Friday, November 11, 2011

Karkatakeswarar Temple at Tirundudevankudi near Kumbakonam (Paadal Petra Stalam)

அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:கற்கடேஸ்வரர்
அம்மன்: அபூர்வநாயகி, அருமருந்துநாயகி
பாடியவர்கள்: சம்பந்தர்
தேவாரப்பதிகம்
மருந்துவேண் டில்லிவை மந்திரங் கள்ளிவை புரிந்துகேட் கப்படும் புண்ணியங் கள்ளிவை திருந்துதே வன்குடித் தேவர்தே வெய்திய அருந்தவத் தோர்தொழும் அடிகள் வேடங்களே.
 -திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 42வது தலம்.

தல சிறப்பு:இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். பொதுவாக கோயில்களில் ஒரு அம்பாள் மட்டுமே இருப்பாள். ஆனால் இங்கு இரண்டு அம்பிகையர் அடுத்தடுத்த சன்னதிகளில் காட்சி தருகிறன்றனர். சுவாமியின் திருமேனியில் நண்டு ஐக்கியமான துளையும், இந்திரனால் வெட்டுப்பட்ட காயமும் இருக்கிறது.

இத்தலவிநாயகர் கற்கடக விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், சுதை வடிவில் நடராஜர் இருக்கின்றனர். நவக்கிரக சன்னதி கிடையாது.
சிவனை வணங்கிய இந்திரன் தவறை உணர்ந்து திருந்தியதால் இத்தலம், "திருந்துதேவன்குடி' என்றழைக்கப்படுகிறது. இப்பெயரைச் சொன்னால் உள்ளூர்வாசிகளுக்கு தெரிவதில்லை. "நண்டு கோயில்' என்றுதான் இப்பகுதி மக்கள் சொல்கிறார்கள்.

தலபெருமை:
பிணி நீக்கும் சிவன்: காலவெள்ளத்தில் இவ்விடத்தில் சுயம்புலிங்கம் மண்ணிற்குள் மறைந்தது. ஒருசமயம் இப்பகுதியை சோழ மன்னன் ஒருவன் ஆட்சி செய்து வந்தான். ஒருசமயம் அவனுக்கு வாதநோய் உண்டானது. பல வைத்தியங்கள் பார்த்தும் நோய் குணமாகவில்லை. சிவபக்தனான அம்மன்னன், நோய் தீர அருளும்படி சிவனிடம் வேண்டினான். ஒருசமயம் வயதான மருத்துவ தம்பதியர் அவனது அரசவைக்கு வந்தனர். மன்னனிடம் சென்ற அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த விபூதியை, தீர்த்தத்தில் கரைத்து கொடுத்தனர். அந்த மருந்தை சாப்பிட்ட உடனே மன்னன் நோய் நீங்கி எழுந்தான். மருத்துவ தம்பதியரை தனது அரசவையில் ராஜ வைத்தியராக தங்கும்படி வேண்டினான். அவர்கள் கேட்காமல் கிளம்புவதாக கூறினர். எனவே மன்னன் அவர்களுக்கு பொன்னும், பொருளும் பரிசாக கொடுக்க எடுத்து வந்தான். அதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வியந்த மன்னன் அவர்களிடம், "தாங்கள் விரும்புவது எதுவாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள். அதை நிறைவேற்றி வைப்பது என் கடமை!' என்றான். பின்னர் அவர்கள் இவ்விடத்திற்கு அழைத்து வந்து சுவாமி இருந்த இடத்தில் கோயில் எழுப்பும்படி கூறினர். மன்னனும் ஒப்புக்கொண்டான். அப்போது லிங்கத்தின் அருகில் சென்ற இருவரும், அதனுள் ஐக்கியமாயினர்.

அதன்பின்பு வந்தது சிவ, பார்வதி என உணர்ந்த மன்னன் இவ்விடத்தில் கோயில் எழுப்பினான். இவரிடம் வேண்டிக்கொள்ள பிணிகள் நீங்கும் என்பது நம்பிக்கை. சம்பந்தர் இவரை "பிணி நீங்கும் சிவன்' என்று பதிகம் பாடியுள்ளார்.

இரட்டை அம்பிகையர் தலம்: பொதுவாக கோயில்களில் ஒரு அம்பாள் மட்டுமே இருப்பாள். ஆனால் இங்கு இரண்டு அம்பிகையர் அடுத்தடுத்த சன்னதிகளில் காட்சி தருகிறன்றனர். மன்னன் இவ்விடத்தில் கோயில் எழுப்பியபோது, ஏற்கனவே இங்கிருந்த அம்பிகையை காணவில்லை. எனவே புதிதாக ஒரு அம்பிகையை பிரதிஷ்டை செய்தான். மருத்துவர் வடிவில் வந்து அருளியவள் என்பதால், "அருமருந்து நாயகி' என்று பெயர் சூட்டினான். ஆனால் சிறிது நாட்களிலேயே தொலைந்த அம்பிகை சிலை கிடைத்தது. அதனையும் இங்கு பிரதிஷ்டை செய்தான் மன்னன். இவள் அபூர்வநாயகி என்று அழைக்கப்பட்டாள். இவளே இங்கு பிரதான அம்பிகையாக கருதப்படுகிறாள்.

