Thursday, October 6, 2011

Parijatavaneswarar Temple at Tirukkallar (Mannargudi) near Thanjavur

அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:பாரிஜாதவனேஸ்வரர் என்ற களர்முளைநாதேஸ்வரர்
அம்மன்: அமிர்தவல்லி என்ற இளம்கொம்பன்னாள்
பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர்
தேவாரப்பதிகம் 
கொங்கு லாமலாச் சோலை வண்டினம் கிண்டி மாமது வுண்டிமை சைசெயத் தெங்குபைங் கமுகம் புடைசூழ்ந்த திருக்களருள் மங்கை தன்னெடுங் கூடிய மண வாளனே பிணை கொண்டார் கைத்தலத் தங்கையிற் படையாய் அடைந்தார்க்கு அருளாயே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 105வது தலம்.

இத்தல இறைவன் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.

தலபெருமை:முருகப்பெருமான் அறுபதினாயிரம் முனிவர்களுக்கும், துர்வாசருக்கும், பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்தது இத்தலத்தில் தான். எனவே முருகப்பெருமான் இத்தலத்தில் வள்ளி, தெய்வானை இல்லாமல் குரு வடிவில் அருள்பாலிக்கிறார். கல்வியில் மேன்மை பெற இவரை வழிபடுவது சிறப்பு.

சிதம்பரம், பேரூரில் ஆனந்த தாண்டவம், திருவாரூரில் அஜபா தாண்டவம், மதுரையில் ஞான சுந்தர தாண்டவம், அவினாசியில் ஊர்த்துவ தாண்டவம், திருமுருகன் பூண்டியில் பிரம்ம தாண்டவம் தந்தருளிய சிவபெருமான் இத்தலத்தில் பிரம தாண்டவ தரிசனம் தந்துள்ளார்.

நடராஜரின் பிரமதாண்டவ தரிசன வடிவமும், எதிரில் துர்வாசர் கைகூப்பிய நிலையில் உள்ள வடிவமும் உள்ளது. துர்வாச முனிவரே இக்கோயிலுக்கு முதலில் கும்பாபிஷேகம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. கோவிலூர் மடாதிபதி வீரசேகரஞான தேசிக சுவாமிகளின் ஜீவ சமாதி கோயிலின் அருகே உள்ளது. இவர் இக்கோயிலுக்கு அதிக திருப்பணிகள் செய்துள்ளார். எனவே இவரை "திருக்களர் ஆண்டவன்' என வழிபாடு செய்கிறார்கள். பராசர முனிவர்  காலவ முனிவர் வழிபட்ட தலம்.
இத்தலத்தில் வழிபாடு செய்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மோட்சம் கிடைக்கும் எனவும், கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும் என்பதும் ஐதீகம்.

தல வரலாறு:
பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் சிவபெருமான் ஆனந்த தாண்டவ தரிசனம் தந்தருளியதை அறிந்த துர்வாச முனிவர் தனக்கும் நடன தரிசனம் தர வேண்டி இத்தலத்தில் கடும் தவம் இருந்தார்.

இவர் தேவலோக மலராகிய பாரிஜாதத்தை கொண்டு வந்து இப்பகுதியை பாரிஜாத வனமாக்கினார். பின் தீர்த்தம் உண்டாக்கி, பாரிஜாத மரத்தின் அடியில் லிங்கத்தையும், அருகே அம்பாளையும் பிரதிஷ்டை செய்து, தேவ தச்சனை கொண்டு கோயில் கட்டி வழிபாடு செய்தார். இதனால் இத்தலத்திற்கு பாரிஜாத வனம், தருவனம், கற்பகவனம் என்ற புராணப்பெயர்கள் உண்டு.

இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன் இத்தலத்தில் "பிரமதாண்டவ தரிசனம்' தந்தருளினார். களரி என்பதற்கு தாண்டவம் என்றும் பொருளுண்டு. களரி என்பது மருவி "திருக்களர்' ஆனது. இதனால் இத்தல இறைவன் களர்முளை நாதேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

இத்தலத்தில் வழிபாடு செய்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மோட்சம் கிடைக்கும்.கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும் என்பதும் ஐதீகம். 

போன்: +91- 4367 - 279 374
 

No comments:

Post a Comment