Saturday, October 22, 2011

Pasupateswarar Temple at Tiruvetkalam near Chidambaram (Paadal Petra Stalam)

அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:பாசுபதேஸ்வரர்
அம்மன்:சத்குணாம்பாள், நல்லநாயகி
பாடியவர்கள்:திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், அருணகிரி நாதர்
தேவராப்பதிகம் 
அல்லல் இல்லை அருவினை தானில்லை மல்கு வெண்பிறை சூடும் மணாளனார் செல்வனார் திருவேட்களம் கைதொழ வல்ல ராகில் வழியது காண்மினே.
-திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 2வது தலம்.

தல சிறப்பு:தேவாரப்பபாடல் பெற்ற சிவத்தலங்களில் முதலானது சிதம்பரம். இரண்டாவது திருவேட்களம். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சாஸ்திரப்படி கோயில் எப்படி அமைக்க வேண்டும் என்று உள்ளதோ, அதன்படி அமைக்கப்பட்ட கோயில் இதுவாகும். பல்லவ அரசர்களால் செங்கற்களால் கட்டப்பட்ட இக்கோயில் 1914ல் கானாடுகாத்தான் பெத்த பெருமாள் செட்டியாரால் கருங்கற்களால் செப்பனிடப்பட்டது. தற்போது மூன்றடுக்கு ராஜகோபுரத்துடன் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது.
அம்பிகையின் சன்னதியில் 4 தூண்களிலும் அர்ஜுனன் தன் ஆயுதங்களை வைத்தல், ஒரு காலில் நின்று தவம் புரிதல், இறைவன் வேடன் வடிவம் எடுத்தல், சிவனும் அர்ஜுனனும் சண்டையிடுதல் போன்றவை சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.
கோயிலின் சுற்றுப்பகுதியில் நர்த்தன விநாயகர், தல விநாயகர்-சித்தி விநாயகர், அனுக்கிரக தெட்சிணாமூர்த்தி, சூரியன், சந்திரன் ஆகியேகர் உள்ளனர். தெட்சிணாமூர்த்தியின் காலடியில் உள்ள முயலகன் இடப்பக்கம் தலைவைத்துள்ளார்.
சூரியனும் சந்திரனும் அருகருகே இருப்பதால் சூரிய, சந்திர கிரகணங்களின் போது இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.

தலபெருமை:சிதம்பரத்தை அடுத்துள்ள திருவேட்களம். இரண்டாயிரம் ஆண்டு பழமையான இங்கு தான் அர்ஜுனனுக்கு இறைவன் பாசுபதம் வழங்கினார். அம்மன் நல்லநாயகி நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறாள். முன் இரண்டு கைகளில் ஒரு கையில் தாமரையும், ஒரு கையில் நீலோத்பவ மலருடனும் அருளுகிறாள். இவளுக்கு எதிரிலும் நந்தி உள்ளது.
ஒரு முறை சம்பந்தர் சிதம்பரம் நடராஜரை தரிசிக்க வருகிறார். அப்போது அவர் திருவேட்களத்தில் தங்கி சிதம்பரம் நடராஜரை தரிசித்துள்ளார்.
திருவேட்களம் பற்றி சம்பந்தர் பாடும் போது,"வேட்கள நன்னகர்' என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன்,"சிறப்புடன் வாழ வாழ்வில் ஒரு முறையாவது திருவேட்களம் போ', என்றும், அம்பிகையை "பெண்ணில் நல்லாள்' என்றும் குறிப்பிடுகிறார்.
அருணகிரிநாதர் இத்தல முருகனை திருப்புகழில் பாடியுள்ளார்.

தல வரலாறு:பாரதப்போரில் வெற்றிபெறுவதற்காக அர்ஜுனன் பாசுபதம் பெற விரும்புகிறான். அப்போது கிருஷ்ணன்,""நீ அனைத்து அஸ்திரங்களையும் உனது மானசீக தந்தையான இந்திரனிடமிருந்து பெற்றாய். ஆனால் பாசுபதாஸ்திரத்தை மட்டும் நீ சிவனிடமிருந்து தான் பெற வேண்டும். அதற்கு இந்திரனின் அனுமதி பெற வேண்டும்,''என்றார்.

இதற்காக அர்ஜுனன் மூங்கில் காடாக இருந்த இத்தலத்தில் தவம் செய்தான்.அர்ஜுனனின் தவத்தை கலைக்க துரியோதனன் மூகாசுரனை பன்றி வடிவில் அனுப்பினான். உடனே சிவன் பார்வதியுடன் வேடன் உருவில் வந்து பன்றியை கொன்றார்.
நான்கு வேதங்களும் நாய்களாக மாறி இறைவன் பின்னே வந்தன. அதே பன்றியின் மீது அர்ஜுனனும் அம்பு எய்தான். பன்றியை யார் கொன்றார்கள் என்பது குறித்து சிவனுக்கும், அர்ஜுனனுக்கும் சொற்போரும் விற்போரும் நடந்தது. போரில் அர்ஜுனனின் வில் முறிந்தது.
கோபமடைந்த அர்ஜுனன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். அந்த அடி மூவுலகில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது. வேடுவப்பெண்ணாக வந்த பார்வதி கோபமடைந்தாள். சிவன் பார்வதியிடம்,""உமையவளே! நீ லோகமாதா! நீ கோபப்பட்டால் இவ்வுலகம்
தாங்காது,''என சமாதானப்படுத்தி "சற்குணா' (நல்லநாயகி) தள்ளி நில் என்கிறார். சிவன் தன் திருவடியால் அர்ஜுனனை தூக்கி எறிகிறார். சிவனின் பாத தீட்சை பெற்று அன்னையின் கருணையால் இத்தல  கிருபாகடாட்ச தீர்த்தத்தில் விழுகிறான்.
சிவன் பார்வதியுடன் காட்சி கொடுத்து பாசுபதாஸ்திரத்தை தந்தருளினார். அர்ஜுனன் வில்லால் அடித்த தடத்தை இன்றும் லிங்கத்தின் மீது காணலாம்.

பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் இங்குள்ள இறைவனை வழிபாடு செய்து இங்கு பிரசாதமாக தரப்படும் மண் உருண்டையை சாப்பிட்டால் விரைவில் பேச்சு வரும் என்பது நம்பிக்கை.
திருமணத்தடை உள்ளவர்கள் வழிபாடு செய்து பலனடைகிறார்கள். 

போன்: +91- 98420 08291, +91-98433 88552

Veeratteswarar Temple at Tiruvathigai near Panruti (Cuddalore) (Paadal Petra Stalam, Veeratta Stalam)

அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:வீரட்டானம்
அம்மன்:பெரியநாயகி
பாடியவர்கள்:நாவுக்கரசர் , ஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்
தேவாரப்பதிகம்
பாதம் பலரேத்தப் பரமன் பரமேட்டிபூதம் புடைசூழப் புலித்தோல் உடையாகக்கீதம் உமைபாடக் கெடில வடபக்கம்வேதம் முதல்வன் நின்றாடும் வீரட்டானத்தே.
-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 7வது தலம்

தல சிறப்பு:இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 16 பட்டைகளுடன் கூடிய மிகப்பெரிய லிங்கம்
திருவதிகை நகரின் மேற்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் திருவாமூர் என்ற ஊரில் பிறந்த திருநாவுக்கரசர் சமண மதத்தில் மிகவும் தீவிரமாக இருந்தார். அவரது சகோதரி திலகவதியார் சைவ சமயத்திலேயே இருந்து வீரட்டானேசுவரருக்கு தொண்டு செய்து வந்தார்.அப்போது திருநாவுக்கரசருக்கு கடுமையான சூலை நோய் (வயிற்று வலி) தாக்கியது.சமண சமயத்தவர்கள் அவரது வயிற்று வலியை நீக்க எவ்வளவோ முயன்றனர்.ஆனால் முன்னை விட மேன்மேலும் வலி அதிகமானது.ஒருநாள் அதிகாலையில் திருஅதிகை அடைந்து திலகவதியாரின் காலில் விழுந்து தமது நோயைப் போக்கும் படி கூற, திலகவதியாரும் மனமிரங்கி வீரட்டானேசுவரர் சந்நிதிக்கு தன் தம்பியை அழைத்து சென்று ஐந்தெழுத்தை ஓதி திருவாளன் திருநீறு அளித்தார் . அந்த திருநீறை பூசிக்கொண்டு திருவாயில் போட்டுக் கொண்டவுடன் வயிற்றுவலி பனிபோல் நீங்கிவிட்டது.உடனே வீரட்டானேசுவரரை வணங்கி கூற்றாயினவாறு விலக்ககலீர் என்னும் கோதில் நீடிய திருப்பதிகம் பாடினார். அதனால் மனமகிழ்நத கண்ணுதற் பெருமான் நாவுக்கரசு என்று நின் நன்நாமம் நயப்புற மன்னுக என்று பட்டம் கொடுத்தார். அது முதல் திருநாவுக்கரசர் சைவத்தையே உயிர் மூச்சாகக் கொண்டு உழவாரம் செய்து வந்தார். இந்த இறைவனை வழிபடுவோர்க்கு ஆணவம், கன்மம்,மாயை ஆகிய மும்மலங்களும் நீங்கும்.
திருஅதிகை வீரட்டானேசுவரர் திருக்கோயிலுக்கு வந்து வழிபடுவோர்க்கு கயிலைக்கு சென்ற பலன் கிடைக்கும் என்பது உறுதி என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.
இத்தலத்து முருகப்பெருமான் (சுப்ரமணியர்) குறித்து அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்
சுவாமியின் பிறபெயர்கள் : ஸ்ரீ சம்கார மூர்த்தி(திருக்கெடிலவாணர் கற்றளி கருவறையில் பின்புறம் அம்மையப்பர் (இறைவன் தன்னையே பூஜிப்பதாக ஐதீகம்)
அம்பாளின் பிறபெயர்கள் : ஸ்ரீ திரிபுர சுந்தரி
தலவிநாயகர் : சித்தி விநாயகர்.
பிற தீர்த்தங்கள் :  கிணறு தீர்த்தம், சக்கர தீர்த்தம், குளம், கெடில நதி

தலபெருமை:வழிபட்டவர்கள் : இந்திரன், பிரம்மன், திருமால், பாண்டவர்கள், சப்தரிஷிகள், வாயு, வருணன், யமன் முதலானோர்.
இறைவன் தேரில் வந்ததால் இத்திருக்கோயிலின் அமைப்பும் தேர் வடிவில் உள்ளது.
இத்திருக்கோயிலின் கர்ப்ப கிரக விமானத்தை பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோயிலை கட்டினான்.திவதிகை கோயிலின் நிழல் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் கட்டப்பட்டுள்ளது. எந்த ஆயுதமின்றி ஒரு அழகான சிரிப்பினாலேயே ஒரே நொடியில் நடைபெற்ற சிவபெருமானின் திரிபுரசம்காரம் நடைபெற்ற தலம்.
முப்புரம் எரிசெய்த பெம்மான் மூவருக்கு அருள் செய்தார்.ஐந்தெழுத்தால் இறைவன் மும்மலங்களையும் சிதைத்தது இத்தலத்திலே.
தேவாரம் முதன் முதலில் பாடப்பட்ட தலம் இதுவே ஆகும்.
முதன்முதலில் தேர் ஏற்பட்ட வரலாறு இதுவே ஆகும்.இன்றைக்கு கோயில்களில் தேர் இருக்க வேண்டிய ஐதீகம் உருவானதே
இத்தலத்தில்தான்.
அட்ட வீரட்டானத் தலங்களில் சிறப்புடையது.
அட்ட வீரட்டானத் தலங்களில் அதிக பாடல் பெற்ற தலம் இதுவே.
அட்ட வீரட்டானத் தலங்களில் மூவர் தமிழும் பெற்ற சிறப்பு தலம் இது.
சிதறு தேங்காய் (சூறைத் தேங்காய் ) என்ற பழக்கம் உருவானதும் இத்தலத்தில்தான்.
 மூலவருக்கு பின்புறம் சுதையால் ஆன சுவாமி அம்பாள் திருமணக்கோலம் உள்ளது.
திருநாவுக்கரசருக்கு திருமணக்கோலத்தில் காட்சி தந்த தலம் என்பதால் திருமணங்கள் நிறைய நடைபெறுகின்றன.
கருவறை கோபுரம் நிரம்ப சுதைகளால் ஆனது.கருவறை விமான அமைப்பு, மண்டப அமைப்பு ரதம் போன்ற அமைப்பை கொண்டது.
சித்திரையில் அப்பர் பெருமானுக்கு பத்து நாட்கள் சிறப்பாக விழா நடைபெறுகிறது.
வைகாசியில் பிரம்ம உற்சவம் பத்து நாட்கள் விசாகத்தில் தேர் திருவிழாவும் திரிபுர சம்காரமும் நடைபெறுகிறது.
உழவாரம் முதன்முதலில் திருநாவுக்கரசரால் இங்குதான் செய்யப்பெற்றது.
பன்னிரெண்டு திருமுறைகளிலும் திரிபுரசம்கார நிகழ்ச்சியை பற்றியே அதிகமாக பாடப்பட்டுள்ளது
இந்த இறைவனை வழிபடுவோர்க்கு ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் நீங்கும்.
அம்பாள் சந்நிதி சுவமிக்கு வலப்புறம் உள்ளது தனிச்சிறப்பு. இதனால் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் திருமணம் உடனடியாக தீர்ந்து விடும்.
ஆணவமாய் வந்தவர்கள் இங்கு திரும்பவும் வரமாட்டார்கள். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த தலம். இத்தலத்தில் குனிந்துதான் விபூதி பூச வேண்டும்.
தல வரலாறு: தாருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் கடுமையான தவங்கள் செய்து பிரம்மாவிடம் வரம் பெற்று தங்களை யாராலம் வெல்லவோ கொல்லவோ முடியாது வரம் பெற்றனர்.அவர்களால் தொல்லையடைந்தவர்கள் ஈசனிடம் முறையிட்டனர். அதன்படி பூமியை தேராகவும், சூரிய சந்திரர்களை தேர் சக்கரங்களாகவும், நான்கு வேதங்களை குதிரைகளாகவும், பிரம்மாவை தேரோட்டியாகவும் மற்ற தேவர்களை எல்லாம் தேருடன் (அதற்கு வைதிகத் தேர்) வரச் செய்தார். சுவாமி மேருமலையை வில்லாகவும் வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் திருமாலை அம்பாகவும் அம்பின் நுனியில் அக்னியையும் வைத்து அந்த வில்லுடன் தேரில் ஏறினார். அச்சு முறிந்தது. பிள்ளையாரை வணங்காததால்தான் இப்படி என்று உணர்ந்து கணபதி பூஜை செய்து அவரது அருளை பெற்று தொடர்ந்தனர்.தேரில் வந்த அனைத்து தேவர்களும் தங்களால்தான் அந்த அசுரர்கள் மடியப்போகிறார்கள் என்று நினைத்து கொண்டிருக்க சிவபெருமான் அசுரர்கள் மீது வில் அம்பு எதையும் பயன்படுத்தவில்லை. அசுரர்களை பார்த்து சற்றே சிரித்தார்.அவ்வளவுதான்.

 உலகமே நடுங்கும்படியாக தீப்பிழம்பு ஏற்பட்டு அவர்கள் மூவரும் சாம்பலாயினர். தங்கள் உதவி இல்லாமலே சிவன் சம்காரம் செய்ததை உணர்ந்து தேவர்கள் வெட்கி தலைகுனிந்தனர்.ஒரே சமயத்தில் தேவர்கள்
அசுரர்கள இருவரது ஆணவத்தையும் அடக்கானர் ஈசன்.பின்பு மூன்று அசுரர்களையும் மன்னித்து இருவரை தனது வாயில் காப்பாளர்களாகவும், ஒருவரை குடமுழா முழக்குபவனாகவும் ஆக்கி கொண்டார்.மேற்கூறிய புராண வரலாறே திரிபுர சம்காரம் என்று அழைக்கப்படுகிறது.

இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும்.இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது.வயிற்று வலி (அல்சர்) சத்ரு உபாதைகள் சூலைத் தீர்த்தமும் உட்கொண்டால் உடனடியாக தீர்ந்து விடும்.எதிரிகள் தொல்லை நீங்குதல், வர்க்க சாப தோச நிவர்த்தி, முன்னோர் செய்த பாவங்கள் இங்கு வழிபட்டால் நீங்கும்.
குழந்தை இல்லாதவர்கள் இறைவனை வழிபட்டு அபிசேகம் செய்து அந்தப்பாலை உட்கொண்டால் உடனே குழந்தை பேறு உண்டாகும்.
மேலும் வேலைவாய்ப்பு, குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.

போன்: +91-98419 62089

Sishta Gurunatheswarar temple at Thirutturaiyur near Cuddalore (Paadal Petra Stalam)

அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:சிஷ்டகுருநாதேஸ்வரர் (பசுபதீஸ்வரர்)
அம்மன்:சிவலோகநாயகி (பூங்கோதை)
பாடியவர்கள்:சுந்தரர்
தேவாரப்பதிகம்
மாவாய்ப் பிளந்தானும் மலர்மிசை யானும்
ஆவா அவர்தேடித் திரிந்தல மாந்தர்
பூவார்ந்தன பொய்கைகள் சூழும் துறையூர்த்
தேவா உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே.
-சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 15வது தலம்.

தல சிறப்பு:சித்திரை மாதம் முதல் வாரத்தில் மாலை வேளையில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது.