யோக சந்திரன்: புனர்பூசம், பூசம், ஆயில்ய நட்சத்திரம் மற்றும் கடக ராசிக்காரர்களுக்கான பரிகார தலம் இது. சுவாமியின் திருமேனியில் நண்டு ஐக்கியமான துளையும், இந்திரனால் வெட்டுப்பட்ட காயமும் இருக்கிறது.

கோயில் நுழைவுவாயில் சந்திரன் சன்னதி உள்ளது. இவர் யோக நிலையில், "யோக சந்திரனாக' காட்சி தருகிறார். ஜாதகத்தில் சந்திர தசை உள்ளவர்கள் இவருக்கு வெண்ணிற வஸ்திரம் சாத்தி வழிபட்டால், தோஷம் நீங்குவதாக நம்பிக்கை.

தல வரலாறு:ஒரு சமயம் துர்வாச மகரிஷி, சிவபூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற ஒரு கந்தர்வன் துர்வாசரின் முதிய தோற்றத்தைக் கண்டு பரிகாசம் செய்தான். அவரது பூஜை கலையும் விதமாக கை தட்டி அழைத்தான். ஆனாலும் துர்வாசர் திரும்பவில்லை. கந்தர்வனோ விடுவதாக இல்லை. நண்டு போல நடந்து காட்டி அவரை மேலும் கேலி செய்தான்.
கோபம் கொண்ட துர்வாசர், அவனை நண்டாக பிறக்கும்படி சபித்துவிட்டார். வருந்திய கந்தர்வன் மன்னிப்பு வேண்டினான். சிவலிங்க பூஜை செய்து வழிபட்டால், விமோசனம் கிடைக்கும் என்றார். அதன்படி நண்டு வடிவில் இத்தலம் வந்த கந்தர்வன், சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளியிருப்பதைக் கண்டான்.
தினமும் அருகிலுள்ள புஷ்கரிணியில் மலர் பறித்து, சுவாமிக்கு படைத்து வழிபட்டு வந்தான். இதனிடையே, அசுரர்களை அழிக்கும் சக்தி வேண்டி இந்திரன், தன் குருவின் ஆலோசனைப்படி இங்கு சிவபூஜை செய்ய வந்தான். இங்கிருந்த புஷ்கரிணியில் தினமும் 1008 மலர் பறித்து சிவலிங்கத்திற்கு படைத்து பூஜித்து வந்தான். நண்டு வடிவில் வந்த கந்தர்வன் சிவனுக்கு மலர் படைக்கவே, தினமும் இந்திரனின் பூஜையில் ஒரு மலர் குறைந்தது.
இந்திரனுக்கு காரணம் புரியவில்லை. ஒருசமயம் நண்டு பூஜை செய்வதை  பார்த்துவிட்டான். தான் பூஜை செய்யும் லிங்கத்தை பூஜிக்கும் தகுதி பிறருக்கு கிடையாது என ஆணவம் கொண்ட அவன், நண்டை கொல்ல முயன்றான். நண்டு, சிவபூஜைக்காக லிங்கத்தின் பாணம் மீது ஏறியபோது, வாளால் வெட்ட முயன்றான். அப்போது சிவன், லிங்கத்திற்குள் துளை ஏற்படுத்திக் கொடுக்கவே, கந்தர்வன் அதற்குள் புகுந்து விமோசனம் பெற்றான். அப்போது இந்திரனின் வாள், லிங்கத்தின் மீது பட்டு காயம் உண்டானது. தவறை உணர்ந்த இந்திரன் மன்னிப்பு வேண்டினான். சிவன் அவனை மன்னித்ததோடு, ""ஆணவத்துடன் இருப்பவர்களால் ஒரு செயலிலும் வெற்றி பெற முடியாது. பணிவு குணமே நன்மை தரும்,'' என்று அறிவுறுத்தி காட்சி தந்தார். கற்கடகத்திற்கு (நண்டு) விமோசனம் தந்தவர் என்பதால் இவர், "கற்கடேஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.

கிரக தோஷங்கள் நிவர்த்தியாக கற்டேஸ்வரருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். இந்த எண்ணெயை உண்டகொண்டால் நோய் நீங்குவதாகவும் நம்பிக்கை இருக்கிறது.

போன்:+91- 435 - 2000 240, 99940 15871

No comments:

Post a Comment