Thursday, October 6, 2011

Pasupateeswarar Temple at Tirukkandeeswaram near Mayiladuturai (Padal Petra Stalam)

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:பசுபதீஸ்வரர்
அம்மன்: சாந்த நாயகி
பாடியவர்கள்: திருநாவுக்கரசர்
தேவாரப்பதிகம் 
பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதைமார்தம் மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்புவந்து கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன் சேலுலாம் பழனவேலித் திருக்கொண்டீச் சரத்துளானே.
-திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 72வது தலம். 

தல சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள லிங்கத்தில் பசுவின் கொம்பால் ஏற்பட்ட பிளவை இன்றும் காணலாம்.

காமதேனு வழிபட்ட தலம். "கொண்டி' என்றால் "துஷ்ட மாடு' என்று பொருள். கொண்டி வழிபட்டதால் இத்தலம் "கொண்டீஸ்வரம்' என அழைக்கப்படுகிறது.
அம்பாள் சன்னதிக்கும், சுவாமி சன்னதிக்கும் இடையில் வெள்ளைக்கல்லால் செய்யப்பட்ட மிகப்பழமையான "ஜேஷ்டாதேவி' அருள்பாலிக்கிறாள். ஜேஷ்டா என்றால் மூதேவி என்று அர்த்தம். இத்தலத்தில் ஜேஷ்டாதேவி அனுக்கிரக தேவதையாக இருக்கிறாள்.
ஜேஷ்டாதேவி எனப்படும் தெய்வம் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் காணப்படுவாள். ஸ்ரீதேவியான (சீதேவி) லட்சுமியின் சகோதரியான இவள் மூதேவி (மூத்ததேவி) என்றும் சொல்லப்படுவாள். இவளை யாரும் தரிசிப்பதில்லை. ஆனால், இவள் வழிபாட்டுக்கு உரியவள்.
சோம்பல் இல்லாத சுறுசுறுப்பான வாழ்வைத் தர வேண்டும் என இவளிடம் பிரார்த்திக்க வேண்டும். இவ்வாறு அனுக்கிரகம் அருளும் மூர்த்தியாக இவள் அருள்பாலிக்கிறாள்.

தல வரலாறு:சிவபெருமான், தன்னை பூமியில் உள்ள மனிதர்கள் வழிபட்டு மேன்மை அடைய வேண்டும் என்பதற்காக வில்வாரண்யத்தில் மறைந்திருந்தார். அன்னை பார்வதி பசுவடிவெடுத்து இத்தலத்தை தன் கொம்பால் கீறிய போது அங்கு மறைந்து இருந்த இறைவனின் தலையில் கொம்பு பட்டு ரத்தம் வடிந்தது.
அதைக்கண்ட பசு, லிங்க வடிவில் இருந்த இறைவனின் தலையில் பால் சொரிந்து காயத்தை ஆற்றி வழிபட்டது. பசுவின் கொம்பால் ஏற்பட்ட பிளவை இன்றும் லிங்கத்தில் நாம் காணலாம்.

திருமணத்தில் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் உள்ள ஜேஷ்டா தேவியை வழிபாடு செய்கின்றனர்.
சுவாமி மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் மூன்று தலைகள், மூன்று கால்களுடன் ஜுரஹரேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.
கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு வெந்நீரில் அபிஷேகம் செய்து, அன்னத்துடன் மிளகுரசம் வைத்து வழிபட்டால் பரிபூரண குணமாகிவிடுகிறது. 
ஜேஷ்டா தேவிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

போன்: +91 - 4366 - 228 033.

No comments:

Post a Comment