம் இருந்ததாக காவிரி எக்கல் நிறைந்து மேடிட்ட பகுதி நிலம் மென்மையாக பூப்போல இருந்ததாலும், மலர் வாட்டத்தில் நிலம் அமைந்திருந்ததாலும் இந்நிலப்பரப்பை ""பூந்துருத்தி'' என்று வழங்கிவந்தனர்.
இதனை பொருத நீர்வரு பூந்துருத்தி என்று அப்பர்  கூறுகிறார். இதுபோல் ஆற்றிடையில் உண்டாகும் நிலப்பகுதிக்கு ""துருத்தி'' என்று பெயர். காவிரியில் கிழக்கே உண்டாகிய மற்றொன்றிற்கு ""துருத்தி'' (குற்றாலம்) என தற்காலம் வழங்குகின்றது. ஆதலால் நில அமைப்பு நோக்கி 
இப்பெயர்ஏற்பட்டது போலும். இந்திரன் கவுதமர் சாபத்தால் உடம்பெல்லாம் ஆயிரம் குறிகள் தோன்றப்பெற்ற சாபத்தை திருக்கண்ணார் கோயிலில் வழிபட்டு பிறருக்கு கண்களாக தெரிய வரம்பெற்றான். உடலெல்லாம் கண்ணாக தோன்றிய அந்நோயும் தீர வேண்டி பல தலங்களையம் சுற்றி வழிபட்டு வரும்போது மலர்க்காட்டிடையே மகாதேவன் உருவம் இத்தலத்தில் இருக்கக்கண்டு ""பூவின் நாயகனாய்'' விளங்கிய பரமனை மலர்களைக்கொண்டு வழிபாடு செய்து நோய்நீங்கி,மலர் போல் தூய நல்லுடல்பெற்றான். ஆதலால் இப்பெயர் வந்தது என்பர்.
தேவர்கள்எல்லோரும் மலர்கொண்டு இறைவனை இத்தலத்தில் வழிபட்டதால் இப்பெயர் பெற்றது என்றும் கூறுவர். இதனை "வானோருலகமெல்லாம் வந்திறைஞ்சி மலர்கொண்டு நின்று போற்றும் வித்தானை' என்று அப்பர் கூறுவதால் அறியலாம். திருமாலும், திருமகளும் இவ்வூர் இறைவனை வழிபட்டனர் என்பதை நாயக்க மன்னர் காலத்தில்கட்டப்பெற்ற ராஜகோபுரத்தில் உள்ள சிற்பம் காட்டுகின்றது. பூமகள் வழிபட்டதால் ""பூந்துருத்தி'' என பெயர்  வந்தது என்றும் கூறுவர்.
திருமழபாடி நந்திதேவர் திருமணத்திற்கு மலர்கள் தந்து உதவியதாகவும் அதற்கு நந்திதேவர் வந்து நன்றி கூறிவதாகவும் அமைந்த விழாவே "ஏழூர் வலம் வரும் விழா' (சப்த ஸ்தான விழா) என்பர். ஆதலால் மலரோடு இத்தலம் தொடர்புடையது நன்கு பொருந்துவதைக் காணலாம். சோழநாட்டில் சில இடங்கள் மலர்தோட்டங்களாக இருந்துள்ளன. அவ்விடங்கள் "மலரி' என்றும் "மலர்க்காடு' என்றும் வழங்கி வந்துள்ளன. முற்கால முதல் பிற்காலசோழர் தலைநகராகிய தஞ்சைக்கு அருகில் அவர்கள் அடையாள மலராகிய "ஆர்'ஐ (ஆத்தி) வளர்த்த இடம் "ஆர்க்காடு' என்று இதன் அருகில் உள்ளது. அதுபோல அரசரது பிற தேவைகளுக்கு வண்டல் நிறைந்த இத்துருத்தியை பூந்தோட்டமாக செய்து இதிலிருந்து மலர் கொண்டனர். ஆதலால் "மலர்க்காடு' என்று இதற்கு மற்றொரு பெயரும் உண்டாயிற்று. இதனையே கி.பி.1782ம் ஆண்டு தஞ்சை துளசி மகாராஜா காலத்தில் "புஷ்பவனம்' என்று மொழிபெயர்த்து கூறப்பட்டது என்பதை கல்வெட்டால் அறியலாம்.
சோழமன்னன் துருத்தியை வைத்துப் பூசிக்கச் செய்ததனால் திருப்பூந்துருத்தி என்று பெயர் வந்தது. என்று கூறுவர். ஆற்றிடைக் குறையில் உள்ள ஊர்கள் துருத்தி என்று வழங்கப்பெறும். இத்தலம் காவிரி, குடமுருட்டி ஆறுகளுக்கு கிடையில் அன்று விளங்கியதால் துருத்தி எனப்பெற்றது என்றும் கூறலாம்.
திருஞானசம்பந்தர் அப்பரைக் காண இத்தலத்திற்கு வந்தபோது அப்பர் ஒருவரும் காணாதபடி அவருடைய சிவிகையைத் தாங்கிவந்தது இத்தலத்தில் நிகழ்ந்ததாகும். மேலும் அப்பர் அடிகளார் திருமடம் அமைத்து திருப்பணி செய்து வந்ததும் இத்தலமேயாகும்.

பித்ரு சாபம் நீங்க அமாவாசையன்று கிரிவலம் வந்து இறைவனைவழிபட்டால் சாபம் நீங்கும் என்பது நம்பிக்கை.
திருமணம் நடைபெறவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இங்குள்ள சன்னதிகளில் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்கின்றனர். 
பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

போன்:  +91 - 4365 - 322 290, 94865 76529

Pallavavaneswarar Temple at Tiruppalathurai(Papanasam) near Kumbakonam (Padal petra stalam)

அருள்மிகு பாலைவனேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:பாலைவனேஸ்வரர், பாலைவனநாதர்
அம்மன்:தவளவெண்ணகையாள். (மக்கள் தவளாம்பிகை, தவளாம்பாள் என வழங்குகின்றனர்.)
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்
தேவாரபதிகம்
வெந்த நீற்றினர் வேலினர் நூலினர் வந்தென் நன்னலம் வெளவினார் பைந்தன் மாதவி சூழ்தரு பாற்றுறை மைந்தர் தாமோர் மணாளரே.
-திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 19வது தலம்.

தல சிறப்பு: இங்கு மூலவர் சிவன் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். ராமர் இத்தலத்தில் 108 சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம்.

தலபெருமை:
சுவாமி அம்பாள் இருவரும் கல்யாணகோலத்தில் விளங்குகின்றனர். கோஷ்டமூர்த்தங்களாக விநாயர், ஊர்த்துவதாண்டவர், தட்சிணாமூர்த்தி, பிம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது.
குடமுருட்டியாற்றின் கரையில் பனைமரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ளதால் இத்தலம் பாலைத்துறை என வழங்குகிறது.
விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், வசிஷ்டர் பூசித்த சிவலிங்கம், மகாலட்சுமி, பார்த்திபன், மலையத்துவசன் ஆகியோர் வழிபட்ட லிங்கங்கள்  உள்ளன.
அறுபத்துமூவர் மூலவத்திருமேனிகள் உள்ளன. நடராசசபை உள்ளது. காலபைரவர், சூரியன் சந்நிதிகளும் உள்ளன.
திருமால், பிரமன், அஷ்டதிக்குப் பாலகர் முதலியோர் வழிபட்டதலம்.
இத்தலத்திற்கு அருகில் பாவநாசத்தில் விளங்கும் 108 சிவலிங்கக் கோவில் கீழைராமேச்சுவரம் என வழங்கப்பெறுவது.

தல வரலாறு:தாருகா வனத்து முனிவர்கள், இறைவனைப் புறக்கணித்து அவரையே அழிக்க எண்ணி, தீயவேள்வி செய்து புலியை வரவழைத்து, அதை இறைவன் மீது ஏவ, இறைவனும் அப்புலியின் தோலை உரித்து உடுத்திக் கொண்ட செயலைச் செய்த தலம். பாலைவனம், பிரம்மவனம், அரசவனம், புன்னாகவனம் எனப்பல பெயர்கள் இத்தலத்திற்குண்டு. திருநல்லூரைச் சேர்ந்த "சப்தஸ்தானங்களில் இத்தலமும் ஒன்றாகச் சொல்லப்படுகின்றது.
பாண்டவர்களின் வனவாச காலத்தில் தௌமிய முனிவரின் ஆலோசனைப்படி அர்ச்சுனன் இத்தலத்திற்கு வந்து, வழிபட்டு வில்வித்தையின் நுட்பங்களை உணர்ந்து, பாதாள உலகம் சென்று உலூபியை மணந்து வந்தான் என்று சொல்லப்படுகின்றது.
ராமர் சிவபிரானை வழிபட்டுத் தான் செய்த கொலைப் பாவத்தைப் போக்கிக் கொண்ட காரணத்தால் இத்தலம் பாவநாசம் எனப்பெற்றது.
தனிமண்டபத்தில் ஆவுடையாரோடு சிவலிங்கங்கள் வரிசையாக அமைந்துள்ளன.

திருமணத்தடை நீங்கவும், புத்திரபாக்கியம் வேண்டியும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். பிரார்த்தனைநிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும் புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

போன்: +91-94435 24410

Somanatha Devar Temple at Pazhaiyarai near Kumbakonam (Paadal petra stalam)

அருள்மிகு சோமேசர் திருக்கோயில்

மூலவர்:சோமநாதர்
அம்மன்:சோமகலாம்பிகை
பாடியவர்கள்:திருநாவுக்கரசர்
தேவாரபதிகம் குண்டரைக் குணமில்லரைக் கூறையில் மிண்டரைத் துரந்த விமலன்றனை அண்டரைப் பழையாறை வடதளிக் கண்டரைத் தொழுது உய்ந்தன கைகளே.
-திருநாவுக்கரசர்

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 24வது தலம்.

தல சிறப்பு:இங்கு மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயில் தேர் போன்ற அமைப்பில் உள்ளது. கருடன் , ஆதிசேஷன் வழிபட்ட தலம். இத்தலத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று வீரதுர்க்கை அம்மன்.

தலபெருமை:சந்திரன் இத்தல இறைவனை வழிபட்டுக் கலைகள் வளரவும், கயரோகம் நீங்கவும் அருள்பெற்ற தலம்.

 அப்பர் உண்ணாவிரதமிருந்த இடம். தற்போது அதிக வீடுகளில்லை. சிதலமான கோயில் உள்ளது. கோயிலுக்குப் பக்கத்தில் துறையூர் சிவப்பிரகாசர் சமாதியுள்ளது.

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இத்தலத்திற்கு உள்ளது. தல புராணம் 15 அத்தியாயங்கள் கொண்டது.

கோயில்முன் மண்டபத்தில் உள்ள கைலாசநாதர் உருவமும், மகாமண்டபத்தில் உள்ள துர்க்கை உருவமும் அழகுடையன.

பிற்காலச் சோழர் ஆட்சியில் இத்தலம் இரண்டாவது தலைநகராய் சிறந்து விளங்கியது. இத்தலத்தைச் சூழ்ந்துள்ள 1) நல்லூர் 2)வலஞ்சுழி 3) சத்திமுற்றம் 4) பட்டீச்சரம் 5) ஆவூர் என்னும் ஐந்து தலங்களையும் ஒரே நாளில் தக்ஷிணாயன புண்ணிய நாளில் - வழிபடுவது சிறப்புடையதென்று மக்கள் வழக்கில் சொல்லப்படுகிறது.

இங்குள்ள கைலாசநாதரை ராஜராஜசோழன் தினமும் வழிபட்டதாக கூறப்படுகிறது. இந்த  கைலாச நாதரை வழிபட்டால் கடன் பிரச்னைகள் தீரும் என்பது நம்பிக்கை.

முன்னொரு காலத்தில் கருடன் தன் தாயின் அடிமைத்தனம் நீங்கத் தேவேந்திரனிடம் அமிர்த கலசம் பெற்றுக் இத்தலத்தின் வழியே வரும்போது அசுரர்கள் இதைக்கண்டு கருடனுடன் சண்டை மூண்டது. குடத்திலிருந்து மூன்று துளிகள் நெல்லிவனமான இத்தலத்தில் சிந்தின. அத்துளிகள் சிவலிங்கம், அம்பிகை, தீர்த்தம் ஆகிய மூன்றாயின.