தலபெருமை:திருவெண்ணெய் நல்லூரில் சிவனை "பித்தா!' என்று பாடி வணங்கிய சுந்தரர், இத்தலத்திற்கு வந்தார். அப்போது தென்பெண்ணையாறு குறுக்கிடவே, கரையில் இருந்தே சிவனை வேண்டி பதிகம் பாடினார். அப்போது அங்கு ஒரு வயதான தம்பதியர் வந்தனர். அவர்கள் சுந்தரரை படகில் ஏற்றிக்கொண்டு மறு கரைக்கு அழைத்து வந்தனர். அப்போது சிவன் அவரது கண்ணுக்கு தெரியாமல் மறைந்து கொண்டார்.
சுந்தரர் சுற்றிலும் தேடிப்பார்த்தார். ஆனாலும், சிவனை காணமுடியவில்லை. அப்போது முதியவர் அவரிடம், "நீங்கள் தேடுபவர் மேலே இருக்கிறார்,' என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். சுந்தரர் மேலே பார்த்தபோது சிவன், அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் காட்சி தந்தார்.
சுந்தரர் அவரிடம் தனக்கு உபதேசம் செய்யும்படி கூறினார். எனவே, சிவன் சுந்தரருக்கு குருவாக இருந்து "தவநெறி' உபதேசம் செய்தார். எனவே, சிவனுக்கு "தவநெறி ஆளுடையார்', "சிஷ்டகுருநாதேஸ்வரர்' என்று பெயர் பெற்றார். சிவன் இங்கு குருவாக அருள் செய்ததால் வியாழக்கிழமைகளில் விசேஷ வழிபாடுகள் நடக்கிறது.

நந்திக்கொடி பிரதோஷம் : இக்கோயிலில் பிரதோஷத்தன்று நந்திக்கு பூஜைகள் செய்யப்படும்போது, அருகில் நந்திக்கொடி கட்டுகின்றனர். சிவ வழிபாட்டில் முக்கியத்துவம் பெற்ற நந்திக்கு பிரதோஷத்தின்போது, நந்தியின் படம் அச்சிடப்பட்ட கொடியைக் கட்டி வழிபடும் வழக்கம் முன்பிருந்தது. காலப்போக்கில் இவ்வழக்கம் மறைந்து விட்டது. இலங்கையில் உள்ள சிவாலயங்களில் இந்த வழிபாடு தற்போதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
இத்தலத்தில் நந்திக்கொடி கட்டி பிரதோஷ பூஜைகள் நடப்பது விசேஷம்.

சிவன் இத்தலத்தில் பெரிய லிங்க வடிவில் இருக்கிறார். ஆவுடை வலது பக்கம் இருக்கிறது. பவுர்ணமி மற்றும் திங்கட்கிழமைதோறும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இந்நேரத்தில் நெய்விளக்கு ஏற்றி, வில்வ இலை அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். 
இங்கு முருகன் ஆறு முகங்களுடன் சுப்பிரமணியராக இருக்கிறார். அருணகிரியார் இவரை, "குருநாதர்' என்று திருப்புகழில் பாடியிருக்கிறார். இவருக்கு அருகில் ஆதிகேசவர் தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் இருக்கிறார். இங்குள்ள சுந்தரர், இடது கையில் செங்கோலை வைத்தபடி காட்சிதருகிறார். இவருக்கு மரியாதை செய்யும் விதமாக தலையில் தலைப்பாகை அணிவித்து அழகு பார்க்கின்றனர்.
கோயிலுக்கு எதிரே சுந்தரரை முதியர் வடிவில் வந்து சிவன் தடுத்த இடத்தில் "தடுத்தாண்கொண்டீஸ்வரர்' மற்றும் "அஷ்டபுஜ காளி'க்கு சன்னதிகள் உள்ளன. இச்சன்னதிக்கு அருகில் மெய்க்கண்ட நாயனாரின் சீடரான அருணநந்தி சிவாச்சாரியார் முக்தியடைந்த இடம் இருக்கிறது.

தல வரலாறு:கயிலாயத்தில் சிவன், பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தென்திசைக்கு வந்தார். வழியில் அவர் பல தலங்களில் லிங்கம் பிரதிஷ்டை செய்து சிவன் திருமணத்தை கண்டார். அவர் இத்தலம் வந்தபோது சிவனின் திருமணத்தை காண விரும்பி லிங்கம், அம்பாளை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இருவரும் அவருக்கு மணக்கோலத்தில் காட்சி தந்தனர்.

இத்தலத்தில் அகத்தியர் சிவனை மேற்கு நோக்கியும், அம்பாளை வடக்கு நோக்கியும் வைத்து வழிபட்டாராம். அவளது திருமணம் வட திசையில் உள்ள கயிலாய மலையில் நடந்ததால் இவ்வாறு செய்தாராம். இதன் அடிப்படையில் அம்பாள் வாமதேவ முகமாக (வடக்கு பார்த்து) தனிச்சன்னதியில் இருக்கிறாள். அம்பாளை இக்கோலத்தில் காண்பது அபூர்வம்.

குருதலம் என்பதால் இங்கு சிவன், தெட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. இதனால் கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை.

போன்: +91- 4142 - 248 498, 94448 07393.

Vamanapuriswarar temple at Thirumamanikuli near Cuddalore (Paadal Petra Stalam)

அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:வாமனபுரீஸ்வரர், மாணிக்கவரதர்
அம்மன்:அம்புஜாட்சி, மாணிக்கவல்லி
பாடியவர்கள்:சம்பந்தர்
தேவாரப்பதிகம் 
மந்த மலர் கொண்டுவழி பாடுசெயு மாணி யுயிர் வவ்வமனமாய் வந்தவொரு காலனுயிர் மாளவுதை செய்தமணி கண்டன் இடமாம் சந்தினொடு காரகில் சுமந்துநட மாமலர்கள் கொண்டு கெடிலம் உந்துபுனல் வந்துவயல் பாயுமண மார்உதவி மாணி குழியே.
-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 17வது தலம்.

தல சிறப்பு:மூலவர் சுயம்பு மூர்த்தி. இக்கோயில் சூரியபகவானால் உண்டாக்கப் பட்டு அவரே பூஜை செய்ததாக வரலாறு.

தலபெருமை:சிறப்பம்சம்: தேவர்களுக்கு ஞானத்தை புகட்டவும், அவர் களது அஞ்ஞானத்தை நீக்கவும் சதா சர்வ காலமும் பார்வதியுடன் இணைந்திருப்பதால், இங்கு இறைவனை நேரிடையாக நாம் தரிசிக்க இயலாது.
கர்ப்பகிரகமே இங்கு பள்ளியறையாக இருப்பதால் தனி பள்ளியறையும் கிடையாது.
சம்பந்தர் இத்தல இறைவனை பாடும் போது "உயிரனை அனைத்தையும் உய்விக்கும் உதவிநாயகன்' என பாடுகிறான். எனவே இறைவனுக்கு "உதவிநாயகன்', அம்மனுக்கு "உதவி நாயகி' என்ற பெயரும் உண்டு. மகாலட்சுமி தவம் செய்த நதியாக கெடிலமும், சரஸ்வதிதேவி சுவேத நதியின் வடிவில் கெடிலத்தில் சங்கமம் ஆகும் தல தீர்த்தமாகவும் விளங்குகின்றனர். பொதுவாக அனைத்து சிவன் கோயில்களிலும் பூஜை நேரத்தின் போது சிவலிங்கத்தை நாம் பார்த்து தரிசித்து கொண்டே இருக்கலாம். ஆனால் இத்தலத்தில்
இரண்டு, மூன்று விநாடிகள் மட்டுமே சிவன் தரிசனம் தந்து விட்டு திரைக்குள் மறைந்து கொள்கிறார்.
இறைவனும் இறைவியும் இணைந்திருப்பதால் அவர்களுக்கு காவல் புரிவதற்காக 11ருத்ரர்களில் ஒருவரான "பீமருத்ரர்' திரைச்சீலை வடிவில் உள்ளார். எனவே அவருக்குத்தான் முதல் அர்ச்சனை, பூஜை. அதன் பின் திரை நீக்கப்பட்டு
ஒரு சில வினாடிகள் உள்ளிருக்கும் சுவாமியை பார்க்க பக்தர்களுக்கு அனுமதி தரப்படுகிறது. விநாயகருக்கு மூஷிக வாகனம் எதிரில் இல்லாமல் அருகில் அமைந்துள்ளது விசேஷம். துர்க்கையின் பாதத்திற்கு கீழ் எருமை தலை கிடையாது, கையில் உள்ள கரம் திரும்பி உள்ளதுடன் கதாயுதமும் தாங்கியிருக்கிறாள்.
சிவனின் எதிரில் உள்ள மண்டபத்தில் நான்கு வேதங்களும் நான்கு தூண்களாக அமைந் துள்ளன. திரைக்கு பின் அம்மனும், சுவாமியும் இருப்பதால் எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டி நந்தி நேர் திசையில் உள்ளது.
வழக்கமான தலை சாய்த்த நிலை இல்லை. மதுரை, காஞ்சிபுரம், காசி, திருவாரூர், நாகப்பட்டினம் போன்று இங்கு அம்மனின் அம்புஜாட்சியின் ஆட்சி நடக்கிறது. அம்மனின் இரண்டு கைகளிலும் பூ. ஒன்றில் தாமரை. மற்றொன்றில் நீலோத்பவம் இருக்கிறது. பூ உள்ள அம்மன் களை தரிசிப்பதால்
துன்பம் பூப்போல்ஆகி விடும் என்பது ஐதீகம். அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தல முருகனை புகழ்ந்து பாடியுள்ளார். கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் கோயிலுக்கு எதிரில் உள்ள மலைமீது மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. பவுர்ணமி தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள்.
விநாயகர் முதல் சண்டிகேஸ்வரர்வரை அனைவருக் கும் ஆதித்ய விமானம் உள்ளது.

தல வரலாறு:
பிரகலாதனின் பேரன் மகாபலியின் தர்மநிலையை உலகிற்கு எடுத்துக் காட்ட மகாவிஷ்ணு விரும்பினார். எனவே காசிப மகரிஷிக் கும், அதிதேவிக்கும் 12வது குழந்தையாக வாமன பிரம்மசாரியாக மகாவிஷ்ணு அவதாரம் செய்தார். மகாபலியின் தர்மசிந்தனை குறித்த கர் வத்தை அடக்க மூன்றடி மண் கேட்டார்.ஒரு அடியால் பூமியையும், ஒரு அடியால் ஆகாயத்தையும் அளந்த பெருமாள், மூன்றாவது அடி எங்கே என கேட்டார். அதற்கு மகாபலி,"" இந்த உலகை ஆளும் என் னையே அளந்து கொள்ளுங்கள்,'' என விஷ்ணுவின் திருவடி முன் குனிந்தார். பக்திக்கு மெச்சிய திருமால் மகாபலியை சிரஞ்சீவிகளுள் ஒருவனாக் கினார். இப்படி மகாபலியை தர்மத்திற்காக விஷ்ணு அழித்திருந்தாலும் அதற்குரிய பழி திருமாலுக்கு ஏற்பட்டது. இந்த பழியைப்போக்க திருமால் இங்கு வழிபட்டதால் இத்தலத் திற்கு "திருமாணிக்குழி' என பெயர் ஏற்பட்டது.

குழந்தை வரம் வேண்டுபவர்கள் அமாவாசை தினத்தில் ஈரத்துணியுடன் அம்மனை 11முறை சுற்றி வரவேண்டும்.
பின் அம்மனுக்கு வெண்ணெய் நைவேத்தியம் செய்து அதை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

போன்: +91-4142-224 328

Pralayakaleeswarar temple at Pennadam near Pennadam (Vriddachalam, South Arcot) (Paadal Petra Stalam)

அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:பிரளயகாலேஸ்வரர் ( சுடர்க்கொழுந்துநாதர்)
அம்மன்:அழகிய காதலி (ஆமோதனாம்பாள், கடந்தை நாயகி)
பாடியவர்கள்:திருநாவுக்கரசர்
தேவாரப்பதிகம் 
பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றி செய்யும் என்னாவி காப்பதற்கு இச்சை யுண்டேல் இருங் கூற்றகல மின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி மேவு கொண்டல் துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே.
 -திருநாவுக்கரசர்.

தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 2வது தலம்

தல சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். வெள்ளத்திலிருந்து பூமியை காப்பதற்காக அன்று திசை திரும்பிய நந்தி இன்றும் வாசலை நோக்கி திரும்பியே இருக்கிறது. கலிக்கம்பநாயனார், மெய்கண்டார் அவதரித்ததும், மறைஞான சம்பந்தர் வாழ்ந்தும் இங்கு தான். கருவறையைச் சுற்றிலும் மூன்று பலகணிகள் அமைக்கப்பட்டுள்ளதால், மூலவரை மூலஸ்தானத்திற்கு வெளியே எந்த திசையில் நின்றாலும் வணங்கும் சிறப்பு பெற்றது.

கன்னியர்களாகிய பெண், காமதேனுவாகிய ஆ, யானையாகிய கடம் ஆகியோர் இங்கு பூஜை செய்ததால் இத்தலம் பெண்ணாகடம் ஆனது. தற்போது பெண்ணாடம் என அழைக்கப்படுகிறது.

தலபெருமை:
பிரளயகாலேஸ்வரர்: ஒருமுறை உலகம் சிவபெருமானால் அழிக்கப்பட்டது. அப்போது இத்தலம் தவிர அனைத்து இடங்களும் வெள்ளத்தால் மூழ்கியது.
இதையறிந்த தேவர்கள் இங்கு வந்து, உயிர்களை இத்தலத்தில் வைத்து காக்கும்படி வேண்டினர். சிவனும் நந்தியிடம் வெள்ளத்தை தடுக்க ஆணையிட்டார். சிவனைப் பார்த்திருந்த நந்தி, ஊரை நோக்கி திரும்ப வெள்ளத்தை திசை மாற்றி பூமியை காத்தது. எனவே இங்குள்ள இறைவன் பிரளயகாலேஸ்வரர் என அழைக்கப்பட்டார். கலிக்கம்பநாயனார் தன் மனைவியுடன் இணைந்து, வீட்டிற்கு வரும் சிவனடியார்களுக்கு பாத பூஜை செய்து வந்தார்.
ஒருமுறை அவரது மனைவி, சிவனடியார் ஒருவருக்கு பாத பூஜை செய்ய மறுத்து விட்டார். இதனால் கோபம் கொண்ட கலிக்கம்பர் மனைவியின் கையை வெட்டி விட்டார். கருணைக்கடலான் ஈசன் அந்த பெண்ணின் கையை மீண்டும் தந்தார்.

திருநாவுக்கரசர்: இவர் சிவனிடம் தன் உடலில் திரிசூல முத்திரையும், ரிஷப முத்திரையும் பொறிக்க வேண்டினார். இவரது வேண்டுகோளை ஏற்ற சிவன் இத்தலத்தில் தன் கைப்பட அவருக்கு முத்திரையை பொறித்தார்.

மலைக்கோயில்: சோழமன்னன் ஒருவன் இறைவனை தரிசிக்க இத்தலம் வரும்போது ஆற்றில் வெள்ளம் வந்தது. ஆற்றின் கரையில் இருந்தபடி சிவனை வேண்டிய போது, அவனுக்காக தன் இருப்பிடத்தை உயர்த்தி கரையில் இருந்தபடியே தரிசனம் கிடைக்க செய்தார். இப்போதும், 30 மீட்டர் உயரத்தில் உள்ள கட்டு மலைக்கோயில் என்ற மேட்டுப்பகுதி கோயிலுக்குள் உள்ளது.

தல வரலாறு:ஒருமுறை தேவலோகத்தில் சிவபூஜை செய்ய பூலோகத்து பூக்கள் தேவைப்பட்டது. தேவகன்னியர் இருவரை தேவேந்திரன் பூலோகத்திற்கு அனுப்ப, பூக்களை பறித்து வரச் சொன்னான்.
பூமிக்கு வந்த கன்னியர்கள் ஒரு நந்தவனத்தில் பூக்கள் இருப்பதைக் கண்டு அதை பறிக்கச் செல்கிறார்கள். அங்கிருந்த சிவலிங்கத்தைக் கண்டதும் பக்தியால் ஈர்க்கப்பட்டு, பறித்த பூக்களை அவருக்கு பூஜை செய்து அங்கேயே தங்கி விட்டனர். கன்னியரைக் காணாத இந்திரன் அவர்களை அழைத்து வர காமதேனு பசுவை அனுப்பினார். அது பூலோகம் வந்ததும் கன்னியர் செய்யும் பூஜையைக்கண்டு தானும் அவர்களுடன் சேர்ந்து ஈசனுக்கு பால் அபஷேகம் செய்து, அங்கேயே தங்கி விட்டது. மீண்டும், தன் ஐராவத வெள்ளையானையை அனுப்பினான் இந்திரன்.
யானை, பூமியில் இவர்கள் செய்யும் பூஜையை பார்த்து விட்டு தானும் தன் பங்கிற்கு, திறந்தவெளியில் இருந்த சிவலிங்கத்தை மறைத்து நின்று, வெயில் படாமல் பார்த்து கொண்டது. பொறுமை இழந்த இந்திரன் பூமிக்கு வந்துவிட்டான்.
தன்னால் அனுப்பபட்டவர்கள் அனைவரும் சிவபூஜை செய்வதை பார்த்து, அவனும் பூஜை செய்ய ஆரம்பத்து விட்டான். சிவனருள் பெற்று அனைவருடனும் தேவலோகம் சென்றான்.

