Monday, November 7, 2011

Sivalokatyagesar Temple at Aachalpuram near Nagapattinam (Paadal Petra Stalam)

அருள்மிகு சிவலோகத்தியாகர் திருக்கோயில்

மூலவர்:சிவலோகத்தியாகர்
அம்மன்: திருவெண்ணீற்று உமையம்மை, சுவேத விபூதி நாயகி
பாடியவர்கள்:சம்பந்தர்
தேவாரப்பதிகம்
அன்புறு சிந்தைய ராகி அடியவர் நன்புறு நல்லூர்ப் பெருமண மேவிநின் இன்புறும் எந்தை இணையடி ஏத்துவார் துன்புறுவார் அல்லர் தொண்டு செய்வாரே.
-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 5வது தலம். 
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்

தலபெருமை:சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு வேத நெறி தழைத்தோங்கவும், சைவத்துறை விளக்கம் பெறவும் திருஞான சம்பந்தர் அவதரித்த தலம் சீர்காழி. அதேபோல் தனது திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவருடன் தானும் சிவ ஜோதியில் கலந்த தலம் ஆச்சாள்புரம்.இவரை உடலால் சிறியவர், உணர்வால் பெரியவர் என சேக்கிழார் போற்றுகிறார்.
ஆச்சாள், ஆயாள் என்பது அம்பிகையின் பெயர்கள். ஆச்சாளே நேரில் வந்து ஞானசம்பந்தரின் திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு திருநீறு அளித்ததால் அம்மனுக்கு திருவெண்ணீற்று உமையம்மை என்ற திருநாமமும், இத்தலத்திற்கு ஆச்சாள்புரம் என்ற பெயரும் ஏற்பட்டது.

வசிஷ்டர், பராசரர், பிருகு, ஜமத்கனி முனிவர் ஆகியோர்களுக்கு இறைவன் கயிலை காட்சி காட்டி அருள்புரிந்து உள்ளார். பிரம்மா இங்கு வந்து வழிபட்டு படைப்பு தொழிலை கைவரப்பெற்றார். விஷ்ணு வந்து வழிபட்டு அசுரர்களை வெல்லும் வரம் பெற்றார். இந்திரன் போகம் பெற்றான். சந்திரன் அபயம் பெற்றான். கங்கா தேவி தவம் செய்து இங்குள்ள வாசலில் எழுந்து இறைவனை வழிபட்டாள். இங்கு வந்து வழிபட்டால் வினைகள் நீங்கும். பந்த பாசம் விலகும். சம்பந்தருக்கு சிவஜோதியில் கலக்க செய்த இறைவனை வழிபடுபவர்களுக்கு முக்தி நிச்சயம்.

காக முனிவர் இத்தலத்தை காலால் மிதிப்பதற்கு பயந்து தலையால் நடந்து வந்து நிருதி திசையில் அமர்ந்து தவமிருந்தார். சம்பந்தர். திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலநக்கநாயனார் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.

திருநீறு பிரசாதம்: இந்த அம்மனின் சன்னதியில் திருநீறு தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதைப் பூசினால் நோய் விலகும், முன்ஜென்ம பாவம் விலகும், தரித்திரம் நீங்கி சரித்திரம் படைக்கலாம், பெண்களுக்கு தாலி பாக்கியம் நீடித்திருக்கும் என்பது ஐதீகம்.

தல வரலாறு:சீர்காழியில் சிவபாதஇருதயரின் மகனாக அவதரித்தவர் சம்பந்தர். இவருக்கு 16 வயது நடக்கும் போது, இவரை திருமணம் செய்து கொள்ளும்படி தந்தை கூறினார். முதலில் மறுத்த சம்பந்தர், பின் "இறைவனின் விளையாட்டு தான் இது', என்று சம்மதித்தார். மயிலாப்பூரில் சிவநேச செட்டியாரின் மகளை பெண் பார்த்து முடித்தனர். அவள் திடீரென இறந்து போனாள். அவளுக்கு உயிர் கொடுத்த சம்பந்தர் அவளை தன் மகளாக ஏற்றார். அப்பெண் இறைப்பணியில் மூழ்கி விட்டார்.
இதன்பிறகு, நல்லூரில் உள்ள நம்பியாண்டார் நம்பியின் மகள் மங்கை நல்லாள் நிச்சயித்தார் சிவபாத இருதயர். ஞானசம்பந்தரும் மணக்கோலம் பூண்டார். ஆச்சாள்புரம் கோயிலில் திருமணம் நடக்க இருந்தது. திருநீலக்க நாயனார் மணவிழா சடங்குகளை செய்தார். சம்பந்தர் அக்னியை வலம் வரும் போது
""இருவினைக்கு வித்தாகிய இல்வாழ்க்கை நம்மை சூழ்ந்ததே, இனி இவளோடும் அந்தமில் சிவன் தாள் சேர்வேன்'' என்று கூறி, "கல்லூர்ப் பெருமணம்' என தொடங்கும் பதிகம் பாடி சிவனின் திருவடியில் சேரும் நினைவோடு இறைவனை வழிபட்டார். அப்போது எல்லாம் வல்ல ஈசன் ஜோதிப்பிழம்பாக தோன்றி,""நீயும் உனது மனைவியும் திருமணம் காண வந்தோர் அனைவரும் இந்த ஜோதியில் கலந்து விடுக''என்று அருள்புரிந்தார்.
இந்த காட்சியைக்கண்ட ஞான சம்பந்தர் மெய்சிலிர்த்து
""காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது
வேத நான்கினு மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே''
எனத் தொடங்கும் நமசிவாய திருப்பதிகம் பாடி அனைவருக்கும் சிவலோகம் வழங்கி, தாமும் தன் துணைவியார் மங்கை நல்லாளுடன் சிவஜோதியில் கலந்தார். இந்த பதிகம் தான் சம்பந்தர் தன் வாழ்நாளில் பாடிய கடைசிப்பதிகமாகும்.
ஆண்டு தோறும் வைகாசி மூல விழாவில் இந்த காட்சி திருவிழாவாக நடக்கிறது.