கருடன் தீர்த்தத்தில் நீராடி இறைவனையும், அம்பிகையையும் வழிபட்டு உய்ந்தது. கருடன் தனியே தன்பெயரால் உண்டாக்கிய தீர்த்தம் சடாயு தீர்த்தம் என வழங்கப்படுகிறது.

திருமணத்தடை நீங்கவும், கலைகளில் சிறந்து விளங்கவும், உடற்பிணி நீங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.  பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்.

போன்:  +91 - 98945 69543

Semmeni Natheswarar Temple at Tirukkanur (Tirukkattuppalli) near Thanjavur (Paadal Petra Stalam)

அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோயில்

மூலவர்:செம்மேனிநாதர், கரும்பேஸ்வரர்
அம்மன்:சிவயோகநாயகி, சவுந்தரநாயகி
பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர்
தேவாரப்பதிகம் நீரும் பாரம் நெருப்பும் அருக்கனும் காரும் மாருதம் கானூர் முளைத்தவன் சேர்வும் ஒன்று அறியாது திசைதிசை ஓர்வும் என்றிலர் ஓடித் திரிவரே.
-திருநாவுக்கரசர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 56வது தலம்.

தல சிறப்பு:இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி மாதத்தில் (ஏப்.2,3,4 ஆகிய தேதிகளில்) இத்தல இறைவன் மீது சூரிய ஒளி விழுகிறது. அம்மனின் விக்ரகம் சாளக்கிராமத்தால் ஆனது.

தலபெருமை:ஒரு முறை அம்பிகை சிவனை நோக்கி தவமிருக்க பூமிக்கு வந்தார். தியானத்திற்கு ஏற்ற இடமாக இத்தலத்தை தேர்ந்தெடுத்து, சிவனை நோக்கி கடுமையாக தவமிருந்தார். தவத்திற்கு மகிழ்ந்த இறைவன், அக்னிபிழம்பாக காட்சி தந்தார். இதனால் இத்தல இறைவன் செம்மேனிநாதர் ஆனார். அம்மன் சிவயோகநாயகி ஆனார்.

கணவனும் மனைவியும் சேர்ந்து இத்தலம் வந்து வழிபட்டால், கருத்துவேறுபாடு இல்லாமல், ஒற்றுமையாக இருக்கலாம் என்பது நம்பிக்கை.


கரிகால் சோழன் வாழ்ந்த ஊர்: ஒரு முறை கரிகால் சோழனின் தாய் எதிரிகளுக்கு பயந்து தன் மகனுடன் இப்பகுதியில் மறைந்து வாழ்ந்து வந்தாள். சோழநாட்டிற்கு மன்னன் இல்லாத காரணத்தினால் பட்டத்துயானை அரசாட்சிக்குரியவரை தேடி வந்தது. அப்போது திருக்கானூரில் விளையாடிக்கொண்டிருந்த கரிகாலனுக்கு மாலையிட்டு, தன் பிடரியில் அவனை ஏற்றிக்கொண்டு உறையூர் சென்றது. சோழமன்னன் ஆனான் கரிகாலன்.

தல வரலாறு:ஜமதக்கினி முனிவருக்கும், ரேணுகா தேவிக்கும் மகனாக அவதரித்தவர் பரசுராமர். ஒரு முறை இவர் இல்லாதபோது கார்த்தவீர்யார்சுனன் என்ற அரசன் முனிவரின் ஆசிரமத்திற்கு வந்து, அவரது காமதேனு பசுவை பலவந்தமாக கவர்ந்து சென்றார்.
திரும்பி வந்த பரசுராமர் நடந்ததை கேட்டு கோபமடைந்து, கார்த்தவீர்யார்சுனனை கொன்று பசுவை மீட்டார். அத்துடன் 21 சத்திரியர்களையும் கொன்றார். இதனால் இவருக்கு "சத்திரிய தோஷம்' ஏற்பட்டது. இந்த தோஷம் போக்குவதற்காக பரசுராமர் இத்தலத்தில் நீராடி ஈசனை வழிபட்டார். சிவனின் அருளால் பரசுராமர் தோஷம் நீங்கப்பெற்றார்.

திருமணத்தடை உள்ளவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் மற்றும் கணவன் மனைவியருக்குள் கருத்துவேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாக இருக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். உடல் நலக்குறைவு ஏற்பட்டவர்கள் இத்தல வில்வ இலைகளால் செம்மேனிநாதருக்கு அர்ச்சனை செய்தால் விரைவில் குணமாகும். திருமணத்தில் தடை உள்ளவர்கள், சாளக்கிராமத்தினால் ஆன அம்மனுக்கு செவ்வரளி மாலை சாற்றி, நெய் தீபமிட்டால் விரைவில் திருமணம் உண்டாகும். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து எருக்கமாலை சாற்றி வழிபட்டால் விரைவில் குழந்தை பாக்கியம் ஏற்படும் என்பது நம்பிக்கை. இத்துடன் இனிப்பு பொருட்கள் நைவேத்யம் செய்து வழிபாடு செய்கின்றனர்.
 
போன்:  +91-4362-320 067, +91- 93450 09344.

Tuesday, September 20, 2011

Vyagrapureeswarar Temple at Tirupperumpuliyur (Tiruvaiyaru) near Thanjavur (Paadal Petra Stalam)

அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:வியாக்ரபுரீஸ்வரர், புலியூர் நாதர்
அம்மன்: சவுந்தரநாயகி, அழகம்மை
பாடியவர்கள்: சம்பந்தர்
தேவாரப்பதிகம்
தோடுடையார் குழைக்காதில் சுடுபொடி யாரனலாடக் காடுடையார் எரிவீசும் கையுடை யார்கடல் சூழ்ந்த நாடுடையார் பொருளின்பம் நல்லவை நாளும் நயந்த பீடுடையார் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே.
-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 53வது தலம்.

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக நவக்கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருக்கும். ஆனால் இங்கு நவகிரகங்கள் சூரியனைப்பார்த்தபடி உள்ளது சிறப்பாகும்.

தலபெருமை:நான்கு அடுக்குகளால் ஆன தாமரை மலரின் மேல் சுவாமி மூலஸ்தானம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.  அருணகிரிநாதர் இத்தல முருகனை தனது திருப்புகழில் பாடியுள்ளார்.
புதர் மண்டிக்கிடந்த இத்தலத்தை மதுரை சுந்தர சுவாமிகள் வெளிஉலகிற்கு தெரியப்படுத்தினார்.
லிங்கோத்பவர் அருகில் அர்த்தநாரீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

தல வரலாறு:புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர், தன் தந்தை மாத்தியந்தினரிடம் தில்லை நடராஜரின் பெருமையை கேட்டறிந்து, அங்கு வந்து திருமூலநாதரை வழிபட்டு வந்தார். மரங்களில் ஏறி பூ பறிக்க புலிக்கால்களையும், அம்மலர்களை ஆராய்ந்து பார்த்து சிவபூஜை செய்ய நகங்களில் கண்களையும் பெற்றார். அதனால் இவருக்கு வியாக்ரபாதர் (வியாக்ரம்-புலி; பாதர்-கால்களை உடையவர்) என்று பெயர் வந்தது.
நடராஜரின் சன்னதிகளில் ஒரு புறம் இவரும், மற்றொரு புறம் பதஞ்சலி மகரிஷியும் உள்ளனர். புலிக்கால் முனிவராகிய இவர் வழிபட்ட தலங்கள் திருப்பாதிரிப்புலியூர், பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்), எருக்கத்தம் புலியூர், ஓமாம்புலியூர், பெரும்புலியூர் ஆகியன. பஞ்ச புலியூர்த்தலங்களில் இதுவும் ஒன்று.

புது வாகனம் வாங்குபவர்கள் பழங்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்து, மாலை சாற்றி வழிபாடு செய்தால், எந்த விபத்தும் ஏற்படாது என்பது நம்பிக்கை.  சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

போன்: +91- 94434 47826,+91- 94427 29856

Vedapureeswarar Temple at Tiruvedikkudi near Thanjavur (Paadal petra stalam)

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:வேதபுரீஸ்வரர், வாழைமடுநாதர்
அம்மன்:மங்கையர்க்கரசி
பாடியவர்கள்:அப்பர், சம்பந்தர்
தேவாரப்பதிகம் 
வருத்தனை வாளரக்கன்முடி தோளொடு பத்திறுத்த பொருத்தனைப் பொய்யா அருளனைப் பூதப்படையுடைய திருத்தனைத் தேவர்பிரான் திருவேதி குடியுடைய அருத்தனை ஆரா அழுதினை நாமடைந் தாடுதுமே.
-திருநாவுக்கரசர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 14வது தலம்.

தல சிறப்பு:இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் பங்குனி 13,14,15 தேதிகளில் சூரியனின் ஒளி கதிர்கள் சிவ லிங்கத்தின் மீது விழுகிறது.

தலபெருமை:பொதுவாக சம்பந்தர் கோயில் இறைவனைப்பற்றி பாடுவார். ஆனால் இத்தலத்தில் திருமணத்தடை நீக்கும் பாடலை பாடியுள்ளது சிறப்பு. திருஞானசம்பந்தர் இக்கோயிலைப்பற்றி தான் பாடிய பதிகத்தின் ஏழாவது பாட்டில், ""உன்னி இருபோதும் அடிபேணும் அடியார்தம் இடர் ஒல்க அருளி துன்னிஒரு நால்வருடன் ஆல்நிழல் இருந்த துணைவன் தன் இடமாம் கன்னியரொடு ஆடவர்கள் மாமணம் விரும்பி அருமங்கலமிக மின் இயலும் நுண்இடை நன்மங்கையர் இயற்றுபதி வேதிகுடியே'' என்று பாடியுள்ளார்.
பொதுவாக அர்த்தநாரீஸ்வரர் என்றால் சிவன் வலது புறமும், அம்மன் இடது புறமும் இருப்பார்கள். ஆனால் இங்கு பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சிவனின் வலது புறம் அம்மன் இணைந்துள்ள அர்த்தநாரீஸ்வர கோலம் இங்கு வித்தியாசமாக உள்ளது.

விசேஷ விமானம்: சப்தஸ்தான தலங்களில் நான்காம் கோயில் இது. முழுவதும் கல்லால் அமைக்கப்பட்ட விமானத்தின் கீழ், வேதபுரீஸ்வரர் வீற்றிருக்கிறார். விமானத்தின் நான்கு திசைகளிலும் வேதங்களை உணர்த்தும் நந்திகள் உள்ளன. வடதிசையில் சிவனுடன் எப்போதும் இருக்கும் மனோன்மணி அம்பிகை சிலை உள்ளது. சிவன் சன்னதிக்குப் பின்புள்ள (கோஷ்டம்) அர்த்தநாரீஸ்வரர், விசேஷமானவர். வழக்கமான சிவனுக்கு இடப்புறம்தான், அம்பாள் இருக்கும்படி அர்த்தநாரீஸ்வரர் சிலை இருக்கும். இங்கு, அம்பிகை வலப்புறம் இருக்கிறாள். இத்தகைய அமைப்பைக் காண்பது மிக அபூர்வம். தற்போது இந்த சிலை சேதமடைந்த நிலையில் உள்ளது.
பிரம்மன் (வேதி) வழிபட்ட தலமாதலால் திருவேதிகுடி ஆனது. பிரம்மன் பூஜித்த தெட்சிணாமூர்த்தியை நாமும் வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். 4 வேதங்களும் இங்கு இறைவனை வழிபட்டுள்ளன. வேதம் கேட்பதில் விருப்பமுள்ள பிள்ளையார் இத்தலத்தில் தலை சாய்த்து அருள்பாலிக்கிறார். எனவே இவர் வேத பிள்ளையார் எனப்படுகிறார்.
நான்கு வேதங்களையும் பயின்றவர்கள் இத்தலத்தில் அதிகமாக வாழ்ந்த காரணத்தினால் சதுர்வேதிமங்கலம் என்ற பெயரும் இருந்துள்ளது.
கல்வி சிறக்க வழிபாடு: வாளை என்னும் மீன்கள் நிறைந்த தடாகத்தில் கரையில் அமைந்ததால் இவருக்கு "வாளைமடுநாதர்' என்றும் பெயருண்டு. இவர் வேதங்களுக்கு அதிபதி என்பதால், பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும்முன் பெற்றோர் இங்கு வந்து வேண்டிச் செல்கின்றனர். சரஸ்வதி பூஜையன்றும் சிவனுக்கு விசேஷ பூஜை செய்து வழிபடுகின்றனர். பங்குனி 13,14,15 ஆகிய தேதிகளில் சுவாமி மீது சூரிய ஒளி விழும். சிவன் சன்னதி முன் மண்டபத்தில் வேதங்களைக் கேட்டபடி செவிசாய்த்த விநாயகர் இருக்கிறார். கோயில் எதிரே வேத தீர்த்தம் உள்ளது.
திருவையாறில் சப்தஸ்தான விழா நடக்கும்போது, ஐயாறப்பர், அம்பிகை, நந்திதேவர் இங்கு எழுந்தருளி, இத்தல மூர்த்தியை அழைத்துச் செல்வர்.