கை சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்திற்கும் இத்தல சிவனை வழிபட்டால் நீங்கும் என்பது நம்பக்கை.
போன்:  +91- 4143-222 788, 98425 64768

Chidambaram Natarajar Temple at Chidambaram (Cosmic Dance Hall, Golden Hall, Paadal Petra Stalam, Pancha Bhoota Stalam (Akasham))

அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில்

மூலவர்:திருமூலநாதர் (மூலட்டானேசுவரர்,சபாநாயகர்,கூத்தப்பெருமான், விடங்கர், மேருவிடங்கர், தட்சிணமேருவிடங்கர்,பொன்னம்பல கூத்தன்)
அம்மன்:உமையாம்பிகை (சிவகாமசுந்தரி)
பாடியவர்கள்:அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்
தேவாரப்பதிகம்
அலையார் புனல்சூடி யாகத் தொருபாகம் மலையாள் மகளொடு மகிழ்ந்தான் உலகேத்தச் சிலையால் எயிலெய்தான் சிற்றம் பலந்தன்னைத் தலையால் வணங்குவார் தலையா னார்களே.
-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது முதன்மையானது.


தல சிறப்பு:இங்கு மூலவர் திருமூலநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆனால் நடராஜரே இங்கு பிரதான மூர்த்தி. பஞ்ச பூத தலங்களில் இது ஆகாய தலம் ஆகும். மூவர் பாடிய தேவார திருப்பதிகங்களை கண்டெடுத்த தலம் இது.

இத்தலம் தில்லை என்னும் மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றது. தில்லை என்னும் மரங்கள் இப்பொழுது சிதம்பரத்தில் காணக் கிடைக்கவில்லை. சிதம்பரத்திற்கு கிழக்கில் உள்ள பிச்சாவரத்திற்கு அருகே அமைந்துள்ள உப்பங்கழியின் கரைகளில் இம்மரங்கள் மிகுதியாக இருக்கின்றன. கோயிலுக்குள் திருமூலட்டானக் கோயில் மேற்கு பிரகாரத்தின் மேல்பால் இருக்கின்றது. கருங்கல் வடிவத்தில் செய்து வைக்கப்பட்டுள்ளது.  நடராஜர் சன்னதியின் எதிரில் உள்ள மண்டத்தில் நின்றபடி பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரையும் தரிசிக்கலாம். நடராஜர் சன்னதி அருகிலேயே 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கோவிந்தராஜப் பெருமாள் தலம் இருப்பது விசேஷத்திலும் விசேஷம். சிவனுக்கும், சக்திக்கும் நடந்த போட்டி நடனத்தில், ஆடிய தில்லை காளியின் கோயில் நடராஜர் கோயில் அருகில் உள்ளது. 51 ஏக்கர் பரப்பளவில் அமைந்த பிரம்மாண்டமான சிவ தலம் இது. மிகச் சிறந்த கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்த அற்புத தலம். நடராஜரின் பஞ்ச சபைகளில் இது சிற்றம்பலம்.

இறைவன் இத்தலத்தில், நடராஜர் என்ற உருவமாகவும், ஆகாயம் என்ற அருவமாகவும், ஸ்படிக லிங்கம் என்ற அருவுருமாகவும் அருள்பாலிக்கிறார்.

சிதம்பர ரகசியம்: சித்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதில் உள்ள திரை அகற்றுப்பெறும். ஆரத்தி காட்டப் பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் தோன்றாது. தங்கத்தால் ஆன வில்வ தளமாலை ஒன்று தொங்கவிடப்பட்டுக் காட்சியளிக்கும். மூர்த்தி இல்லாமலேயே வில்வதளம் தொங்கும். இதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதுதான். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. அவனை உணரத்தான் முடியும் என்பதே இதன் அர்த்தம். பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலமாகும். சிதம்பர ரகசிய ஸ்தானத்தில் அம்மனுக்குரிய ஸ்ரீசக்ரத்தையும், சிவனுக்குரிய சிவசக்ரத்தையும் இணைத்து, ஒன்றாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் உண்டு.  இந்த சக்ரத்தில் நடராஜப்பெருமான் ஐக்கியமாகி, தன் ஆனந்த நடனத்தினால் உலகை படைத்து, காத்து, மறைத்து, அழித்து, அருளிக் கொண்டிருக்கிறார்.

சிதம்பர ரகசியம் : சித்+அம்பரம்=சிதம்பரம். சித்அறிவு. அம்பரம்வெட்டவெளி. மனிதா! உன்னிடம் ஒன்றுமே இல்லை என்பது தான் அந்த ரகசியத்தின் பொருள்.

தேவாரம் கிடைத்த தலம்: மூவர் பாடிய தேவார திருப்பதிகங்களை கண்டெடுத்த தலம் இது. திருநாரையூரைச் சேர்ந்த நம்பியாண்டார் நம்பி என்பவரும் திருமுறை கண்ட சோழ மன்னனும் திருநாரையூர் தலத்தில் உள்ள பொல்லாப்பிள்ளையாரை வணங்கி அப்பெருமானுடைய திருவருளால் சிதம்பரத்தில் பொன்னம்பலத்தின் அருகே மூவர் திருக்கர முத்திரைகளோடு தேவார ஏடுகள் உள்ளன என்று அறிந்தனர். பின்பு தில்லையை வந்தடைந்து மூவருக்கும் விழா எடுத்து குறிப்பிட்ட இடத்தில் தேடும்போது கறையான் புற்று மூடிக்கிடக்க ஏடுகள் கிடந்தன. பின்னர் எண்ணெய் விட்டு புற்றினுள்ளே இருந்த சுவடிகளை எடுத்துப் பார்த்தபோது பல பகுதிகள் கறையானுக்கு இறையாகிப் போயிருந்தன. பின்பு உள்ளவற்றை எடுத்து பத்திரப்படுத்தினர். இவ்வாறு கிடைக்கப்பெற்றதே தற்போது நாம் படிக்கும் தேவாரப் பதிகங்கள். அத்தகைய அரிய தேவாரப்பதிகங்கள் கிடைத்த தலம் இது. திருநாளைப்போவார் என்று அழைக்கப்பட்ட நந்தனார் சிவன்பதம் அடைய அக்னி குண்டத்தில் இறங்கிய அருந்தவத் தலம்.

நால்வர் வந்த வழி: சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் நால்வர் என அழைக்கப்படுகின்றனர். அவர்கள் சிதம்பரத்தில் நடராஜனைக் காண திருக்கோயிலுக்குள் வந்தார்கள்.  சம்பந்தர் இறைவனையடைய சத்புத்திர மார்க்கத்தைக் கையாண்டவர். அதனால் தென்வாயில் வழியாக நேரே வந்து இறைவனைக் கண்டுகளித்தார். நாவுக்கரசர் தாச மார்க்கத்தைப் பின்பற்றியவர். தாச மார்க்கம் என்பது ஆண்டான் அடிமை உறவு. ஆகவே வலது புறமாக (கிழக்கு) வந்து ஏவல் கேட்கும் நோக்கத்துடன் இறைவனைக் கண்டார். சுந்தரர் நட்பு முறையில் இறைவனை வழிபட்டவர். அதனால் பின்புறமாக (வடக்கு) வந்து வேண்டியதை உரிமையுடன் பெற்றவர். மாணிக்கவாசகர் சன்மார்க்க முறையைக் கடைப்பிடித்தவர். (குரு சீட உறவு). ஆதலால் அருட்சக்தி (மேற்கு) பக்கம் வந்து இறைவனைக் கண்டார்.

இந்த ஊரின் தேரோடும் வீதிகளில் அப்பர் பெருமான் அங்கப்பிரதட்சணமே செய்தாராம். இலங்கையை சேர்ந்த புத்தமத மன்னனின் ஊமை மகளை மாணிக்கவாசர், நடராஜர் அருளால் பேசச் செய்த தலம். இத்தலத்து திருக்கோயிலில் சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்தசபை,  இராசசபை என்னும் ஐந்து மன்றங்களும் அமைந்திருத்தலும், சிவன் விஷ்ணு இருவர் திருச்சந்நிதிகள் ஒரே இடத்தில் நின்று தரிசிக்கும்படி அமைந்திருத்தலும் தனிச் சிறப்புகளாகும். பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளும் கோயில் கொண்டுள்ள திருத்தலம் இது. இத்தலத்து முருகப்பெருமான் (சுப்ரமணியர்) குறித்து அருணகிரிநாதர் பத்து திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.

மூலவர் யார் தெரியுமா? : பெரும்பாலான பக்தர்கள், சிதம்பரம் கோயிலின் மூலவர் என்றாலே அது நடராஜர் தான் நினைத்துக் கொண்டிருப்பர். கோயிலுக்குள் நுழைந்ததும், நடராஜர் சன்னதியை தேடியே ஓடுவர். ஆனால், இத்தலத்து மூலவர் லிங்கவடிவில் ஆதிமூலநாதர் என்ற பெயரில் அருள் செய்கிறார். பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் கயிலையில் தாங்கள் கண்ட சிவனின் நாட்டிய தரிசனத்தை, பூலோக மக்களும் கண்டு மகிழ விரும்பினர். எனவே இத்தலத்துக்கு வந்து ஆதிமூலநாதரை வேண்டி தவம் செய்தனர். இவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், திரிசகஸ்ர முனீஸ்வரர்கள் என்போரை கயிலையிலிருந்து, சிதம்பரத்திற்கு அழைத்து வந்து தைமாதம் பூசத்தில் பகல் 12 மணிக்கு நாட்டிய தரிசனம் தந்தார். இந்த திரிசகஸ்ர  முனிவர்களே தில்லை மூலவாரயிவர் என்று சொல்வதுண்டு.


தரிசிக்க முக்தி : திருவாரூரில் பிறந்தால் முக்தி. காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி. காசியில் இறந்தால் முக்தி. திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி. உயிர் போகும் நேரத்தில் நினைக்க அருள்புரிவாய் அருணாச்சலா என அப்பர் கூறியுள்ளார். இதுபோல், வாழ்நாளில் ஒரு தடவையேனும் நடராஜரையும், திருமூலநாதரையும் தரிசித்தால் முக்தி கிடைத்து விடும். எனவே தான் நந்தனார் தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்குள் வரக்கூடாது என ஒதுக்கிய காலத்திலும், சிவன் மீது கொண்ட நிஜமான பக்தியால், சர்வ மரியாதையுடன் கோயிலுக்குள் சென்று, நடராஜருடன் ஐக்கியமானார்.

தேரில் நடராஜர் :  இத்தலத்து நடராஜரைக் காண உலகமே திரண்டு வருகிறது. ஏராளமான வெளிநாட்டவர்கள் கூட, நடராஜரின் சிற்பச் சிறப்பைக் காண வருகின்றனர். அப்படிப்பட்ட அபூர்வ சிலையை, திருவிழா காலத்தில் தேரில் எடுத்து வருகிறார்கள்.

சிலையின் முன்னும் பின்னும் தீபாராதனை: ஒருமுறை பிரம்மா யாகம் ஒன்றை நடத்தினார். இதற்காக, தில்லைவாழ் அந்தணர் மூவாயிரம் பேரையும் சத்தியலோகத்துக்கு அழைத்தார். தில்லையிலேயே இருந்து, நடராஜரின் திருநடனத்தைக் காண்பதை விட அந்த யாகத்தில் எங்களுக்கு என்ன பலன் கிடைத்து விடப்போகிறது எனக் கூறினர். அப்போது, நடராஜர் யாகத்திற்கு செல்லும்படியும், யாகத்தின் முடிவில் அங்கேயே தோன்றுவதாகவும் வாக்களித்தார். அவ்வாறு தோன்றிய கோலத்தை ரத்னசபாபதி என்கின்றனர். இவரது சிலை நடராஜர் சிலையின் கீழே உள்ளது. இவருக்கு தினமும் காலையில் 10 11 மணிக்குள் பூஜை நடக்கும். சிலையின் முன்புறமும், பின்புறமுமாக இந்த தீபாராதனையைச் செய்வர்.

உடலின் அமைப்பில் நடராஜர் சன்னதி : மனிதனின் உருவ அமைப்பிற்கும், தங்கத்தால் ஆன நடராஜர் சன்னதிக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. பொன்னம்பலத்தில் நமசிவாய மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21 ஆயிரத்து 600 தங்க ஓடுகள், மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாசத்தின் எண்ணிக்கையைக் குறிக்கும் அளவில் உள்ளது.. பொன்னம்பலத்தில் அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள், மனிதனின் நாடி நரம்புகளைக்  குறிக்கிறது. கோயிலில் உள்ள 9 வாசல்கள் மனித உடலிலுள்ள 9 துவாரங்களைக் குறிக்கிறது. இதுதவிர ஆன்மிக ரீதியான அமைப்பும் உண்டு. ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தின் ஐந்து படிகளும், 64 கலைகளின் அடிப்படையில் சாத்துமரங்களும், 96 தத்துவங்களைக் குறிக்கும் விதமாக 96 ஜன்னல்களும், 4 வேதங்கள், 6 சாஸ்திரங்கள், பஞ்ச (5)பூதங்களின் அடிப்படையில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.
ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்ரம் அம்மன் சன்னதியில் உள்ளது. அர்த்தஜாம பூஜை இத்தலத்தின் தனி சிறப்பு. அர்த்தஜாம பூஜையில் உலகில் உள்ள அனைத்து தெய்வங்களும் கலந்து கொள்வதாக ஐதீகம். இதை அப்பர் புலியூர் (சிதம்பரம்) சிற்றம்பலமே புக்கார் தாமே எனப்பாடுகிறார். சேக்கிழார் இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் தான் பெரியபுராணம் பாடி அரங்கேற்றினார். அருணகிரிநாதர் இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை தனது திருப்புகழில் பாடியுள்ளார்.

தல வரலாறு:முனிவர்களுள் சிறந்தவரான வசிஷ்ட மாமுனிவரின் உறவினரான மத்யந்தினர் என்ற முனிவருக்கு மாத்யந்தினர் என்ற மகன் பிறந்தான். அவனுக்கு ஆன்மஞானம் கிடைக்கவேண்டுமெனில் தில்லை வனக் காட்டில் உள்ள சுயம்பு லிங்கத்தை வணங்குமாறு முனிவர் சொன்னார்.இதையடுத்து மாத்யந்தினர் தில்லை வனம் வந்தடைந்தார். இங்குள்ள லிங்கத்தை தினமும் பூஜை செய்தார். பூஜைக்கு தேவையான மலர்களை, பொழுது விடிந்த பிறகு எடுத்தால் தம் பூஜை, தவம் முதலியவற்றிற்கு நேரமாகிறபடியாலும், மலர்களில் உள்ள தேனை வண்டுகள் எடுப்பதால் அம்மலர்கள் பூஜைக்கு ஏற்றவையல்ல என்பதாலும் ஒவ்வொரு நாளும் மிகவும் மனம்வருந்திக் கொண்டே மலரெடுத்துப் பூஜை செய்து கொண்டு வந்தார். இக்குறையை சுவாமியிடம் முறையிட்டார். சுவாமி தங்கள் பூஜைக்காக பொழுது விடியுமுன் மலர்களைப் பறிக்க இருட்டில் மலர்கள் தெரியவில்லை.

பொழுது விடிந்த பின்னர் மலர்களைப் பறிக்கலாம் என்றால் மலர்களில் உள்ள தேனை வண்டுகள் எடுத்துவிடுவதால் பூஜைக்கு நல்ல மலர்கள் கிடைக்கவில்லை என்று கூறினார். உடனே சுவாமி மரங்களில் ஏறுவதற்கு வசதியாக வழுக்காமல் இருக்கப் புலியினுடைய கை கால்கள் போன்ற 
உறுப்புகளும், இருளிலும் நன்றாகத் தெரியும்படியான கண்பார்வையும் உனக்கு கொடுத்தோம் என்று கூறியருளினார். மேலும் புலிக்கால் புலிக்கைகளைப் பெற்றதால் உன் பெயரும் வியாக்கிரபாதன் என்றும் கூறினார். மாத்யந்தினரும் பெருமகிழ்வு கொண்டு தினமும் மனநிறைவோடு பூஜை செய்து வந்தார் என தல வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது.

இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவோர் இத்தலத்தின் மேல் அதீத ஆர்வம் கொண்டு பிரார்த்தனை செய்தால் அவர் விரும்பிய வண்ணம் சிறப்பான எதிர் காலம் அமையும் என்பது நம்பிக்கை. மேலும் குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.

போன்: +91- 94439 86996

Vatukeswarar Temple at Vadugur (Andaar Kovil) near Puducheri (Paadal Petra Stalam)

அருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:வடுகீஸ்வரர் (பஞ்சனதீஸ்வரர்)
அம்மன்:திரிபுரசுந்தரி
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர் 
தேவாரப்பதிகம்
தளரும் கொடியன்னாள் தன்னோடு உடனாகிக் கிளரும் அரவுஆர்த்துக் கிளரும் முடிமேலோர் வளரும் பிறைசூடி வரிவண்டு இசைபாட ஒளிரும் வடுகூரில் ஆடும் அடிகளே.
-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 16வது தலம்.

தல சிறப்பு:வடுகீஸ்வரர் சுயம்புலிங்கமாக இடது பக்கம் சற்றே சாய்ந்தவாறு காட்சியளிக்கிறார். லிங்கத்தின் மீது வடுக்கள் உள்ளது. இவரை மரியாதை செய்யும்பொருட்டு தலையில் தலைப்பாகை அணிவித்துள்ளனர்.

