Sunday, September 11, 2011

Aatmanathar Temple at Aavudayar Koil near Pudukkottai (Paadal Petra Stalam)

அருள்மிகு ஆத்மநாதர் திருக்கோயில்

திருவிழா:ஆனித் திருமஞ்சனம் - 10 நாட்கள் - 50 ஆயிரம் பக்தர்கள் கூடுவர். மார்கழி திருவாதிரை (திருவெம்பாவை உற்சவம் - 10 நாள் - 50 ஆயிரம் பக்தர்கள் கூடுவர். இந்த இரண்டு திருவிழாக்கள்தான் மிக முக்கியமானவை.இவற்றுள் ஆனிமாத உற்சவம் மகத்தானது.மாணிக்கவாசகரை முதன்மைப்படுத்தி இத்திருவிழாக்கள் நடைபெறும்.சுவாமிக்கு உற்சவமில்லாதபடி மாணிக்கவாசகருக்கு நடப்பதால் இதனைப் பக்தோத்சவம் என்று நினைக்க கூடாது.மாணிக்கவாசகர் சிவமாகவே விளங்குவதால் இதனை பிரம்மோற்சவமாகவே கூறவேண்டும்.திருவிழாக்காலங்களில் இடபம், திருத்தேர் முதலான வாகனங்களில் மாணிக்கவாசகர் திருவுலா வருகிறார். கார்த்திகை கடைசி சோம வாரம்(திங்கள் கிழமை) மிக மிக விஷேசம் ஆடிவெள்ளி விஷேசம் - தை வெள்ளி - ஆனி மகம் தேரோட்டம், சிவராத்திரி, பங்குனி உத்திரம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, நவராத்திரி, ஆவணிமூலம் முதலான நாட்களில் சுவாமிக்கு விசேச பூஜைகள் நடைபெறும்.
 தல சிறப்பு:மதுரை பாண்டிய மன்னனின் சபையில் அமைச்சராக இருந்த மாணிக்க வாசகர் மன்னன் உத்தரவுப்படி குதிரை வாங்க இப்பகுதிக்கு (திருப்பெருந்துறை) வருகிறார்.அப்போது இங்கு சிவாகமங்கள் ஒலிக்கும் ஒலி கேட்க அங்கு சென்று பார்க்கையில் ஞானகுருநாதர் ஒருவர் வீற்றிருப்பதைக் கண்டார். தன்னை ஏற்றுக்கொண்டு உபதேசமளிக்கும்படி மாணிக்கவாசகர் கேட்டுக் கொள்ள, குருவும் ஒப்புக்கொண்டார்.உபதேசம் கேட்டு சிவநிஷ்டையிலிருந்து கலைந்த மாணிக்க வாசகர் குரு இல்லாதது கண்டு சிவபெருமான்தான் குருவாக வந்தது என்று தெரிந்து கொண்டார்.உள்ளம் உருகி பாடினார்.குதிரை வாங்க கொண்டு வந்த பணத்தில் (இப்போதுள்ள)கோயில் கட்டினார். சிவதொண்டில் ஈடுபடலானார். குதிரை வராத செய்தி கேட்டு மன்னன் மாணிக்கவாசகரை பிடித்து சிறையில் அடைத்தார்.சிவபெருமான் நரிகளை பரிகளாக்கி(குதிரை) அவரே ஓட்டிக் கொண்டு மதுரை வந்து மன்னனிடம் ஒப்படைத்தார்.ஆனால் இரவிலேயே குதிரைகள் எல்லாம் நரிகளாகிப் போக மன்னன் மாணிக்க வாசகரை வைகை ஆற்றில் சுடு மணலில் நிறுத்தி தண்டிக்க வைகையில் வெள்ளம் வந்தது.கரையை அடைக்க சிவபெருமான் கூலியாளாக வந்து பிட்டு வாங்கி தின்று விட்டு வேலை செய்யாததால் பிரம்படி வாங்க அந்த அடி எல்லோர் முதுகிலும் விழ, வந்தது இறைவன் என்பதைத் தெரிந்து கொண்ட பாண்டியமன்னன் மாணிக்க வாசகரின் காலில் விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்டான். இந்த சிறப்பு வாய்ந்த திருவிளையாடற்புராண கதை நிகழ காரணமானது இக்கோயில் ஆகும்.