மங்கல அம்பிகை: இத்தல அம்பிகை பெண்களுக்கு அரசியாக இருந்து, அவர்களுக்கு மங்களகரமான வாழ்க்கையை அமைத்துத் தருபவதால் "மங்கையற்கரசி' என்றே பெயர். ஆடி, தை மாத வெள்ளியன்று இவள் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி தருவாள். மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள் நிவர்த்திக்காக, இவளுக்கு மஞ்சள் புடவை, தாலி அணிவித்து வழிபடுகிறார்கள்.
செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடையுள்ளவர்கள் இங்குள்ள சுப்ரமணியருக்கு அபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கின்றனர். இவர் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்றவர். பிரகாரத்தில் லட்சுமி நாராயணர் இருக்கிறார். அருகில் ஆஞ்சநேயர் வணங்கியபடி கிரீடம் இல்லாமல் இருக்கிறார். சிவன் சன்னதியைச் சுற்றிலும் 108 லிங்கங்கள் உள்ளன.

தல வரலாறு:பிரம்மாவிடம் இருந்த வேதங்களை, அசுரன் ஒருவன் எடுத்துச் சென்று கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். அதை, பெருமாள் மீட்டு வந்தார். அசுரனிடம் இருந்ததால் உண்டான தோஷம் நீங்க, வேதங்கள் சிவனை வழிபடவே, அவர் வேதங்களை புனிதப்படுத்தினார். பின், வேதங்களின் வேண்டுதலுக்காக வேதபுரீஸ்வரராக எழுந்தருளினார். தலத்திற்கும் திருவேதிகுடி என்ற பெயர் ஏற்பட்டது. பிரம்மா தனக்கு ஏற்பட்ட ஒரு சாபத்திற்கு, இங்கு சிவனை வேண்டி விமோசனம் பெற்றார். பிரம்மாவிற்கு "வேதி' என்ற பெயர் உண்டு. இதனாலும் சிவனுக்கு இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர்.

சோழமன்னன் ஒருவன் தன் மகளின் திருமணம் தொடர்ந்து தடைபட்டு வந்ததால் மிகவும் வருந்தினார். ஒரு முறை அவன் இக்கோயில் வந்து மங்கையர்க்கரசி அம்மனை தரிசனம் செய்து, தன் மகளின் திருமணம் விரைவில் நடக்க வரம் வேண்டினான்.
அம்மனின் கருணையால் அவனது மகளுக்கு விரைவில் திருமணம் நடந்தது. அன்றிலிருந்து தன் மகளுக்கு மங்கையர்க்கரசி என்று செல்லப்பெயர் சூட்டி தன் நன்றியை தெரிவித்தான். அதன்பின் கோயிலுக்கு பல திருப்பணிகளும் செய்தான்.

திருமணத்தில் தடை உள்ளவர்கள் இத்தலம் வந்து இறைவனையும், அம்மனையும் வழிபட்டு, சம்பந்தரின் பதிகத்தை வீட்டில் அமர்ந்து காலை மாலை விடாது படித்து வந்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

போன்: +91-93451 04187, +91-4362-262 334, 93451 04187, 98429 78302

Tolaiyachelvar Shiva Temple at Tiruchotrutturai (Tirukkandiyur, Tiruvaiyaru) near Thanjavur (Saptastanam, Paadal Petra Stalam)

அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில்

மூலவர்:சோற்றுத்துறை நாதர், ஓதவனேஸ்வரர், தொலையாச்செல்வநாதர்,
அம்மன்:அன்னபூரணி, தொலையாச்செல்வி
பாடியவர்கள்:அப்பர், சம்பந்தர், சுந்தரர்
தேவாரப்பதிகம் 
இறந்தார் என்பும் எருக்கும் சூடிப் புறங்காட் டாடும் புனிதன் கோயில் சிறந்தார் சுற்றம் திருஎன்று இன்ன துறந்தார் சேரும் சோற்றுத் துறையே.
-சுந்தரர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 13வது தலம்.

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்

தலபெருமை:இத்தல இறைவனை வழிபடும் அடியார்களின் பசிப்பணி தீர இறைவன் சோறு வழங்குபவன் என்னும் பொருளைத்தருவதுடன், உயிரைப்பற்றிய பிறவிப்பபிணி தீர வீடுபேறு தருபவன் என்ற பொருளும் உண்டு. இது காசிக்கு அடுத்தபடியாக அட்சய பாத்திரம் கொடுத்த தலமாகும்.
அருளாளருக்காக அட்சய பாத்திரம் அருளிய சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் இத்தலமே ஏழூர் தலங்களில் ஒன்றான திருச்சோற்றுத்துறை. திருவையாற்றில் தொடங்கி, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை என்ற சப்தஸ்தானத் தலங்களில் இது மூன்றாவது அடியவர்களது பசிப்பிணியைப் போக்க உணவு வழங்கிய இறைவன் எழுந்தருளிய தலம் என்பதால் இந்த ஊருக்கு  திருச்சோற்றுத்துறை எனும் பெயர் ஏற்பட்டது.
இத்தலத்ததை ராமலிங்க வள்ளலாரும், அருணகிரிநாதரும் போற்றியுள்ளனர். பிரம்மா, விஷ்ணு, இந்திரன், கவுதம முனிவர், சூரியன்ஆகியோர் வழிபட்டுள்ளனர். இத்தல இறைவனை வழிபட்டு இந்திரன் பதவி பெற்றான், கவுதமர் முக்தி பெற்றார்.

நந்தி பகவானுக்கும் வியாக்ரபாதரின் மகளான சுயம் பிரகாசைக்கும்பங்குனி மாதம் புனர்பூசத் திருநாளன்று மழபாடியில்திருமணம் நடைபெறும்.
சித்திரை மாதம் திருவையாறு பெருமானான ஐயாறப்பருக்கு பிரம்மோற்சவம். அதன்நிறைவு நாளில்  நந்திதேவரையும், சுயாம்பிகையையும் வெட்டிவேர் பல்லக்கில் ஏற்றுவர். ஐயாறப்பரும் அறம் வளர்த்த நாயகியும் கண்ணாடி பல்லக்கில் ஏற்றிக் கொள்வர். காலை ஆறு மணி சுமாருக்குத் திருவையாறில் புறப்படும் இந்த கோஷ்டி, முதலில் திருப்பழனத்துக்குச் செல்லும். அங்கு ஆபத்சகாயரும் பெரியநாயகியும் இவர்களை எதிர்கொண்டழைத்து உபசாரம் செய்வர். பின்னர், அவர்களும் சேர்ந்து கொள்ள, அடுத்த இடம் திருச்சோற்றுத்துறை. அதன் எல்லையிலேயே  அவர்களை எதிர்கொண்டு அழைக்கும் சோற்றுத்துறைநாதரும் அன்னபூரணி அம்மையும் ஊருக்குள் அழைத்து போவார்கள்.
திருச்சோற்றுத்துறையில் வருடங்களுக்கு எல்லாம் அன்னம் பாலிக்கப்படும். பின்னர் இந்த ஊர்வலம் திருவேதிக்குடி நோக்கித் தொடரும்.

தல வரலாறு:ஒரு முறை நாட்டில் பஞ்சம் ஏற்பட்ட போது அருளாளன் என்ற சிவபக்தன் பசியால் வாடினான். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பசியால் துடித்தனர்.
வருந்திய அருளாளன் இத்தல இறைவனிடம், ""என்னகொடுமை இது இறைவா இப்படியா மக்களை பசியில் தவிக்க விடுவாய் . இது நியாயமா,' என சண்டை போட்டான்.பசியின் கொடுமையால் கோயில்அர்ச்சகர் ஒரு மாதம் முன்பே வருவதை நிறுத்திவிட்டார்.
மாலையில் வந்து விளக்கு மட்டும் வைத்த ஊழியன், இரண்டு நாட்களுக்கு முன்னால் கீழே விழுந்துவிட்டான். விளக்கு கூட இல்லாமல் இருட்டில் கிடந்த சிவமூர்த்தத்தைப் பார்த்துக்கொண்டிருந்த அருளாளர், திடீரென்று வாயில்படியில் மோதி அழத் தொடங்கினார். திடீரென்று மழை பொழிய ஊரே வெள்ளக் காடானது.
அப்போது ஒரு பாத்திரம் வெள்ளத்தில் மிதந்து வந்தது. இதைப்பார்த்த அருளாளர் அதை கையில் எடுத்தார். ""அருளாளா! இது அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம். இதை வைத்து அனைவருக்கும் சோறு போடு'என்று அசரீரி கேட்டது.
இந்த பாத்திரத்தை கையில் வைத்தபடி ஊராருக்கு சோறும் நெய்யும் குழம்புமாக போட்டு அவர்களின் பசி தீர்த்தார். கடவுள் கண்ணத் திறந்துட்டார்! என்று ஊர் மகிழ்ந்தது.

திருமணத்தடை உள்ளவர்கள் சித்திரையில் நடைபெறும் நந்தியின் திருமணதிருவிழாவை கண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

போன்: +91- 4362-262 814, +91-94862 82658,+91-94435 61731, +91-99438 84377, +91-99424 50047.

Padikkasalitta Eswarar Temple at Azhagar Puttur (Tirunarayur) near Kumbakonam (Paadal Petra Stalam)

அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோயில்

மூலவர்:படிக்காசுநாதர் ( சொர்ணபுரீஸ்வரர்)
அம்மன்:அழகம்மை
பாடியவர்கள்:நால்வர்
தேவாரப்பதிகம் 
அரிசிலின் கறை மேலனி யார்தரு புரிசை நந்திருப் புத்தூர்ப் புனிதனைப் பரிசொடும் பரவிப் பணிவார்க் கெலாம் துரிசில் நன்னெறி தோன்றிடுங் காண்மினே. கும்பகோணம்.
-திருநாவுக்கரசர் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 66வது தலம்.

தல சிறப்பு:இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக பெருமாள்தான் சங்கு சக்கரம் வைத்தபடி அருள்பாலிப்பார். ஆனால் இத்தலத்தில் உள்ள முருகன் சங்கு, சக்கரம் வைத்தபடி அருள்பாலிக்கிறார். நாயன்மார்களில் ஒருவரான புகழ்த்துணையார் இத்தலத்தில் அவதரித்தவர்.