இத்தல இறைவனை தரிசித்து செல்லும் பக்தர்களின் வாழ்க்கையில் தரித்திரம் நீக்கி, முக்தி கிடைப்பது நிச்சயம்.

போன்: +91- 4364 - 278 272

Uchi Natheswarar Temple at Tirunelvayil(Sivapuri) near Chidambaram (Paadal Petra Stalam)

அருள்மிகு உச்சிநாதர் திருக்கோயில்

மூலவர்:உச்சிநாதர் என்ற மத்யானேஸ்வரர்
அம்மன்:கனகாம்பிகை
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்
தேவாரப்பதிகம்
மறையி னார்மழு வாளி னார்மல்கு பிறையி னார்பிறை யோடி லங்கிய நிறையி னாரநெல் வாயிலார்தொழும் இறைவனாரெம் துச்சி யாரே.
-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 3வது தலம்.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

தலபெருமை:சிவபெருமான் அகத்தியருக்கு காட்சி தந்த தலங்களில் இதுவும் ஒன்று. சிவலிங்கத்தின் பின்புறம் சிவ பார்வதி திருமணக்கோலத்தில் அருளுகின்றனர். சம்பந்தர் சிதம்பரத்தில் தங்கியிருந்த காலத்தில் தினமும் இத்தலம் வந்து தரிசனம் செய்துள்ளார்.
சிதம்பரம் நகருக்குட்பட்ட ஒரு பகுதியில் நெல் வயல்கள் அதிகம் இருந்தன. அப்பகுதி"திருநெல்வாயில்' என அழைக்கப்பட்டது. தற்போது சிவபுரி எனப்படுகிறது. இங்கு தான் கோயில் அமைந்துள்ளது.
சக்தியிடம் ஞானப்பால் அருந்திய ஞானசம்பந்தருக்கு இறைவன் உணவளித்த தலம் இது.

தல வரலாறு:திருஞானசம்பந்தர், சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர்- பகவதி அம்மையார் தம்பதியரின் மகனாகப் அவதரித்தார்.
தனது மூன்றாம் வயதில் தந்தையுடன் சீர்காழி சட்டைநாதர் கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தத்திற்கு வந்தார். தந்தை இவரை குளக்கரையில் உட்காரவைத்து விட்டு, தான் மட்டும் நீராடச் சென்றார். அப்போது சம்பந்தருக்கு பசி ஏற்பட, "அம்மா! அப்பா!' என அழுதார்.
இவரது அழுகுரல் கேட்ட சிவன், பார்வதியை நோக்கி குழந்தைக்குப் பால் கொடுக்குமாறு கூறினார். அதன்படி சிவனுடன் சம்பந்தருக்கு தரிசனம் தந்து மெய்ஞானம் கலந்த பாலை புகட்டினாள் அம்பிகை. பசி தீர்ந்த சம்பந்தர் வாயில் பால் வழியன்அமர்ந்து விட்டார்.
குளித்து விட்டு வந்த தந்தை, ""பால் கொடுத்தது யார்? யாராவது ஏதாவது கொடுத்தால் வாங்கிச் சாப்பிடக்கூடாது என்பது உனக்குத் தெரியாதா? அபச்சாரம் செய்து விட்டாயே,'' எனச்சொல்லி குச்சியால் சம்பந்தரை அடிக்க கையை ஓங்கினார். சிவபார்வதி தரிசனம் தந்த திசையை நோக்கி கையை நீட்டிய சம்பந்தர், "தோடுடைய செவியன்' என்று பதிகம் பாடினார். தன் குழந்தைக்கு அம்பாளே பாலூட்டியது அறிந்து பரவசப்பட்டார் சிவபாதர். சம்பந்தருக்கு 12 வயதில் திருமணம் நிச்சயமானது.

மணமகள், உறவினர் மற்றும் சிவனடியார்கள் 63 பேருடன் சிதம்பரத்திலிருந்து ஆச்சாள்புரம் சிவன் கோயிலுக்கு அவர் சென்றார். செல்லும் வழியில், மதிய நேரம் உச்சிப்பொழுதாகி விட்டதால் பசியின் காரணமாக இவர்கள் அனைவரும் சிவபுரி திருத்தலத்தில் தங்கினர்.
சம்பந்தரும், அவருடன் வந்தவர்களும் பசியுடன் இருப்பதை அறிந்த இத்தல இறைவன், கோயில் பணியாளர் வடிவில் வந்து அனைவருக்கும் அறுசுவை விருந்தளித்தார். இதனால் இத்தல இறைவன் "உச்சிநாதர்' என்றும் "மத்யானேஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார்.
அம்மன் கனகாம்பிகை. இப்பகுதி மக்கள் இக்கோயிலை "கனகாம்பாள் கோயில்' என்று அழைக்கின்றனர்.

இக்கோயிலில், குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டினால், காலம் முழுமைக்கும் அந்தக் குழந்தையின் வாழ்வில் உணவுப்பிரச்னை வராது என்ற நம்பிக்கை இருக்கிறது.

போன்: +91- 98426 24580.



Saturday, October 22, 2011

Pasupateswarar Temple at Tiruvetkalam near Chidambaram (Paadal Petra Stalam)

அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:பாசுபதேஸ்வரர்
அம்மன்:சத்குணாம்பாள், நல்லநாயகி
பாடியவர்கள்:திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், அருணகிரி நாதர்
தேவராப்பதிகம் 
அல்லல் இல்லை அருவினை தானில்லை மல்கு வெண்பிறை சூடும் மணாளனார் செல்வனார் திருவேட்களம் கைதொழ வல்ல ராகில் வழியது காண்மினே.
-திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 2வது தலம்.

