Thursday, November 10, 2011

Prana Nathar Temple at Tirumangalakkudi near Kumbakonam (Paadal Petra Stalam)

அருள்மிகு பிராணநாதேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:பிராணநாதேசுவரர்
அம்மன்: மங்களாம்பிகை
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
தேவாரப்பதிகம்
பொலியும் மால்வரை புக்கெடுத் தான்புகழ்ந்து ஏத்திட வலியும் வாளொடு நாள்கொடுத்தான் மங்கலக்குடிப் புலியின் ஆடையின் னானடி ஏத்திடும் புண்ணியர் மலியும் வானுலகம் புகவல்லவர் காண்மினே.
-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 38வது தலம். 

தல சிறப்பு:ங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக கோயில்களில் சிவலிங்கத்தில், ஆவுடையாரை விட சற்று உயரம் குறைந்ததாகத்தான் பாணம் இருக்கும். ஆனால் இக்கோயிலில் பாணம், ஆவுடையாரைவிட உயர்ந்ததாக இருக்கிறது. இரவில் திருக்கல்யாணம் : மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் போன்ற கோயில்களில் காலையில் திருக்கல்யாணம் நடந்து, மதிய வேளையில் திருக்கல்யாண விருந்து வைக்கப்படும். ஆனால், இக்கோயிலில் இரவில்தான் திருக்கல்யாணம் நடக்கிறது. பங்குனியில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தின் ஏழாம் நாளன்று திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு மேல் மாப்பிள்ளை அழைப்பு, சுவாமி, அம்பாள் மாலை மாற்றும் வைபவமும், ஊஞ்சல் காட்சியும் நடக்கிறது. இரவு 9 மணியளவில் சுவாமி, அம்பிகை திருக்கல்யாணமும், அதன்பின் திருமண விருந்தும் நடக்கும்.

தலபெருமை:பஞ்ச மங்கள ஷேத்திரம் :  இத்தலம் பஞ்ச மங்கள ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
1. இந்த ஊரின் பெயர் மங்கலக்குடி, 2. அம்பாள் பெயர் மங்களாம்பிகை, 3. இக்கோயில் விமானம் மங்கள விமானம் 4. இத்தலத்தின் தீர்த்தத்தின் பெயர் மங்கள தீர்த்தம், 5. இத்தலத்து விநாயகர் பெயர் மங்கள விநாயகர் என்பதால் இத்தலம் மங்களமே உருவாக இருப்பதால் மங்கள ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
கிரகங்கள் வழிபட்ட சிவன் : ஒருசமயம் காலமாமுனிவருக்கு உண்டாகவிருந்த நோயை நவக்கிரகங்கள் தடுத்ததால், அந்நோய் கிரகங்களுக்கு பிடிக்கும்படி பிரம்மா சாபம் கொடுத்தார். எனவே, அவர்கள் பூலோகத்தில் இத்தலம் வந்து சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருந்த சிவனை வேண்டி, தவமிருந்து சாபவிமோசனம் பெற்றனர். இவ்வாறு கிரகங்களின் தோஷம் போக்கிய சிவனாக, இத்தலத்தில் சிவன் அருளுகிறார்.
நின்ற லிங்கம் : பொதுவாக கோயில்களில் சிவலிங்கத்தில், ஆவுடையாரை விட சற்று உயரம் குறைந்ததாகத்தான் பாணம் இருக்கும். ஆனால் இக்கோயிலில் பாணம், ஆவுடையாரைவிட உயர்ந்ததாக இருக்கிறது.  அகத்தியர் இத்தலத்திற்கு வந்தபோது அவருக்கு சுவாமி உயர்ந்தவராக காட்சி தந்தாராம். இதன் அடிப்படையில் பாணம் மட்டும் பெரிதாக இருப்பதாக சொல்கிறார்கள். குள்ள முனிவரான அகத்தியர், சுவாமியின் பாணத்தின் மீது தன் கையை உயர்த்திதான் மலர் வைத்து பூஜித்தாராம். முதல்கோயில் : கிரகங்கள் வழிபட்ட இத்தலத்தில், நவக்கிரகத்திற்கு சன்னதி கிடையாது. இங்கிருந்து சற்று தூரத்தில், நவக்கிரக திசையான வடகிழக்கில் கிரகங்களுக்கென தனிக்கோயிலே (சூரியனார் கோயில்) அமைந்திருக்கிறது. மொத்தத்தில் ஒரே கோயிலே, இவ்வாறு இரட்டைக்கோயிலாக தனித்தனியே, அமைந்திருக்கிறது.இதில் பிராணநாதர் கோயிலே பிரதான கோயில் ஆகும். கிரக தோஷமுள்ளவர்கள் முதலில் பிராணநாதரை வழிபட்டு, அதன்பின்பே சூரியனார் கோயிலில் வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.
எருக்கு இலையில் தயிர் சாத பிரசாதம் : நவக்கிரகங்கள் இங்கு சிவனுக்கு எருக்க இலையில் தயிர் சாத நைவேத்யம் படைத்து வழிபட்டதாக ஐதீகம். எனவே, இக்கோயிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உச்சிகால பூஜையின்போது, உப்பில்லாத தயிர் சாதத்தை சுவாமிக்கு நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றனர். பித்ரு தோஷம் (முன்னோர்களுக்கு முறையான தர்ப்பணம் போன்ற சடங்குகள் செய்யாதவர்கள்) உள்ளவர்கள் சுவாமிக்கு தயிர்சாத நைவேத்யம் படைத்து வழிபடுகிறார்கள். மரகதலிங்கம் : நடராஜர் சன்னதியில் மரகதலிங்கம் ஒன்று இருக்கிறது. தினமும் உச்சிக்காலத்தில் மட்டும் இதற்கு பூஜைகள் செய்கின்றனர். அப்போது வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு நைவேத்யம் படைத்து, வலம்புரி சங்கில் பால், பன்னீர், தேன், சந்தனம் ஆகிய நான்கு திரவிய அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேக தீர்த்தத்தை பருகினால் நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.
தாலி தரும் தாய் : அம்பிகை மங்களாம்பிகை தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி அருளுகிறாள். இவளே இங்கு வரப்பிரசாதியாவாள். இவளது பெயரிலேயே கோயிலும் அழைக்கப்படுகிறது. அம்பிகையின் வலது கையில் எப்போதும் தாலிக்கயிறு அணிவிக்கப்பட்டிருக்கிறது. அம்பிகையை வழிபடும் பெண்களுக்கு, இதையே பிரசாதமாக கொடுக்கின்றனர். இதனால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் அமையும், திருமணமான பெண்கள் நீண்டகாலம் தீர்க்கசுமங்கலியாக வாழ்வர் என்பது நம்பிக்கை. இந்த அம்பிகை தன்னை வேண்டுபவர்களுக்கு தாலி தரும் தாயாக இருந்து  அருளுகிறாள். சுமங்கலிப்பெண்கள், அம்பிகையிடம் இருந்து தாலியை வாங்கி தங்கள் கழுத்தில் அணிந்து கொண்டு, ஏற்கனவே அணிந்திருக்கும் தாலியை அம்பாள் பாதத்தில் வைத்து பூஜை செய்கின்றனர். இதனால் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. சந்தன அலங்காரம் : நவராத்திரியின்போது கோயில்களில் அம்பாள் உற்சவர் சிலைக்கு ஒவ்வொருநாளும் ஒவ்வொரு அலங்காரங்கள் செய்வர். ஆனால், இங்கு மூலஸ்தானத்தில் இருக்கும் அம்பிகைக்கே அலங்காரம் செய்யப்படுகிறது. அப்போது இவளது சிலைக்கு வஸ்திரம், ஆபரணங்கள் என எதுவும் சாத்தப்படாமல் சந்தனக்காப்பு மட்டும் செய்யப்படுகிறது. அந்த சந்தனத்திலேயே பட்டுத்துணிகளுக்கு பயன்படுத்தப்படும் வண்ண சாயங்களை சேர்த்து வஸ்திரம் மற்றும் ஆபரணங்கள் அணிந்ததைப்போல அலங்கரிக்கின்றனர். சந்தனத்திலேயே, இவ்வாறு அம்பிகை சர்வ அலங்காரத்துடன் காட்சி தருவதை காண கண் கோடி வேண்டும். ஒவ்வொரு வருடமும் தை மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையன்று முழுதும் அம்பிகையை சந்தனக்காப்பு அலங்காரத்தில் தரிசிக்கலாம். விசேஷ நாட்கள் தவிர மற்ற நாட்களில் பக்தர்கள் இந்த அலங்காரம் செய்யலாம்.

