Wednesday, November 9, 2011

Bhrammapureeswarar Temple at Sirkali near Chidambaram (Paadal Petra Stalam)

அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில்

மூலவர்: சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர்
அம்மன்: பெரியநாயகி, திருநிலைநாயகி
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், கணநாதர், நம்பியாண்டார் நம்பிகள், பட்டினத்தார், சேக்கிழார், அருணாசல கவிராயர், மாரிமுத்தா பிள்ளை, முத்து தாண்டவ தீட்சிதர்
தேவாரப்பதிகம்

1. தோடுடைய செவியன்விடை யேறியோர்
தூவெண் மதிசூடிக்
காடுடைய சுடலைப்பொடி பூசியென்
உள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்து
ஏத்தஅருள் செய்த
பீடுடைய பிரமாபுரமேவிய
பெம்மான்இவன் அன்றே.

தெளிவுரை : தோடு என்னும் அணியை அணிந்துள்ள, உமாதேவியை இடப்பாகம் உடைய சிவபெருமான் இடபவாகனத்தில் ஏறி, தூய வெண்மதியைச் சூடி திருவெண்ணீறு மேனியில் பொலிய என் உள்ளத்தைக் கவர்ந்தவன். அப்பெருமான், ஒரு காலத்தில் நான்முகனுடைய வழிபாட்டினை ஏற்று அருள் செய்தவன். அவனே எனக்குக் காட்சி தந்தருளியவன். அவன் இவனே அல்லவா !

2. முற்றல்ஆமையிள நாகமோடுஏனம்
முளைக்கொம்புஅவை பூண்டு
வற்றலோடுகல னாப்பலி தேர்ந்தெனது
உள்ளம்கவர் கள்வன்
கற்றல்கேட்டல்உடை யார்பெரியார்கழல்
கையால்தொழுது ஏத்தப்
பெற்றம்ஊர்ந்தபிர மாபுரமேவிய
பெம்மான்இவன் அன்றே.

தெளிவுரை : ஆமையோடு, நாகம் முதலானவைகளை ஆபரணமாகக் கொண்டு திருஓடு ஏந்தி பிச்சை கொள்ளும் சிவபெருமான், என் உள்ளத்தைக் கவர்ந்தவன். நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்தவர்களும், கேள்வி ஞானம் பெற்றவர்களும், திருத்தொண்டு செய்யும் பெருமக்களும் கரங்கூப்பி வணங்கி நிற்க இடபவாகனத்தில் காட்சி தரும் பெருமான் இவனல்லவா ?

3. நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர்
நிலாவெண் மதிசூடி
ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன்
உள்ளம்கவர் கள்வன்
ஊர்பரந்தஉல கின்முதலாகிய
ஓரூர்இது என்னப்
பேர்பரந்தபிர மாபுரமேவிய
பெம்மான்இவன் அன்றே.

தெளிவுரை : கங்கை தங்கும் சடையில் குளிர்ந்த வெண்ணிலவைச் சூடி, அழகிய வளைகள் கைகளிலிருந்து நழுவிச் செல்லுமாறு என் உள்ளத்தையும் மேனியையும் உருகச் செய்து கவர்ந்தவன் சிவபெருமான். உலகிலுள்ள ஊர்கள் யாவும் பிரளய காலத்தில் அழிந்தாலும், அழியாது எப்போதும் நிலவும் பிரமபுரத்தில் இருக்கும் பெருமான் இவனல்லவா !

4. விண்மகிழ்ந்தமதில் எய்ததும்அன்றி
விளங்குதலை யோட்டில்
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தெனது
உள்ளம்கவர் கள்வன்
மண்மகிழ்ந்தஅர வம்மலர்க் கொன்றை
மலிந்தவரை மார்பில்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய
பெம்மான்இவன் அன்றே.

தெளிவுரை : வானத்தில் பரந்து சென்று துன்புறுத்தும் தன்மையில் மகிழ்ச்சி கொண்ட முப்புரக் கோட்டைகளை எரித்ததும் அன்றி, பிரமனுடைய கபாலத்தைப் பிச்சைப் பாத்திரமாகக் கொண்டு பிச்சையேற்று என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு, அரவமும் கொன்றை மலரும் மார்பினில் பொலிய உமாதேவியை மகிழ்ந்து இடப்பாகத்தில் வைத்து பிரமாபுரம் மேவிய பெருமான் இவனல்லவா !