சுவாமிக்கு முன்பு அர்த்த மண்டபத்தில் 8 தூண்கள் இருக்கிறது. அதன் அருகே நின்று தரிசனம் செய்தால் ராஜபலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. திருஞானசம்பந்தர் இவரை "வடுகூரில் ஆடும் அடிகளே!' என்று பதிகம் பாடியிருக்கிறார்.
அம்பாள் திரிபுரசுந்தரி லட்சுமி அம்சத்துடன் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவளுக்கு "வடுகர் நாயகி' என்றும் பெயர் உண்டு. பைரவர் பிரகாரத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். அஷ்டமி தினங்களில் சுவாமி மற்றும் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இதனால் தோஷங்கள், பிணிகள் நீங்குவதாக நம்பிக்கை.
திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு சுவாமி, பைரவருக்கு தேன், கருப்பஞ்சாறு அபிஷேகம் செய்து பின் நாய்க்கு சாதம் படைத்து வழிபடுகின்றனர்.
இங்கு முருகன் இடது புறம் திரும்பிய மயில் வாகனத்துடன் காட்சி தருகிறார். 6 முகம், 12 கரங்களில் ஆயுதங்களுடன் இருக்கும் இவரை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என அருணகிரியார் திருப்புகழில் பதிகம் பாடியிருக்கிறார்.
கோஷ்டத்தில் உள்ள துர்க்கை 8 கைகளுடன், போர்க்கோலத்தில்  இருக்கிறாள். வரப்பிரசாதியாக திகழும் இவளை வழிபட்டால் எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும் என்பது நம்பிக்கை. இவளுக்கு இடப்புறத்தில் அர்த்தநாரீஸ்வரர், வலது புறம் பிரதோஷநாயனார் ஆகியோர் இருக்கின்றனர். இத்தலத்தின் தலவிநாயகரின் திருநாமம் வலம்புரி விநாயகர்.

தல வரலாறு:படைப்புத்தொழிலுக்கு அதிபதியான பிரம்மா, சிவனை போலவே ஐந்து தலைகளை கொண்டவராக இருந்தார். இதனால், அவருக்கு மனதில் அகம்பாவம் உண்டானது. அவரது கர்வத்தை அழிக்க எண்ணினார் சிவன்.
ஒருசமயம் பிரம்மாவைக் கண்ட பார்வதிதேவி, அவரை சிவன் என நினைத்து கணவனுக்கு செய்யும் மரியாதைகளைச் செய்தார். பிரம்மா மறுக்காமல் இருந்து விட்டார். இதைக்கண்டு கோபம் அடைந்த சிவன், பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கொய்து விட்டார்.
ஆணவம் அழியப்பெற்ற பிரம்மா, சிவனை வணங்கி தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். சிவன் அவருக்கு மன்னித்து அருள் செய்தார். இந்த வரலாறு இந்த தலத்தில் நிகழ்ந்ததாக கருதப்படுகிறது. பிரம்மாவின் தலையை எடுத்த சிவன் இங்கு, "வடுகீஸ்வரராக' அருளுகிறார்.

திருமண தோஷம் உள்ளவர்கள் இவருக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி, தாலி கட்டி வழிபடுகிறார்கள். இதனால், தோஷம் நீங்குவதாக நம்பிக்கை. 
பணிஉயர்வு கிடைக்க, ஆணவம் அழிய அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்

போன்: +91- 99941 90417.

Wednesday, October 12, 2011

Yaazhmuri Naathar Temple at Dharumapuram near Nagappattinam (Paadal petra stalam)

அருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில்

மூலவர்:யாழ்மூரிநாதர்
அம்மன்: தேனாமிர்தவல்லி
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்
தேவாரப்பதிகம் 
மாதர் மடப்பிடியும் மடஅன்னமும் அன்னதோர் சடையுடைம் மலைமகள் துணையென மகிழ்வர் பூதஇனப்படை நின்றிசை பாடவும் அடுவர் அவர்படர் சடைந் நெடு முடியதொர் புனலர் வேதமொடு ஏழிசை பாடுவர் ஆழ்கடல் வெண்டிரை யிரைந் நுரை கரைபொரு துவிம்மி நின்றயலே தாதவிழ் புன்னை தயங்குமலர்ச் சிறை வண்டறை யெழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே.
-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 51வது தலம். 

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

தல சிறப்பு:சிவன் யாழ் இசைத்தபோது, அவரது அம்சமான தெட்சிணாமூர்த்தி இசையை விரும்பி கேட்டார். இசையில் மகிழ்ந்த அவர் தன்னையும் அறியாமல் வியப்பில் பின்புறம் சாய்ந்தாராம். இதனை உணர்த்தும்விதமாக இங்குள்ள தெட்சிணாமூர்த்தி பின்புறம் சற்றே சாய்ந்தவாறு இருக்கிறார். பொதுவாக மஞ்சள் நிற வஸ்திரம்தான் தெட்சிணாமூர்த்திக்கு அணிவிப்பார்கள். ஆனால், இங்கு காவி நிற வஸ்திரம் சாத்தி பூஜைகள் செய்கிறார்கள். தெட்சிணாமூர்த்தியின் இந்த கோலத்தை காண்பது அபூர்வம். மணம் முடிக்காமல், குரு அம்சமாக இருப்பதால் காவி ஆடை அணிவிப்பதாக சொல்கிறார்கள். இங்கு சிவன் தன் கையில் யாழ் இசைத்த கோலத்தில் காட்சி தருகிறார். அவருக்கு வலப்புறம் சம்பந்தரும், இடப்புறத்தில் யாழ்ப்பாண நாயனாரும் இருக்கின்றனர்.

யாழ் இசைத்த சிவன்: எருக்கத்தம்புலியூர் எனும் ஊரில் வசித்த நீலகண்ட யாழ்ப்பாண நாயனார் சிவன் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார்.  திருஞானசம்பந்தரின் சிவ பணியை அறிந்த நீலகண்ட யாழ்ப்பாண நாயன்மாரும், அவரது மனைவி மதங்கசூளாமணியும் அவருடன் இணைந்து சிவத்தலயாத்திரை மேற்கொண்டனர். திருஞானசம்பந்தர் பதிகம் பாட அதற்கேற்ப யாழ்ப்பாணர் இசையமைப்பார். சம்பந்தர் பாடும் அனைத்து பாடல்களுக்கும் இனிமையாக யாழ் (ஒரு வகையான இசைக்கருவி) இசைக்கும் திறமை பெற்றிருந்ததால் யாழ்ப்பாணர் சற்று கர்வம் கொண்டார். அவரது கர்வத்தை அடக்க சிவன் எண்ணம் கொண்டார்.
அவர்கள் இத்தலத்திற்கு வந்தபோது, சம்பந்தர் பதிகம் பாடினார். யாழ்ப்பாணர் எவ்வளவு முயன்றும் அப்பாடலுக்கு சரியாக இசைக்க முடியவில்லை. கலங்கிய யாழ்ப்பாணர் கலையில் தான் தோற்றுவிட்டதாக கருதி யாழை முறித்து, தன் உயிரை விடச் சென்றார். அப்போது சிவன் அவருக்கு காட்சி தந்து யாழை வாங்கி, சம்பந்தரின் பதிகத்திற்கேற்ப வாசித்து, நடனம் ஆடினார். தன் நிலை உணர்ந்த யாழ்ப்பாணர் கர்வம் நீங்கப்பெற்றார்.
யாழை இசைத்து, யாழ்ப்பாணரின் கர்வத்தை அடக்கியவர் என்பதால் இத்தலத்து சிவன் "யாழ்மூரிநாதர்' என அழைக்கப்படுகிறார். கருவறையில் லிங்க வடிவில் உள்ள சுவாமி எப்போதும் வெள்ளிக்கவசத்துடன் தரிசனம்  தருகிறார். சிவன் யாழ் இசைத்தபோது அம்பாள் தேனும், அமிர்தமும் சேர்ந்தது போல இனிமையாக பாடி மகிழ்ந்தாளாம். எனவே இவளை, "தேனாமிர்தவல்லி' என்கின்றனர். இவள் இடது கையை தொடையில் வைத்தபடி தனிச்சன்னதியில் அருளுகிறாள். குரல் வளம் வேண்டுபவர்கள் இவளுக்கு வஸ்திரங்கள் சாத்தி, பூஜைகள் செய்தும், இசை கற்பவர்கள் சிவன், தெட்சிணாமூர்த்திக்கு விசேஷ பூஜைகள் செய்தும் வழிபடுகிறார்கள். சிவன் யாழ் இசைத்தபோது, குயில்களும் தங்களது குரல்களால் கூவி பாடினவாம். இதனை திருஞானசம்பந்தர், ""எழில் பொழில் குயில் பயில் தருமபுர பதியே!'' என்று பாடியிருக்கிறார். வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் சம்பந்தருக்கு குருபூஜை நடக்கிறது. அன்று சிவன் வீதியுலா வந்து சம்பந்தருக்கு காட்சி தருகிறார். தர்மன் உண்டாக்கியதாக கருதப்படும் தீர்த்தம் பிரகாரத்தில் உள்ளது. இனிப்புச்சுவையுடன் இருக்கும் இந்த நீரை பருகினால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இத்தலத்தின் தலவிநாயகர் கற்பகவிநாயகர் எனப்படுகிறார். 3  நிலையுடன் கூடிய ராஜ கோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

தல வரலாறு:சிவன், மார்க்கண்டேயரை பிடிக்க வந்த எமதர்மனை திருக்கடையூரில் சம்ஹாரம் செய்து அவரது பதவியை பறித்தார். இதனால், பூமியில் பிறந்த உயிர்கள் அனைத்தும் இறப்பின்றி பெருகின. பாரம் தாங்காத பூமிதேவி, எமதர்மனை உயிர்ப்பிக்கும்படி வேண்டினாள். அதேசமயம் எமதர்மனும் தன் தவறை மன்னித்து மீண்டும் பணி வழங்கும்படி சிவனிடம் வேண்டிக்கொண்டான். எமனுக்கு அருள் செய்வதற்காக சிவன், பூலோகத்தில் தவமிருந்து தன்னை வழிபட்டுவர இழந்த பணி மீண்டும் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி எமன் சிவத்தல யாத்திரை சென்றான். இத்தலம் வந்த எமதர்மன் தீர்த்தம் உண்டாக்கி, தவம் இருந்தார். அவருக்கு காட்சி தந்த சிவன், தகுந்த காலத்தில் பணி கிடைக்கப்பெறும் என்றார். எமன் தனக்கு அருள் செய்ததுபோலவே இங்கு அருள வேண்டும் என வேண்டவே, சிவன் இங்கே தங்கினார்.


Saturday, October 8, 2011

Krupapureeswarar temple at Thiruvennainallur near Villuppuram (Paadal Petra Stalam)

அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:கிருபாபுரீசுவரர்(அருட்கொண்ட நாதர், ஆட்கொண்டநாதர், வேணுபுரீசுவரர்) 
அம்மன்:மங்களாம்பிகை(வேற்கண்ணியம்மன்)
பாடியவர்கள்:சுந்தரர்- முதல்பாடல் 
தேவாரப்பதிகம்
பித்தாபிறை சூடிபெருமானே அருளாளா எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட்துறையுள் அத்தாஉனக்கு ஆளாய்இனி அல்லேன் எனலாமே.
-சுந்தரர்.

தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 14வது தலம். 

தல சிறப்பு:இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூரத்தியாக அருள்பாலிக்கிறார். கிழவராக வந்து சுந்தரரோடு வழக்கு செய்த ஈசன் லிங்கமாக ஐக்கியமாகும் முன் கருவறைக்கு முன்பாக தான் கழற்றி வைத்த காலணி பாதுகைகள் இன்னமும் இத்தலத்தில் உள்ளது.

தலபெருமை:திருமண நாளன்று திருநாவலூரில் திருமணக்கோலத்திலிருந்த சுந்தரரை வயதான வேடம் கொண்டு ஈசன் தடுத்தாட் கொண்டார். நீ எனக்கு அடிமை என்று கூறி அதற்கான ஆதாரத்தையும் அங்கு கூடியிருந்தவர்களிடம் காட்ட அதிலுள்ள கையெழுத்து உண்மையானதுதான் என்பதை அறிந்த பெரியோர்கள் சுந்தரரை கிழவருக்கு அடிமையாக போகச் சொன்னார்கள்.
கோபம் கொண்ட சுந்தரர் கிழவரை பித்தன் கிறுக்கன் என்றெல்லாம் திட்டினார்.அதையெல்லாம் பொருட்படுத்தாத கிழவர் சுந்தரரை அழைத்துக் கொண்டு இந்த திருவெண்ணெய்நல்லூர் கோயிலுக்குள் சென்று மறைந்தார்.
வந்தது இறைவன்தான் என்பதை அறிந்த சுந்தரர் ஈசனை வணங்கி நிற்க, என்னப் பற்றி பாடு என்று ஈசுவரன் கேட்க எப்படிப் பாடுவது என்று சுந்தரர் கேட்க என்னை பித்தா என்று திட்டினாயே அதையே பாடு என்று அடியெடுத்துக் கொடுத்தார். அப்போதுதான் சுந்தரர் பித்தா பிறைசூடி பெருமானே என்ற புகழ் பெற்ற பாடலைப் பாடினார். அதிலிருந்து ஈசன் எழுந்தருளியிருக்கும் தலம் தோறும் சென்று திருப்பதிகங்கள் பாடி அற்புதங்கள் நிகழ்த்தி ஆண்டவனின் அறநெறியை பரவச் செய்தார்.
கோயிலுக்குள் நுழைந்தவுடன் வலப்புறம் வடக்கு பக்கத்தில் சுந்தரருக்கும், கிழவனாக வந்த ஈசனுக்கும் பெரியோர்களால் பஞ்சாயத்து நடந்த மண்டபம் இன்றும் உள்ளது.பரமன் நின்று சாய்ந்திருந்த தூணில் இன்றும் வெதுவெதுப்பாக உஷ்ணம் உள்ளது. மேலும் பரமன் அடி வைத்த இம்மன்றத்திலிருந்து சிறிதளவு மண்ணை எடுத்துச் சென்று பூஜையில் வைத்து பூஜிப்பவர்களும் உண்டு அர்ச்சுனனுக்கு மகப்பேறு அளித்த விஜய லிங்கம் உள்ளது.தேவேந்திரன் பூஜித்த சுந்தர லிங்கம் இங்கு உள்ளது.மகாவிஷ்ணு பூஜித்த சங்கரலிங்கம் இங்கு உள்ளது.
இங்குள்ள சண்முகநாதர் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்றவர்.
முருகன் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதருக்கு மயிலோடு நடனமாடி காட்சி தந்த திருத்தலம்.
மகிசனை வதம் செய்ததால் ஏற்பட்ட ஆக்ரோசம் நதியில் குளித்து மங்களம் பெற்ற தலம் என்பதால் மங்களாம்பிகை சந்நதியில் நந்திக்கு பதில் சிம்மம் இருக்கும்.
சங்க நிதி, பதுமநிதி , ஸ்ரீ சக்கரத்துடன் சிம்ம வாகனத்துடன் அம்பாள் இங்கு இருப்பது சிறப்பு.
பாண்டவரில் அர்ச்சுணன் தன்மூத்தோனாகிய தருமனும் பாஞ்சாலியும் தனித்திருந்த பாவத்தை இங்குள்ள இறைவனை வழிபட்டப் போக்கிக் கொண்டான். மேலும் இறைவனை வேண்டி மகப்பேறு அடையவும் வரத்தை பெற்றான்.
கருவுற்றப் பசுவை வேள்வி செய்த பாவத்தை வித கோத்திரர் என்னும் அந்தணர் இத்தலத்திற்கு வந்து அருட்டுறை தீர்த்தத்தில் நீராடி பாடிப்பணிந்து போக்கிக் கொண்டார்.
சடையப்ப வள்ளல் இவ்வூரில் வாழ்ந்திருக்கிறார் என்ற சிறப்பும் முக்கியமானது.

தல வரலாறு:தாருகாவனத்து முனிவர்கள் அகந்தையால் வேள்வி இயற்றி சிவபெருமானைக் கொல்ல ஏவினர்.அவர்கள் எண்ணம் ஈடேறவில்லை எல்லாவற்றையும் சிவன் தன்னிடத்தே பெற்றுக் வைத்துக் கொண்டார்.
முனிவர்கள் தங்கள் அகந்தை அழிந்து இத்தலத்தில் தவம் புரிந்தார்கள்.இறைவன் அவர்களது தவறை பொறுத்து அருள் புரிந்தார். எனவே இவ்வாலயம் அருட்டுறை (அருள் துறை) எனப்பெயர் பெற்றது.முனிவர்களின் தவறை எண்ணி இங்கு இறைவன் கிருபை புரிந்ததால் கிருபாபுரீசுவரர் எனப்பெயர் பெற்றார்.
மறைகள் இறைவன் ஆணைப்படி இங்கு தவம் புரிய அவற்றின் நடுவில் இறைவன் தீயுருவாகத் தோன்றினான் அவை கேட்டுக் கொண்டபடி இங்கு சுயம்பு லிங்கமாக எழுந்தருளினான்.