தலபெருமை:
சங்கு, சக்கர முருகன்: ஒருசமயம் அசுரர்களின் தொல்லை அதிகரிக்கவே, அவர்களை அழிக்க முருகனை அனுப்ப எண்ணினார் சிவன். எனவே, இங்கிருந்த முருகனை அசுர வதத்திற்கு கிளம்பும்படி கூறவே, முருகனும் கிளம்பினார். அப்போது சிவனும், தேவர்களும் அவருக்கு பல ஆயுதங்களை கொடுத்தனர்.
திருமால் தனது சங்கு, சக்கரத்தை கொடுத்தார். ஆயுதங்களுடன் சென்ற முருகன், அசுரர்களை சம்ஹாரம் செய்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்குள்ள முருகன், கைகளில் கேடயம், வில், அம்பு, சாட்டை, கத்தி, சூலாயுதம், வஜ்ரம் மற்றும் திருமாலின் ஆயுதங்களான சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். சங்கு, சக்கரமே இவரது பிரதான ஆயுதமாக இருக்கிறது.
இந்திர மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவரை, "கல்யாணசுந்தர சண்முகசுப்பிரமணியர்' என்று அழைக்கிறார்கள். அருகில் வள்ளி, தெய்வானையும் இருக்கின்றனர். இவரது திருவாட்சி "ஓம்' வடிவில் அமைக்கப்பட்டிருப்பது விசேஷம். அருகில் மகாலட்சுமி சன்னதி இருக்கிறது. திருமாலின் ஆயுதங்களுடன் முருகனையும், அருகில் மகாலட்சுமியையும் ஒரே சமயத்தில் தரிசப்பது அபூர்வம்.
நாயனார் அவதார தலம்: நாயன்மார்களில் ஒருவரான புகழ்த்துணையார்
இத்தலத்தில் அவதரித்தவர். சிவன் மீது பக்தி கொண்டிருந்த இவர், அரசலாற்றில் தீர்த்தம் எடுத்து தினமும் சிவபூஜை செய்வது வழக்கம். இவர் மிகவும் வறுமையில் வாடினாலும், பூஜையை மட்டும் விடாமல் செய்து வந்தார். ஒருசமயம் இப்பகுதியில் கடும் பஞ்சம் உண்டானது. அப்போதும் புகழ்த்துணையார் கலங்கவில்லை. பூஜையை வழக்கம்போல தொர்ந்தார். பல நாட்களாக சாப்பிடாததால், உடல் தளர்ந்த புகழ்த்துணையார் தள்ளாடியபடியே சுவாமிக்கு அபிஷேக தீர்த்தம் எடுத்து வந்தார். சிவன் சன்னதிக்குள் சென்ற அவர், உடல் வலுவின்றி கீழே சரிந்தார். அப்போது தீர்த்த குடம் சிவலிங்கத்தின் மீது விழுந்தது. புகழ்த்துணையாரும் லிங்கத்தின் மீது விழுந்து மயக்கமுற்றார். சிவன் அவரது கனவில் தோன்றி, ""என்ன வேண்டுமென கேள்!' என்றார். புகழ்த்துணையார் கனவிலும், மக்களின் வறுமையை போக்கி, சிவபூஜை தடையின்றி நடக்க அருள் செய்யும்படி வேண்டினார். சிவன் அவரிடம், தினமும் ஒரு படிக்காசு தருவதாகவும், அதை வைத்து மக்களின் பஞ்சத்தை போக்கும்படியும் கூறினார்.
அதன்பின் மயக்கம் தெளிந்த புகழ்த்துணையார் பூஜையை தொடர்ந்தார்.
சிவனும், தினமும் ஒவ்வொரு படிக்காசு கொடுத்தருளினார். பலகாலம் இத்தலத்தில் சிவபூஜை செய்த புகழ்த்துணையார், இங்கேயே  முக்தியடைந்தார். சிவன் அவரை நாயன்மார்களில் ஒருவராக்கினார். எதிரெதிரே சூரிய,சந்திரன்: அரசலாற்றின் தென்திசையில் இக்கோயில் அமைந்திருக்கிறது. பொதுவாக நவக்கிரக மண்டபத்தில் சூரியனும், சந்திரனும் கிழக்கு திசை நோக்கியே இருப்பார். ஆனால், இக்கோயிலில் இவ்விருவரும் எதிரெதிரே பார்த்தபடி இருக்கின்றனர். எதிரே ஒன்பது குழிகளும் இருக்கிறது. இந்த குழியில் கிரகங்கள் வாயு வடிவில் இருப்பதாக ஐதீகம். இந்த அமைப்பு மிகவும் விசேஷமானது. முன்னோர்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் நவக்கிரக சன்னதியில் சூரிய, சந்திரனுக்கு பூஜை செய்தும், நவக்கிரக குழியில் தீபமேற்றியும் வழிபடுகிறார்கள்.
படிக்காசு பூஜை: புகழ்த்துணை நாயனார் பிறந்து, வளர்ந்து, முக்தியடைந்த தலம் இது. தற்போதும் இவரது தலைமுறையினரே இங்கு பூஜை செய்கின்றனர்.
படிக்காசுநாதர் சன்னதியில் இரண்டு காசுகளை வைத்து வேண்டிக்கொண்டு, ஒன்றை மட்டும் வீட்டிற்கு எடுத்துச் சென்று பூஜிக்கின்றனர். இதனால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை. 

தல வரலாறு:ஒருசமயம் பிரம்மா கைலாயத்திற்கு சென்றபோது, அங்கிருந்த முருகனை அவர் கவனிக்காமல் சென்றார். பிரம்மாவை அழைத்த முருகன், "நீங்கள் யார்?' எனக்கேட்டார். பிரம்மா அவரிடம் தன்னை அறிமுகப்படுத்தியதோடு, தானே உலகை படைப்பவன் என்றும் கர்வத்துடன் கூறினார்.
முருகன் அவரிடம் எந்த மந்திரத்தின் அடிப்படையில் படைக்கிறீர்கள்? எனக்கேட்டார். "ஓம்' என்னும் பிரணவ மந்திர அடிப்படையில்தான்! என்றார் பிரம்மா. முருகன், அம்மந்திரத்திற்கு விளக்கம் கேட்டார். அவருக்கு தெரியவில்லை. எனவே அவரது தலையில் குட்டி, பதவியை பறித்தார். இதையறிந்த சிவன் முருகனிடம், பிரம்மாவிடம் பதவியை கொடுக்கும்படி கூறினார். முருகன் கேட்கவில்லை.
சிவன், பிரணவத்தின் விளக்கம் சொல்லும்படி முருகனிடம் கேட்கவே, அவரும் விளக்கினார். பின்பு, சிவன் அவரை சமாதானம் செய்யவே, மீண்டும் பிரம்மாவிடம் பதவியை ஒப்படைத்தார். பிரணவத்தின் பொருள் தெரியாவிட்டாலும் வயதில் பெரியவரான பிரம்மாவை தண்டித்ததற்கு வருந்தினார் முருகன். எனவே தவறுக்கு மன்னிப்பு வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார்.
சிவன், அவருக்கு காட்சி தந்து ""தவறை யார் வேண்டுமானாலும் சுட்டிக்காட்டலாம், தவறில்லை. ஆனால், தண்டிக்கத்தான் கூடாது,'' என்று அறிவுரை சொல்லினார். இவரே இங்கு சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.

இத்தலவிநாயகர் சொர்ண விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

இங்கு வேண்டிக்கொள்ள தவறை தட்டிக்கேட்கும் மனப்பான்மையும், துன்பங்களைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவமும் உண்டாகும் என்பது நம்பிக்கை.  திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் முருகனுக்கு அமாவாசையன்று பால் பாயச நைவேத்யம் படைத்து, பூஜை செய்து வழிபடுகிறார்கள். இதனால் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை.

போன்: +91- 435 - 246 6939, +91-99431 78294.

Thiruthalinathar Temple at Tiruppattur (Karaikkudi) (Paadal Petra Stalam)

அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில்

மூலவர்:திருத்தளி நாதர்
அம்மன்:சிவகாமி
பாடியவர்கள்:சம்பந்தர், அப்பர், அருணகிரியார்
தேவாரப்பதிகம் 
நாற விண்ட நறுமா மலர்க்கவ்வித் தேறல் வண்டு திளைக்குந் திருப்புத்தூர் ஊறல் வாழ்க்கை உடையார் அவர்போலும் ஏறுகொண்ட கொடியெம் இறையாரே.
-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற பாண்டியநாட்டுத்தலங்களில் இது 6வது தலம்

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அஷ்ட பைரவர் தலம்
இத்தலத்தில் உள்ள நடராஜர் கவுரி தாண்டவ கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்குள்ள தலவிநாயகரின் திருநாமம் பொள்ளாப்பிள்ளையார்.
வால்மீகி தவம் செய்த இடத்தின் வடிவம், கருவறைக்கு பின்புறம் உள்ளது. இந்திரனின் மகன் ஜெயந்தன் கந்தபுராணத்தில் முக்கிய பாத்திரம். இவனை பத்மாசுரன் கடத்தி வந்து சிறையில் அடைத்தான்.
தாயின் மானம் காக்க சிறைப்பட்ட ஜெயந்தனை சூரபத்மனிடம் போரிட்டு மீட்டார் முருகன். இவனுக்கு இக்கோயிலில் தனிச்சன்னதி இருக்கிறது.
இவனுக்கு சித்திரை மாதத்தில் இங்கு விழா எடுக்கப்படுகிறது. மகாவிஷ்ணு இத்தலத்தில் திருத்தளிநாதரை வழிபட்டுள்ளார். இவரும் யோகநிலையில், சுவாமிக்கு பின்புறம் தனிசன்னதியில் காட்சி தருகிறார். இவர், "யோகநாராயணர்' என்று அழைக்கப்படுகிறார். ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சநேயர் உடன் இருக்கின்றனர்.
ராகு கேது தோஷம் நீக்கும் திருநாகேஸ்வரர் சன்னதியும் இங்குள்ளது. ராகு காலத்தில் இவரை வணங்குகின்றனர். சுப்பிரமணியர் வடக்கு நோக்கியபடி வள்ளி, தெய்வானை யுடன் காட்சி தருகிறார்.
இவரை, அருணகிரியார் திருப்புகழில் பாடியுள்ளார். நடராஜர் கவுரிதாண்டவ கோலத்தில் உள்ளார். தெட்சிணாமூர்த்தி சீடர்கள் இல்லாமல் உள்ளார்.
நவக்கிரக மண்டபத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலையில் உள்ளன. இப்படி, பலதரப்பட்ட விசேஷங்களை அடக்கியது இந்தக்கோயில்.

தலபெருமை:சிவ பக்தனான இரண்யாட்சகனுக்கு அந்தகாசுரன், சம்பாசுரன் என இரண்டு மகன்கள் பிறந்தனர். இவர்கள் சிறந்த சிவபக்தர்களாக இருந்தாலும், தேவர்களுக்கு பெரும் துன்பம் கொடுத்தனர். தேவர்கள் சிவபெருமானை துதித்தனர். சிவன் தனது அம்சமாக விஸ்வரூபம் எடுத்து வந்தார். அந்தகாசுரன், சம்பகாசுரனை வதம் செய்தார். இவரே பைரவர் ஆவார்.
அசுரர்கள் என்றாலும் அவர்கள் பக்தர்கள் என்பதால் பைரவருக்கு தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க இங்கு சிவலிங்க பூஜை செய்தார். இவரே இத்தலத்தில் "யோகபைரவராக' காட்சி தருகிறார்.
இவர் வலக்கரத்தில் சிவலிங்கத்தை வைத்து, கால்கட்டை விரலை தரையில் ஊன்றியபடி யோகநிலையில் காட்சி தருகிறார். இவருக்கு வெண்ணிற பட்டாடை அணிவித்து அலங்கரிப்பது விசேஷம்.
யோக நிலையில் இருப்பதால் இவருக்கு "நாய்' வாகனம் கிடையாது. கிரக தோஷங்கள் நீங்க நவக்கிரக தலங்களுக்கு செல்ல முடியாவிட்டால், இங்குள்ள யோக பைரவரை வணங்கினால் போதும். "ஆபத்துத்தாரண பைரவர்' என்று அழைக்கப்படும் இவர் எல்லா தோஷங்களையும் நீக்குவார் என்பது ஐதீகம்.
தேய்பிறை, வளர்பிறை அஷ்டமி தினங்களில் பைரவருக்கு வாசனைப்  பொருட்கள் வைத்து வழிபடுகிறார்கள். சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமையன்று, இவருக்கு ஒரு நாள் விழா நடக்கிறது. அப்போது பைரவர் உற்சவர் குதிரை வாகனத்தில் புறப்பாடாகிறார். கார்த்திகையில் சம்பகசஷ்டி விழாவின்போது ஆறு நாட்கள், "அஷ்டபைரவ யாகம்' நடக்கிறது. இந்த யாகம் மிகவும் விசேஷமானது. 

