Thursday, October 6, 2011

Erumbeeswarar Hill temple at Tiruchirappalli (Tiruverumbur) (Paadal Petra Stalam)

அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில்

மூலவர்: எறும்பீஸ்வரர்
அம்மன்: நறுங்குழல் நாயகி
பாடியவர்கள்: திருநாவுக்கரசர் 
தேவாரப்பதிகம் 
பன்னிய செந்தமிழறியேன் கவியேன் மாட்டேன் எண்ணோடு பண்நிறைந்த கலைகள் ஆய தன்னையும் தன்திறத்து அறியாப் பொறியிலேனைத் தன்திறமும் அறிவித்து நெறியும் காட்டி அன்னையையும் அத்தனையும் போல அன்பாய் அடைந்தேனைத் தொடர்ந்து என்னை ஆளாக் கொண்ட தென்எறும்பி யூர்மலைமேல் மாணிக்கத்தைச் செழும்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
-திருநாவுக்கரசர்


தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென் கரைத்தலங்களில் இது 7வது தலம்

தல சிறப்பு:இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
கருவறையில் சிவலிங்கம் புற்று வடிவில் மேடும், பள்ளமுமாக ஒரு முழுமையான அமைப்பு இல்லாமல் மணல் லிங்கமாக இருக்கிறது. எனவே, லிங்கத்திற்கு அபிஷேகம் கிடையாது. எண்ணெய் காப்பு மட்டுமே செய்கின்றனர். லிங்கம் இடப்புறத்தில் சாய்ந்தபடி இருக்க, மத்தியில் ஒரு பிளவு இருக்கிறது. பார்வைக்கு லிங்கம் இரண்டு பகுதிகளாக பிரிந்திருப்பது போல இருக்கிறது. இதில் வலப்புறம் உள்ள பகுதியை சிவன் அம்சம் என்றும், இடப்புறத்தை அம்பாள் அம்சம் என்றும் சொல்கின்றனர். இந்த லிங்கத்திற்கு "சிவசக்தி லிங்கம்' என்ற பெயரும் உண்டு. சிவமும், சக்தியும் ஒன்று என்பதை இந்த வடிவம் உணர்த்துகிறது.
தினமும் சுவாமிக்கு பூஜைகள் நடக்கும்போது கருவறையில் எறும்புகள் வரிசையாக ஊர்ந்து சென்று, நைவேத்தியப் பொருட்களை எடுத்துக்கொள்ளுமாம். இதனை சிவனே எறும்பு வடிவில் வருவதாக சொல்கிறார்கள். இந்த நேரத்தில் சுவாமியை வழிபடுவது மிகவும் விசேஷம்.
மன்மதனின் மனைவி ரதி, அழகு மீது தனக்கு ஆணவம் வந்துவிடக்கூடாது என்பதற்காக இங்கு சுவாமியை வழிபட்டுச் சென்றுள்ளாள்.
 பிரகாரத்தில் சொர்ணகால பைரவர் சன்னதி இருக்கிறது. மிகவும் உக்கிரமாக இருக்கும் இவரது சன்னதிக்கு நேரே கஜலட்சுமி தனிச்சன்னதியில் 
இருக்கிறாள். ஒரேசமயத்தில் இவ்விருவரையும் வேண்டிக்கொண்டால் பயங்கள் நீங்கி, குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.