இங்கு வந்து வணங்கினால் மனதுக்கு நிம்மதியும் , வாக்கு வன்மையும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் , ஈசனின் அருளும் கிடைக்கும்.
பொல்லாப்பிள்ளையார் : இத்தலத்தில் அருள்பாலிக்கும் பொல்லாப்பிள்ளையார் உளியால் செதுக்கப்படாத விநாயகர் .சுயம்புவாக தானே தோன்றியவர். இவர் மெய்கண்டதேவருக்கு 5 வயதில் ஞான உபதேசம் செய்வர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை ஊமையாய் இருப்பவர்கள் வழிபட்டால் பேச்சு வரும் அம்பிகை சந்நிதியில் நால்வகை எண்ணெய் நெய், இலுப்பு, தேங்காய், ஆமணக்கு நல்லெண்ணெய் ஆகியவற்றை கலக்கி ஏற்றனால் திருமண வரம், குழந்தை வரம், உத்தியோக வரம், தொழில் விருத்தி ஆகியவை கைகூடும் 
தர்மதேவதையே நந்தி வடிவில் இங்கு இருப்பதால் திருமணம் ஆகாதவர்கள் தாங்களும் மாலை போட்டு நந்திக்கும் மாலை போட்டு சுற்றினால் திருமண வரம் கண்டிப்பாக ஈடேறும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள். உடல் ஆரோக்கியம் ,தொழில் ஆகியவற்றுக்காக ஜப்பான் நாட்டிலிருந்தெல்லாம் இங்கு வந்து பக்தர்கள் யாகம் நடத்துகிறார்கள். பூர்வ ஜென்ம பாவம் விலக யாகம் செய்கிறார்கள். நவகிரகங்கள் வழிபட்ட ஜோதிலிங்கம் இத்தலத்தில் உள்ளது மேலும் ஒரு விசேசம். இங்குள்ள தலவிருட்சத்தை பூஜித்து பால் அபிசேகம் செய்து ஐந்து தீபம் ஏற்ற நவகோள்களான சூரியன் முதல் கேது வரையிலான திசா புத்திகளினால் ஏற்படும் எல்லா கஷ்டங்களும் நீங்கப்பெறுவார்கள். சுவாமிக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, மா பொடி, பால், தயிர்,பழ வகைகள், கரும்புச்சாறு, தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ,ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம்.தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம்.நெய்தீபம் ஏற்றலாம்.தவிர சுவாமிக்கு வேட்டியும்,அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

போன்: +91-93456 60711

Manikandeeswarar temple at Thirumalpur near Kanchipuram (Paadal Petra Stalam)

அருள்மிகு மணிகண்டீஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:மணிகண்டீஸ்வரர்
அம்மன்:அஞ்சனாட்சி
பாடியவர்கள்:திருநாவுக்கரசர், சம்பந்தர்
தேவாரப்பதிகம்சாத்திரம் பேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர் பாத்திரம் சிவம் என்று பணிதிரேல் மாத்திரைக்குள் அருளும் மாற்பேறரே.
-திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 11வது தலம். 

தல சிறப்பு:பார்வதிதேவியால் விருதசீர நதிக்கரையில் மணலால் அமைக்கப்பட்ட லிங்கம் இங்கு மூலவராக உள்ளது. அது கரைந்து விடாமல் இருக்க லிங்கத்தின் மீது, குவளை (செம்பால் செய்யப்பட்ட கவசம்) சாத்தியே அபிஷேகம் செய்யப்படுகிறது. சிவபெருமானை மூலஸ்தானம் அருகே திருமால் கைகூப்பி வணங்கிய நிலையில் "செந்தாமரைக்கண்ணப்பெருமாள்' என்ற நாமத்துடன் உள்ள தலம். மூலவரின் அருகே அதிகார நந்தி நின்ற நிலையில் உள்ளார். சிவன் கோயில் என்றாலும், பெருமாள் அருள் தலம் பெற்ற தலம் என்பதால் பிரம்மோற்ஸவ காலத்தில் கருடசேவை நடக்கிறது.

பராந்தக சோழன் நினைவாக அமைக்கப்பட்ட சோளீஸ்வரர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். எட்டு கரத்துடன் துர்க்கை நளினமாக காட்சி தருகிறாள்.
சிவன் கோயில் என்றாலும், பெருமாள் அருள் தலம் பெற்ற தலம் என்பதால் பிரம்மோற்ஸவ காலத்தில் கருடசேவை நடக்கிறது. பத்து கரங்களுடன் வல்லபை விநாயகரும் அனுக்கிரகம் புரிகிறார்.

தல வரலாறு:குபன் என்ற அரசனுக்காக திருமால் துதீசி முனிவர் மீது தனது சக்கரத்தை வீசினார். ஆனால், அது முனிவரின் தெய்வீக உடம்பில் பட்டு முனை மழுங்கிவிட்டது.
கவலையடைந்தார் திருமால். என்ன செய்வதென்று தேவர்களுடன் கலந்தாலோசித்து, சலந்தராசுரனை அழிப்பதற்காக உண்டாக்கிய சுதர்சன சக்கரம் சிவனிடம் உள்ளதை அறிந்தார். உடனே இத்தலம் வந்து அம்பிகை பூஜித்த இந்த லிங்கத்தை தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் பூஜை செய்தார். ஒரு நாள் சிவன், திருமாலின் பக்தியை சோதிக்க, பூஜைக்கான ஆயிரம் மலர்களில் ஒன்றை மறைத்துவிட்டார்.
திருமால் பூஜை செய்யும் போது மலர் ஒன்று குறைய, தனது கண்ணைப்பறித்து இறைவனின் திருவடியில் அர்ப்பணித்தார். இந்த பூஜைக்கு மகிழ்ந்த சிவன், ""தாமரை மலருக்காக உனது கண்ணை எடுத்த பூஜித்ததால், தாமரை போலவே உனக்கு கண் கொடுக்கிறேன். இதனால் உன்னை "பதுமாஷன்' என அழைப்பார்கள். இத்தலமும் "திருமாற்பேறு' என அழைக்கப்படும்'' எனக்கூறி திருமால் வேண்டிய சக்கரத்தை கொடுத்தருளினார்.
மேலும் அவர் திருமாலிடம்,""நீ கூறி வழிபட்ட ஆயிரம் நாமங்களால் என்னை பூஜிப்பவர்களுக்கு முக்தியை கொடுப்பேன். அதைச் சொல்ல இயலாதவர்கள் என்னை, தீண்டச்சிவந்தார், சாதரூபர், மணிகண்டர், தயாநிதியார், பவளமலையார், வாட்டந்தவிர்த்தார், சாகிசனர் ஆகிய திருநாமங்கள் சொல்லி பூஜித்தால் வேண்டிய வரம் தருவேன்,''என்று அருளினார்.
இத்தலத்தில் ஒரு கண நேரம் தங்கியவர்களுக்கும் முக்தியளிக்க வேண்டும் எனவும், இங்கு வழிபட்டால் அனைத்துக் கோயில்களிலுள்ள லிங்கங்களையும் வழிபட்ட பலன் கிடைக்க வேண்டும் எனவும் வரம் பெற்றார். சிவன் மகிழ்ந்து திருமால் கேட்ட வரம் தந்தருளியதாக வரலாறு.


பெருமாள் வணங்கி சக்கரம் பெற்ற தலமாதலால், இங்கு வழிபடுவோருக்கு எதிரி பயம் இருக்காது. வழக்குளில் வெற்றி பெறலாம் என்பது நம்பிக்கை. 

போன்: +91 4177 248 220, 93454 49339

Thursday, October 6, 2011

Pasupateeswarar Temple at Tirukkandeeswaram near Mayiladuturai (Padal Petra Stalam)

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:பசுபதீஸ்வரர்
அம்மன்: சாந்த நாயகி
பாடியவர்கள்: திருநாவுக்கரசர்
தேவாரப்பதிகம் 
பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதைமார்தம் மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்புவந்து கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன் சேலுலாம் பழனவேலித் திருக்கொண்டீச் சரத்துளானே.
-திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 72வது தலம். 

தல சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள லிங்கத்தில் பசுவின் கொம்பால் ஏற்பட்ட பிளவை இன்றும் காணலாம்.

காமதேனு வழிபட்ட தலம். "கொண்டி' என்றால் "துஷ்ட மாடு' என்று பொருள். கொண்டி வழிபட்டதால் இத்தலம் "கொண்டீஸ்வரம்' என அழைக்கப்படுகிறது.
அம்பாள் சன்னதிக்கும், சுவாமி சன்னதிக்கும் இடையில் வெள்ளைக்கல்லால் செய்யப்பட்ட மிகப்பழமையான "ஜேஷ்டாதேவி' அருள்பாலிக்கிறாள். ஜேஷ்டா என்றால் மூதேவி என்று அர்த்தம். இத்தலத்தில் ஜேஷ்டாதேவி அனுக்கிரக தேவதையாக இருக்கிறாள்.
ஜேஷ்டாதேவி எனப்படும் தெய்வம் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் காணப்படுவாள். ஸ்ரீதேவியான (சீதேவி) லட்சுமியின் சகோதரியான இவள் மூதேவி (மூத்ததேவி) என்றும் சொல்லப்படுவாள். இவளை யாரும் தரிசிப்பதில்லை. ஆனால், இவள் வழிபாட்டுக்கு உரியவள்.
சோம்பல் இல்லாத சுறுசுறுப்பான வாழ்வைத் தர வேண்டும் என இவளிடம் பிரார்த்திக்க வேண்டும். இவ்வாறு அனுக்கிரகம் அருளும் மூர்த்தியாக இவள் அருள்பாலிக்கிறாள்.

தல வரலாறு:சிவபெருமான், தன்னை பூமியில் உள்ள மனிதர்கள் வழிபட்டு மேன்மை அடைய வேண்டும் என்பதற்காக வில்வாரண்யத்தில் மறைந்திருந்தார். அன்னை பார்வதி பசுவடிவெடுத்து இத்தலத்தை தன் கொம்பால் கீறிய போது அங்கு மறைந்து இருந்த இறைவனின் தலையில் கொம்பு பட்டு ரத்தம் வடிந்தது.
அதைக்கண்ட பசு, லிங்க வடிவில் இருந்த இறைவனின் தலையில் பால் சொரிந்து காயத்தை ஆற்றி வழிபட்டது. பசுவின் கொம்பால் ஏற்பட்ட பிளவை இன்றும் லிங்கத்தில் நாம் காணலாம்.

திருமணத்தில் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் உள்ள ஜேஷ்டா தேவியை வழிபாடு செய்கின்றனர்.
சுவாமி மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் மூன்று தலைகள், மூன்று கால்களுடன் ஜுரஹரேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.
கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு வெந்நீரில் அபிஷேகம் செய்து, அன்னத்துடன் மிளகுரசம் வைத்து வழிபட்டால் பரிபூரண குணமாகிவிடுகிறது. 
ஜேஷ்டா தேவிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

போன்: +91 - 4366 - 228 033.

Parijatavaneswarar Temple at Tirukkallar (Mannargudi) near Thanjavur

அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:பாரிஜாதவனேஸ்வரர் என்ற களர்முளைநாதேஸ்வரர்
அம்மன்: அமிர்தவல்லி என்ற இளம்கொம்பன்னாள்
பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர்
தேவாரப்பதிகம் 
கொங்கு லாமலாச் சோலை வண்டினம் கிண்டி மாமது வுண்டிமை சைசெயத் தெங்குபைங் கமுகம் புடைசூழ்ந்த திருக்களருள் மங்கை தன்னெடுங் கூடிய மண வாளனே பிணை கொண்டார் கைத்தலத் தங்கையிற் படையாய் அடைந்தார்க்கு அருளாயே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 105வது தலம்.

இத்தல இறைவன் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.

தலபெருமை:முருகப்பெருமான் அறுபதினாயிரம் முனிவர்களுக்கும், துர்வாசருக்கும், பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்தது இத்தலத்தில் தான். எனவே முருகப்பெருமான் இத்தலத்தில் வள்ளி, தெய்வானை இல்லாமல் குரு வடிவில் அருள்பாலிக்கிறார். கல்வியில் மேன்மை பெற இவரை வழிபடுவது சிறப்பு.

சிதம்பரம், பேரூரில் ஆனந்த தாண்டவம், திருவாரூரில் அஜபா தாண்டவம், மதுரையில் ஞான சுந்தர தாண்டவம், அவினாசியில் ஊர்த்துவ தாண்டவம், திருமுருகன் பூண்டியில் பிரம்ம தாண்டவம் தந்தருளிய சிவபெருமான் இத்தலத்தில் பிரம தாண்டவ தரிசனம் தந்துள்ளார்.

நடராஜரின் பிரமதாண்டவ தரிசன வடிவமும், எதிரில் துர்வாசர் கைகூப்பிய நிலையில் உள்ள வடிவமும் உள்ளது. துர்வாச முனிவரே இக்கோயிலுக்கு முதலில் கும்பாபிஷேகம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. கோவிலூர் மடாதிபதி வீரசேகரஞான தேசிக சுவாமிகளின் ஜீவ சமாதி கோயிலின் அருகே உள்ளது. இவர் இக்கோயிலுக்கு அதிக திருப்பணிகள் செய்துள்ளார். எனவே இவரை "திருக்களர் ஆண்டவன்' என வழிபாடு செய்கிறார்கள். பராசர முனிவர்  காலவ முனிவர் வழிபட்ட தலம்.
இத்தலத்தில் வழிபாடு செய்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மோட்சம் கிடைக்கும் எனவும், கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும் என்பதும் ஐதீகம்.

தல வரலாறு:
பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் சிவபெருமான் ஆனந்த தாண்டவ தரிசனம் தந்தருளியதை அறிந்த துர்வாச முனிவர் தனக்கும் நடன தரிசனம் தர வேண்டி இத்தலத்தில் கடும் தவம் இருந்தார்.

இவர் தேவலோக மலராகிய பாரிஜாதத்தை கொண்டு வந்து இப்பகுதியை பாரிஜாத வனமாக்கினார். பின் தீர்த்தம் உண்டாக்கி, பாரிஜாத மரத்தின் அடியில் லிங்கத்தையும், அருகே அம்பாளையும் பிரதிஷ்டை செய்து, தேவ தச்சனை கொண்டு கோயில் கட்டி வழிபாடு செய்தார். இதனால் இத்தலத்திற்கு பாரிஜாத வனம், தருவனம், கற்பகவனம் என்ற புராணப்பெயர்கள் உண்டு.

இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன் இத்தலத்தில் "பிரமதாண்டவ தரிசனம்' தந்தருளினார். களரி என்பதற்கு தாண்டவம் என்றும் பொருளுண்டு. களரி என்பது மருவி "திருக்களர்' ஆனது. இதனால் இத்தல இறைவன் களர்முளை நாதேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

இத்தலத்தில் வழிபாடு செய்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மோட்சம் கிடைக்கும்.கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும் என்பதும் ஐதீகம். 

போன்: +91- 4367 - 279 374
 

Ganapateeswarar Temple at Tiruchenkottankudi(Tiruppugalur - Nannilam) near Kumbakonam (Paadal petra stalam)

அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:கணபதீஸ்வரர்
அம்மன்:வாய்த்த திருகுகுழல் உமைநாயகி ( சூளிகாம்பாள்)
பாடியவர்கள்: சம்பந்தர், அப்பர், அருணகிரியார்
தேவாரப்பதிகம்
தோடுடையான் குழையுடையான் அரக்கன்தன் தோளடர்த்த பீடுடையான் போர்விடையான் பெண்பாகம் மிகப்பெரியான் சேடுடையான் செங்காட்டங் குடியுடையான் சேர்ந்தாடும் காடுடையான் நாடுடையான் கணபதீச் சரத்தானே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 79வது தலம்.

தல சிறப்பு:இத்தல மூலவர் சுயம்பு முர்த்தியாக அருள்பாலிக்கிறார். தனி சன்னதியில் அருள்பாலிக்கும் உத்திராபசுபதீஸ்வரர் தற்போதும் நெற்றியில் காயத்துடனே காட்சி தருகிறார்.

உத்திராபசுபதீஸ்வரர்: மூலவர் கணபதீஸ்வரருக்கு வலப்புறத்தில் தனி விமானத்துடன் கூடிய சன்னதியில் உத்திராபசுபதீஸ்வரர் இருக்கிறார். இவரே இத்தலத்தின் பிரசித்தி பெற்ற மூர்த்தியாவார். இவரது பெயரிலேயே தலமும் அழைக்கப்படுகிறது. கைகளில் உடுக்கை, திருவோடு, திரிசூலத்துடன் இவர் காட்சி தருகிறார்.

முற்காலத்தில் இப்பகுதியில் வசித்த பரஞ்சோதி என்பவர், பல்லவ மன்னரின் போர்ப்படை தளபதியாக இருந்தார். சிவபக்தரான இவர், சிவனருளால் பல போர்களிலும் வெற்றி வாகை சூடினார். பரஞ்சோதியாரின் பக்தியையும், சிவத்தொண்டையும் அறிந்த மன்னன், அவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் அது சிவனுக்கே நேர்ந்ததாகும் என கருதி, அவரை சிவத்தொண்டு செய்யும்படி வேண்டிக்கொண்டான். அவரும் ஏற்றுக்கொண்டார்.
மங்கை நல்லாள் என்பவரை மணந்து, சீராளன் என்னும் மகனைப் பெற்றார். தினமும் சிவத்தொண்டர்களுக்கு உணவு படைத்தபின்பே, தான் உண்பதை வழக்கமாக கொண்டிருந்த இத்தம்பதியினர், அடியார்கள் கேட்டதை இல்லை என்று சொல்லாமல் படைத்து வந்தனர்.
ஒருசமயம் சிறுத்தொண்டர் வீட்டிற்கு அடியார் யாரும் வரவில்லை. எனவே அடியாரைத்தேடி அவர் வெளியில் சென்றார். அப்போது சிவன், அடியார்  வேடத்தில் அவரது இல்லத்திற்கு சென்றார். சிறுதொண்டரின் மனைவி திருவெண்காட்டுநங்கை, பணியாள் சீராளநங்கை அவரை வரவேற்று, சாப்பிட அழைத்தனர். கணவன் இல்லாத வீட்டில் சாப்பிட மறுத்த அவர், இக்கோயில் காட்டாத்தி மரத்தினடியில் இருப்பதாக சொல்லிவிட்டு இங்கு வந்தார். வீடு திரும்பிய சிறுத்தொண்டரிடம் மனைவி நடந்ததைக் கூறினார். மகிழ்ந்த சிறுதொண்டர் கோயிலுக்கு வந்து அடியாரை அழைத்தார். அவர் சிறுதொண்டரின் மகனை சமைத்து படைத்தால் மட்டுமே, உணவருந்த வருவதாக கூறினார். அவரும் ஏற்றுக்கொண்டு மகனை அறுத்து, சமைத்தார்.
சாப்பிடும் முன்பு அடியார், சிறுதொண்டரின் மகனையும் சாப்பிட அழைக்கும்படி கூறினார்.
திகைத்த சிறுத்தொண்டரும், மனைவியும் வெளியில் நின்று மகனை அழைக்க, அவன் ஓடி வந்தான். மகிழ்ந்த தம்பதியர் வீட்டிற்குள் சென்றபோது, அடியவர் வடிவில் வந்த சிவன், அம்பிகையுடன் காட்சி தந்து, நால்வருக்கும் முக்தி கொடுத்து அருள்புரிந்தார்.
இவரே இங்கு உத்திராபசுபதீஸ்வரராக காட்சி தருகிறார். இவரது சன்னதி எதிரில் காட்டாத்தி மரமும், சிறுத்தொண்டர் குடும்பத்தினருடன் காட்சி தருகின்றனர்.


