Thursday, October 6, 2011

Erumbeeswarar Hill temple at Tiruchirappalli (Tiruverumbur) (Paadal Petra Stalam)

அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில்

மூலவர்: எறும்பீஸ்வரர்
அம்மன்: நறுங்குழல் நாயகி
பாடியவர்கள்: திருநாவுக்கரசர் 
தேவாரப்பதிகம் 
பன்னிய செந்தமிழறியேன் கவியேன் மாட்டேன் எண்ணோடு பண்நிறைந்த கலைகள் ஆய தன்னையும் தன்திறத்து அறியாப் பொறியிலேனைத் தன்திறமும் அறிவித்து நெறியும் காட்டி அன்னையையும் அத்தனையும் போல அன்பாய் அடைந்தேனைத் தொடர்ந்து என்னை ஆளாக் கொண்ட தென்எறும்பி யூர்மலைமேல் மாணிக்கத்தைச் செழும்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
-திருநாவுக்கரசர்


தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென் கரைத்தலங்களில் இது 7வது தலம்

தல சிறப்பு:இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
கருவறையில் சிவலிங்கம் புற்று வடிவில் மேடும், பள்ளமுமாக ஒரு முழுமையான அமைப்பு இல்லாமல் மணல் லிங்கமாக இருக்கிறது. எனவே, லிங்கத்திற்கு அபிஷேகம் கிடையாது. எண்ணெய் காப்பு மட்டுமே செய்கின்றனர். லிங்கம் இடப்புறத்தில் சாய்ந்தபடி இருக்க, மத்தியில் ஒரு பிளவு இருக்கிறது. பார்வைக்கு லிங்கம் இரண்டு பகுதிகளாக பிரிந்திருப்பது போல இருக்கிறது. இதில் வலப்புறம் உள்ள பகுதியை சிவன் அம்சம் என்றும், இடப்புறத்தை அம்பாள் அம்சம் என்றும் சொல்கின்றனர். இந்த லிங்கத்திற்கு "சிவசக்தி லிங்கம்' என்ற பெயரும் உண்டு. சிவமும், சக்தியும் ஒன்று என்பதை இந்த வடிவம் உணர்த்துகிறது.
தினமும் சுவாமிக்கு பூஜைகள் நடக்கும்போது கருவறையில் எறும்புகள் வரிசையாக ஊர்ந்து சென்று, நைவேத்தியப் பொருட்களை எடுத்துக்கொள்ளுமாம். இதனை சிவனே எறும்பு வடிவில் வருவதாக சொல்கிறார்கள். இந்த நேரத்தில் சுவாமியை வழிபடுவது மிகவும் விசேஷம்.
மன்மதனின் மனைவி ரதி, அழகு மீது தனக்கு ஆணவம் வந்துவிடக்கூடாது என்பதற்காக இங்கு சுவாமியை வழிபட்டுச் சென்றுள்ளாள்.
 பிரகாரத்தில் சொர்ணகால பைரவர் சன்னதி இருக்கிறது. மிகவும் உக்கிரமாக இருக்கும் இவரது சன்னதிக்கு நேரே கஜலட்சுமி தனிச்சன்னதியில் 
இருக்கிறாள். ஒரேசமயத்தில் இவ்விருவரையும் வேண்டிக்கொண்டால் பயங்கள் நீங்கி, குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.

 அம்பாள் நறுங்குழல் நாயகி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். இவள் நறுமணம் வீசும் கூந்தலுடன் இருக்கிறாள் என்பது ஐதீகம். எனவே, இப்பெயரில் அழைக்கின்றனர். இவளுக்கு தினமும் வேறுவேறு விதமாக அலங்காரம் செய்கின்றனர். இதனால் அம்பாள் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கோலத்தில் காட்சி தருகிறாள். இவளுக்கு முன்புறம் ஆதியில் வழிபடப்பட்ட அம்பாள் சிலை இருக்கிறது.
சிவன் கருவறைக்கு முன்புள்ள துவாரபாலகர்களில் ஒருவர் கோப முகத்துடனும், மற்றொருவர் சாந்த முகத்துடனும் இருக்கின்றனர். இக்கோயிலுக்கு வருபவர்கள் மனதில் கோபம், ஆணவம் போன்ற குணங்களைக் கொண்டிருந்தாலும் சுவாமியை வணங்கிய பின்பு அவர்கள் சாந்த கோலத்தை அடைகின்றனர் என்பதை இவ்வடிவம் காட்டுகிறது.
கோஷ்டத்தில் சிவனுக்கு பின்புறத்தில் சிவனும், மகாவிஷ்ணுவும் சேர்ந்த சங்கர நாராயணரும், ருத்ராட்ச பந்தலின் கீழ், நடராஜர் காலில் கொழுசு அணிந்த கோலத்தில் இருப்பதும் சிறப்பு.

தல வரலாறு:தாரகாசுரன் எனும் அசுரன் இந்திரலோகத்தை கைப்பற்றி இந்திரனையும், தேவர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அவனிடமிருந்து தங்களை காக்கும்படி தேவர்கள் பிரம்மாவிடம் முறையிட்டனர்.
அவர் பூலோகத்தில் இத்தலத்தில் குன்றின் மீது சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருப்பதாகவும், லிங்கத்திற்கு மலர் வைத்து பூஜை செய்து வழிபட்டால் அவர் அசுரனை அழிப்பார் என்றும் கூறினார். அதன்படி தேவர்கள் இத்தலம் வந்தனர். அசுரனின் கண்ணில் படாமல் இருப்பதற்காக சிறிய எறும்பின் வடிவம் எடுத்து சிவனை வழிபட்டனர்.
சிவனின் உச்சியில் (தலையில்) மலர் வைக்க பாணத்தின் மீது ஏறியபோது, லிங்கம் வழவழப்பாகவும், செங்குத்தாக இருந்ததால் அவர்களால் மேலே செல்ல முடியவில்லை. தேவர்கள் படும் துயரத்தை கண்ட சிவன், அவர்கள் எளிதாக ஏறிவர, மண்புற்று போல தன் உருவத்தை மாற்றிக் கொண்டதோடு, சற்றே இடப்புறமாக சாய்ந்தும் கொண்டார்.
பின், தேவர்கள் எளிதாக ஏறிச்சென்று சிவன் தலையில் மலர் வைத்து வழிபட்டனர். அவர்களுக்கு அருள் புரிந்த சிவன், தாருகாசுரனை அழித்து தேவர்களை காத்தார். "எறும்பீஸ்வரர்' என்ற பெயரும் பெற்றார்.


சுவாமியிடம் வேண்டிக்கொண்டால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாக உழைக்கும் குணம் உண்டாகும், துயரங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.  சுவாமிக்கு வஸ்திரம் அணிவித்து, சர்க்கரைப்பொங்கல் படைத்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

போன்:  +91-431 - 6574 738, +91-98429 - 57568.

No comments:

Post a Comment