 அம்பாள் நறுங்குழல் நாயகி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். இவள் நறுமணம் வீசும் கூந்தலுடன் இருக்கிறாள் என்பது ஐதீகம். எனவே, இப்பெயரில் அழைக்கின்றனர். இவளுக்கு தினமும் வேறுவேறு விதமாக அலங்காரம் செய்கின்றனர். இதனால் அம்பாள் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கோலத்தில் காட்சி தருகிறாள். இவளுக்கு முன்புறம் ஆதியில் வழிபடப்பட்ட அம்பாள் சிலை இருக்கிறது.
சிவன் கருவறைக்கு முன்புள்ள துவாரபாலகர்களில் ஒருவர் கோப முகத்துடனும், மற்றொருவர் சாந்த முகத்துடனும் இருக்கின்றனர். இக்கோயிலுக்கு வருபவர்கள் மனதில் கோபம், ஆணவம் போன்ற குணங்களைக் கொண்டிருந்தாலும் சுவாமியை வணங்கிய பின்பு அவர்கள் சாந்த கோலத்தை அடைகின்றனர் என்பதை இவ்வடிவம் காட்டுகிறது.
கோஷ்டத்தில் சிவனுக்கு பின்புறத்தில் சிவனும், மகாவிஷ்ணுவும் சேர்ந்த சங்கர நாராயணரும், ருத்ராட்ச பந்தலின் கீழ், நடராஜர் காலில் கொழுசு அணிந்த கோலத்தில் இருப்பதும் சிறப்பு.

தல வரலாறு:தாரகாசுரன் எனும் அசுரன் இந்திரலோகத்தை கைப்பற்றி இந்திரனையும், தேவர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அவனிடமிருந்து தங்களை காக்கும்படி தேவர்கள் பிரம்மாவிடம் முறையிட்டனர்.
அவர் பூலோகத்தில் இத்தலத்தில் குன்றின் மீது சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருப்பதாகவும், லிங்கத்திற்கு மலர் வைத்து பூஜை செய்து வழிபட்டால் அவர் அசுரனை அழிப்பார் என்றும் கூறினார். அதன்படி தேவர்கள் இத்தலம் வந்தனர். அசுரனின் கண்ணில் படாமல் இருப்பதற்காக சிறிய எறும்பின் வடிவம் எடுத்து சிவனை வழிபட்டனர்.
சிவனின் உச்சியில் (தலையில்) மலர் வைக்க பாணத்தின் மீது ஏறியபோது, லிங்கம் வழவழப்பாகவும், செங்குத்தாக இருந்ததால் அவர்களால் மேலே செல்ல முடியவில்லை. தேவர்கள் படும் துயரத்தை கண்ட சிவன், அவர்கள் எளிதாக ஏறிவர, மண்புற்று போல தன் உருவத்தை மாற்றிக் கொண்டதோடு, சற்றே இடப்புறமாக சாய்ந்தும் கொண்டார்.
பின், தேவர்கள் எளிதாக ஏறிச்சென்று சிவன் தலையில் மலர் வைத்து வழிபட்டனர். அவர்களுக்கு அருள் புரிந்த சிவன், தாருகாசுரனை அழித்து தேவர்களை காத்தார். "எறும்பீஸ்வரர்' என்ற பெயரும் பெற்றார்.


சுவாமியிடம் வேண்டிக்கொண்டால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாக உழைக்கும் குணம் உண்டாகும், துயரங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.  சுவாமிக்கு வஸ்திரம் அணிவித்து, சர்க்கரைப்பொங்கல் படைத்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

போன்:  +91-431 - 6574 738, +91-98429 - 57568.

Saturday, October 1, 2011

Ambravananathar Temple at Tiru (Vada) Maanthurai near Lalgudi (Paadal Petra Stalam)

அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:ஆம்ரவனேஸ்வரர்
அம்மன்: பாலாம்பிகை
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், அருணகிரியார்
தேவாரப்பதிகம் 
நீல மாமணி நித்திலத் தொத்தொடு நிரைமலர் நிரந்துந்தி ஆலி யாவரு காவிரி வடகரை மாந்துறை யமர்வானை மாலு நான்முகன் தேடியும் காண்கிலா மலரடி இணைநாளும் கோலம் ஏத்தி நின்றாடுமின் பாடுமின் கூற்றுவன் நலியானே.
-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 58வது தலம் 

தல சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் சூரியன் தன் ஒளியை சுவாமி மீது பரப்பி பூஜை செய்வது சிறப்பு.