நான்கு அம்பாள்: முற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் ஒருவருக்கு குழந்தை இல்லை. சிவபக்தரான அவர் புத்திரப்பேறுக்காக சிவனை வேண்டி யாகம் நடத்தினார். சிவன் அசரீரியாக அம்பிகையே அவருக்கு மகளாக பிறப்பாள் என்றார். ஒருசமயம் வேட்டையாடச் சென்றபோது மன்னர் 4 பெண் குழந்தைகளை கண்டார். அக்குழந்தைகளை வளர்த்தார். அவர்கள் பிறப்பிலேயே சிவபக்தைகளாக திகழ்ந்தனர். தகுந்த பருவத்தில் அவர்களை மணந்து கொள்ளும்படி சிவனிடம் வேண்டினார். சிவனும் மணந்து கொண்டார். இந்த அம்பிகையர் நால்வரும் இப்பகுதியிலுள்ள நான்கு தலங்களில் காட்சி தருகின்றனர். இத்தலத்தில் அம்பிகை வாய்த்த திருகுகுழல் நாயகியாகவும், திருப்புகலூரில் கருந்தாழ்குழலியம்மை, கணபதீச்சரத்தில் சரிவார்குழலியம்மை, திருமருகல் தலத்தில் வண்டார்குழலியம்மையாகவும் காட்சி தருகிறாள்.

தனிக்கோயில் அம்பிகை: அம்பிகையர் நால்வருக்கும், "சூலிகாம்பாள்' என்ற பொதுப்பெயர் உள்ளது. ஒருசமயம் இப்பகுதியில் வசித்த அம்பாள் பக்தையான ஏழைப்பெண் ஒருத்தி கர்ப்பமுற்றாள். ஒருநாள் இரவில் அவளது தாயார், ஆற்றைக் கடந்து வெளியில் சென்றுவிட்டாள். அன்றிரவில் பலத்த மழை பெய்யவே, அவளால் கரையைக் கடந்து வீடு திரும்பமுடியவில்லை. அப்போது அம்பிகையே அவளது தாயார் வடிவில் சென்று பிரசவம் பார்த்தாள். எனவே இந்த நான்கு தலங்களிலுள்ள அம்பிகைக்கும் "சூலிகாம்பாள்' என்ற பெயரும் உண்டு. "சூல்' என்றால் "கரு'வைக் குறிக்கும்.
பிரசவம் பார்த்துவிட்டு இரவில் தாமதமாக சென்றதால், அம்பிகை கோயிலுக்குள் செல்லாமல் வெளியில் நின்றுவிட்டாள். எனவே இந்த நான்கு தலங்களிலும் அம்பாள் சன்னதி வெளியில் தனியே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவளுக்கு அர்த்தஜாம பூஜையின்போது மட்டும் சம்பா அரிசி, மிளகு, சீரகம், உப்பு, நெய் கலந்த சாத நைவேத்யம் படைப்பது விசேஷம்.

வாதாபி கணபதி: ஒருசமயம் பரஞ்ஜோதி, போருக்குச் சென்றபோது அங்கிருந்த விநாயகரை வணங்கி போர் புரிந்தார், வெற்றி பெற்றார். வெற்றியின் அடையாளமாக விநாயகரை தமிழகத்திற்கு கொண்டு வந்தார். கஜமுகாசுரனை அழித்ததற்காக விநாயகர் தோஷ நிவர்த்தி பெற்ற இத்தலத்தில், பிரதிஷ்டை செய்தார். இதன்பிறகே தமிழகத்தில் விநாயகருக்கு உருவ வழிபாடு உண்டானதாக சொல்வர். எனவே இவரை "ஆதிவிநாயகர்' என்றும் அழைக்கிறார்கள். தனிச்சன்னதியில் இருக்கும் இந்த விநாயகர், இரு கால்களையும் மடக்கி அமர்ந்திருக்கிறார். சதுர்த்தி திதியில் விசேஷ பூஜை நடக்கிறது. விநாயகருக்கு சிவன் ஒரு மார்கழி மாத சதயம் நட்சத்திரத்துடன் கூடிய, சஷ்டி திதியன்று தோஷ நிவர்த்தி செய்ததாக ஐதீகம். இதன் அடிப்படையில் மார்கழி சதய நட்சத்திரத்தன்று சுவாமிக்கு விசேஷ பூஜை, வழிபாடு மற்றும் விநாயகர் புறப்பாடு நடக்கிறது.

சிலையாய் அமைந்த சிவன்: ஒருசமயம் சிறுத்தொண்டருக்கு காட்சி தந்த சிவனுக்கு, இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர் சிலை வடித்தார். ஆனால், பலமுறை சிலை சரியாக அமையவில்லை. அப்போது அங்கு வந்த சிவனடியார் ஒருவர் தாகத்திற்கு நீர் கேட்டார். சிற்பிகள் சிலை அமையாத கோபத்தில், சிலை செய்ய வைத்திருந்த உலோக கலவையை கொடுத்துவிட்டனர். அதை அருந்திய அடியார், அப்படியே சிலையாக மாறினார். சிவனே, சிலையாக அமைந்ததை உணர்ந்த மன்னர் இங்கு பிரதிஷ்டை செய்தார். அப்போது அச்சிலையில் நெற்றியில் சிறிய புடைப்பு இருந்தது. அதனை சிற்பிகள் தட்டவே காயம் ஏற்பட்டு, ரத்தம் வழிந்தது. பின்பு பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ வைக்கவே ரத்தம் நின்றது. தற்போதும் நெற்றியில் காயத்துடனே உத்திராபசுபதீஸ்வரர் காட்சி தருகிறார். சாயரட்சை பூஜையில் இவருக்கு பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ சாத்தப்படுகிறது. சித்திரை, ஆடி, ஐப்பசி, தை மாதப்பிறப்பு, சித்திரை பரணி, வைகாசி திருவோணம், ஐப்பசி பரணி ஆகிய விசேஷ நாட்களில் இவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

விநாயகரால் சம்ஹாரம் செய்யப்பட்ட கஜமுகாசுரனின் செங்குருதி (சிவப்பு இரத்தம்) இப்பகுதியில் ஆறாக ஓடியதாம். எனவே இத்தலம் "திருச்செங்காட்டங்குடி' என்று அழைக்கப்படுகிறது. "ரத்தாரண்யக்ஷேத்ரம்' என்பது இத்தலத்தின் மற்றொரு பெயர்.

தல வரலாறு:யானை முகம் கொண்ட கஜமுகாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் சம்ஹாரம் செய்தார். இதனால் அவருக்கு தோஷம் உண்டானது. தோஷம் நீங்க இத்தலம் வந்தார். சுயம்புவாக எழுந்தருளியிருந்த சிவனை வழிபட்டார். சிவன் அவருக்கு காட்சி தந்து தோஷம் நீக்கியருளினார். எனவே சிவன், "கணபதீஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.

செய்த தவறுக்கு பிராயச்சித்தம் வேண்டுபவர்கள் இங்கு சுவாமியிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.தோஷம், மனக்குழப்பங்கள் நீங்கவும் இங்கு வணங்கலாம். கர்ப்பிணிகள் அம்பிகையிடம் வேண்டிக்கொள்ள சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை. 

போன்: +91- 4366 - 270 278, 292 300, +91-94431 13025.

Veerattaneswarar Temple at Tiruvirkudi near Tiruvarur (Paadal Petra Stalam, Veeratta Stalam)

அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:வீரட்டானேஸ்வரர்
அம்மன்: ஏலவார்குழலி, பரிமள நாயகி.
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்
தேவாரப்பதிகம் 
கரிய கண்டத்தர் வெளியவெண் பொடியணி மார்பினர் வலங்கையில் எரியர் புன்சடை யிடம்பெறக் காட்டகத் தாடிய வேடத்தர் விரியு மாமலர்ப் பொய்கைசூழ் மதுமலி விற்குடி வீரட்டம் பிரிவி லாதவர் பெருந்தவத்தோரெனப் பேணுவர் உலகத்தே.

 -திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 74வது தலம். 

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்

தலபெருமை:இங்கு மூலவர் வீரட்டானேஸ்வரர். அம்மன் பரிமளநாயகி. பிருந்தை என்னும் சொல்லுக்கு "துளசி' என்பது பொருள்.

கற்பிற்சிறந்த அப்பெண்மணியின் நினைவாக, துளசி தான் இங்கு தல விருட்சம்.இது ஒரு வாஸ்து தோஷ நிவர்த்தி தலம். ஆஞ்சநேயர் வழிபாடு இங்கு சிறப்பு.

தல வரலாறு:ஒரு முறை இந்திரன், தான் என்ற அகந்தையுடன் சிவனை தரிசிக்க கைலாயத்திற்கு வந்தான். இதை அறிந்த சிவன் சேவகன் வடிவெடுத்து கைலாய வாசலில் நின்று, உள்ளே செல்ல முடியாதபடி  தடுத்தார். கோபமடைந்த இந்திரன், தன் வஜ்ராயுதத்தால் சிவனை அடித்தான். கோபத்தால் சிவன் தன் நெற்றிக்கண்ணை திறந்தார். காவல் காப்பவர், சிவன் என்பதை அறிந்த இந்திரன், ஆணவத்தால் தான் செய்த செயலை மன்னிக்க வேண்டினான். கோபத்தில் தன் உடலில் ஏற்பட்ட வியர்வைத்துளியை பாற்கடலில் தெளித்தார் சிவன். அதில் ஒரு அசுர குழந்தை தோன்றியது. இந்த குழந்தை பிரம்மனின் தாடியை பிடித்து இழுக்க வலி தாங்காத பிரம்மனின் கண்களிலிருந்து கண்ணீர் தோன்றி அந்த துளியும் குழந்தையின் மீது விழுந்தது. இப்படி சிவனின் வியர்வை துளி, பாற்கடல் நீர், பிரம்மனின் கண்ணீர் துளி ஆகிய ஜலத்தினால் உருவான அசுரனாதலால் குழந்தைக்கு "ஜலந்தராசூரன்' என பெயர் வைக்கப்பட்டது.

அவன் பெரியவனானதும், மூவுலகும் தனக்கு அடிமையாக வேண்டும் என்றும், சாகாவரமும் கேட்டான். பிரம்மன் மறுத்தார். அதற்கு ஜலந்தராசூரன், ""தர்ம பத்தினியான என் மனைவி பிருந்தை எப்போது மனதளவில் கெடுகிறாளோ அப்போது எனக்கு அழிவு வரட்டும்,'' என வரம் வாங்கி  விட்டான். இவனது அட்டகாசம் அதிகமானது. கடைசியில் சிவனையே அழிக்க சென்றான்.
சிவன் அந்தணர் வேடமிட்டு, அசுரன் முன் வந்து நின்று, தன் காலால் தரையில் சக்கர வடிவில் ஒரு வட்டம் போட்டார். ""இந்த சக்கரத்தை எடுத்து உன் தலையில் வை. அது உன்னை அழிக்கும்,'' என்றார். ஆணவம் கொண்ட ஜலந்தரன், ""என் மனைவியின் கற்பின் திறனால், எனக்கு அழிவு வராது,'' என சவால் விட்டான்.

இந்த நேரத்தில், திருமாலை அழைத்த சிவன், "" நீர் ஜலந்தராசூரனைப் போல்  வடிவெடுத்து, அவன் மனைவி பிருந்தை முன் செல்லும்படி கூறினார். கணவன் தான் வந்திருக்கிறார் என வீட்டிற்குள் அழைத்தாள் பிருந்தை. ஒரு நொடியில், மாற்றானை தன் கணவன் என நினைத்ததால் அவளது மனம் களங்கமடைந்தது.
இந்நேரத்தில், சக்கரத்தை அசுரன் எடுத்து தலையில் வைக்க அவன் கழுத்தை சக்கரம் துண்டித்து விடுகிறது. இதை அறிந்த பிருந்தை, தன் கணவன் அழிய காரணமாக இருந்த விஷ்ணுவிடம், ""நான் கணவனை இழந்து வருந்துவது போல, நீயும் உன் மனைவியை இழந்து வருந்த வேண்டும்,'' என சாபம் கொடுத்து விட்டு தீக்குளித்தாள். இதனால் தான், விஷ்ணு ராமாவதாரம் எடுக்க வேண்டி வந்தது.
பிருந்தையின் சாபத்தினால் விஷ்ணுவுக்கு பித்து பிடித்தது. பித்தை தெளிவிக்க பிருந்தை தீகுளித்த இடத்தில் சிவன் ஒரு விதை போட்டார். இந்த விதை விழுந்த இடத்தில் துளசி செடி வளர்ந்தது.

இந்த துளசியால் மாலைதொடுத்து திருமாலுக்கு சாற்ற பித்து விலகுகிறது. அசுரனை அழிக்க காரணமாக இருந்த சக்கரத்தை சிவனிடம் திருமால் கேட்டார். அதைப் பெறுவதற்காக ஆயிரம் தாமரைகளால், சிவனை பூஜித்தார். சிவனின் திருவிளையாடலால் இரண்டு பூ குறைந்தது. திருமால் தன் இருகண்களையும் எடுத்து, சிவனை பூஜிக்க மகிழ்ந்த சிவன் சக்கரத்தை திருமாலுக்கு கொடுத்தார்.

வீடு கட்டும் முன் ஏதும் பிரச்னை என்றால், இங்கிருந்து கல் எடுத்து சென்று, அந்த கல்லை வைத்து கட்டினால் தோஷ நிவர்த்தி கிடைக்கும்.  முன்னோர்களின் சாபத்திற்கு ஆளாகி, அவர்கள் இறந்து போய் இருந்தால், இங்கு வழிபட்டால் தோஷம் நீங்கும்.

போன்: +91-94439 21146

Pon Vaidyanatheswarar Temple at Chitrambur (Ponnirai) near Tiruvarur (Paadal Petra Stalam)

அருள்மிகு பொன்வைத்தநாதர் திருக்கோயில்

மூலவர்:பொன்வைத்த நாதர் (சொர்ணஸ்தாபனேஸ்வரர்)
அம்மன்: அகிலாண்டேஸ்வரி
பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர்
தேவாரப்பதிகம் 
வானார்திங்கள் வாண்முக மாதர்பாட வார்சடைக் கூனார்திங்கள் சூடியோ ராடல்மேய கொள்கையான் தேனார்வண்டு பண்செயுந் திருவாருஞ் சிற்றேமத்தான் மானார்விழிநன் மாதொடும் மகிழ்ந்தமைந்த னல்லனே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 106வது தலம்.

தல சிறப்பு:இத்தல இறைவன் சுயம்புமூர்த்தியாக காட்சி தருகிறார். முன்னொரு காலத்தில் பிரம்ம ரிஷி என்பவர், இத்தலத்தில் அர்த்தஜாம பூஜை செய்வதை கடமையாக கொண்டிருந்தார். ஒரு முறை இவர் வருவதற்குள் கோயில் நடை சாத்தப்பட்டு விட்டது. எனவே இவர் தேனீ வடிவம் எடுத்து சிறு ஓட்டை வழியாக உள்ளே சென்று இறைவனை தரிசித்தார். இவருடன் வந்த மற்ற ரிஷிகளும் இவ்வாறே தரிசனம் செய்தனர். இன்றும் கூட கோயில் அர்த்த மண்டபத்தில் தேனீக்கள் கூடு கட்டி இருப்பதை காணலாம். இந்த தேன் கூட்டிற்கு நாள் தோறும் பூஜை நடக்கிறது.

இத்தல இறைவனைஅகத்தியர், இந்திரன், நாகராஜன், பிரம்மா ஆகியோர் பூஜை செய்துள்ளனர்.

இத்தலவிநாயகர் ஆத்திமரவிநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

சுகப்பிரசவம் வேண்டுபவர்கள் இங்கு வழிபாடு செய்தால் பலன் நிச்சயம். (செட்டிப்பெண்ணின் வேண்டுதலுக்கிணங்க அம்மனின் அருளால் இன்று வரை இப்பகுதி பெண்களுக்கும், இங்கு வழிபாடு செய்பவர்களுக்கும் சுகப்பிரசவமே நடக்கிறது என கூறுகின்றனர்).