தல வரலாறு:முன்னொரு காலத்தில் கொலை, கொள்ளை போன்ற பாவச்செயல்களில் ஈடுபட்டு வந்த வால்மீகி, தன்னை திருத்திக்கொள்ள வேண்டி கொன்றை மரங்கள் நிறைந்த ஒரு வனத்தில் சிவனை நோக்கி கடுந்தவம் இருந்தார். நீண்டகாலம் தவம் செய்ததால், அவர் அமர்ந்திருந்த இடத்தை சுற்றிலும் கரையான்கள் புற்று கட்டின. அவரது தவத்தை மெச்சிய சிவன் அவருக்கு காட்சி கொடுத்தார்.
புற்றில் இருந்த வால்மீகிக்கு காட்சி கொடுத்ததால், இவர் "புற்றீஸ்வரர்' எனப்பட்டார். அவ்வாறு காட்சி கொடுத்ததின் அடிப்படையில் எழுப்பப்பட்ட தலமே இது.
புற்றின் முன் சிவன் காட்சி தந்ததால், "புத்தூர்' என்று அழைக்கப்பட்ட இத்தலம், பின்னர் "திரு' என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு, "திருப்புத்தூர்' ஆனது. பிற்காலத்தில், இவ்விடத்தில் மன்னர்கள் கோயில் கட்டினர்.

குடும்பம் செழிக்க, செய்த பாவத்திற்கு மன்னிப்பு கிடைக்க இங்கு வேண்டிக்கொள்ளலாம். சுவாமிக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து விசேஷ பூஜை செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

போன்: +91- 94420 47593.


Adiratneswarar Temple at Tiruvadanai (Devakottai - Sivaganga) (Paadal Petra Stalam)

அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:ஆதிரத்தினேஸ்வரர்
அம்மன்:சினேகவல்லி
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர் 
தேவாரப்பதிகம் 
டவனவனவனவனவனவனவன வனவன வெந்த நீறணி மார்பில்தோல் புனை அந்தமில்லவன் ஆடானை கந்தமாமலர் தூவிக்கை தொழும் வலங்கொள்வார் வினை மாயுமே.
-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத்தலங்களில் இது 9வது தலம்

தல சிறப்பு:சூரிய பூஜை நடக்கும் கோயில்களில் இதுவும் ஒன்று. ஆதியாகிய சூரியன் நீலரத்தினக்கல்லால் ஆவுடை அமைத்து வழிபட்டதால், ஆதிரத்தினேஸ்வரர் என பெயர் வந்தது. சுயம்பு மூர்த்தியான இவர் மீது உச்சிக்காலத்தில் பாலபிஷேகம் செய்தால் இறைவன் நீல நிறத்தில் காட்சியளிப்பார்.

பாண்டி நாட்டு பாடல் பெற்ற 14 தலங்களில் ஒன்று. அகஸ்தியர், மார்க்கண்டேயர், காமதேனு இங்கு வழிபட்டு சிறப்பு பெற்றுள்ளனர்.
அருணகிரிநாதர் தமது திருப்புகழில் இத்தல முருகனை, "சிற்றின்பம் கலக்காமல் பேரின்ப நிலையில்' பாடியுள்ளார்

ஒவ்வொரு தலத்திலும் ஒன்று சிறப்புடையதாக இருக்கும். ஆனால் இத்தலத்தில் மூன்றுமே சிறப்புடையது. மூர்த்தி சுயம்புலிங்கமாக ஆதிரத்தினேஸ்வரர், அஜகஜேஸ்வரர், ஆடானை நாதர் என்ற பெயர்கள் உண்டு.
அம்மன் சிநேகவல்லி, அன்பாயிரவல்லி. தீர்த்தம் சூரியபுஷ்கரிணி, வருண, வாருணி, மார்க்கண்டேய, அகத்திய, காமதேனு தீர்த்தங்கள். அர்ஜுனன் வனவாசத்தின் போது பாசுபதாஸ்திரம் பெற்றபின் அதை எவ்விதம் உபயோகிப்பது என்று இறைவனிடம் கேட்க, அதற்கு இறைவன், ""திருவாடனைக்கு வா சொல்லித் தருகிறேன்''என்றார்.
அதன்படி அர்ஜுனனும் இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு தெரிந்து கொள்கிறார். அதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு இங்குள்ள சோமாஸ்கந்தரை அர்ஜுனன் ஸ்தாபித்தான் என்பது ஐதீகம்.
சூரியனின் கர்வம் போக்கிய தலம்: ஒரு முறை சூரியனுக்கு தான் மிகவும் பிரகாசமுடையவன் என்ற கர்வம் ஏற்பட்டது. இறைவனின் சிரசில் சூரிய ஒளி பிரகாசிக்க நந்தியினால் அந்த ஒளி இழுக்கப்பட்டு, சூரியனுக்கு சுய ஒளி போய்விட்டது. மனம் வருந்திய சூரியன், நந்தியிடம் பரிகாரம் கேட்டார்.
சுயம்பு மூர்த்தியாக திருவாடானையில் வீற்றிருக்கும் இறைவனை  நீல ரத்தினக்கல்லில் ஆவுடை அமைத்து வழிபட்டால் சாபம் நீங்கும் என கூறினார். ஆதியாகிய சூரியன் நீலரத்தினக்கல்லால் ஆவுடை அமைத்து வழிபட்டதால், ஆதிரத்தினேஸ்வரர் என பெயர் வந்தது.
இவர் மீது உச்சிக்காலத்தில் பாலபிஷேகம் செய்தால் இறைவன் நீல நிறத்தில் காட்சியளிப்பார். சுக்கிரனுக்குரிய அதிதேவதை: அம்மன் சிநேகவல்லி சுக்கிரனுக்குரிய அதிதேவதை ஆவார். இத்தலம் சுக்கிரனுக்குரிய சிறப்புத்தலம்.

தல வரலாறு:வருணனுடைய மகன் வாருணி. ஒரு நாள் இவன் துர்வாச முனிவரின் ஆசிரமத்தில் தங்கினான். முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அப்போது வாருணியுடன் வந்த நண்பர்கள் ஆசிரமத்தில் உள்ள பூ, பழங்களை வீசி எறிந்து துர்வாச முனிவரின் தவத்தை கலைத்தனர்.
துர்வாச முனிவர் கோபத்துடன், ""வாருணி! நீ வருணனின் மகனாக இருந்தும், பொருந்தாத காரியம் செய்து விட்டாய். எனவே பொருந்தாத தோற்றமான, ஆட்டின் தலையும் யானையின் உடலுமாக மாறுவாய்,''என சாபமிட்டார். ஆடு+ஆனை என்பதால் இத்தலம் வடமொழியில் அஜகஜபுரம் ஆனது.
தன் தவறை உணர்ந்தான் வாருணி. இவனது நிலை கண்ட மற்ற முனிவர்கள், சூரியனுக்கு ஒளி கொடுத்த தலம் பாண்டி நாட்டில் உள்ளது. அத்தலத்து இறைவனை வழிபாடு செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும் என்று வாருணியிடம் கூறினர். அதன்படி வாருணியும் இத்தலத்தில் தன் பெயரால் குளம் அமைத்து தினமும் ஆதிரத்தினேஸ்வரரை வணங்கினார்.
இறைவனும் இவனது சாபம் நீக்கி, என்ன வரம் வேண்டும் எனக்கேட்க, கலிகாலம் முடியும் வரை இத்தலம் என் பெயரால் விளங்க வேண்டும் என வரம் பெறுகிறான். அத்துடன் பெரியவர்களிடம் மரியாதைக் குøறாவாக நடந்தால் என்ன நடக்கும் என்பதற்கு தான் ஒரு உதாரணமாக இருக்க வேண்டும் என்றும் கேட்கிறான். இறைவனும் அதற்கிசைந்து இத்தலத்தை "அஜகஜக்ஷத்திரம்' ஆடு+ஆனை+புரம் என வழங்க அருள்புரிந்தார்.
இதுவே காலப்போக்கில் "திரு' எனும் அடைமொழியோடு "திருவாடானை' என ஆனது.

சுவாமி ஆதிரத்தினேஸ்வரரை வணங்கினால் முன் செய்த தீவினை நீங்கும். அம்மனுக்கு விசேஷ சுக்கிர ஹோமம் செய்தால் புத்திர பாக்கியம் உண்டாகும்.
சுக்கிர திசை, புத்தி நடப்பவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பானது
திருவண்ணாமலை, வைத்தீஸ்வரன் கோயில்களில் நாடி ஜோதிடம் பார்ப்பவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்கிறார்கள்.

போன்: +91- 4561 - 254 533.

Vridhapureeswarar Temple at Tiruppunnavasal (Arantangi) near Pudukkottai

அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:விருத்தபுரீஸ்வரர் (பழம்பதிநாதர்)
அம்மன்:பெரியநாயகி
பாடியவர்கள்:சம்பந்தர், சுந்தரர்
தேவாரப்பதிகம் 
சித்தம் நீநினை என்னொடு சூளறு வைகலும் மத்தயானையின் ஈருரிபோர்த்த மணாளன் ஊர் பத்தர் தாம்பலர் பாடி நின்றாடும் பழம்பதி பொத்தில் ஆந்தைகள் பாட்டுஅறாப் புனவாயிலே.
சுந்தரர்.
தேவாரப்பாடல் பெற்ற பாண்டியநாட்டுத்தலங்களில் இது 7வது தலம்.

தல சிறப்பு:வைகாசி விசாகத்தன்று மூலவரின் மீது சூரிய ஒளிக்கதிர்கள் பட்டு சூரியபூஜை நடக்கிறது. தஞ்சையை விட பெரிய ஆவுடை உள்ள கோயில். இவ்வளவு பெரிய ஆவுடையை வேறு எந்த கோயிலிலும் பார்க்க முடியாது. இதுவே இத்தலத்தில் மிகச்சிறந்த சிறப்பம்சமாகும்.

இத்ததல விநாயகர் ஆகண்டல விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.
இவ்வூர் கோயிலுக்கு தெற்கே பாம்பாறும், கோயில் எதிரே 3 கி.மீ. தொலைவில் கடலும் உள்ளது. கடல் மற்றும் ஆற்றின் புனலில்(வாயிலில்) ஊர் இருப்பதால் "திருப்புனவாசல்' என்ற பெயர் ஏற்பட்டது.