திருச்சி பகுதியில் உள்ள பஞ்ச சிவாலயங்களில் இத்தலமும் ஒன்று. ஆதிசங்கரர் ஆம்ரவனேஸ்வரரை பூஜை செய்து வணங்கியுள்ளார். இவர் கோஷ்டத்தில் தெற்கு பார்த்தபடி இருக்கிறார். மிருகண்டு மகரிஷியும் சுவாமியை வணங்கியுள்ளார்.
திருஞானசம்பந்தர் தனது இரண்டாம் திருமுறை பாடலில் சுவாமியை குறித்து பதிகம் பாடியிருக்கிறார். கோஷ்டத்தில் உள்ள துர்க்கை சாந்த கோலத்தில் இருக்கிறாள். இவளது காலுக்கு கீழே மகிஷாசுரனும் இல்லை. பிரகாரத்தில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் கிழக்கு பார்த்தபடி இருக்கிறார். இவரை அருணகிரியார் திருப்புகழில் பாடியுள்ளார்.
மாமரங்கள் நிறைந்திருந்த தலம் என்பதாலும், மானுக்கு அருள் புரிந்த சிவதலம் என்பதாலும் இத்தலம் "மாந்துறை' என வழங்கப்படுகிறது.

தலபெருமை:  தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் மகளாக சமுக்யா தேவி பிறந்தாள். பேரழகு கொண்டவளாக இருந்த அவளை சூரியன் மணந்து கொண்டார். அவள் சூரியனுடன் மிகுந்த அன்பு கொண்டு அவருடன் வாழ்ந்து வந்தாள்.
நாளுக்குநாள் சூரியனின் உக்கிரம் அதிகரிக்கவே அவளால் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவள் சூரியனிடம் முறையிட்டும் அவர் உக்கிரத்தை குறைக்கவில்லை. ஒரு காலகட்டத்தில் அவரது வெப்பத்தை தாங்கவே முடியாது என்ற நிலைக்கு வந்த சமுக்யாதேவி, தான் தந்தையிடமே வந்துவிடுவதாக விஸ்வகர்மாவிடம் கேட்டாள். அவரோ மகளுக்கு ஆறுதல் கூறி சாந்தப்படுத்தினார். ஆனாலும் அவளால் கணவனின் உக்கிரத்தை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. எனவே, கணவனைப் பிரிந்து செல்ல முடிவெடுத்தாள்.
தான் சென்றுவிட்டால் கணவன் மனம் வருந்துவார் என்று எண்ணிய அவள் தன்னில் இருந்து சற்றும் வித்தியாசம் காணமுடியாதபடி தன் நிழலில் இருந்து ஒரு உருவத்தை உண்டாக்கினாள். அவளை தனக்கு பதிலாக சூரியனின் மனைவியாக இருந்து பணிவிடை செய்யும்படி பணித்தாள். (சமுக்யாதேவியால் நிழல் வடிவமாக உருவாக்கப்பட்டவளே சாயாதேவி). பின் அவள் சூரியனைப்பிரிந்து தன் தந்தையிடமே வந்து சேர்ந்தாள். விஸ்வகர்மா அவளுக்கு பலவாறு எடுத்துச் சொல்லியும் அவள் கணவனிடம் செல்லவில்லை. தந்தையின் அனுமதியில்லாமலேயே அவருடன் தங்கியிருந்ததால் மனம் கலங்கிய சமுக்யாதேவி குதிரை வடிவம் எடுத்து இத்தலம் வந்து தன் கணவனின் உக்கிரம் குறையவும், அவரது உக்கிரத்தை பொறுத்துக் கொண்டு மீண்டும் கணவனுடன் சேரவும் சிவனை வேண்டி தவம் செய்தாள்.
இதனிடையே சாயாதேவியின் நடத்தையின் வித்தியாசத்தைக் கண்ட சூரியன், அவள் சமுக்யாதேவி அல்ல என அறிந்து கொண்டார். அவர் விஸ்வகர்மா மூலமாக தன் மனைவி பிரிந்து வந்ததை தெரிந்து கொண்டு, அவரிடமே தன் உக்கிரத்தையும் குறைத்தார். பின் அவர் இத்தலம் வந்து சிவனை வழிபட்டு சமுக்யாதேவியுடன் மீண்டும் சேர்ந்தார். இதன் அடிப்படையில் இங்கு நவக்கிரக சன்னதியில் சூரியன் சமுக்யாதேவி மற்றும் சாயாதேவி ஆகிய இருவருடன் இருப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. அருகிலேயே சூரியன் தனியாகவும் இருக்கிறார். பிற கிரகங்கள் அனைத்தும் சூரியனைப் பார்த்தபடியே இருக்கிறது.