தல சிறப்பு:தேவாரப்பபாடல் பெற்ற சிவத்தலங்களில் முதலானது சிதம்பரம். இரண்டாவது திருவேட்களம். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சாஸ்திரப்படி கோயில் எப்படி அமைக்க வேண்டும் என்று உள்ளதோ, அதன்படி அமைக்கப்பட்ட கோயில் இதுவாகும். பல்லவ அரசர்களால் செங்கற்களால் கட்டப்பட்ட இக்கோயில் 1914ல் கானாடுகாத்தான் பெத்த பெருமாள் செட்டியாரால் கருங்கற்களால் செப்பனிடப்பட்டது. தற்போது மூன்றடுக்கு ராஜகோபுரத்துடன் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது.
அம்பிகையின் சன்னதியில் 4 தூண்களிலும் அர்ஜுனன் தன் ஆயுதங்களை வைத்தல், ஒரு காலில் நின்று தவம் புரிதல், இறைவன் வேடன் வடிவம் எடுத்தல், சிவனும் அர்ஜுனனும் சண்டையிடுதல் போன்றவை சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.
கோயிலின் சுற்றுப்பகுதியில் நர்த்தன விநாயகர், தல விநாயகர்-சித்தி விநாயகர், அனுக்கிரக தெட்சிணாமூர்த்தி, சூரியன், சந்திரன் ஆகியேகர் உள்ளனர். தெட்சிணாமூர்த்தியின் காலடியில் உள்ள முயலகன் இடப்பக்கம் தலைவைத்துள்ளார்.
சூரியனும் சந்திரனும் அருகருகே இருப்பதால் சூரிய, சந்திர கிரகணங்களின் போது இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.

தலபெருமை:சிதம்பரத்தை அடுத்துள்ள திருவேட்களம். இரண்டாயிரம் ஆண்டு பழமையான இங்கு தான் அர்ஜுனனுக்கு இறைவன் பாசுபதம் வழங்கினார். அம்மன் நல்லநாயகி நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறாள். முன் இரண்டு கைகளில் ஒரு கையில் தாமரையும், ஒரு கையில் நீலோத்பவ மலருடனும் அருளுகிறாள். இவளுக்கு எதிரிலும் நந்தி உள்ளது.
ஒரு முறை சம்பந்தர் சிதம்பரம் நடராஜரை தரிசிக்க வருகிறார். அப்போது அவர் திருவேட்களத்தில் தங்கி சிதம்பரம் நடராஜரை தரிசித்துள்ளார்.
திருவேட்களம் பற்றி சம்பந்தர் பாடும் போது,"வேட்கள நன்னகர்' என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன்,"சிறப்புடன் வாழ வாழ்வில் ஒரு முறையாவது திருவேட்களம் போ', என்றும், அம்பிகையை "பெண்ணில் நல்லாள்' என்றும் குறிப்பிடுகிறார்.
அருணகிரிநாதர் இத்தல முருகனை திருப்புகழில் பாடியுள்ளார்.

தல வரலாறு:பாரதப்போரில் வெற்றிபெறுவதற்காக அர்ஜுனன் பாசுபதம் பெற விரும்புகிறான். அப்போது கிருஷ்ணன்,""நீ அனைத்து அஸ்திரங்களையும் உனது மானசீக தந்தையான இந்திரனிடமிருந்து பெற்றாய். ஆனால் பாசுபதாஸ்திரத்தை மட்டும் நீ சிவனிடமிருந்து தான் பெற வேண்டும். அதற்கு இந்திரனின் அனுமதி பெற வேண்டும்,''என்றார்.

இதற்காக அர்ஜுனன் மூங்கில் காடாக இருந்த இத்தலத்தில் தவம் செய்தான்.அர்ஜுனனின் தவத்தை கலைக்க துரியோதனன் மூகாசுரனை பன்றி வடிவில் அனுப்பினான். உடனே சிவன் பார்வதியுடன் வேடன் உருவில் வந்து பன்றியை கொன்றார்.
நான்கு வேதங்களும் நாய்களாக மாறி இறைவன் பின்னே வந்தன. அதே பன்றியின் மீது அர்ஜுனனும் அம்பு எய்தான். பன்றியை யார் கொன்றார்கள் என்பது குறித்து சிவனுக்கும், அர்ஜுனனுக்கும் சொற்போரும் விற்போரும் நடந்தது. போரில் அர்ஜுனனின் வில் முறிந்தது.
கோபமடைந்த அர்ஜுனன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். அந்த அடி மூவுலகில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது. வேடுவப்பெண்ணாக வந்த பார்வதி கோபமடைந்தாள். சிவன் பார்வதியிடம்,""உமையவளே! நீ லோகமாதா! நீ கோபப்பட்டால் இவ்வுலகம்
தாங்காது,''என சமாதானப்படுத்தி "சற்குணா' (நல்லநாயகி) தள்ளி நில் என்கிறார். சிவன் தன் திருவடியால் அர்ஜுனனை தூக்கி எறிகிறார். சிவனின் பாத தீட்சை பெற்று அன்னையின் கருணையால் இத்தல  கிருபாகடாட்ச தீர்த்தத்தில் விழுகிறான்.
சிவன் பார்வதியுடன் காட்சி கொடுத்து பாசுபதாஸ்திரத்தை தந்தருளினார். அர்ஜுனன் வில்லால் அடித்த தடத்தை இன்றும் லிங்கத்தின் மீது காணலாம்.

பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் இங்குள்ள இறைவனை வழிபாடு செய்து இங்கு பிரசாதமாக தரப்படும் மண் உருண்டையை சாப்பிட்டால் விரைவில் பேச்சு வரும் என்பது நம்பிக்கை.
திருமணத்தடை உள்ளவர்கள் வழிபாடு செய்து பலனடைகிறார்கள். 