இத்தலத்தில் காணவேண்டிய அபூர்வ சிற்பங்கள் (உலகப்புகழ்பெற்றவை)
1 டுண்டி விநாயகர் சிற்ப உருவம்
2. உடும்பும் குரங்கும்
3. கற்சங்கிலிகள் - சங்கிலியின் நுனியில் பாம்பு ஒன்று பின்னிக்கொண்டு தலையினைக் காட்டுவது
4. இரண்டே தூண்களில் ஓராயிரம் கால்கள்
5. 1008 சிவாலயங்களில் உள்ள இறைவன் இறைவியர் திருவுருவங்கள்
6. பலநாட்டுக் குதிரைச் சிற்பங்கள்
7. 27 நட்சத்திர உருவச் சிற்பங்கள்
8. நடனக்கலை முத்திரை பேதங்கள்
9. சப்தஸ்வரக் கற்தூண்கள்
10. கூடல்வாய் நிழல் விழும் பகுதி பசுமாட்டின் கழுத்து போன்று காணப்படுதல்.நந்தி, பலி பீடம் இல்லாத சிவன் கோயில், சுவாமி, அம்பாளுக்கு உருவம் கிடையாது.லிங்கம் கிடையாது.அடிப்பகுதியான ஆவுடை மட்டுமே உண்டு.அம்பாளுக்கு திருப்பாதங்கள் மட்டுமே உண்டு. திருவிளையாடற் புராணத்தில் சிவபெருமான் நரியை பரியாக்கிய கதை நடந்த தலம். மாணிக்க வாசகருக்கு சிவபெருமானே குருவாக வந்து உபதேசம் செய்த சிவதலம். பிரதோஷம் நடைபெறாத சிவதலம். மாணிக்க வாசகருக்கு மட்டுமே இங்கு திருவிழா,உற்சவர் மாணிக்க வாசகரே. திருவாசகம் பிறக்க காரணமான தலம்,மாணிக்க வாசகர் தமது கைப்பட எழுதிய ஓலைச்சுவடி,எழுத்தாணி ஆகியவை சன்னதியில் இன்னும் உள்ளது. கல்வெட்டுக்கள், கருங்கல் தாழ்வாரங்கள்,அதி அற்புத சிற்பங்கள் நிறைந்த மிக சிறப்பான கோயில்.

மாணிக்கவாசகர் : இத்தலத்தில் சோமாஸ்கந்தர் ஸ்தானத்தில் விளங்குகிறவர் மாணிக்கவாசகர். இவருக்குத்தான் உற்சவம் நடைபெறுகிறது.இந்த உற்சவத்தை பக்தோர்ச்சவம்(அடியார்க்குச் செய்யும் உற்சவம்) என்று சிலர் கூறுவர்.மாணிக்க வாசகர் இறைவனோடு இரண்டறக் கலந்து சாயுச்சிய முத்தி பெற்றவர் ஆகையாலும், அவர் அறிவாற்சிவமே என்று ஞானிகளால் பேசப்படுவதாலும், இறைவன் வேறு மாணிக்கவாசகர் வேறு என்று எண்ணுவது சிவாபராதம் ஆகையாலும் அவர்க்கு எடுக்கும் விழா பிரம்மோற்சவமே ஆகும். ஆன்மநாதரின் பரிகலச் சேடம் நிர்மாலிய புஷ்பம் முதலியன இவர்க்குச் சேர்ப்பிக்கப்பெறுகின்றன.

ஆத்மநாதர் கோயில் சிற்பக்கலைக்கு சான்றாக சிறப்புற கட்டப்பட்டுள்ளது. இங்கு இரண்டாம் பிரகாரத்தில் உள்ள தில்லை மண்டபத்தில் அர்ஜுனனுக்கு பாசுபதம் கொடுத்த சிவன், அம்பாள் சிற்பமும், புலையன், புலத்தி வேடத்தில் வந்த சிற்பமும் உள்ளது.
இதில் அம்பாள் கழுத்தில் சங்கிலி, கையில் சுருள் வளையல் அணிந்து, பையுடன் இருக்கிறாள். இதுதவிர, நிவர்த்திகலை, பிரதிபாகலை, வித்யாகலை, காந்திகலை, சாந்திதீதாகலை ஆகிய பஞ்சகலைகளையும் பஞ்சாட்சர மண்டபத்தின் மேல் பகுதியில் சிற்ப வடிவில் காணலாம்.
இத்தலவிநாயகர் வெயிலுவந்த விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
இந்த சிவதலத்தில் வழிபடுவோர்க்கு குருபலன் கூடும். மாணிக்கவாசகருக்கு ஈசனே குருவாய் வந்து உபதேசித்த தலம் என்பதால் இந்த தலத்தில் வழிபடுவோர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதோடு சிறந்த ஞானம் பெற்றவராகத் திகழ்வர்.
தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு திருமணவரம், குழந்தை வரம் ஆகியவற்றுக்காவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தித்துக் கொள்கின்றனர்
புழுங்கல் அரிசி சாதம் வடித்து ஆவியுடன் சுவாமிக்கு நிவேதனம் செய்ய வேண்டும்.அதை குழத்தேங்குழல், அதிரசம், அப்பம், வடை முதலானவற்றை வைத்து நிவேதனம் செய்து தீபாராதனைகள் முறைப்படி செய்யப்படும். இவை தவிர சுவாமி அம்பாளுக்கு வழக்கமான அபிசேக ஆராதனைகள் செய்யலாம். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கலாம்.கோயில் திருப்பணிக்கு பொருளுதவி வழங்கலாம்.

போன்: +91 4371 233301

No comments:

Post a Comment