5. ஒருமைபெண்மைஉடை யன்சடையன்விடை
ஊரும்இவன் என்ன
அருமையாகஉரை செய்யஅமர்ந்தெனது
உள்ளம்கவர் கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ள மதிந்ததோர்
காலம்இது என்னப்
பெருமைபெற்றபிர மாபுரமேவிய
பெம்மான்இவன் அன்றே.

தெளிவுரை : ஒரே வடிவத்தில் பெண்ணுருவும் ஆணுருவும் கொண்டு இரு உருவங்களைக் காட்டுபவனாகி, சடைமுடியுடன் இடபத்தில் அமரும் சிவபெருமான் அருமையான உரைகளைக் சொல்லும் பொருட்டு எனது உள்ளம் அமர்ந்து என்னைக் கவர்ந்தவன். ஊழிக் காலத்திலும் அழியாத பெருமையுடைய பிரமாபுரம் மேவிய பெருமான் இவனல்லவா !

6. மறைகலந்தஒலி பாடலோடு ஆடலர்
ஆகிமழு வேந்தி
இறைகலந்தஇன வெள்வளைசோரஎன்
உள்ளம்கவர் கள்வன்
கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர்
சோலைக்கதிர் சிந்தப்
பிறைகலந்தபிர மாபுரமேவிய
பெம்மான்இவன் அன்றே.

தெளிவுரை : வேத ஒலி முழங்க, பாடலுடன் ஆடலும் செய்து மழு ஏந்தி இருப்பவன் ஈசன். அவன் என்னுடைய கைகளில் உள்ள வளைகள் தாமே கழன்று விழும்படி என் உள்ளத்தைக் கவர்ந்து உருகச் செய்தவன். அடர்ந்த சோலைகள் திகழ்ந்து நறுமணம் வீச நிலவின் தன்மையுடைய பிரம்மபுரத்தில் மேவிய பெருமான் இவனல்லவா !

7. சடைமுயங்குபுன லன்அனலன்எரி
வீசிச்சதிர் வெய்த
உடைமுயங்குஅர வோடுஉழிதந்துஎனது
உள்ளம்கவர் கள்வன்
கடல்முயங்குகழி சூழ்குளிர்கானல்அம்
பொன்னஞ்சிறகு அன்னம்
பெடைமுயங்குபிர மாபுரம்மேவிய
பெம்மான்இவன் அன்றே.

தெளிவுரை : சடையில் கங்கையும் கரத்தில் நெருப்பும் ஒளிதந்து பெருமை கொள்ளவும், நாகமானது இறுகப் பற்றி உடலின் மீது திரியவும் காட்சி தந்து என் உள்ளத்தைக் கவர்ந்த சிவபெருமான், உப்பங்கழி பொருந்திய சோலையில் அன்னப் பறவைகள் தம் பேடைகளுடன் கூடியுள்ள பிரமாபுரத்தில் இருப்பவன். அவன் இவனல்லவா !

8. வியர்இலங்குவரை உந்திய தோள்களை
வீரம்விளை வித்த
உயர்இலங்கைஅரை யன்வலிசெற்றுஎனது
உள்ளம்கவர் கள்வன்
துயர்இலங்கும்உல கில்பலஊழிகள்
தோன்றும்பொழுது எல்லாம்
பெயர்இலங்குபிர மாபுரமேவிய
பெம்மான்இவன் அன்றே.

தெளிவுரை : சினத்தின் வயப்பட்டு வீரத்தைக் காட்டும் வகையில் கயிலையைப் பெயர்த்த இலங்கை அரசனுடைய வலிமையை அழித்து எனது உள்ளத்தைக் கவர்ந்த ஈசன், வினையின் கன்மத்தைச் சேர்த்துத் துயரை விளைவிக்கும் இந்த உலகில் ஊழிக்காலத்திலும் அழியாமல் நிலைத்து நின்று தனது சிறப்பினை நல்கும் பதியாகிய பிரமபுரத்தில் மேவியவன். அவன் இவனல்லவா !