போன்: +91- 98420 08291, +91-98433 88552

Veeratteswarar Temple at Tiruvathigai near Panruti (Cuddalore) (Paadal Petra Stalam, Veeratta Stalam)

அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:வீரட்டானம்
அம்மன்:பெரியநாயகி
பாடியவர்கள்:நாவுக்கரசர் , ஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்
தேவாரப்பதிகம்
பாதம் பலரேத்தப் பரமன் பரமேட்டிபூதம் புடைசூழப் புலித்தோல் உடையாகக்கீதம் உமைபாடக் கெடில வடபக்கம்வேதம் முதல்வன் நின்றாடும் வீரட்டானத்தே.
-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 7வது தலம்

தல சிறப்பு:இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 16 பட்டைகளுடன் கூடிய மிகப்பெரிய லிங்கம்
திருவதிகை நகரின் மேற்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் திருவாமூர் என்ற ஊரில் பிறந்த திருநாவுக்கரசர் சமண மதத்தில் மிகவும் தீவிரமாக இருந்தார். அவரது சகோதரி திலகவதியார் சைவ சமயத்திலேயே இருந்து வீரட்டானேசுவரருக்கு தொண்டு செய்து வந்தார்.அப்போது திருநாவுக்கரசருக்கு கடுமையான சூலை நோய் (வயிற்று வலி) தாக்கியது.சமண சமயத்தவர்கள் அவரது வயிற்று வலியை நீக்க எவ்வளவோ முயன்றனர்.ஆனால் முன்னை விட மேன்மேலும் வலி அதிகமானது.ஒருநாள் அதிகாலையில் திருஅதிகை அடைந்து திலகவதியாரின் காலில் விழுந்து தமது நோயைப் போக்கும் படி கூற, திலகவதியாரும் மனமிரங்கி வீரட்டானேசுவரர் சந்நிதிக்கு தன் தம்பியை அழைத்து சென்று ஐந்தெழுத்தை ஓதி திருவாளன் திருநீறு அளித்தார் . அந்த திருநீறை பூசிக்கொண்டு திருவாயில் போட்டுக் கொண்டவுடன் வயிற்றுவலி பனிபோல் நீங்கிவிட்டது.உடனே வீரட்டானேசுவரரை வணங்கி கூற்றாயினவாறு விலக்ககலீர் என்னும் கோதில் நீடிய திருப்பதிகம் பாடினார். அதனால் மனமகிழ்நத கண்ணுதற் பெருமான் நாவுக்கரசு என்று நின் நன்நாமம் நயப்புற மன்னுக என்று பட்டம் கொடுத்தார். அது முதல் திருநாவுக்கரசர் சைவத்தையே உயிர் மூச்சாகக் கொண்டு உழவாரம் செய்து வந்தார். இந்த இறைவனை வழிபடுவோர்க்கு ஆணவம், கன்மம்,மாயை ஆகிய மும்மலங்களும் நீங்கும்.
திருஅதிகை வீரட்டானேசுவரர் திருக்கோயிலுக்கு வந்து வழிபடுவோர்க்கு கயிலைக்கு சென்ற பலன் கிடைக்கும் என்பது உறுதி என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.
இத்தலத்து முருகப்பெருமான் (சுப்ரமணியர்) குறித்து அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்
சுவாமியின் பிறபெயர்கள் : ஸ்ரீ சம்கார மூர்த்தி(திருக்கெடிலவாணர் கற்றளி கருவறையில் பின்புறம் அம்மையப்பர் (இறைவன் தன்னையே பூஜிப்பதாக ஐதீகம்)
அம்பாளின் பிறபெயர்கள் : ஸ்ரீ திரிபுர சுந்தரி
தலவிநாயகர் : சித்தி விநாயகர்.
பிற தீர்த்தங்கள் :  கிணறு தீர்த்தம், சக்கர தீர்த்தம், குளம், கெடில நதி