செட்டிப்பெண்ணின் வறுமையை நீக்க இறைவன் பொற்காசு அளித்த தலமாதலால் செல்வம் வேண்டுபவர்கள் பொன்வைத்த நாதரை வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.

தல வரலாறு:இவ்வூரில் செட்டித்தெருவில் சங்கரன் என்பவர் வசித்து வந்தார். இவர் ஒரு சிறந்த சிவபக்தர். இவரது மனைவி அன்பிற்பெரியாள்.

திருமணமாகி சில நாட்களில் கணவன் பக்கத்து நாட்டு வியாபாரத்திற்கு சென்றுவிட்டான். கணவனுடன் வாழ்ந்த நாட்களில் அவள் கர்ப்பம் தரித்திருந்தாள். தனியாக வாழ்ந்த செட்டிப்பெண், தினமும் இக்கோயிலுக்கு சென்று கூட்டி, மெழுகி சுத்தம் செய்து வந்தாள். அத்துடன் இறைவனுக்க பூமாலை தொடுத்து கொடுத்தாள். இவளது செயலுக்கு மகிழ்ந்த இறைவன் இவளது செலவிற்காக தினமும் ஒரு பொன் காசை கோயில் வாசல் படியில் வைத்தார். இதனால் இத்தல இறைவன் "பொன்வைத்த நாதர்' எனப்பட்டார்.

சில மாதங்களில் இவள் கர்ப்பமாக இருப்பது வெளிஉலகிற்கு தெரிய வந்தது. சிவன் பொற்காசு கொடுப்பது யாருக்கும் தெரியாது. கணவன் ஊரில் இல்லை. இவளது செலவிற்கு பணம் ஏது?, எப்படி கர்ப்பமடைந்தாள் என ஊர்மக்கள் இவளை சந்தேகப்பட்டனர். எனவே அவளை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். 
கற்புக்கரசியான இவள் மிகுந்த மன தைரியத்துடன், சிவனே தஞ்சம் என கோயிலிலேயே தங்கினாள். பிரசவ காலம் நெருங்கியது. தனக்கென யாருமே இல்லை. தன்னை காப்பாற்றும்படி இறைவனை வேண்டினாள்.

உலக உயிர்களுக்கெல்லாம் தாயாக விளங்கும் அன்னை அகிலாண்டேஸ்வரியே இவளுக்கு பிரசவம் பார்த்தாள். குழந்தையும் பிறந்தது. வியாபாரத்திற்கு சென்ற கணவன் ஊர் திரும்பினான். ஊர் மக்கள் அவரிடம் உன் மனைவி நடத்தையில் சந்தேகம் உள்ளது என்றனர். அதைக்கேட்ட கணவன் வருந்தினான். மனைவியிடம் விபரம் கேட்டான். அவளோ நான் உண்மையானவள் என்பதற்கு இறைவனே சாட்சி என்றாள்.

அதற்கு கணவன்,""நீ உண்மையானவள் என்றால், மூடியிருக்கும் கோயில் கதவு தானே திறக்க வேண்டும். அர்த்தஜாம பூஜை தானாக நடக்க வேண்டும். நந்திக்கு பின்னால் இருக்கும் பலி பீடம் முன்னால் அமைய வேண்டும். கோயிலுக்கு பின்புறம் உள்ள தல விருட்சம் கோயிலுக்கு முன்னால் வளர வேண்டும்,''என நிபந்தனை விதித்தான். இதைக்கேட்ட அப்பெண் இறைவனைமனமுருகி வேண்டினாள். இவளது வேண்டுதலை இறைவன் ஏற்றார். அதன்படி ஊர் மக்கள் முன்னிலையில் கதவு தானே திறந்தது. பலிபீடம் நந்திக்கு முன்னால் அமைந்தது. தலவிருட்சம் கோயிலுக்கு முன்னால் வளர்ந்தது. அர்த்தஜாம பூஜையும் அர்ச்சகர் இல்லாமல் தானே நடந்தது. இறைவனின் திருவருளால் அனைத்தும் நடந்ததை அறிந்த மக்கள், அப்பெண்ணை வாழ்த்தினர்.
நந்தி கோயிலுக்கு வெளியே இருப்பதையும் நந்திக்கு முன் பலிபீடம் இருப்பதையும் இன்றும் காணலாம்.

சுகப்பிரசவம் வேண்டுபவர்கள் இங்கு வழிபாடு செய்தால் பலன் நிச்சயம்.
செல்வம் வேண்டுபவர்கள் பொன்வைத்த நாதரை வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமிக்கும் அம்பாளுக்கும் வஸ்திரம் சாத்தி, அபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர்.

போன்: +91- 94427 67565.
 

Maragadheeswarar Hill temple at Thiruvengimalai near Kulittalai (Tiruchirppalli) (Paadal Petra Stalam)

அருள்மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:மரகதாசலேஸ்வரர் (திரணத்ஜோதீஸ்வரர்,ஈங்கோய்நாதர்)
அம்மன்:மரகதாம்பிகை
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்
தேவாரப்பதிகம்   
வினையாயின தீர்த்(து) அருளே புரியும்விகிர்தன் விரிகொன்றை நனையார் முடிமேல் மல் மதியஞ் சூடுநம்பா நலமல்கு தனையார் கமல மலர் மேல் உறையான் தலையோ(டு) அனல் ஏந்தும் எனை ஆளுடையான் உமையாளோடும் ஈங்கோய் மலையாரே.
-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரையில் 63வது தலம். 

தல சிறப்பு:இத்தல இறைவன் மரகதத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இதனால் இவருக்கு மரகதாசலேஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு. மாசி சிவராத்திரியின்போது மூன்றுநாட்கள் சுவாமி மீது சூரியஒளி கதிர்கள் விழுகிறது. இந்நேரத்தில் லிங்கம் நிறம் மாறி காட்சியளிப்பது விசேஷம். சிவனின் பாடல் பெற்ற தலங்களில், மலை மீது இருப்பவை மிகக்குறைவு. அதில் ஒன்று திருச்சி மாவட்டம் ஈங்கோய்மலை.

சக்திமலை: அம்பாளுக்கு, சிவன் தன் இடப்பாகம் தர உறுதி தந்த மலை என்பதால் இம்மலையை "சக்திமலை' என்கின்றனர். இதனை உணர்த்தும் விதமாக முன்மண்டபத்திலும், மலையிலும் அர்த்தநாரீஸ்வரர் வடிவங்கள் உள்ளன.
மரகதாம்பிகை, நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளது கருவறை விமானம், கோபுரம் போன்ற அமைப்பில் மூன்று கலசங்களுடன் இருக்கிறது. கருவறை கோஷ்டத்தில் மகிஷாசுரனை வதம் செய்த துர்க்கை காலுக்கு கீழே மகிஷனுடனும், மற்றொரு துர்க்கை சாந்தசொரூபியாகவும் உள்ளனர்.
அடிக்கிற கை தான் அணைக்கும் என்ற பழமொழிக்கேற்ற காட்சி இது. ஒரே இடத்தில் துர்க்கையின் இரண்டு வடிவங்களையும் காண்பது அரிதான ஒன்று.

ஈ வழிபாடு: தென்திசை வந்த அகத்தியர், சிவனை வழிபட இங்கு வந்தார். அப்போது நடை அடைக்கப்பட்டுவிட்டது. தனக்கு காட்சி தரும்படி சிவனை வேண்டினார்.
மலை அடிவாரத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடிவிட்டு வந்தால் தன்னை வணங்கலாம் என்று அசரீரி சொன்னது. அதன்படி அகத்தியர் தீர்த்தத்தில் நீராடியபோது, ஈ வடிவம் பெற்றார். பின் இம்மலை மீது பறந்து வந்து, சன்னதி
கதவின் சாவித்துவாரம் வழியாக உள்ளே புகுந்து சுவாமியை தரிசனம் செய்தார். பின் மீண்டும் தன் பழைய வடிவம் பெற்று திரும்பினார். அகத்தியர் ஈ வடிவில் வழிபட்ட தலம் என்பதால், "திருஈங்கோய்மலை' என்றும், சிவனுக்கு "ஈங்கோய்நாதர்' என்றும் பெயர் உண்டு.

புளியமரத்தில் ஒளிந்த சிவன்: சிவனின் நண்பரான சுந்தரர், தான் விரும்பிய நேரங்களில் சிவனிடம் பொன் கேட்டுப் பெற்றுக் கொள்வார். அவர் இத்தலத்திற்கு வந்து சிவனிடம் பொன் வேண்டும் என கேட்டார். சுந்தரரிடம் விளையாட வேண்டும் என நினைத்த சிவன், இங்கிருந்த ஒரு புளியமரத்திற்குள் ஒளிந்து கொண்டார்.
சுந்தரர், சிவனை எவ்வளவோ அழைத்தும் அவருக்கு காட்சி தரவில்லை. ஒரு தங்க புளியங்காயை மட்டும் அவருக்கு கிடைக்கும்படி செய்தார். சுந்தரர் அதனை எடுத்தபோது, புளியங்காய் மறைந்து விட்டது.
தன்னிடம் சிவன் விளையாடுவதை உணர்ந்து கொண்ட சுந்தரர், கோபத்தில் "எனக்கு கிடைக்காத புளி யாருக்கும் கிடைக்காமல் போகட்டும்,' என சொல்லிவிட்டு திரும்பி விட்டார்.
இத்தலத்தின் விருட்சம் புளியமரம். ஆனால், சுந்தரர் புளி யாருக்கும்  கிடைக்கக்கூடாது என்று சபித்துவிட்டதால் இங்கு புளியமரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


சிறப்பம்சம்: மாசி சிவராத்திரியின்போது மூன்றுநாட்கள் சுவாமி மீது சூரியஒளி கதிர்கள் விழுகிறது. இந்நேரத்தில் லிங்கம் நிறம் மாறி காட்சியளிப்பது விசேஷம். சுந்தரர் மட்டுமின்றி, நக்கீரர் ஈங்கோய் எழுபது என்ற பாமாலையை அருளியிருக்கிறார்.
சிவனுக்கு தீபாராதனை காட்டும்போது லிங்கத்தில் ஜோதி ஜொலிப்பதைக் காணலாம். தைப்பூசத்தன்று சுவாமி, அம்பாளுடன் காவிரிக்கரையில் எழுந்தருளுகிறார். ஆடிக்கிருத்திகை மற்றும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்கின்றனர்.
ஐநூறு படிகளுடன் அமைந்த மலைக்கோயில் இது. கோஷ்டத்தில் ஒரு தெட்சிணாமூர்த்தி, விமானத்தில் வீணை தெட்சிணாமூர்த்தி, கால்களை மாற்றி அமர்ந்த தெட்சிணாமூர்த்தி என குரு பகவானின் வித்தியாசமான வடிவங்களை காணலாம்.

தல வரலாறு:பிருகு முனிவர் சிவனை வணங்கும் வழக்கம் உடையவர். ஆனால், அம்பாளைக் கண்டு கொள்ளவே மாட்டார். பக்தர்களின் வழிபாட்டில் அம்பாளுக்கும் முக்கியத்துவம் வேண்டும் எனக்கருதிய சிவன், அவளைக் கோபப்படும்படி செய்தார்.
இந்த விளையாடலுக்கு கட்டுப்பட்ட அம்பாள், பூலோகம் வந்து இத்தலத்தில் தவம் செய்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தன் உடலின் இடப்பாகத்தை தருவதாக இத்தலத்தில் உறுதியளித்தார். ஆதிசேஷனுக்கும், வாயுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என போட்டி வந்தது. வாயுபகவான் தன் பலத்தை நிரூபிக்க பலமாக காற்றை வீசச்செய்தார்.
ஆதிசேஷன் மந்திர மலையை இறுக சுற்றிக்கொண்டார். அப்போது அம்மலையின் சிறு, சிறு பாகங்கள் பூமியில் தெறித்து விழுந்தன. அவ்வாறு விழுந்த பாகத்தின் ஒருபகுதி இம்மலை என்கிறார்கள்.
சிவபெருமான், அவர்களைச் சமாதானம் செய்து, மலையிலேயே மரகதலிங்கமாக எழுந்தருளினார்.
மரகத அசலத்தில் (மலையில்) எழுந்தருளியவர் என்பதால், "மரகதாசலேஸ்வரர்' என்ற பெயர் பெற்றார். இவருக்கு "திரணத்ஜோதீஸ்வரர்'  என்ற பெயரும் உண்டு.

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

போன்:+91- 4326 - 2627 44, 94439 - 50031

Jambukeswarar Temple at Tiruvanaikka near Tiruchirappalli (Pancha Bhoota Stalam, Paadal Petra Stalam)

அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:ஜம்புகேஸ்வரர்
அம்மன்: அகிலாண்டேஸ்வரி
பாடியவர்கள்:திருநாவுக்கரசர்
தேவாரப்பதிகம்துன்பம் இன்றித் துயரின்றி என்றும்நீர் இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின் எம்பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே -
திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 60வது தலம். 

தல சிறப்பு:இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பஞ்சபூத தலங்களில் இத்தலம் நீருக்கு உரிய தலம்.

சிவன் வடிவில் அம்பாள்
அம்பாள் வடிவில் சிவன்!: பிரம்மா, ஒருமுறை தான் படைத்த பெண்ணையே அடைய விரும்பினார். இதனால் அவருக்கு "ஸ்திரீ தோஷம்' உண்டானது. தோஷ நிவர்த்தி பெற சிவனை வேண்டினார். அவருக்கு அருள சிவன் கைலாயத்திலிருந்து கிளம்பினார். அப்போது அம்பிகை, தானும் வருவதாக கூறினாள். சிவன் அவளிடம், பிரம்மா பெண்கள் மீது மோகம் கொள்பவர் என்று சொல்லி அவளை உடன் அழைத்துச் செல்ல மறுத்தார். ஆனால், அம்பிகை சிவனிடம், ""நான் உங்களது வேடத்தில் வருகிறேன், நீங்கள் சேலை அணிந்து என் வேடத்தில் வாருங்கள்!'' என்றாள். சிவனும் ஏற்றுக்கொள்ள இருவரும் மாறுவேடத்தில் சென்றனர்.
சிவமும், சக்தியும் ஒன்று என்பதன் அடிப்படையிலும் இந்த திருவிளையாடல் நிகழ்ந்தது. பின்னர் பிரம்மாவுக்கு இருவரும் பாவமன்னிப்பு வழங்கினர்.
இங்கு நடக்கும் பிரம்மோற்ஸவத்தின்போது சிவன், அம்பாள் இருவரும் மாறுவேடத்தில் பிரம்ம தீர்த்தத்ததிற்கு எழுந்தருளி, பிரம்மாவிற்கு காட்சி தருகின்றனர். பிரம்மா அவர்களைத் தியானம் செய்யும் சமயம் என்பதால், அப்போது மேளதாளம் இசைக்கப்படுவதில்லை.

மாணவி அம்பாள்: சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்தில், அகிலத்தை (உலகம்) காப்பவளாக அம்பிகை அருளுவதால், "அகிலாண்டேஸ்வரி' என்றழைக்கப்படுகிறாள்.
அகிலாண்டேஸ்வரி, இத்தலத்தில் ஜம்புகேஸ்வரரை உச்சிக்காலத்தில் பூஜிப்பதாக ஐதீகம். எனவே மதிய வேளையில் அம்பாளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர், அம்பாள் அணிந்த புடவை, கிரீடம் மற்றும் மாலை அணிந்து, கையில் தீர்த்தத்துடன் மேளதாளம் முழங்க சிவன் சன்னதிக்கு செல்வார்.
சுவாமிக்கு அபிஷேகம் செய்து, கோமாதா பூஜை செய்துவிட்டு அம்பாள் சன்னதி திரும்புவார். இந்த பூஜையை அம்பாளே நேரில் சென்று செய்வதாக ஐதீகம். இந்நேரத்தில் அர்ச்சகரை அம்பாளாக பாவித்து பக்தர்கள் வணங்குகின்றனர்.
ஆடி மாதத்தில் அம்பாள் இங்கு சிவனை வேண்டி தவமிருந்ததாக ஐதீகம். எனவே, இத்தலத்தில் ஆடி வெள்ளி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஆடிவெள்ளியன்று அதிகாலை 2 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரையில் தொடர்ச்சியாக நடை திறந்திருக்கும். அம்பாள் காலையில் லட்சுமியாகவும், உச்சிக்காலத்தில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி  தருகிறாள். சிவன், அம்பாளுக்கு இத்தலத்தில் குருவாக இருந்து உபதேசம் செய்ய, அம்பாள் மாணவியாக இருந்து கற்றறிந்தாள். எனவே மாணவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.

நவ துளை ஜன்னல்: ஜம்புகேஸ்வரர் அமர்ந்துள்ள மூலஸ்தானம் எதிரில் வாசல் கிடையாது. ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் இருக்கிறது.
பக்தர்கள் இந்த துளை வழியேதான் சுவாமியை தரிசிக்க வேண்டும். இந்த ஜன்னல், மனிதன் தன் உடலிலுள்ள ஒன்பது வாசல்களையும் அடக்கி சிவதரிசனம் செய்ய வேண்டுமென்பதை உணர்த்துகிறது.
சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியில், அன்னாபிஷேகம் செய்வது வழக்கம். ஆனால், இங்கு வைகாசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்கின்றனர். இங்கு சிவன் சன்னதியில் எப்போதும் நீர் ஊறிக்கொண்டிருக்கிறது.
ஐப்பசி மாதம் மழைக்காலம் என்பதால், கருவறைக்குள் தண்ணீர் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். எனவே அன்னாபிஷேகம் செய்யவது சிரமம். வைகாசியில் தண்ணீர் குறைந்து, ஈரப்பதம் மட்டுமே இருக்கும். எனவே அந்நேரத்தில் அன்னாபிஷேகம் செய்கின்றனர். ஐப்பசி பவுர்ணமியில்  லிங்கத்திற்கு விபூதிக்காப்பிடப்படுகிறது.