சதுர்த்தி பூஜை: மான்களாக பிறந்த அசுர தம்பதியர் மற்றும் மகரிஷிக்கு சிவன் ஒரு அகங்கார சதுர்த்தியன்று (செவ்வாய்க்கிழமை சதுர்த்தி) விமோசனம்  தந்ததாக ஐதீகம். இதன் அடிப்படையில் இங்கு சுவாமிக்கு செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இந்நேரத்தில் சுவாமியை வழிபட்டால் குறைவிலாத வாழ்க்கை கிடைக்கும், பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தல வரலாறு: 
முன்னொரு காலத்தில் இப்பகுதி மாமரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. இவ்வனத்தில் தவம் செய்த மகரிஷி ஒருவர் சிவ அபச்சாரம் செய்ததால் மானாக பிறக்கும்படி சாபம் பெற்றார். அவர் இவ்வனத்திலேயே, தங்களின் முற்பிறவியில் செய்த பாவத்தால் மான்களாக பிறந்த அசுரகுல தம்பதியர்களுக்கு பிறந்தார்.
ஒருநாள் குட்டி மானை விட்டுவிட்டு, தாய் மானும், தந்தை மானும் வெளியே சென்றுவிட்டன. அவை இரைதேட சென்ற இடத்தில் வேடுவ தம்பதி வடிவில் வந்த சிவனும், பார்வதியும் அவற்றை அம்பால் வீழ்த்தி சாபவிமோசனம் தந்தனர்.
இரவு நெடுநேரம் ஆகியும் தாய் மான் இருப்பிடத்திற்கு திரும்பாததால் கலங்கிய குட்டிமான் கண்ணீருடன் காத்துக் கொண்டிருந்தது. நேரம் ஆக, ஆக மானுக்கு பசியெடுக்கவே அது அலறியது. சிவனும், பார்வதியும் அதனைப் பெற்ற மான் வடிவில் இங்கு வந்தனர். பசியால் வாடியிருந்த குட்டி மானுக்கு பார்வதி தேவி பால் புகட்டினார். தந்தை வடிவில் வந்த சிவன் அதனை ஆற்றுப்படுத்தினார். சிவன், பார்வதியின் தரிசனம் பெற்ற குட்டி மான் தன் சாபத்திற்கு விமோசனம் பெற்று மீண்டும் மகரிஷியாக மாறியது. அவரது வேண்டுதலுக்காக சிவன் இத்தலத்தில் சுயம்புவாக எழுந்தருளினார்.
பார்வதிதேவியும் இங்கேயே தங்கினாள்.

அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் பால தோஷத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு குணமாகும் என்பது நம்பிக்கை.
கிரக தோஷம் உள்ளவர்கள் நவக்கிரக சன்னதியில் வேண்டிக்கொள்கிறார்கள்.

போன்: +91-99427 40062, 94866 40260

Vaaseesar Temple at Tiruppachur near chennai (Paadal Petra Stalam)

அருள்மிகு வாசீஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:வாசீஸ்வரர்
அம்மன்: தங்காதலி
பாடியவர்கள்: அப்பர், சுந்தரர், சம்பந்தர்
தேவாரப்பதிகம் 
நாறு கொன்றையும் நாகமும் திங்களும் ஆறும் செஞ்சடை வைத்த அழகனார் காறு கண்டத்தர் கையதோர் சூலத்தர் பாறின் ஓட்டினர் பாசூர் அடிகளே.
-அப்பர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 16வது தலம். 