தலபெருமை:வழிபட்டவர்கள் : இந்திரன், பிரம்மன், திருமால், பாண்டவர்கள், சப்தரிஷிகள், வாயு, வருணன், யமன் முதலானோர்.
இறைவன் தேரில் வந்ததால் இத்திருக்கோயிலின் அமைப்பும் தேர் வடிவில் உள்ளது.
இத்திருக்கோயிலின் கர்ப்ப கிரக விமானத்தை பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோயிலை கட்டினான்.திவதிகை கோயிலின் நிழல் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் கட்டப்பட்டுள்ளது. எந்த ஆயுதமின்றி ஒரு அழகான சிரிப்பினாலேயே ஒரே நொடியில் நடைபெற்ற சிவபெருமானின் திரிபுரசம்காரம் நடைபெற்ற தலம்.
முப்புரம் எரிசெய்த பெம்மான் மூவருக்கு அருள் செய்தார்.ஐந்தெழுத்தால் இறைவன் மும்மலங்களையும் சிதைத்தது இத்தலத்திலே.
தேவாரம் முதன் முதலில் பாடப்பட்ட தலம் இதுவே ஆகும்.
முதன்முதலில் தேர் ஏற்பட்ட வரலாறு இதுவே ஆகும்.இன்றைக்கு கோயில்களில் தேர் இருக்க வேண்டிய ஐதீகம் உருவானதே
இத்தலத்தில்தான்.
அட்ட வீரட்டானத் தலங்களில் சிறப்புடையது.
அட்ட வீரட்டானத் தலங்களில் அதிக பாடல் பெற்ற தலம் இதுவே.
அட்ட வீரட்டானத் தலங்களில் மூவர் தமிழும் பெற்ற சிறப்பு தலம் இது.
சிதறு தேங்காய் (சூறைத் தேங்காய் ) என்ற பழக்கம் உருவானதும் இத்தலத்தில்தான்.
 மூலவருக்கு பின்புறம் சுதையால் ஆன சுவாமி அம்பாள் திருமணக்கோலம் உள்ளது.
திருநாவுக்கரசருக்கு திருமணக்கோலத்தில் காட்சி தந்த தலம் என்பதால் திருமணங்கள் நிறைய நடைபெறுகின்றன.
கருவறை கோபுரம் நிரம்ப சுதைகளால் ஆனது.கருவறை விமான அமைப்பு, மண்டப அமைப்பு ரதம் போன்ற அமைப்பை கொண்டது.
சித்திரையில் அப்பர் பெருமானுக்கு பத்து நாட்கள் சிறப்பாக விழா நடைபெறுகிறது.
வைகாசியில் பிரம்ம உற்சவம் பத்து நாட்கள் விசாகத்தில் தேர் திருவிழாவும் திரிபுர சம்காரமும் நடைபெறுகிறது.
உழவாரம் முதன்முதலில் திருநாவுக்கரசரால் இங்குதான் செய்யப்பெற்றது.
பன்னிரெண்டு திருமுறைகளிலும் திரிபுரசம்கார நிகழ்ச்சியை பற்றியே அதிகமாக பாடப்பட்டுள்ளது
இந்த இறைவனை வழிபடுவோர்க்கு ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் நீங்கும்.
அம்பாள் சந்நிதி சுவமிக்கு வலப்புறம் உள்ளது தனிச்சிறப்பு. இதனால் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் திருமணம் உடனடியாக தீர்ந்து விடும்.
ஆணவமாய் வந்தவர்கள் இங்கு திரும்பவும் வரமாட்டார்கள். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த தலம். இத்தலத்தில் குனிந்துதான் விபூதி பூச வேண்டும்.
தல வரலாறு: தாருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் கடுமையான தவங்கள் செய்து பிரம்மாவிடம் வரம் பெற்று தங்களை யாராலம் வெல்லவோ கொல்லவோ முடியாது வரம் பெற்றனர்.அவர்களால் தொல்லையடைந்தவர்கள் ஈசனிடம் முறையிட்டனர். அதன்படி பூமியை தேராகவும், சூரிய சந்திரர்களை தேர் சக்கரங்களாகவும், நான்கு வேதங்களை குதிரைகளாகவும், பிரம்மாவை தேரோட்டியாகவும் மற்ற தேவர்களை எல்லாம் தேருடன் (அதற்கு வைதிகத் தேர்) வரச் செய்தார். சுவாமி மேருமலையை வில்லாகவும் வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் திருமாலை அம்பாகவும் அம்பின் நுனியில் அக்னியையும் வைத்து அந்த வில்லுடன் தேரில் ஏறினார். அச்சு முறிந்தது. பிள்ளையாரை வணங்காததால்தான் இப்படி என்று உணர்ந்து கணபதி பூஜை செய்து அவரது அருளை பெற்று தொடர்ந்தனர்.தேரில் வந்த அனைத்து தேவர்களும் தங்களால்தான் அந்த அசுரர்கள் மடியப்போகிறார்கள் என்று நினைத்து கொண்டிருக்க சிவபெருமான் அசுரர்கள் மீது வில் அம்பு எதையும் பயன்படுத்தவில்லை. அசுரர்களை பார்த்து சற்றே சிரித்தார்.அவ்வளவுதான்.

 உலகமே நடுங்கும்படியாக தீப்பிழம்பு ஏற்பட்டு அவர்கள் மூவரும் சாம்பலாயினர். தங்கள் உதவி இல்லாமலே சிவன் சம்காரம் செய்ததை உணர்ந்து தேவர்கள் வெட்கி தலைகுனிந்தனர்.ஒரே சமயத்தில் தேவர்கள்
அசுரர்கள இருவரது ஆணவத்தையும் அடக்கானர் ஈசன்.பின்பு மூன்று அசுரர்களையும் மன்னித்து இருவரை தனது வாயில் காப்பாளர்களாகவும், ஒருவரை குடமுழா முழக்குபவனாகவும் ஆக்கி கொண்டார்.மேற்கூறிய புராண வரலாறே திரிபுர சம்காரம் என்று அழைக்கப்படுகிறது.

இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும்.இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது.வயிற்று வலி (அல்சர்) சத்ரு உபாதைகள் சூலைத் தீர்த்தமும் உட்கொண்டால் உடனடியாக தீர்ந்து விடும்.எதிரிகள் தொல்லை நீங்குதல், வர்க்க சாப தோச நிவர்த்தி, முன்னோர் செய்த பாவங்கள் இங்கு வழிபட்டால் நீங்கும்.
குழந்தை இல்லாதவர்கள் இறைவனை வழிபட்டு அபிசேகம் செய்து அந்தப்பாலை உட்கொண்டால் உடனே குழந்தை பேறு உண்டாகும்.
மேலும் வேலைவாய்ப்பு, குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.

போன்: +91-98419 62089

Sishta Gurunatheswarar temple at Thirutturaiyur near Cuddalore (Paadal Petra Stalam)

அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:சிஷ்டகுருநாதேஸ்வரர் (பசுபதீஸ்வரர்)
அம்மன்:சிவலோகநாயகி (பூங்கோதை)
பாடியவர்கள்:சுந்தரர்
தேவாரப்பதிகம்
மாவாய்ப் பிளந்தானும் மலர்மிசை யானும்
ஆவா அவர்தேடித் திரிந்தல மாந்தர்
பூவார்ந்தன பொய்கைகள் சூழும் துறையூர்த்
தேவா உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே.
-சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 15வது தலம்.

தல சிறப்பு:சித்திரை மாதம் முதல் வாரத்தில் மாலை வேளையில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது.