தஞ்சையை விட பெரிய ஆவுடையார்:
எந்த ஊர் லிங்கம் பெரியது எனக்கேட்டால், பெரும்பாலானவர்கள் "தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் (பெரிய கோயில்) லிங்கம் என்று தான் சொல்வார்கள்.
உண்மையில், தஞ்சாவூர் கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனை விட, அவரது மகன் ராஜேந்திர சோழன் கட்டிய கங்கைகொண்டசோழபுரத்தின் லிங்கமே உயரத்தில் பெரியது. தஞ்சை கோயில் லிங்கம் 12.5 அடி உயரமும், 55 அடி சுற்றளவும் (ஆவுடையார்) கொண்டது.
கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம் 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்டது. திருப்புனவாசல் கோயிலில் லிங்கம் 9 அடி உயரமே உடையதென்றாலும், ஆவுடையார் 82.5 அடி சுற்றளவு கொண்டதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது தஞ்சை மற்றும் கங்கைகொண்டசோழபுரத்தை விட பெரியது. இதனால், ஆவுடையாருக்கு வஸ்திரம் அணிவிக்கும் போது, ஒருவர் பிடித்துக் கொள்ள இன்னொருவர் ஆவுடையாரை சுற்றி வந்து கட்டி விடுவார்.
லிங்கத்திற்கு 3 முழமும், ஆவுடைக்கு 30 முழமும் வேட்டி கட்டப்படுகிறது. 
இதை வைத்து தான் "மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று' என்ற வட்டாரமொழி இப்பகுதியில் சொல்லப்படுகிறது. இங்கே முழம் என்பது "தச்சுமுழம்' கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
ஒரு தச்சுமுழம் என்பது 2.75 அடி. அப்படியானால் 82.5 அடி நீளமுள்ள வேஷ்டி கட்ட வேண்டும். இதை உத்தேசமாக 90 அடிக்கு நெய்து விடுகிறார்கள்.
இந்த வஸ்திரத்தை பக்தர்கள், ஸ்பெஷல் ஆர்டர் கொடுத்து நெய்து காணிக்கையாகச் செலுத்துகிறார்கள். சிவனுக்கு அபிஷேகம் செய்வதற்காக ஆவுடையை சுற்றி பலகை கட்டியிருக்கிறார்கள். இதன் மீது ஏறிநின்று அபிஷேகம் செய்கின்றனர்.
கள்ளியும் தலமரம்
கோயில்களில் ஒன்று அல்லது இரண்டு தலவிருட்சங்கள் இருக்கும். இத்தலம் நான்கு யுகத்திலும் நான்கு பெயர்களுடன் இருந்ததாகக் கருதப்படுகிறது. எனவே, நான்கு தலவிருட்சங்கள் உள்ளன. எல்லோராலும் ஒதுக்கப்படும் கள்ளியும் இங்கு தல விருட்சமாக உள்ளது என்பதில் இருந்து, இறைவன் வெறுக்கக்கூடியவற்றையும் ஆட்கொள்பவர் என்பது வெளிப்படுகிறது.
கிருதயுகத்தில் வஜ்ரவனம், இந்திரபுரம் என்ற பெயருடன் சதுர கள்ளியையும், திரேதாயுகத்தில் பிரம்மபுரம் என்ற பெயருடன் குருந்தமரத்தையும், துவாபரயுகத்தில் விருத்தகாசி என்ற பெயருடன் மகிழ மரத்தையும், கலியுகத்தில் பழம்பதி என்ற பெயருடன் புன்னை மரத்தையும் தலவிருட்சமாக கொண்டுள்ளது. இவை நான்கும் நான்கு வேதங்களாக வணங்கப்படுகின்றன. காளியைக் கண்டாலே நடுக்கம்
சதுரகள்ளி வனமாக இருந்த இப்பகுதியில் கார்கவ முனிவர் தவம் செய்து வந்தார். அசுரன் ஒருவன் புலிரூபம் எடுத்து இவரைக் கொல்ல முயன்றான். கோபமடைந்த முனிவர் அவனை எப்போதும் புலியாகவே இருக்கும்படி சபித்தார்.
ஒருமுறை பார்வதி மானிட வடிவில் இப்பகுதிக்கு வரும்போது, புலிவடிவில் இருந்த அரக்கன் பார்வதி மீது பாய்ந்தான். கோபமடைந்த அம்பாள், காளியாக மாறி புலியை எட்டி உதைத்தாள். தாயின் திருவடி பட்டதோ இல்லையோ அவன் சுயரூபம் பெற்றான். அவனது அசுரகுணங்களும் ஒழிந்து விட்டன.
""அன்னையே! நான் எப்போதும் உங்கள் அருகில் இருக்கும் வரம் தர வேண்டும்,''என்றான். அதன்படி அசுரன் இத்தலத்தில் பெரியநாயகி அம்மனின் எதிரே நந்தி வடிவில் அமர்ந்து விட்டான். எனவே இத்தலத்து நந்தி "வியாக்ர நந்தி' எனப்படுகிறது.
"வியாக்ரம்' என்றால் "புலி'.
அம்மன் காளியாக மாறியவுடன், பெரியநாயகி சன்னதி எதிரே உள்ள மொட்டைக்கோபுர நுழைவு வாயிலில் ஊர் காவல் தெய்வமாக அமர்ந்து 
விட்டாள். அவள் மிகவும் உக்கிரமாக இருந்ததால், ஊரில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டது. எனவே, அவள் இருக்கும் நடையை பூட்டி விட்டனர். அவளுக்கு உருவம் கிடையாது. ஒரு கண்ணாடியில் காளிக்குரிய சூலத்தை மட்டும் தரிசிக்கலாம். காளியம்மனுக்கு பயந்து கோயில் குத்தகைதாரர்கள் பணத்தை இன்று வரை ஒழுங்காக கட்டி விடுகின்றனர். யாராவது கட்டாவிட்டால், அவர்கள் வீட்டில் கொடிய சம்பவங்கள் நிகழ்கிறது என்பதால் பயத்திலேயே கட்டி விடுகிறார்கள்.
மேலும், கோயில் வாசலைக் கடக்கும் போது, ஊர்மக்கள் தங்கள் காலணிகளை கழற்றி கையில் வைத்துக்கொண்டு பணிவாகச் செல்கின்றனர்.
செவ்வாய் தோஷம் போக்கும் தலம்
முனிவர் ஒருவரின் சாபத்தினால் அங்காரனாகிய செவ்வாய் பகவான், தனது சக்தியை இழந்தான். நாரதரின் அறிவுரைப்படி இத்தலம் வந்து பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு சக்தி பெற்றான்.
சிவஞான சபை
சிவபெருமான் நடராஜராக திருவாலங்காடு ரத்னசபை, சிதம்பரம் கனக சபை, மதுரை ரஜதசபை, திருநெல்வேலி தாமிர சபை, குற்றாலம் சித்திர சபை ஆகியவற்றில் நடனமாடுகிறார்.
திருப்புனவாசலில் நடராஜர் வீற்றிருக்கும் சபை "சிவஞானசபை' எனப்படுகிறது. இந்த சபையில், அகத்தியருக்காக சிவபெருமான் நடனக்காட்சி தந்தருளினார்.
கோயில் மேற்கு பிரகாரத்தில் குருந்த மரத்தின் அடியில் அகத்தியர் பூஜித்த லிங்கம் உள்ளது. திங்கள் கிழமைகளில் மட்டுமே இந்த லிங்கத்திற்கு பூஜை செய்யப்படும். மற்ற கிழமைகளில் இவர் மோன நிலையில் இருப்பதால் "மோன நிலை முனீஸ்வரர்' என அழைக்கப்படுகிறார்.
உதிரிப்பூக்கள்...
இத்தலத்தை தரிசித்தால் தேவாரப்பாடல் பெற்ற பாண்டிநாட்டு தலங்கள் பதினான்கையும் தரிசித்த பலன் கிடைக்கும்.
சிவன் சன்னதிக்கு பின்புறம் லிங்கோத்பவருக்கு பதிலாக பெருமாளும், அனுமனும் உள்ளனர்.
சிவன் சன்னதியின் வடக்கு பகுதியில் துர்க்கைக்கு பதில் பிரம்மா உள்ளார்.
ஒரே சன்னதியில் இரண்டு சண்டிகேஸ்வரரும், தனித்தனி சன்னதிகளில்  இரண்டு பைரவரும் அருளுகின்றனர்.
 மிகப்பெரிய தெட்சிணாமூர்த்தி அமர்ந்த கோலத்தில் உள்ளார்.
சிவனுக்கு எதிரே சூரியனும் சந்திரனும் இடம் மாறியுள்ளனர்.
பெருமாள், பார்வதி, இந்திரன், சூரியன், சந்திரன், எமன், வாயு, ஐராவதம், அகத்தியர் ஆகியோர் இத்தல இறைவனை வழிபாடு செய்துள்ளனர்.
சிவன் வழிபாட்டுக்குரிய முக்கிய மலர்கள் கொன்றை, பிச்சி, பிடவம், முல்லை, புன்னை ஆகியன. இதில் புன்னைமரமே இங்கு தல விருட்சமாக உள்ளது.
இந்திர, சூரிய, சந்திர, வருண, சக்கர, கல்யாண, சிவகங்கை, நாகநதி போன்ற தீர்த்தங்களும் உண்டு.
இங்குள்ள முருகப்பெருமானுக்கு அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார்.
காஞ்சிப்பெரியவர் சந்திசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அடிக்கடி இக்கோயிலில் தரிசனம் செய்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தேவாரப்பாடல் பெற்ற தலம் இது ஒன்று தான்.
பெரிய்ய சிவலிங்கத்திற்கு தகுந்தாற்போல் மிகப்பெரிய பலிபீடம் உள்ளது.

 தல வரலாறு:
"ஓம்' என்ற பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாமல், செய்த தவறுக்காக பிரம்மா படைக்கும் தொழிலை இழக்க வேண்டியதாயிற்று. பார்வதியின் அறிவுரைப்படி, பூலோகத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, மீண்டும் தனது தொழிலைப் பெற பூஜை செய்து வந்தார்.
லிங்க அபிஷேகத்திற்காக தீர்த்தம் ஒன்றை உருவாக்கினார். பிரம்மன் உருவாக்கிய தீர்த்தம் என்பதால் "பிரம்ம தீர்த்தம்' என்ற பெயர் ஏற்பட்டது. நான்கு முகங்களைக் கொண்டவர் என்பதால், லிங்கத்தின் நான்கு பகுதிகளிலும் சிவமுகத்தை உருவாக்கினார்.
இது சதுர்முக லிங்கம் எனப்பட்டது. "சதுர்' என்றால் "நான்கு'. இந்த லிங்கமே இங்கு வழிபாட்டில் இருந்தது. பிற்காலத்தில், இரண்டாம் சுந்தர பாண்டியன், சோழநாட்டு பாணியையும், பாண்டியநாட்டு பாணியையும் கலந்து ஒரு கோயிலை எழுப்பினான்.
சோழர் கோயில்களில், ராஜகோபுரம் சிறிதாகவும், விமானம் உயரமாகவும் இருக்கும். பாண்டியர் கோயில்களில் இதற்கு நேர்மாறாக இருக்கும்.
இது கலப்படக் கோயில் என்பதால், ராஜகோபுரமும், விமானமும் மிக உயரமாக அமைக்கப்பட்டது.
மூலஸ்தானத்தில் பிரம்மாண்டமான ஆவுடையாருடன் கூடிய லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இவரை "விருத்தபுரீஸ்வரர்' என அழைத்தனர். "விருத்தம்' என்றால் "பழமை'. இவர் பழம்பதிநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மாவே வணங்கிய தலம் என்பதால், இது மிகப்பழமையான ஊராகக் கருதப்படுகிறது.

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் தொட்டில் கட்டும்வழக்கமும்,செவ்வாய்க்கே தோஷம் போக்கிய இத்தலத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
 சீமந்தம் செய்யும் போது முதல் வளையலை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தும் வழக்கமும் இருக்கிறது. இக்கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று வரை பிரசவ ஆஸ்பத்திரி கிடையாது. காளியின் அருளால் வீட்டிலேயே சுகப்பிரசவம் ஆகி விடுவதாக கூறுகிறார்கள். கேட்டதை கொடுக்கும் சிவபெருமானுக்கு வேஷ்டியும் துண்டும் சிவனுக்கென தனியாக நெய்து காணிக்கையாக செலுத்துகிறார்கள்.

போன்: +91- 4371-239 212, 99652 11768

Monday, September 19, 2011

Valampurinathar Temple at Melapperumpallam near Poompuhar (Navagraha Stalam, Paadal Petra Stalam)

அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில்

மூலவர்:வலம்புர நாதர்
அம்மன்:வடுவகிர்கண்ணி, உற்சவர்: பத்மநாயகி
பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்
தேவாரப்பதிகம் 
கொடியுடைய மும்மத லூடுருவக் குனிவெஞ்சிலை தாங்கி இடிபடி வெய்த வமரர்பிரா னடியா ரிசைந் தேத்தத் துடியிடை யாளையொர் பாகமாகத் துதைந்தவ ரிடம்போலும் வடிவுடை மேதி வயல்படியும் வலம்புர நன்னகரே.
-சம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 44வது தலம்

தல சிறப்பு:இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

திருமால் சிவனைக்குறித்து தவம் செய்ய போன போது, திருமகளை இத்தலத்து அம்பிகையின் தோழியாக விட்டு சென்றார். தவத்தின் பலனாக சக்ராயுதமும், கதையும் பெற்றார். அதன் பின் இங்கு வந்து, அம்மனை வணங்கி சங்கும், பத்மமும் பெற்றார் என் தல வரலாறு கூறுகிறது. ஹேரண்ட மகரிஷி திருவலஞ்சுழி காவிரியில் இறங்கி வலமாக வந்து இவ்வூரில் கரையேறினார். அதனால் இத்தலம் "திருவலம்புரம்' ஆனது.
அவரது ஜீவ சமாதி இங்கு தனி கோயிலாக உள்ளது. சம்பந்தருடன் திருநாவுக்கரசர் பல தலங்கள் சென்று வழிபட்ட போது, சிவபெருமான் இத்தலத்தில் திருநாவுக்கரசரை அழைத்து காட்சி கொடுத்துள்ளார். இங்குள்ள சுயம்பு லிங்கத்தின் மேல் பகுதியில் ஒரு கை நுழையும் அளவிற்கு இரு பள்ளங்கள் உள்ளது. எனவே லிங்கத்திற்கு சாம்பிராணித்தைலம், புனுகுசட்டம் சாத்தப்படுகிறது. அபிஷேகத்தின் போது குவளை சாற்றப்படுகிறது. இதனால் இத்தலம் "மேலப்பெரும்பள்ளம்' ஆனது.
மகத நாட்டு மன்னன் தனஞ்செயன், தன் மகனிடம், ""நான் இறந்த பிறகு எனது அஸ்தி எங்கு மலராக மாறுகிறதோ, அங்கு அஸ்தியை கரைத்து விடு,''என்ற கூறிவிட்டு மறைந்தான். அதன்படி மைந்தன் பல தலங்களுக்கும் சென்றான். இறுதியில் இத்தலம் வந்ததும் அஸ்தி மலராக ஆனது.
தந்தையின் ஆசைப்படி இத்தலத்தில் அஸ்தியை கரைத்து விட்டான். எனவே இத்தலத்தை காசியை விட புனிதமானது என புராணங்கள் கூறுகிறது. தட்சனும் அவனது மனைவியும், தங்கள் மகளாக தாட்சாயினி பிறக்க வேண்டும் என இத்தலத்தில் வேண்டியதாக கூறப்படுகிறது.இத்தலத்தில் உள்ள பிட்சாடனர் பேரழகுடன் இருப்பவர். இதை "அர்த்தநாரீஸ்வர பிட்சாடனர்' என்பர்.