9.தாள்நுதல் செய்துஇறை காணியமாலொடு
தண்தாமரை யானும்
நீணுதல்செய்துஒழிய நிமிர்ந்தான் எனது
உள்ளம்கவர் கள்வன்
வாள்நுதல்செய்மக ளிர்முதலாகிய
வையத்தவர் ஏத்தப்
பேணுதல்செய்பிர மாபுரமேவிய
பெம்மான்இவன் அன்றே.

தெளிவுரை : திருவடியைக் காணத் திருமாலும் திருமுடியைக் காணப் பிரமனும் முயற்சி செய்ய, அவர்கள் செயல் பயனற்றவாகச் செய்யும் வகையில் நீண்டு வளர்ந்தவனாகிய ஈசன் எனது உள்ளத்தைக் கவர்ந்தவன். வாள்போன்ற நெற்றியை உடைய மகளிர் முதலாக உலகத்தவர் அனைவரும் ஏத்தப் பேணிக் காக்கும் பிரமாபுரம் மேவிய பெருமான் இவன் அல்லவா !

10. புத்தரோடுபொறி யில்சமணும்புறம்
கூறநெறி நில்லா
ஒத்தசொல்லஉல கம்பலிதேர்ந்தெனது
உள்ளம்கவர் கள்வன்
மத்தயானைமறுக அவ்உரிபோர்த்ததோர்
மாயம்இது என்னப்
பித்தர்போலும்பிர மாபுரமேவிய
பெம்மான்இவன் அன்றே.

தெளிவுரை : புலன் உணர்வுகளை நீத்த புத்தரும் சமணரும் நன்னெறியில் அமையாத மாற்றுக் கருத்துக்களைக் கூறிடினும் பிச்சையேற்று எனது உள்ளத்தைக் கவர்ந்து, செருக்குற்ற யானையை அழித்து அதன் தோலைப் போர்வையாக்கிக் கொண்டு பின்னர் மாயை காட்டிப் பித்தனைப் போன்று பிரமாபுரம் மேவிய பெருமான் இவனல்லவா !

11. அருநெறியமறை வல்லமுனியகன்
பொய்கையலர் மேய
பெருநெறியபிர மாபுரமேவிய
பெம்மான்இவன் தன்னை
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம்
பந்தன்உரை செய்த
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை
தீர்தல்எளி தாமே.

தெளிவுரை : மறைவல்ல பிரமன் பூசித்த பிரமாபுரம் மேவிய பெருமானை ஒன்றிய மனத்தினால் உணர்ந்து ஞானசம்பந்தன் உரைத்த திருநெறிய இத் தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவருடைய தொல்வினை எளிதாகத் தீரும்.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 14வது தலம்.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

தலபெருமை:ஊழிக்காலத்தில் உலகம் அழிந்த பின் சிவபெருமான் 64 கலைகளையும் ஆடையாக தரித்து, "ஓம்' என்ற பிரணவமந்திரத்தை தோணியாக்கி, உமா மகேஸ்வரராக வருகையில், ஊழிக்காலத்திலும் அழியாத இந்த சீர்காழி தலத்தை பார்த்தார்.


இதுவே எல்லாவற் றிற்கும் மூல க்ஷேத்திரம் என்று தோணியுடன் இத்தலத் தில் எழுந்தருளி தோணியப்பர் என பெயர் பெற்றார். அம்பாள் திருநிலை நாயகி எனப்பட்டாள். இங்கு சிவனை பிரம்மா பூஜித்ததால் பிரம்மபுரீசுவரராக லிங்க வடிவிலும், ஆணவங் களை அழிப்பவராக சட்டை நாதராகவும், பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளாக அருள்பாலிக்கிறார். இவர்கள் தான் சம்பந்தருக்கு காட்சி கொடுத்து அருள்பாலித்தவ ர்கள். இது குரு மூர்த்தம் எனப்படும். உச்சியில் உள்ள அடுக்கில் சட்டைநாதர் அருள்பாலிக்கிறார். இவர் சிவனின் அம்சங்களில் பைரவ அம்சமாக திகழ்கிறார்.