தல சிறப்பு: கருவறையில் சிவன் சுயம்பு லிங்கமாக சதுர வடிவ பீடத்தில் காட்சி தருகிறார். இவர், தலையில் வெட்டுப்பட்ட தடத்துடன் தன் உடலில் மேல் பகுதி மட்டும் இடப்புறத்தில் சற்று நகர்ந்தபடியான கோலத்தில் இருப்பது சிறப்பு. காயம்பட்ட லிங்கம் என்பதால் இவரை கையால் தொட்டு பூஜைகள் செய்யப்படுவதில்லை. அர்த்த மண்டபத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் இருக்கிறது. மூங்கில் வனத்தின் அடியில் தோன்றிய சிவன் என்பதால் இவருக்கு "பாசுரநாதர்' என்றொரு பெயரும் உண்டு. பாசு என்றால் மூங்கில் என்று பொருள். சிவன் இங்கு லிங்க வடிவில், "பெருமாள் வினை தீர்த்த ஈஸ்வரன்' என்ற பெயரில் தனியாகவும் இருக்கிறார்.

தாழம்பூ பூஜை : தனது தலை முடியைக் கண்டதாக பொய் சொன்ன (பிரம்மனுக்காக பொய் சொன்னதால்) தாழம்பூவை பூஜைகளில் இருந்து ஒதுக்கி வைத்தார் சிவன். தாழம்பூ சிவனிடம் தன்னை மன்னித்து பரிகாரம் வேண்டவே சிவராத்திரி நாளில் மட்டும் தனது பூஜைக்கு பயன்படும்படி சிவன் வரம் கொடுத்தாராம். இதன் அடிப்படையில் இக்கோயிலில் சிவராத்திரி தினத்தன்று இரவு ஒரு கால பூஜையில் மட்டும் தாழம்பூவை சிவனின் உச்சியில் வைத்து பூஜை செய்கின்றனர். இந்த நேரத்தில் சிவனை தரிசித்தால் ஆணவம், பொய் சொல்லும் குணங்கள் மறையும் என்கிறார்கள்.

தங்காதலி அம்பாள் : தட்சனின் யாகத்திற்கு சென்றதால் பார்வதி தேவியை பூலோகத்தில் சாதாரண பெண்ணாக பிறக்கும்படி சபித்தார் சிவன். சாபத்தால் பூலோகத்தில் இத்தலத்திற்கு வந்த அம்பாள், சிவனை வேண்டி தவம் செய்தாள். அவளுக்கு இரங்கிய சிவன், அம்பாளை "தன் காதலியே!' என்று சொல்லி அன்போடு அழைத்து அவளை மன்னித்து அருளினாராம். இதனால் இங்குள்ள அம்பாளை "தங்காதலி அம்பாள்' என்கின்றனர். இவளிடம் வேண்டிக்கொண்டால் தம்பதியர்களுக்குள் ஒற்றுமை உண்டாகும் என்பது நம்பிக்கை. அம்பாளின் பெயரால் இவ்வூருக்கு "தங்காதலிபுரம்' என்ற பெயரும் உண்டு.

விநாயகர் சபை : விஷ்ணு அசுரர்களை அழித்த தோஷத்தால் தன்னிடமிருந்த 16 செல்வங்களில் 11 செல்வங்களை இழந்தாராம். அந்த செல்வங்களை பெறுவதற்காக சிவனை வேண்டினார். அவரது ஆலோசனையின்படி இத்தலத்தில் 11 விநாயகர்களை பிரதிஷ்டை செய்து வணங்கி இழந்த செல்வங்களை பெற்றார் என்றொரு வரலாறு உண்டு. இதனை உணர்த்தும் விதமாக இக்கோயிலில் 11 விநாயகர்கள் ஒரே இடத்தில் சிறு மண்டபத்தின் கீழ் காட்சி தருகின்றனர். இதனை, "விநாயகர் சபை' என்கின்றனர். இதில் மூன்று விநாயகர்கள் கிழக்கு பார்த்தும், இவர்களுக்கு பின்புறத்தில் இருபுறமும் சிறிய விநாயகர்களுடன் நடுவில் ஒரு பெரிய விநாயகரும், இடப்புறத்தில் ஐந்து விநாயகர்களும் இருக்கின்றனர். அருகிலேயே கேது பகவான் தனியே இருக்கிறார்.
திரிபுராந்தகர்களை அழிக்கச் சென்ற சிவன் விநாயகரை வணங்காமல் செல்லவே அவரது தேர்ச்சக்கரத்தின் அச்சை முறித்து விட்டார் விநாயகர். அவர் ஒரு சபை அமைத்து சிவனிடம், தன்னை வணங்காமல் சென்றது ஏன்? என கேட்டு விசாரணை செய்ததாகவும் விநாயகர் சபை உண்டானதற்கு மற்றொரு வரலாறு சொல்கின்றனர்.