தல வரலாறு:காசி மன்னன் ஒருவன் தன் மனைவி கற்புடையவளா என்பதை சோதிக்க நினைத்தான். ஒரு முறை மன்னனும் அமைச்சர்களும் காட்டிற்கு வேட்டையாட சென்றனர். அப்போது மன்னன், தன் அமைச்சரிடம்,""மன்னர் காட்டிற்கு வேட்டையாட சென்ற போது புலி அடித்து இறந்து விட்டார்,''என்ற பொய்யை அரசியிடம் கூறும்படி உத்தரவிட்டார். அமைச்சரும் அதன் படி கூற, அரசி இச்செய்தி கேட்டவுடனேயே உயிரை விட்டாள். இந்த பொய் செய்தி கூறியதால் மன்னனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
இந்த தோஷம் நீங்க மன்னன் சான்றோர்களிடம் விவாதித்தான். அதற்கு அவர்கள்,""மன்னா! திருவலம்புர திருத்தலத்தில் தினமும் 1000 அந்தணர்களுக்கு அன்னதானம் வழங்கினால் தோஷம் விலகும்,''என்றனர். மன்னனும் அதன்படி செய்து வந்தான். ஒரு முறை அன்னதானம் நடந்து கொண்டிருந்த போது, அசரீரி தோன்றி,""அன்னதானம் நடக்கும் இக்கோயிலில் நீண்ட காலமாக ஒலிக்காத மணி, தானே ஒலிக்கும். அப்போது மன்னனின் தோஷம் விலகும்''என கூறியது.
அன்னதானம் தொடர்ந்து நடந்து வந்தது. பட்டினத்தார் ஒரு முறை இக்கோயிலுக்கு அன்னதானம் நடக்கும் நேரம் வந்தார். பசியோடு இருந்த அவர், மடப்பள்ளியில் இருந்தவரிடம் தனக்கு உணவு தருமாறு கேட்டார். அவர் உணவு தர மறுக்கவே, மடப்பள்ளியின் பின் பக்கம் வழிந்தோடும் கஞ்சியை இருகைகளால் அள்ளி குடித்து பசியாறியதாகவும், உடனே இதுநாள் அடிக்காமல் இருந்த மணியானது தானே ஒலிக்க ஆரம்பித்ததாகவும் தல வரலாறு கூறுகிறது. அன்னதானமே இன்னும் ஆரம்பிக்க வில்லை, அதற்குள் மணி ஒலித்து விட்டதே என அனைவரும் ஆச்சரியமடைந்து போய் பார்த்தபோது அங்கே பட்டினத்தடிகளை அனைவரும் தரிசித்தனர். உடனே மன்னனின் தோஷம் விலகியது. இதற்கான திருவிழா இப்போதும் சிறப்பாக நடைபெறுகிறது.

புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், தோல்வியாதி உள்ளவர்கள், ஸ்ரீஹத்தி(பெண்ணால் ஏற்படக்கூடியது) தோஷம் உள்ளவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், சப்த நாகதோஷம் உள்ளவர்கள் அவை நீங்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் இங்கு வந்து மணியடித்து அன்னதானம் செய்து வழிபாடு செய்கின்றனர்.

போன்: +91- 4364 - 200 890, 200 685.

Pallavaneeswarar Temple at Kaveripatnam (Poompuhar) (Padal petra stalam)

அருள்மிகு பல்லவனேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:பல்லவனேஸ்வரர்
அம்மன்:சவுந்தர்யநாயகி
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்
தேவாரப்பதிகம் 
அங்கமாறும் வேதநான்கும் ஓதும்அயன் நெடுமால் தங்கணாலும் நேடநின்ற சங்கரன் தங்குமிடம் வங்கமாரு முத்தமிப்பி வார்கடலூட லைப்பர் பங்கமில்லார் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே.
-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 10வது தலம்.

தல சிறப்பு:இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பட்டினத்தார் அவதார தலம்.
இங்கு தலவிநாயகராக அனுக்கை விநாயகர் அருள்புரிகிறார். மூலஸ்தானத்தில் சிவன், பெரிய லிங்கமாக காட்சி தருகிறார். காலவ மகரிஷி இத்தலத்தில் சிவனை வழிபட்டுள்ளார்.
பட்டினத்தார் தனிச்சன்னதியில் வடக்கு நோக்கியபடி காட்சி தருகிறார். இவரது சன்னதி விமானத்தில் பட்டினத்தார், மனைவி, அவரது தாய் மற்றும் மகனாக வளர்ந்த சிவன் ஆகியோரது சிற்பங்களும் இருக்கிறது. இங்கு சிவனுக்கு பிரம்மோற்ஸவம் கிடையாது. பட்டினத்தாருக்காகே விழா எடுக்கப்படுகிறது. இதை "அடியார் உற்சவம்' என்கிறார்கள். கொடிமரம் கிடையாது. ஆடி மாதத்தில் பட்டினத்தார் திருவிழா 12 நாட்கள் நடக்கிறது.
விழாவின் 10ம் நாளில் பட்டினத்தாருக்கு, சிவன் மோட்சம் தரும் நிகழ்ச்சி பெரியளவில் நடக்கும்.
மருதவாணராக பிறந்த சிவன், அவரை வளர்த்த சிவசர்மா சுசீலை தம்பதியர், பட்டினத்தார், அவரது மனைவி சிவகலை, பட்டினத்தாரின் தாய் ஞானகலாம்பிகை, பட்டினத்தாரின் சீடர் பத்ரகிரியார், நாயடியார் மற்றும் முருகனை மடியில் அமர்த்தியபடி குகாம்பிகை ஆகியோர் இங்கு உற்சவமூர்த்திகளாக இருக்கின்றனர்.
இக்கோயிலுக்கு எதிரே வங்காளவிரிகுடா கடல் உள்ளது. சுவாமி, கடலை பார்த்தபடி காட்சி தருகிறார். இங்குள்ள நவக்கிரக மண்டபத்தில் அனைத்து கிரகங்களும், சுவாமியை நோக்கி, மேற்கு பார்த்தபடி இருப்பது சிறப்பான அமைப்பு. பிரகாரத்தில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மயில் வாகனம் கிடையாது. கோஷ்டத்தில் இரண்டு துர்க்கை இருக்கின்றனர். ஒருவரின் காலுக்கு கீழே மகிஷன் இல்லை. சண்டிகேஸ்வரர் சன்னதியில் இரண்டு பேர் இருக்கின்றனர். இத்தலத்திற்கு அருகில்தான் காவிரி, வங்காள விரிகுடா கடலுடன் சங்கமிக்கிறது. இந்த சங்கமமே இத்தலத்தின் தீர்த்தமாகும்.
காவிரி, கடலுக்குள் புகும் இடம் என்பதால் "காவிரிபுகும்பட்டினம்' என்றழைக்கப்பட்ட இவ்வூர் தற்போது "பூம்புகார்' என்றழைக்கப்படுகிறது.

தல வரலாறு:முன்னொருகாலத்தில் இப்பகுதியில் சிவநேசர், ஞானகமலாம்பிகை என்னும் சிவபக்த தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிவன் அருளால் ஒரு மகன் பிறந்தார். திருவெண்காடர் என்று அழைக்கப்பட்ட இவர், கடல் கடந்து வாணிபம் செய்யும் பணி செய்து வந்தார். 16ம் வயதில் சிவகலை என்பவரை மணந்து கொண்டார். திருமணமாகி பல்லாண்டுகளாக இத்தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. எனவே, திருவெண்காடர் சிவனை வழிபட்டார்.
இவருக்கு அருள் செய்ய விரும்பிய சிவன், வறுமையில் வாடிய சிவபக்த தம்பதியரான சிவசருமர், சுசீலை என்பவர்களின் மகனாக பிறந்தார். மருதவாணர் என்று அழைக்கப்பட்டார். ஒருசமயம் சிவசருமரின் கனவில் தோன்றிய சிவன், மருதவாணரை திருவெண்காடருக்கு தத்து கொடுக்கும்படி கூறினார். அதன்படி திருவெண்காடர், மருதவாணரை தத்தெடுத்து வளர்த்தார். மருதவாணரும் தந்தையின் தொழிலை செய்தார்.
ஒருசமயம் வாணிபம் செய்து விட்டு திரும்பிய மருதவாணர், தாயாரிடம் ஒரு பெட்டியைக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். வீட்டிற்கு வந்த திருவெண்காடர், மகன் சம்பாதித்து வந்திருப்பதை காண பெட்டியைத் திறந்தார். திறந்தவருக்கோ அதிர்ச்சி! அதில் தவிட்டு உமிகளைக் கொண்டு செய்யப்பட்ட எரு மட்டும் இருந்தது. மகனை சம்பாதிக்க அனுப்ப அவன்,தவிட்டு எருவைக்கொண்டு வந்ததைக் கண்டவர் கோபத்தில் அதை வீசியெறிந்தார். அதில், ""காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே'' என்று எழுதப்பட்டிருந்தது. அதைக்கண்ட திருவெண்காடருக்கு ஒரு உண்மை உரைத்தது. ""மனிதன் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூட கையில் கொண்டு செல்ல முடியாது,'' என்ற உண்மையை உணர்ந்தார். உடன் இல்லற வாழ்க்கையை துறந்த அவர், இங்கு சிவனை வணங்கி அவரையே குருவாக ஏற்றார். தனது இல்லற வாழ்க்கையை முடித்து, முக்தி கொடுக்கும்படி வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், தகுந்த காலத்தில் முக்தி கிடைக்கும் என்றார்.
அதன்பின் பட்டினத்தார் இங்கிருந்து திருத்தல யாத்திரை மேற்கொண்டு, சென்னை திருவொற்றியூரில் முக்தி பெற்றார். காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் என்பதால் இவர், "பட்டினத்தார்' என்றழைக்கப்பட்டார். இவருக்கு அருள் செய்த சிவன் இத்தலத்தில் காட்சி தருகிறார்.

அறிவான குழந்தைகள் பிறக்கவும், பொருட்கள் மீதான ஆசை குறையவும் இங்குள்ள பல்லவனநாதரிடம் வேண்டிக்கொள்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமி, அம்பாள் மற்றும் பட்டினத்தாருக்கு விசேஷ பூஜை செய்து வழிபடுகிறார்கள்.

போன்: +91- 94437 19193.

Sundareswarar Temple at Tirukkalikamoor (Tiruvengadu) near Chidambaram (Paadal Petra Stalam)

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:சுந்தரேஸ்வரர் 
அம்மன்:அழகம்மை
பாடியவர்கள்: சம்பந்தர் 
தேவாரப்பதிகம் 
அருவரை ஏந்திய மாலுமற்றை அலர்மேல் உறைவானும் இருவரும் அஞ்ச எரியுருவாய் எழுந்தான் கலிக்காமூர் ஒருவரை யான்மகள் பாகன்றன்னை யுணர்வால் தொழுதேத்த திருமருவும் அஞ்சிதை வில்லைச் செம்மைத் தேசுண்டவர் பாலே.
-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 8வது தலம்.