மகாபலி கரவர்த்தியை அழித்த தோஷம் விஷ்ணுவிற்கு பிடித்து கொண்டது. விஷ்ணு வேறு, தான் வேறு இல்லை என்பதால் அவரது தோலை, சிவன் சட்டையாக அணிந்து கொண்டார். ஆனால், விஷ் ணுவை சிவன் அழித்து விட்டதாக நினைத்து மகாலட்சுமி தலையில் பூ வைத்து கொள்ளாமல் ஆழ்ந்த கவலையில் இருந்தாள். இப்போதும் கூட இவரது சன்னதிக்கு வரும் பெண்களை பூ வைத்துக் கொள்ள அனுமதிப்பதில்லை. ஆண்கள் சட்டை அணியக்கூடாது. சட்டங்களுக்கெல்லாம் இவரே அதிபதி என்பதால், வழக்குகளில் பிரச்னை உள்ளவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு.


பிரம்மனுக்கு ஏற்பட்ட அகங்காரம் நீக்கிய தலம். பிரளய காலத்தில் பார்வதிக்கு ஞான உபதேசம் செய்த தலம். இத்தல அம்மன் மகாலட்சுமி சொரூபமாக சக்தி பீடத்தில் 11வது பீடமாக அமர்ந்துள்ளார். இங்கு வந்து வணங்கினால் தான் என்ற அகங்காரம் நீங்கி ஞானம் கிடைக்கும். பிரம்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, மூலவர், உற்சவர் என அனைவருமே மூலஸ்தானத்தில் கைலாய காட்சியில் உள்ள ஒரே தலம் சீர்காழி தான். காசியை காட்டிலும் மிகப்பெரிய பைரவ க்ஷேத்திரம்.

இங்கு அசிதாங்க பைரவர், ருருபைரவர், சண்டபைரவர், குரோத பைரவர், உண்மத்த பைரவர், சம்ஹார பைரவர், பீஷண பைரவர், அகால பைரவர் என அஷ்ட பைரவர்களும் உருவமாக உள்ளனர்.   எனவே தான் காழியில் பாதி காசி என்பர். இவர்களது சன்னதிக்குள் சட்டை அணிய அனுமதியில்லை. அஷ்டமி திதிகளில் சிறப்பு பூஜை உண்டு.


18 சித்தர்களில் ஒருவரான சட்டை முனி சித்தர் இங்கு ஜீவ சமாதி ஆகி உள்ளார். சிவன் கோயில் பிரகாரத்தில் இவரது ஜீவ சமாதிக்கு மேல் ஒரு பீடம் உள்ளது. இங்கிருந்தபடியே உச்சியிலிருக்கும் சட்டைநாதரை தரிசிக்க முடியும். வெள்ளிக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு இந்த பீடத்திற்கு அபிஷேகம் நடக்கும். இரவு 12 மணிக்கு இதற்கு புனுகு சட்டம் சாத்தி, வடை மாலை அணிவித்து, பாசி பருப்பு பாயசம் நைவேத்யம் செய்யப் படுகிறது.

குன்றுக்கோயில் உருவான வரலாறு : உரோமச முனிவர் கயிலை சென்று, சிவனை நோக்கி தவம் செய்து, ""இறைவா! பக்தர்களின் குறை தீர்க்க தென்திசையில் தேவியுடன் எழுந்தருளி கயிலை தரிசனம் தரவேண்டும்,'' என வேண்டினார். ஒருசமயம் ஆதிசேஷனுக்கும் வாயு தேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி நடந்தது. இதில் ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளால் கயிலையை மூடிக்கொண்டார். வாயுவால் மலையை அகை கூட முடியவில்லை. தேவர்களின் வேண்டுகோளின் படி ஆதிசேஷன் ஒரு தலையை மட்டும் தூக்க, வாயுவின் வேகத்தினால் சிறு பகுதி பெயர்ந்தது. இறைவனின் அருளால் இந்த சிறு மலையை 20 பறவைகள் சீர்காழிக்கு கொண்டு வந்து சேர்த்தன. காலவித்து என்னும் மன்னனுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. கயிலை சென்று இறைவனை வணங்கினால் தான் புத்திர பாக்கியம் கிடைக்கும் என பெரியவர்கள் கூறினர். அவன் சின்னக் கயிலையான சீர்காழிக்கு வந்து இறைவனை வணங்கி, குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெற்றான்.