தலபெருமை:திருவெண்ணெய் நல்லூரில் சிவனை "பித்தா!' என்று பாடி வணங்கிய சுந்தரர், இத்தலத்திற்கு வந்தார். அப்போது தென்பெண்ணையாறு குறுக்கிடவே, கரையில் இருந்தே சிவனை வேண்டி பதிகம் பாடினார். அப்போது அங்கு ஒரு வயதான தம்பதியர் வந்தனர். அவர்கள் சுந்தரரை படகில் ஏற்றிக்கொண்டு மறு கரைக்கு அழைத்து வந்தனர். அப்போது சிவன் அவரது கண்ணுக்கு தெரியாமல் மறைந்து கொண்டார்.
சுந்தரர் சுற்றிலும் தேடிப்பார்த்தார். ஆனாலும், சிவனை காணமுடியவில்லை. அப்போது முதியவர் அவரிடம், "நீங்கள் தேடுபவர் மேலே இருக்கிறார்,' என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். சுந்தரர் மேலே பார்த்தபோது சிவன், அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் காட்சி தந்தார்.
சுந்தரர் அவரிடம் தனக்கு உபதேசம் செய்யும்படி கூறினார். எனவே, சிவன் சுந்தரருக்கு குருவாக இருந்து "தவநெறி' உபதேசம் செய்தார். எனவே, சிவனுக்கு "தவநெறி ஆளுடையார்', "சிஷ்டகுருநாதேஸ்வரர்' என்று பெயர் பெற்றார். சிவன் இங்கு குருவாக அருள் செய்ததால் வியாழக்கிழமைகளில் விசேஷ வழிபாடுகள் நடக்கிறது.

நந்திக்கொடி பிரதோஷம் : இக்கோயிலில் பிரதோஷத்தன்று நந்திக்கு பூஜைகள் செய்யப்படும்போது, அருகில் நந்திக்கொடி கட்டுகின்றனர். சிவ வழிபாட்டில் முக்கியத்துவம் பெற்ற நந்திக்கு பிரதோஷத்தின்போது, நந்தியின் படம் அச்சிடப்பட்ட கொடியைக் கட்டி வழிபடும் வழக்கம் முன்பிருந்தது. காலப்போக்கில் இவ்வழக்கம் மறைந்து விட்டது. இலங்கையில் உள்ள சிவாலயங்களில் இந்த வழிபாடு தற்போதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
இத்தலத்தில் நந்திக்கொடி கட்டி பிரதோஷ பூஜைகள் நடப்பது விசேஷம்.

சிவன் இத்தலத்தில் பெரிய லிங்க வடிவில் இருக்கிறார். ஆவுடை வலது பக்கம் இருக்கிறது. பவுர்ணமி மற்றும் திங்கட்கிழமைதோறும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இந்நேரத்தில் நெய்விளக்கு ஏற்றி, வில்வ இலை அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். 
இங்கு முருகன் ஆறு முகங்களுடன் சுப்பிரமணியராக இருக்கிறார். அருணகிரியார் இவரை, "குருநாதர்' என்று திருப்புகழில் பாடியிருக்கிறார். இவருக்கு அருகில் ஆதிகேசவர் தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் இருக்கிறார். இங்குள்ள சுந்தரர், இடது கையில் செங்கோலை வைத்தபடி காட்சிதருகிறார். இவருக்கு மரியாதை செய்யும் விதமாக தலையில் தலைப்பாகை அணிவித்து அழகு பார்க்கின்றனர்.
கோயிலுக்கு எதிரே சுந்தரரை முதியர் வடிவில் வந்து சிவன் தடுத்த இடத்தில் "தடுத்தாண்கொண்டீஸ்வரர்' மற்றும் "அஷ்டபுஜ காளி'க்கு சன்னதிகள் உள்ளன. இச்சன்னதிக்கு அருகில் மெய்க்கண்ட நாயனாரின் சீடரான அருணநந்தி சிவாச்சாரியார் முக்தியடைந்த இடம் இருக்கிறது.

தல வரலாறு:கயிலாயத்தில் சிவன், பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தென்திசைக்கு வந்தார். வழியில் அவர் பல தலங்களில் லிங்கம் பிரதிஷ்டை செய்து சிவன் திருமணத்தை கண்டார். அவர் இத்தலம் வந்தபோது சிவனின் திருமணத்தை காண விரும்பி லிங்கம், அம்பாளை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இருவரும் அவருக்கு மணக்கோலத்தில் காட்சி தந்தனர்.

இத்தலத்தில் அகத்தியர் சிவனை மேற்கு நோக்கியும், அம்பாளை வடக்கு நோக்கியும் வைத்து வழிபட்டாராம். அவளது திருமணம் வட திசையில் உள்ள கயிலாய மலையில் நடந்ததால் இவ்வாறு செய்தாராம். இதன் அடிப்படையில் அம்பாள் வாமதேவ முகமாக (வடக்கு பார்த்து) தனிச்சன்னதியில் இருக்கிறாள். அம்பாளை இக்கோலத்தில் காண்பது அபூர்வம்.

குருதலம் என்பதால் இங்கு சிவன், தெட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. இதனால் கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை.

போன்: +91- 4142 - 248 498, 94448 07393.

Vamanapuriswarar temple at Thirumamanikuli near Cuddalore (Paadal Petra Stalam)

அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:வாமனபுரீஸ்வரர், மாணிக்கவரதர்
அம்மன்:அம்புஜாட்சி, மாணிக்கவல்லி
பாடியவர்கள்:சம்பந்தர்
தேவாரப்பதிகம் 
மந்த மலர் கொண்டுவழி பாடுசெயு மாணி யுயிர் வவ்வமனமாய் வந்தவொரு காலனுயிர் மாளவுதை செய்தமணி கண்டன் இடமாம் சந்தினொடு காரகில் சுமந்துநட மாமலர்கள் கொண்டு கெடிலம் உந்துபுனல் வந்துவயல் பாயுமண மார்உதவி மாணி குழியே.
-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 17வது தலம்.

தல சிறப்பு:மூலவர் சுயம்பு மூர்த்தி. இக்கோயில் சூரியபகவானால் உண்டாக்கப் பட்டு அவரே பூஜை செய்ததாக வரலாறு.

