Wednesday, November 9, 2011

Neelakantar Temple at Iluppaippattu (Tiruppunkur, Vaideeswaran Kovil) near Chidambaram (Paadal Petra Stalam)

அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:திருநீலகண்டேஸ்வரர், படிகரைநாதர்
அம்மன்: அமிர்தவல்லி, மங்களாம்பிகை,
பாடியவர்கள்:சுந்தரர்
தேவாரப்பதிகம்
உங்கைகளாற் கூப்பி உகந்தேத்தித் தொழுமின் தொண்டீர் மங்கையொர் கூறுடையான் வானோர் முதலாய பிரான் அங்கையில் வெண்மழுவன் அலையார்கதிர் மூவிலைய பங்கைய பாதனிடம் பழமண்ணிப் படிக்கரையே
-சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில்இது 30வது தலம். 

தல சிறப்பு:இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு தர்மன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட பஞ்சலிங்கங்கள் உள்ளது.

தலபெருமை:கணவனை காத்த அம்பாள்: பாற்கடலை கடைந்தபோது, வாசுகி பாம்பு களைப்பில் விஷத்தை கக்கியது. தேவர்களை காப்பதற்காக விஷத்தை சிவன் விழுங்கினார்.
அவ்விஷம், சிவனின் உடம்பில் சேராமல் இருப்பதற்காக அம்பாள், சிவனுக்கு பின்புறமாக இருந்து அவரது கண்டத்தை (தொண்டைக்குழி) பிடித்து நிறுத்தினாள். விஷம் கழுத்திலேயே தங்கியது.
இதன் அடிப்படையில் இத்தலத்தில் சிவன் சன்னதிக்கு பின்புறம் அமிர்தவல்லிக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. அமிர்தத்தில் கலந்திருந்த விஷத்தை நிறுத்தியவள் என்பதால் இப்பெயரில் அழைக்கப்படுகிறாள்.
கணவனை காத்த அம்பாள் என்பதால் இவளிடம் வேண்டிக்கொண்டால் பெண்களுக்கு கணவன் மீது பாசம் அதிகரிக்கும், தீர்க்க சுமங்கலிகளாக வாழலாம் என்பது நம்பிக்கை. இவள் தன் இடது கையால் பாதத்தை காட்டியபடி அருளுவது சிறப்பு.
 
பஞ்சலிங்க தலம்: பொதுவாக சிவன் கோயில்களில் ஒரு மூலவர் மட்டுமே இருப்பார். அரிதாக சில தலங்களில் இரண்டு மூலவர்கள் இருப்பர். ஆனால், இங்கு ஐந்து சிவன் தனித்தனி சன்னதிகளில் இருக்கிறார். தர்மர் வழிபட்ட சிவன் நீலகண்டேஸ்வரர், அர்ஜுனன் வழிபட்ட சிவன் படிகரைநாதர், பீமனால்வழிபடப்பட்டவர் மகதீஸ்வரர், நகுலன் வழிபட்டவர் பரமேஸ்வரர், சகாதேவன் வழிபட்டவர் முத்துகிரீஸ்வரர் என்ற பெயர்களில் அருளுகின்றனர். இவர்களில் நீலகண்டேஸ்வரர், படிகரைநாதருக்கு அம்பிகை சன்னதி உண்டு. படிகரைநாதர் சன்னதியிலேயே மங்களாம்பிகை தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். பீமன் வழிபட்ட சிவன், சோடஷலிங்கமாக, 16 பட்டைகளுடன் இருக்கிறார். பதினாறு செல்வமும் பெற இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

நளன் வழிபாடு: ஐந்து மூர்த்திகளும் மூலவராக இருந்தாலும், நீலகண்டேஸ்வரர், படிகரைநாதர் இருவரும் பிரதான மூர்த்திகளாக வணங்கப்படுகின்றனர். இவர்களுக்கு எதிரில் மட்டுமே நந்தி இருக்கிறது. சகாதேவன் வழிபட்ட முத்துகிரீஸ்வரர், தெற்கு நோக்கி இருக்கிறார். சாஸ்திரம், ஜோதிடம் கற்பவர்கள் இவரிடம் வேண்டிக்கொள்கின்றனர்.
சனிபகவானால் பிடிக்கப்பட்ட நளமகாராஜன், ஏழரைச்சனியின் முடிவு காலத்தில் சிவதலங்களுக்கு சென்று தரிசித்து வந்தார். திருக்கடையூர் செல்லும் முன்பு அவர் இத்தலத்தில் பஞ்சலிங்கங்களை தரிசனம் செய்தார். அப்போதே தனக்கு சனியின் ஆதிக்கம் குறைந்திருப்பதை உணர்ந்து கொண்டாராம். எனவே, இங்கு வேண்டிக்கொண்டால் சனியின் ஆதிக்கம் குறையும் என்பது நம்பிக்கை.

தல வரலாறு:பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்தபோது, இங்கு சிலகாலம் தங்கியிருந்தனர். சிவபூஜை செய்ய விரும்பிய அவர்கள், இங்கு தேடிப்பார்த்தும் லிங்கம் லிங்கம் கிடைக்கவில்லை. எனவே, அவர்கள் ஐந்து பேரும் ஒரு இலுப்பை மரத்தின் அடியில், இலுப்பைக்காயில் விளக்கேற்றி சிவனை மானசீகமாக (மனதில் நினைத்து) வணங்கினர்.
சிவன் அவர்கள் ஐந்து பேருக்கும் தனித்தனி மூர்த்தியாக காட்சி தந்தார். அவர்கள் சிவனிடம், தங்களுக்கு அருளியதைப்போலவே இங்கிருந்து அருள் செய்ய வேண்டுமென வேண்டிக்கொண்டனர்.
சிவனும் ஐந்து மூர்த்திகளாக எழுந்தருளினார். தற்போதும் இக்கோயிலில் ஐந்து லிங்கங்கள் தனித்தனி சன்னதியில் இருக்கிறது.

நோய்கள் நீங்குவதற்கு, பணியில் சிறப்பிடம் பெறுவதற்கு இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
பதினாறு பேறுகளும் பெற சோடஷலிங்க சன்னதியில் வழிபடுகிறார்கள். 

போன்: +91-92456 19738.

No comments:

Post a Comment