மூன்றடுக்கு சன்னதி : இக்கோயில் மூன்று அடுக்குகளைக் கொண்ட குன்றுக்கோயிலாக விளங்குகிறது. கீழ் தளத்தில் பிரம்மபுரீஸ்வரர், திருநிலை நாயகி அருள்பாலிக்கின்றனர். இது லிங்க மூர்த்தம் எனப்படும். இவருக்கு 6 கால பூஜை நடக்கிறது. படைக்கும் தொழிலைச் செய்த பிரம்மா, தானே உலகில் பெரியவன் என அகங்காரம் கொண்டார். இந்த அகங் காரத்தைப் போக்குவதற்காக சிவபெருமான், பிரணவ மந்திரத்தை பிரம்மனுக்கு மறக்க செய்தார். இதனால் வருந்திய பிரம்மன் இத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். இதனால் இத்தல இறைவன் பிரம்மபுரீஸ்வரர் ஆனார்.


நடு அடுக்கில், உமா-மகேஸ்வரர் உள்ளனர். இவரை "தோணியப்பர்' என அழைக்கிறார்கள். இவருக்கு 4 கால பூஜை நடக்கிறது. இந்தக் குன்றையும் . "தோணிமலை' என்கின்றனர்.

தல வரலாறு:சமயக்குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர், சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர்- பகவதி அம்மையார் தம்பதியரின் மகனாகப் பிறந்தார். இவரை முருகனின் அம்சம் என்றும், இளைய பிள்ளையார் என்றும் வழங்குவர்.


இவர் தனது மூன்றாவது வயதில் தந்தையுடன் இத்தலத்திலுள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராட வந்தார். தந்தை இவரை குளக்கரையில் உட்காரவைத்து விட்டு, தான் மட்டும் நீராடச் சென்றார். அப்போது சம்பந்தருக்கு பசி ஏற்பட, "அம்மா! அப்பா!' என அழுதார். இவரது அழுகுரல் கேட்ட சிவன், பார்வதியை நோக்கி குழந்தையின் பசிக்கு பால் கொடுக்குமாறு கூறினார். அதன்படி சிவனுடன் சம்பந்தருக்கு தரிசனம் தந்து மெய்ஞானம் கலந்த பாலை புகட்டினாள் அம்பிகை. பசி தீர்ந்த சம்பந்தர் வாயில் பால் வழிய அமர்ந்து விட்டார். குளித்து விட்டு வந்த தந்தை, ""பால் கொடுத்தது யார்? யாராவது ஏதாவது கொடுத்தால் வாங்கிச் சாப்பிடக்கூடாது என்பது உனக்குத் தெரியாதா? அபச்சாரம் செய்து விட்டாயே,'' எனச்சொல்லி குச்சியால் சம்பந்தரை அடிக்க கையை ஓங்கினார்.
அப்போது சம்பந்தர், சிவனும் பார்வதியும் தரிசனம் தந்த திசையை காட்டி, ""தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடி காடுடைய சுடலைப்பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன் ஏடுடைய மலரான் உனை நாட்பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரம்மாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே'' என்று பாடினார். தந்தை அசந்து போனார்.


தன் குழந்தைக்கு இறைவனே காட்சி தந்து பாலூட்டியது அறிந்து பரவசப்பட்டார். இத்தலத்தைபற்றி சம்பந்தர் 67 பதிகங்களும், திருநாவுக்கரசர் 3 பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

வழக்குகளில் பிரச்னை உள்ளவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு.
குழந்தை இல்லாதவர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம் 

போன்: +91- 4364-270 235, +91- 94430 53195

No comments:

Post a Comment