தலபெருமை:சிறப்பம்சம்: தேவர்களுக்கு ஞானத்தை புகட்டவும், அவர் களது அஞ்ஞானத்தை நீக்கவும் சதா சர்வ காலமும் பார்வதியுடன் இணைந்திருப்பதால், இங்கு இறைவனை நேரிடையாக நாம் தரிசிக்க இயலாது.
கர்ப்பகிரகமே இங்கு பள்ளியறையாக இருப்பதால் தனி பள்ளியறையும் கிடையாது.
சம்பந்தர் இத்தல இறைவனை பாடும் போது "உயிரனை அனைத்தையும் உய்விக்கும் உதவிநாயகன்' என பாடுகிறான். எனவே இறைவனுக்கு "உதவிநாயகன்', அம்மனுக்கு "உதவி நாயகி' என்ற பெயரும் உண்டு. மகாலட்சுமி தவம் செய்த நதியாக கெடிலமும், சரஸ்வதிதேவி சுவேத நதியின் வடிவில் கெடிலத்தில் சங்கமம் ஆகும் தல தீர்த்தமாகவும் விளங்குகின்றனர். பொதுவாக அனைத்து சிவன் கோயில்களிலும் பூஜை நேரத்தின் போது சிவலிங்கத்தை நாம் பார்த்து தரிசித்து கொண்டே இருக்கலாம். ஆனால் இத்தலத்தில்
இரண்டு, மூன்று விநாடிகள் மட்டுமே சிவன் தரிசனம் தந்து விட்டு திரைக்குள் மறைந்து கொள்கிறார்.
இறைவனும் இறைவியும் இணைந்திருப்பதால் அவர்களுக்கு காவல் புரிவதற்காக 11ருத்ரர்களில் ஒருவரான "பீமருத்ரர்' திரைச்சீலை வடிவில் உள்ளார். எனவே அவருக்குத்தான் முதல் அர்ச்சனை, பூஜை. அதன் பின் திரை நீக்கப்பட்டு
ஒரு சில வினாடிகள் உள்ளிருக்கும் சுவாமியை பார்க்க பக்தர்களுக்கு அனுமதி தரப்படுகிறது. விநாயகருக்கு மூஷிக வாகனம் எதிரில் இல்லாமல் அருகில் அமைந்துள்ளது விசேஷம். துர்க்கையின் பாதத்திற்கு கீழ் எருமை தலை கிடையாது, கையில் உள்ள கரம் திரும்பி உள்ளதுடன் கதாயுதமும் தாங்கியிருக்கிறாள்.
சிவனின் எதிரில் உள்ள மண்டபத்தில் நான்கு வேதங்களும் நான்கு தூண்களாக அமைந் துள்ளன. திரைக்கு பின் அம்மனும், சுவாமியும் இருப்பதால் எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டி நந்தி நேர் திசையில் உள்ளது.
வழக்கமான தலை சாய்த்த நிலை இல்லை. மதுரை, காஞ்சிபுரம், காசி, திருவாரூர், நாகப்பட்டினம் போன்று இங்கு அம்மனின் அம்புஜாட்சியின் ஆட்சி நடக்கிறது. அம்மனின் இரண்டு கைகளிலும் பூ. ஒன்றில் தாமரை. மற்றொன்றில் நீலோத்பவம் இருக்கிறது. பூ உள்ள அம்மன் களை தரிசிப்பதால்
துன்பம் பூப்போல்ஆகி விடும் என்பது ஐதீகம். அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தல முருகனை புகழ்ந்து பாடியுள்ளார். கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் கோயிலுக்கு எதிரில் உள்ள மலைமீது மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. பவுர்ணமி தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள்.
விநாயகர் முதல் சண்டிகேஸ்வரர்வரை அனைவருக் கும் ஆதித்ய விமானம் உள்ளது.

தல வரலாறு:
பிரகலாதனின் பேரன் மகாபலியின் தர்மநிலையை உலகிற்கு எடுத்துக் காட்ட மகாவிஷ்ணு விரும்பினார். எனவே காசிப மகரிஷிக் கும், அதிதேவிக்கும் 12வது குழந்தையாக வாமன பிரம்மசாரியாக மகாவிஷ்ணு அவதாரம் செய்தார். மகாபலியின் தர்மசிந்தனை குறித்த கர் வத்தை அடக்க மூன்றடி மண் கேட்டார்.ஒரு அடியால் பூமியையும், ஒரு அடியால் ஆகாயத்தையும் அளந்த பெருமாள், மூன்றாவது அடி எங்கே என கேட்டார். அதற்கு மகாபலி,"" இந்த உலகை ஆளும் என் னையே அளந்து கொள்ளுங்கள்,'' என விஷ்ணுவின் திருவடி முன் குனிந்தார். பக்திக்கு மெச்சிய திருமால் மகாபலியை சிரஞ்சீவிகளுள் ஒருவனாக் கினார். இப்படி மகாபலியை தர்மத்திற்காக விஷ்ணு அழித்திருந்தாலும் அதற்குரிய பழி திருமாலுக்கு ஏற்பட்டது. இந்த பழியைப்போக்க திருமால் இங்கு வழிபட்டதால் இத்தலத் திற்கு "திருமாணிக்குழி' என பெயர் ஏற்பட்டது.

குழந்தை வரம் வேண்டுபவர்கள் அமாவாசை தினத்தில் ஈரத்துணியுடன் அம்மனை 11முறை சுற்றி வரவேண்டும்.
பின் அம்மனுக்கு வெண்ணெய் நைவேத்தியம் செய்து அதை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

போன்: +91-4142-224 328

Pralayakaleeswarar temple at Pennadam near Pennadam (Vriddachalam, South Arcot) (Paadal Petra Stalam)

அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:பிரளயகாலேஸ்வரர் ( சுடர்க்கொழுந்துநாதர்)
அம்மன்:அழகிய காதலி (ஆமோதனாம்பாள், கடந்தை நாயகி)
பாடியவர்கள்:திருநாவுக்கரசர்
தேவாரப்பதிகம் 
பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றி செய்யும் என்னாவி காப்பதற்கு இச்சை யுண்டேல் இருங் கூற்றகல மின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி மேவு கொண்டல் துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே.
 -திருநாவுக்கரசர்.

தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 2வது தலம்

தல சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். வெள்ளத்திலிருந்து பூமியை காப்பதற்காக அன்று திசை திரும்பிய நந்தி இன்றும் வாசலை நோக்கி திரும்பியே இருக்கிறது. கலிக்கம்பநாயனார், மெய்கண்டார் அவதரித்ததும், மறைஞான சம்பந்தர் வாழ்ந்தும் இங்கு தான். கருவறையைச் சுற்றிலும் மூன்று பலகணிகள் அமைக்கப்பட்டுள்ளதால், மூலவரை மூலஸ்தானத்திற்கு வெளியே எந்த திசையில் நின்றாலும் வணங்கும் சிறப்பு பெற்றது.

கன்னியர்களாகிய பெண், காமதேனுவாகிய ஆ, யானையாகிய கடம் ஆகியோர் இங்கு பூஜை செய்ததால் இத்தலம் பெண்ணாகடம் ஆனது. தற்போது பெண்ணாடம் என அழைக்கப்படுகிறது.

தலபெருமை:
பிரளயகாலேஸ்வரர்: ஒருமுறை உலகம் சிவபெருமானால் அழிக்கப்பட்டது. அப்போது இத்தலம் தவிர அனைத்து இடங்களும் வெள்ளத்தால் மூழ்கியது.
இதையறிந்த தேவர்கள் இங்கு வந்து, உயிர்களை இத்தலத்தில் வைத்து காக்கும்படி வேண்டினர். சிவனும் நந்தியிடம் வெள்ளத்தை தடுக்க ஆணையிட்டார். சிவனைப் பார்த்திருந்த நந்தி, ஊரை நோக்கி திரும்ப வெள்ளத்தை திசை மாற்றி பூமியை காத்தது. எனவே இங்குள்ள இறைவன் பிரளயகாலேஸ்வரர் என அழைக்கப்பட்டார். கலிக்கம்பநாயனார் தன் மனைவியுடன் இணைந்து, வீட்டிற்கு வரும் சிவனடியார்களுக்கு பாத பூஜை செய்து வந்தார்.
ஒருமுறை அவரது மனைவி, சிவனடியார் ஒருவருக்கு பாத பூஜை செய்ய மறுத்து விட்டார். இதனால் கோபம் கொண்ட கலிக்கம்பர் மனைவியின் கையை வெட்டி விட்டார். கருணைக்கடலான் ஈசன் அந்த பெண்ணின் கையை மீண்டும் தந்தார்.

திருநாவுக்கரசர்: இவர் சிவனிடம் தன் உடலில் திரிசூல முத்திரையும், ரிஷப முத்திரையும் பொறிக்க வேண்டினார். இவரது வேண்டுகோளை ஏற்ற சிவன் இத்தலத்தில் தன் கைப்பட அவருக்கு முத்திரையை பொறித்தார்.

மலைக்கோயில்: சோழமன்னன் ஒருவன் இறைவனை தரிசிக்க இத்தலம் வரும்போது ஆற்றில் வெள்ளம் வந்தது. ஆற்றின் கரையில் இருந்தபடி சிவனை வேண்டிய போது, அவனுக்காக தன் இருப்பிடத்தை உயர்த்தி கரையில் இருந்தபடியே தரிசனம் கிடைக்க செய்தார். இப்போதும், 30 மீட்டர் உயரத்தில் உள்ள கட்டு மலைக்கோயில் என்ற மேட்டுப்பகுதி கோயிலுக்குள் உள்ளது.

தல வரலாறு:ஒருமுறை தேவலோகத்தில் சிவபூஜை செய்ய பூலோகத்து பூக்கள் தேவைப்பட்டது. தேவகன்னியர் இருவரை தேவேந்திரன் பூலோகத்திற்கு அனுப்ப, பூக்களை பறித்து வரச் சொன்னான்.
பூமிக்கு வந்த கன்னியர்கள் ஒரு நந்தவனத்தில் பூக்கள் இருப்பதைக் கண்டு அதை பறிக்கச் செல்கிறார்கள். அங்கிருந்த சிவலிங்கத்தைக் கண்டதும் பக்தியால் ஈர்க்கப்பட்டு, பறித்த பூக்களை அவருக்கு பூஜை செய்து அங்கேயே தங்கி விட்டனர். கன்னியரைக் காணாத இந்திரன் அவர்களை அழைத்து வர காமதேனு பசுவை அனுப்பினார். அது பூலோகம் வந்ததும் கன்னியர் செய்யும் பூஜையைக்கண்டு தானும் அவர்களுடன் சேர்ந்து ஈசனுக்கு பால் அபஷேகம் செய்து, அங்கேயே தங்கி விட்டது. மீண்டும், தன் ஐராவத வெள்ளையானையை அனுப்பினான் இந்திரன்.
யானை, பூமியில் இவர்கள் செய்யும் பூஜையை பார்த்து விட்டு தானும் தன் பங்கிற்கு, திறந்தவெளியில் இருந்த சிவலிங்கத்தை மறைத்து நின்று, வெயில் படாமல் பார்த்து கொண்டது. பொறுமை இழந்த இந்திரன் பூமிக்கு வந்துவிட்டான்.
தன்னால் அனுப்பபட்டவர்கள் அனைவரும் சிவபூஜை செய்வதை பார்த்து, அவனும் பூஜை செய்ய ஆரம்பத்து விட்டான். சிவனருள் பெற்று அனைவருடனும் தேவலோகம் சென்றான்.

கை சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்திற்கும் இத்தல சிவனை வழிபட்டால் நீங்கும் என்பது நம்பக்கை.
போன்:  +91- 4143-222 788, 98425 64768