தல வரலாறு:பதினோறாம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரியாக இருந்த அலைவாணர் என்ற மந்திரி மன்னனிடம் அனுமதி பெறாமல் வரிப்பணத்தில் இக்கோயிலை கட்டினார்.
இதை அறிந்த மன்னன் கோபம் கொண்டு மந்திரியை சிரச் சேதம் செய்ய உத்தரவிட்டார்.  கொலையுண்ட மந்திரி தன்னை திருமங்கலக்குடியில் தகனம் செய்யுமாறு ஏற்கனவே கூறியிருந்ததால் அவரது உடல் திருமங்கலக்குடிக்கு எடுத்து வரப்பட்டது.
ஊரின் எல்லைக்கு வரும்போது மந்திரியின் மனைவி மங்களாம்பிகை கோயிலில் சென்று தனது கணவரின் உயிரை திரும்பத்தருமாறு வேண்டினார்.அவளது பிரார்த்தனை பலிக்கும் என்று அசரீரி கேட்டது.அதுபடி மந்திரி உயிர் திரும்பபெற்றார். மகிழ்ச்சியில் கோயிலுக்குள் சென்று பிராணநாதேசுவரரை கட்டிப்பிடித்து ஜீவதாயகன் என்று கூறி பூஜித்தார். அன்று முதல் இங்குள்ள பிம்பமானது பிராணநாதேசுவரன் (ஜீவதாயகன்)என்ற பெயரால் அழைக்கப்பெற்றார். கணவர் உயிரை தந்த அம்பாள் மங்களாம்பிகை என்றழைக்கப்பட்டாள்.
இங்கு வந்து வழிபடும் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் உண்டாக வேண்டும் என்று மந்திரியும் மனைவியும் வேண்டிக்கொள்ள அதுபடியே சுவாமியும் அம்பாளும் அருளியதாக வரலாறு கூறுகிறது.

No comments:

Post a Comment