சித்தராக வந்த சிவன்!: மதுரையைப் போல, இத்தலத்திலும் சிவபெருமான், சித்தர் வடிவில் வந்து திருவிளையாடல் நிகழ்த்தினார்.
இப்பகுதியை ஆண்ட மன்னன், கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தை கட்டினான். அப்போது, போர் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனாலும், அவனது மனம் போர் செய்வதில் லயிக்கவில்லை. அவன் சிவனை வேண்டினான்.
சிவன் விபூதிச்சித்தராக வந்து, பிரகாரம் கட்டும் வேலையை முடித்தார். இதையறிந்த மன்னன் மகிழ்ந்தான். சிவன் கட்டிய மதில் "திருநீற்றான் திருமதில்' என்றும், பிரகாரம் "விபூதி பிரகாரம்' என்றும் அழைக்கப்படுகிறது. விபூதி சித்தருக்கு பிரம்ம தீர்த்தக்கரையில் சன்னதி உள்ளது.

அன்னையை சாந்தப்படுத்தும் பிள்ளைகள்: ஆரம்பத்தில் இங்கு அம்பாள் உக்கிரமாக இருந்தாள். பொதுவாக உக்கிரமான அம்பிகையை சாந்தப்படுத்த ஸ்ரீசக்ரத்தில் அம்பாளின் ஆக்ரோஷத்தைச் செலுத்தி சாந்தப்படுத்துவர். ஆனால், இங்கு வந்த ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரத்துக்குப் பதிலாக, இரண்டு தாடங்கங்களை (காதில் அணியும் அணிகலன்) ஸ்ரீசக்ரம் போல் உருவாக்கி அம்பாளுக்கு பூட்டி விட்டார். பின்னர் அம்பாள் சாந்தமானாள். 
உக்கிரமான அம்மாவை பிள்ளைகளான விநாயகர், முருகன் இருவரும் சாந்தப்படுத்தும் வகையில், அம்பாளுக்கு எதிரே விநாயகரையும், பின்புறம் முருகனையும் சங்கரர் பிரதிஷ்டை செய்தார்.

கோச்செங்கட்சோழன் சிறப்பு: கைலாயத்தில் சிவனுக்கு சேவை செய்த சிவகணங்களான புட்பதந்தன், மாலியவான் என்னும் இருவர் தங்களில் யார் அதிகமாக சேவை செய்கிறார்கள் என்பதில் போட்டி வந்தது.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் இதுவே பிரச்னையாகி, ஒருவரையொருவர் சிலந்தியாகவும், யானையாகவும் பிறக்கும்படி சபித்துக் கொண்டனர். இதனால் மாலியவான் சிலந்தியாகவும், புட்பதந்தன் யானையாகவும் பிறந்தனர். இவ்விருவரும் இத்தலத்தில் சிவனை வழிபட்டனர். இதிலும் இவர்களிருவருக்கும் போட்டி உண்டானது.
இதில் சிலந்தி, யானையில் தும்பிக்கைக்குள் புகுந்தது. இதில் சிவன், யானைக்கு மட்டும் முக்தி கொடுத்தார். சிலந்தி, யானையைக் கொல்ல முயன்றதற்காக மீண்டும் பிறக்கும்படி செய்தார்.
சிலந்தி, சோழ மன்னர் சுபவேதர், கமலாவதியின் மகனாகப் பிறந்தது. இவரே, கோச்செங்கட்சோழ மன்னர் ஆவார். இம்மன்னரே தனது முற்பிறவிப் பயனால், யானைகள் புக முடியாதபடி சிவனுக்கு மாடக்கோயில்கள் கட்டினார். இக்கோயிலையும் யானை புகாதபடி திருப்பணி செய்தார். இம்மன்னனுக்கு இங்கு சன்னதி இருக்கிறது.

திருக்கல்யாணம் இங்கில்லை!: இக்கோயிலில் திருக்கல்யாணம் நடப்பதில்லை. சிவனை வேண்டி அம்பாள் தவமிருந்தபோது, அவளுக்கு சிவன் காட்சி கொடுத்தார். ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனவே, இங்கு சுவாமிக்கு திருக்கல்யாணம், பள்ளியறை பூஜை கிடையாது. ஆனால், பள்ளியறை இருக்கிறது.
இந்த பள்ளியறைக்கு இங்கு அருள்பாலிக்கும் சொக்கநாதர், மீனாட்சியே செல்கின்றனர். சிவன், அம்பாள் மட்டுமின்றி இங்குள்ள வேறு சுவாமிகளுக்கும் திருக்கல்யாணம் நடப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி தரும் அம்பிகை: வேதியர் ஒருவர் கவி இயற்றுவதில் வல்லமை பெற, அகிலாண்டேஸ்வரியை வேண்டினார். அவருக்கு அருள அம்பாள், வெற்றிலை (தாம்பூலம்) போட்டபடியே சென்றாள். வேதியரிடம், ""நான் வெற்றிலை  போட்டுள்ளேன். கோயிலுக்குள் உமிழ்வது தவறு. எனவே, உம் வாயைத் திறக்கிறீரா? உமிழ்ந்துகொள்கிறேன்,'' என்றாள். கோபமடைந்த வேதியர் அவளை விரட்டிவிட்டார். அதே நாளில் கோயிலுக்கு வரதர் என்ற பக்தர் வந்திருந்தார். அவர் கோயில்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடையவர். ""கோயில் பாழ்படாமல் இருக்க, எந்த தியாகத்தையும் செய்வேன், பெண்ணே! தாராளமாக என் வாயில் உமிழ்ந்து கொள்,'' என்றார். அம்பாளும் அப்படியே செய்ய, அவர் பிரபலமான கவியானார். அவரே காளமேகப் புலவர் என பிற்காலத்தில் அழைக்கப்பட்டார்.
இந்த நிகழ்வின் அடிப்படையில், சிறந்த கல்வியறிவு, கலைஞானம் பெற அம்பாளுக்கு தாம்பூலம் படைத்து வழிபடுகின்றனர்.

முருகன் பாதத்தில் அசுரன்: முருகப்பெருமான் ஆங்கார கோலத்தில், ஜம்பு தீர்த்தக்கரையில் இருக்கிறார். இங்கு வந்த அருணகிரியார், தனக்கு காமம் என்னும் எதிரியால் தொந்தரவு உண்டாகக்கூடாது என்று முருகனிடம் வேண்டிக்கொண்டார்.
முருகனும், காமத்தை அசுரத்தன்மைக்கு ஒப்பிடும் வகையில், ஒரு அசுரனாக்கி, காலின் அடியில் போட்டு அடக்கிய நிலையில் காட்சி தருகிறார். முருகனின் இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம்.

தல வரலாறு:
சிவன் கட்டளைக்காக அம்பிகை, பூலோகத்தில் மானிடப்பெண்ணாக பிறந்தாள். இங்கு காவிரி நீரில் லிங்கம் பிடித்து வழிபட்டாள். சிவன் அந்த லிங்கத்தில் எழுந்தருளி அவளுக்குக் காட்சி தந்தார்.
அம்பிகையால் நீரில் லிங்கம் உருவாக்கப்பட்ட தலம் என்பதால் இது, பஞ்ச பூத தலங்களில் "நீர்' தலமானது. பிற்காலத்தில் ஜம்பு என்னும் முனிவர் சிவனை வேண்டி இங்கு தவமிருந்தார்.
சிவன் அவருக்கு காட்சி கொடுத்து, நாவல் பழ பிரசாதம் கொடுத்தார். பழத்தை உண்ட முனிவர், அதன் புனிதம் கருதி விதையையும் விழுங்கி விட்டார். அவர் விழுங்கிய விதை வயிற்றுக்குள் முளைத்து, தலைக்கு மேலாக மரமாக வளர்ந்தது. அவர் சிரசு வெடித்து முக்தி பெற்றார்.
நாவல் மரத்துக்கு "ஜம்பு' என்றும் பெயருண்டு. அம்பிகையால் அமைக்கப்பட்ட நீர் லிங்கம் இந்த மரத்தின் கீழ் அமைந்தது. பக்தராகிய ஜம்புவுக்கு முக்தி தந்தததால், சுவாமி "ஜம்புகேஸ்வரர்' என பெயர் பெற்றார்.

கணவன், மனைவியருக்குள் ஒற்றுமை அதிகரிக்க, கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவர் அமைய, விவசாயம் செழிக்க, தண்ணீர் பஞ்சம் ஏற்படாதிருக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.  சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்வித்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

போன்: +91-431- 2230 257.




Panchavarneeswarar temple at Tiruchirappalli (Uraiyur) (Paadal Petra Stalam)

அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:பஞ்சவர்ணேஸ்வரர், திரு மூக்கிச்சுரத்தடிகள்,
அம்மன்:காந்திமதியம்மை.
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர் , அப்பர்
தேவாரப்பதிகம் 
நீருளாரும் மலர் மேலுறை வான்நெடு மாலுமாய்ச் சீருளாரும் கழல் தேடமெய்த் தீத்திரள் ஆயினான் சீரினால் அங்கொளிர் தென்னவன் செம்பின் வில்லவன் சேரும் மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்றது ஓர்செம்மையே.
-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 5வது தலம். 

தல சிறப்பு:இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தங்கம், வெண்மை, செம்மை, கருமை, புகைமை ஆகிய ஐந்து நிறங்களை இச்சிவலிங்கம் பிரம்மனுக்கு காட்டியதால் இவருக்கு ஐவண்ணப்பெருமான் என்ற திருநாமமும் உண்டு. ஒவ்வொரு கால பூஜைக்கும் இறைவன் ஒவ்வொரு நிறமாக மாறுவதை இப்போதும் நாம் காணலாம். இந்த உலகில் எந்த இடத்தில் சிவபூஜை செய்தாலும், சிவ தரிசனம் செய்தாலும் அவையனைத்தும் இங்கு வந்து தான் உறையும் என்பதால் இத்தலம் "உறையூர்' எனப்பட்டது.

வழிபட்டோர்: கருடன், காசிபர் மனைவி கத்துரு, மற்றும் அவர்கள் மகன் கார்கோடன் வழிபட்டுள்ளனர்.

தலபெருமை:ஒருமுறை நாத்திகன் ஒருவன் கோயிலில் தரப்பட்ட திருநீறை அணிந்து கொள்ளாமல் உதாசீனம் செய்தான். இதற்காக மறுபிறவியில் பன்றியாக பிறந்து சேற்றில் உழன்றான். தன் முந்தைய பிறவி தவறை நினைத்து வருந்தினான். சிவனை வணங்கி, இங்குள்ள சிவதீர்த்தத்தில் நீராடி பாவ விமோசனம் பெற்றான். இங்குள்ள காந்திமதி அம்மன் நாகலோகத்தில் நாககன்னியரால் பூஜிக்கப்பட்டு சோழமன்னனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

பஞ்சவர்ணேஸ்வரர் பெயர்க் காரணம்: உறையூர் வந்த பிரம்மா, இத்தலத்து சிவனை வணங்கினார். அப்போது சிவன் தன்னிடம் இருந்து பொன்மை (தங்கநிறம்), வெண்மை, செம்மை (சிவப்பு), கருமை, புகைமை (புகை நிறம்) ஆகிய ஐந்து நிறங்களை வெளிப்படுத்தினார். பொன்மை நிறத்திலிருந்து மண்ணும், வெண்மை நிறத்திலிருந்து தண்ணீரும், செம்மையிலிருந்து நெருப்பும், கருமையிலிருந்து காற்றும். புகை நிறத்திலிருந்து ஆகாயமும் வெளிப்படும் என்று அவரிடம் கூறினார். நீராக திருவானைக்காவலும், நிலமாக காஞ்சிபுரத்திலும், நெருப்பாக திருவண்ணாமலையிலும், காற்றாக காளஹஸ்தியிலும், ஆகாயமாக சிதம்பரத்திலும் காட்சியளித்து அருள்புரியும்சிவபெருமான், ஐந்து பூதங்களையும் ஒன்றாக உ<ள்ளடக்கி இங்கே <உறைவதால் (வசிப்பதால்) ஊருக்கு உறையூர் என்றும், சுவாமிக்கு பஞ்சவர்ணேஸ்வரர் என்றும் பெயர் ஏற்பட்டது. "நிறங்கள் ஓர் ஐந்துடையாய்' என்று இவரைப் பற்றியே மாணிக்கவாசகர் திருவாசகத்தில் பாடியுள்ளது குறிப் பிடத்தக்கது.

உதங்க முனிவர்: இத்தலத்துக்கு வேதம், ஆகமம், புராணங்களில் வல்லவராக விளங்கிய உதங்க முனிவர் என்பவர், தன் மனைவி பிரபையுடன் கங்கையில் நீராடியபோது அவளை ஒரு முதலை இழுத்துச் சென்று சின்னாபின்னப்படுத்தியது. வாழ்வின் நிலையை உணர்ந்த முனிவர் என்றாலும் கூட, அவரது மனம் இந்நிகழ்ச்சியால் அலைந்து தத்தளித்தது. மனநிம்மதிக்காக அவர் உறையூர் வந்து சிவனை வழிபட்டார். காலை வழிபாட்டில் ரத்தினலிங்கமாகவும், உச்சிக்காலவழிபாட்டில் ஸ்படிக லிங்கமாகவும், மாலை வழிபாட்டில் பொன் லிங்கமாகவும், முதல் ஜாம வழிபாட்டில் வைர லிங்கமாகவும், அர்த்த ஜாம வழிபாட்டில் சித்திரலிங்கமாகவும் சிவன் அவருக்கு காட்சியளித்தார். இதனாலும் அவர் பஞ்சவர்ணேஸ்வரர் எனப்பட்டார். இதனால் அவரது மனம் அடங்கி அமைதியானது. ஞான அனுபவம் பெற்று முக்தியடைந்தார்.ஆடிப்பவுர்ணமியில் உதங்க முனிவருக்கு ஐந்து வண்ணம் காட்டியதாக வரலாறு என்பதால் அன்று இறைவனை தரிசிப்பது சிறப்பாக கருதப்படுகிறது.

தோஷ நிவர்த்தி: பைரவர், சனிபகவான், சூரியன் ஒரே சன்னதியில் வீற்றிருப்பதால் கிரக தோஷ நிவர்த்திக்கு ஏற்ற தலமாகும். தேய் பிறை, அஷ்டமி திதிகளில் பைரவருக்கு அபிஷேகம் நடக்கிறது. <<<உலகில் எவ்விடத்தில் சிவபூஜை, சிவதரிசனம் செய்தாலும் இத்தலத்து இறைவனை வந்தடையும் என்பது ஐதீகம். சாபம், பாவம், தோஷம் ஆகியவற்றிலிருந்து நிவர்த்தி தருபவராக சுவாமி உள்ளார். இங்கு அம்பாள் காந்திமதி மற்றும் பஞ்சமுக விநாயகரும் தரிசனம் தருகின்றனர்.

இக்கோயில் வரலாற்றுடன் சேவலுக்கு தொடர்பு இருப்பதால் இப்பகுதியினர் சேவலுக்கு மிகுந்த மரியாதை அளித்து வருகின்றனர்.
எதிரி யானை அளவு பலம் பெற்றிருந்தாலும் இந்த இறைவனின் கருணை இருந்தால் அவனை வென்றிடலாம். இத்தல முருகனை குறித்து அருணகிரிநாதர் பாடியுள்ளார்.

தல வரலாறு:சோழஅரசர் ஒருவர் யானை மேல் உலா வந்த போது யானைக்கு மதம் பிடித்தது. அரசனும், பாகனும் செய்வதறியாது திகைத்தனர். அப்போது கோழி ஒன்று தன் குரலெழுப்பி வந்து, பட்டத்து யானையின் மத்தகத்தின் மேல் தன் மூக்கினால் கொத்தியதும், மதம் அடங்கிய யானை பழைய நிலையை அடைந்தது. யானையை அடக்கிய கோழி ஒரு வில்வ மரத்தடியில் சென்று மறைந்தது. அந்த இடத்தை தோண்டி பார்த்த போது சிவலிங்கம் இருக்கக் கண்ட மன்னன், சிவனே தன்னையும், மக்களையும் யானையிடம் இருந்து காப்பாற்றியதாகக் கருதி அவருக்கு கோயில் எழுப்பினான். சிவனுக்கு பஞ்சவர்ணேஸ்வரர் என்று பெயர் சூட்டினான். பலம் வாய்ந்தவர்கள் துன்புறுத்தும் போது, யானையை கோழி அடக்கியது போல, அவர்களை அடக்கும் பலத்தை இத்தலத்து பஞ்சவர்ணேஸ்வரர் தருகிறார். இத்தலத்தில் வழிபடுபவர்களுக்கு மறுபிறப்பில்லை என்பதால் "திருமூக்கீச்சுரம்' என்று பெயர் ஏற்பட்டது.

கார்கோடனாகிய பாம்பும், கருடனும் இங்குள்ள ஈசனை வழிபட்டுள்ளதால், நமக்கு ஏற்பட்ட எப்படிப்பட்ட தோஷமாக இருந்தாலும் நிவர்த்தியாகிவிடும்.
படைப்பின் நாயகன் பிரம்மனே இங்கு வந்து பூஜித்துள்ளதால் நாம் செய்யும் எந்த தொழிலாக இருந்தாலும் வெற்றி நிச்சயம் 

போன்: +91- 431-276 8546, 94439-19091, 97918 06457