தல சிறப்பு:இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
மூன்று விநாயகர்: சுந்தரேஸ்வரருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து, அதையே மருந்தாக சாப்பிட்டால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. ""இத்தலத்து ஈசனை வழிபட்டால் வினை, நோய் நீங்கி, செல்வம் பெருகும்,'' என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிட்டு பாடியுள்ளார்.
பிரகாரத்தில் வில்வவனநாதர் சன்னதியும் உள்ளது. "கலி' (துன்பம்) நீக்கும் சிவன் வீற்றிருக்கும் ஊர் என்பதால் இவ்வூர், "திருக்கலிக்காமூர்' என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள விநாயகர் மிகவும் விசேஷமானவர். அரிதாக சில சிவன் கோயில்களில் ஒரே சன்னதியில் இரண்டு அல்லது மூன்று விநாயகர்கள் அருகருகில் சேர்ந்து இருப்பர். ஆனால், இங்கு விநாயகர் சன்னதிக்கு முன்புறம் துவாரபாலர்கர் போல இரண்டு விநாயகர் இருக்கின்றனர். இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம்.
தீர்த்த நீராடும் அம்பிகை: கடற்கரை, நதிக்கரைகளில் உள்ள சிவன் கோயில்களில் விழாவின்போது சிவன், தீர்த்தக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தநீராடுவார். ஆனால், இத்தலத்தில் மாசி மகத்தன்று நடக்கும் தீர்த்தவாரியின்போது அம்பாள் மட்டும் கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்த நீராடுகிறாள். இதற்கு ஒரு காரணமும் சொல்கிறார்கள்.
முற்காலத்தில் இக்கோயிலில் சிவன் சன்னதி மட்டுமே இருந்தது. ஒருசமயம் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் இந்த அம்பிகையின் சிலை கிடைத்தது. சிலையை அவர் எடுத்தவுடனேயே வயிற்று வலி வந்துவிட்டது. சிலையை தூக்கி வந்த அவர், இத்தலம் அருகில் வந்தபோது வலி நின்றுவிட்டது. அதன்பின்பு இவ்விடத்தில் சிவலிங்கம் இருந்ததைக்கண்ட அவர், அம்பிகையையும் இங்கேயே பிரதிஷ்டை செய்தார்.
இந்த அம்பிகை கடலில் கிடைக்கப்பெற்றவள் என்பதால், வருடத்தில் ஒருமுறை இவளை பிறப்பிடமான கடலுக்கு கொண்டு சென்று தீர்த்த நீராட்டி வருகிறார்கள்.
நவக்கிரக மண்டபத்தில் அனைத்து கிரகங்களும் வாகனமின்றி நின்ற கோலத்தில் இருக்கின்றன.
தல வரலாறு:சத்தி என்னும் முனிவர் தீவிர சிவபக்தர். இவர் திரசந்தி என்பவளை மணந்து கொண்டார். திரசந்தி கர்ப்பமுற்றபோது, சத்தி முனிவரை உதிரன் என்னும் அசுரன் கொன்றுவிட்டான். திரசந்திக்கு ஒரு மகன் பிறந்தான். தாயின் மடியில் தவழ்ந்த குழந்தை தனது தாய், அமங்கலையாக (கணவனை இழந்த பெண்) இருந்ததைக் கண்டு வருந்தியது.
பராசரர் என்று அழைக்கப்பட்ட இக்குழந்தை, வேதத்தில் புலமை பெற்று மகரிஷியானார். தன் தந்தையை கொன்ற அசுரன் உதிரனை அழிக்க பெரிய யாகம் ஒன்றை நடத்தினார். இந்த யாகத்தின் பலனைக்கொண்டு உதிரனை அழித்தார்.
அசுரனாக இருந்தாலும் உயிரைக் கொலை செய்ததால் இவருக்கு தோஷம் உண்டானது. தோஷம் நீங்க அவர் பல தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவர் இத்தலம் வந்தபோது சிவன் காட்சி தந்து, விமோசனம் கொடுத்தருளினார். அவரது வேண்டுதலுக்காக இத்தலத்தில் எழுந்தருளினார்.
பராசர மகரிஷிக்கு அழகு பொருந்தியவராக காட்சி தந்ததால் இவர், "சுந்தரேஸ்வரர்' என்று பெயர் பெற்றார். வில்வ வனத்தின் மத்தியில் எழுந்தருளியவர் என்பதால் இவருக்கு "வில்வவன நாதர்' என்றும் பெயருண்டு.

நோய்கள் நீங்க, முன்வினைப் பயன்களால் அனுபவிக்கும் பாவத்தின் பலன் குறைய இங்கு வேண்டிக்கொள்ளலாம்.சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

போன்: +91- 93605 77673, 97879 29799.

Kuntalanatheswarar Temple at Tirukkurakka near Mayiladuturai (Paadal Petra Stalam)

அருள்மிகு குந்தளேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:குந்தளேஸ்வரர்
அம்மன்:குந்தளாம்பிகை
பாடியவர்கள்: திருநாவுக்கரசர்
தேவாரப்பதிகம் ஆல நீழல் அமர்ந்த அழகனார் காலனை உதை கொண்ட கருத்தனார் கோல மஞ்ஞை களாலும் குரக்குக்காப் பால ருக்கருள் செய்வர் பரிவொடே..
-திருநாவுக்கரசர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 28வது தலம்.

தல சிறப்பு:இங்கு சிவன் மணல் லிங்கமாக அருள்பாலிக்கிறார். சித்திரை மாதத்தில் இரண்டு குரங்குகள் இத்தலத்திற்கு வந்து, சிவலிங்கம் மீது வில்வ இலை தூவி வழிபடுவது கலியுக அதிசயமாகும்.

சிவ ஆஞ்சநேயர்: ஆஞ்சநேயர் சன்னதி, சிவன் சன்னதி எதிரே அமைக்கப்பட்டுள்ளது. திருமால், ராமாவதாரம் எடுத்தபோது, அவருக்கு உதவுவதற்காக சிவனே ஆஞ்சநேயராக வந்தார். எனவே, ஆஞ்சநேயர் சிவஅம்சம் ஆகிறார்.
அவ்வகையில் இத்தலத்தில் சிவனே, தன்னை வழிபடும் கோலத் தில் இருப்பதாக சொல்கிறார்கள். எனவே இவரை, "சிவஆஞ்சநேயர்' என்றும், "சிவபக்த ஆஞ்சநேயர்' என்றும் அழைக்கிறார்கள்.
இவரே இத்தலத்தில் பிரசித்தி பெற்ற மூர்த்தியாவார். ஒவ்வொரு அமாவாசையன்றும் இவரது சன்னதியில் ஹோமம் நடக்கிறது. சித்திரை மாதத்தில் இரண்டு குரங்குகள் இத்தலத்திற்கு வந்து, சிவலிங்கம் மீது வில்வ இலை தூவி வழிபடுவது கலியுக அதிசயமாகும்.
சிறப்பம்சம்: அம்பாள் குந்தளநாயகி தனிச் சன்னதியில் அருளு கிறாள். வில்வம் இத்தலத்தின் விருட்சம். திருநாவுக்கரசர் இத்தலம் குறித்து பதிகம் பாடியுள்ளார். இக் கோயிலில் தெட்சிணாமூர்த்தி சற்று வலதுபுறமாக திரும்பியுள்ளார்.

சேதுக்கரையில் (ராமேஸ்வரம்) சிவபூஜை செய்ய எண்ணிய ராமர், லிங்கம் கொண்டுவரும்படி ஆஞ்சநேயரை அனுப்பினார். ஆஞ்சநேயரும் லிங்கம் எடுத்து வரச் சென்றார்.
இதனிடையே, சீதாதேவி கடல் மணலில் லிங்கம் சமைக்கவே, ராமர் அந்த லிங்கத்திற்கு பூஜை செய்தார். அதன்பின்பு லிங்கத்துடன் வந்த ஆஞ்நேயர், ராமர் சிவபூஜை செய்துவிட்டதை அறிந்து கோபம் கொண்டார். மேலும், மணல் லிங்கத்தை தனது வாலால் உடைக்க முயன்றார். முடியவில்லை.
சிவ அபச்சாரம் செய்ததால் மன்னிப்பு வேண்டிய அவர் இத்தலத்தில் சிவபூஜை செய்தார். அப்போது சிவனுக்கு மலருடன், தான் காதில் அணிந்திருந்த குண்டலத்தையும் படைத்து வணங்கி மனஅமைதி பெற்றார்.
ஆஞ்சநேயர் குண்டலம் வைத்து வழிபடப்பட்டவர் என்பதால், இத்தல சிவன் "குண்டலகேஸ்வரர்' என்றும் பெயர் பெற்றார்.

திருவிழா:சிவராத்திரி, திருக்கார்த்திகை, அனுமன் ஜெயந்தி.

கால்நடைகள் வைத்திருப்போர் செல்லியம்மனை வேண்டிக் கொண்டால் அவை நோயின்றி இருக்கும் என்பது நம்பிக்கை.
புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் குந்தளநாயகி அம்பாளுக்கு வளையல் அணிவித்து வேண்டிக் கொள்கின்றனர். 
சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணி வித்தும்நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

போன்: +91- 4364 - 258 785.

Tirumeniazhagar Temple at Koyiladippalayam(Aachaapuram) near Chidambaram (Paadal Petra Stalam)

அருள்மிகு திருமேனியழகர் திருக்கோயில்

மூலவர்:திருமேனியழகர்
அம்மன்:வடிவாம்பிகை
பாடியவர்கள்: சம்பந்தர்
தேவாரப்பதிகம் 
கொண்டல்சேர் கோபுரம் கோலமார் மாளிகை கண்டலும் கைதையும் கமலமார் வாவியும் வண்டுலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியில் செண்டுசேர் விடையினான் திருந்தடி பணிமினே.
-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 6வது தலம்.

தல சிறப்பு:பங்குனி மாதத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. அலங்காரப்பிரியரான திருமால் "அழகர்' என்று அழைக்கப் படுவது தெரிந்த விஷயம்தான். மகேந்திரப் பள்ளி தலத்தில் சிவபெருமானை, "அழகர்' என்று அழைக்கிறார்கள்.
அழகு தரும் சிவன்: சிவன், அம்பாள் இருவரும் மிகவும் அழகாக காட்சி தருகின்றனர். எனவே சுவாமி, "திருமேனி யழகர்' என்றும், அம்பாள் வடிவாம்பிகை' என்றும் அழைக்கப்படுகின்றனர்.
இங்கு வந்த திருஞானசம்பந்தர் சுவாமியை, "அழகர்' என குறிப்பிட்டு பாடியிருக்கிறார். மதுரை அருகிலுள்ள அழகர் கோவிலில் உள்ளபெருமாள் "சுந்தரராஜன்' என்று சமஸ்கிருதத்திலும், "அழகர்' என்று தமிழிலும் வழங்கப்படுகிறார். அதுபோல, இத்தலத்தில் சிவன் "அழகர்' என்ற பெயரில் அழைக்கப்படுவது விசேஷம்.
சூரியன், சந்திரன், இந்திரன், பிரம்மா ஆகியோரால் பூஜிக்கப்பட்ட தலம் இது. பங்குனி மாதத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. சிவன் சன்னதி கோஷ்டத்தில் (சுற்றுச்சுவர்) தெட்சிணாமூர்த்தி மட்டும் இருக்கிறார்.

தல வரலாறு:இந்திரன், கவுதம மகரிஷியின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டதால், அவரிடம் உடம்பெல்லாம் கண்ணாகும்படி சாபம் பெற்றான்.
விமோசனத்திற்காக பூலோகம் வந்த அவன், பல தலங்களில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவனை வழிபட்டான். அதில் ஒன்று மகேந்திரப்பள்ளியாகும். சிறப்பு மிக்க (மகா) இந்திரன் வழிபட்டதால், "மகேந்திரப்பள்ளி' என்ற சிறப்பு பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது. பிற்காலத்தில் இவ்விடத்தில் கோயில் எழுப்பப்பட்டது.

முன்வினைப்பயனால் சிரமப்படுபவர்களும், ஜாதகத்தில் சூரிய, சந்திர தசை நடப்பவர்களும் இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.
பிரம்மனுக்குரிய தீர்த்தம் என்பதால் இங்கு நீராடினால், துன்பப்பட வேண்டும் என எழுதப்பட்ட தலையெழுத்து மாறி, நல்விதி ஏற்படும் என்பது நம்பிக்கை.
கல்வியில் சிறக்கவும், நாகதோஷம் நீங்கவும் இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.  
முகப்பொலிவு வேண்டி இத்தலத்தில் பக்தர்கள், சுவாமிக்கு வெண்ணிற வஸ்திரம், அம்பாளுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள்.

போன்: +91-4364- 292 309.