சொர்ண காளி : இப்பகுதியை ஆட்சி செய்து வந்த குறும்பன் எனும் சிற்றரசன் ஒருவன் மன்னனுக்கு சரியாக வரி கட்டாமல் இருந்தான். எனவே அவனுடன் போரிட்டு வரியை வாங்க சோழ மன்னன் ஒருவன் குறும்பன் மீது படையெடுத்தான். காளி பக்தனான குறும்பன் அவளை ஏவி விட்டு சோழ படைகளை விரட்டியடித்தான். சோழ மன்னன் சிவனிடம் தனக்கு உதவும்படி வேண்டினான். அவனுக்காக சிவன் காளியை அடக்க நந்தியை அனுப்பி வைத்தார். பூலோகம் வந்த நந்தி காளியுடன் போரிட்டு அதனை வெற்றி பெற்றது. மேலும் காளியின் இரண்டு கால்களிலும் பொன் விலங்கை பூட்டியும் அதனைக் கட்டுப்படுத்தினார். பின் மன்னன் இப்பகுதியை மீண்டும் கைப்பற்றினான்.
நந்தியால் அடக்கப்பட்ட சொர்ணகாளி இக்கோயில் பிரகாரத்தில் நான்கு கைகளுடன் தனியே நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளது கால்களில் விலங்கு போடப்பட்டிருக்கிறது. பவுர்ணமி தோறும் மாலை வேளைகளில் இவளுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

தல வரலாறு:
பல்லாண்டுகளுக்கு பின்பு இத்தலம் மூங்கில் மரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. அருகில் உள்ள புல்வெளியில் மேய்ச்சலுக்கு வந்த பசுக்களில் ஒன்று மட்டும் தொடர்ந்து இங்கு ஒரு சிறு மேட்டின் மீது அடிக்கடி பால் சொரிந்தது. இதனைக் கண்ட இடையன் இத்தகவலை மன்னரிடம் தெரிவித்தான். மன்னன் மண்ணிற்கு அடியில் தோண்டி பார்க்க உத்தரவிட்டான்.
காவலர்கள் இவ்விடத்தில் வாசி எனும் கருவியால் தோண்டி பார்த்தனர். அப்போது மண்ணிற்கு அடியில் இருந்து ரத்தம் வெளிப்பட்டது. அதிர்ந்த மன்னன் அடியில் பார்த்தபோது சிவன், சுயம்பு லிங்கமாக இருந்தார். பயந்துபோன மன்னன் அரண்மனைக்கு திரும்பி விட்டான்.
மறுநாள் மன்னனின் எதிரிகள் அவனை பழி தீர்ப்பதற்காக கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்றை குடத்தில் இட்டு அவனிடம் கொடுத்து விட்டனர். மன்னன் குடத்தை திறந்து பார்ப்பதற்கு முன்பு அங்கு வந்த ஒரு பாம்பாட்டி குடத்தில் இருந்த பாம்பை பிடித்துவிட்டு ஏதும் சொல்லாமல் சென்றுவிட்டார்.
அன்றிரவில் தானே பாம்பாட்டியாக வந்ததையும், மூங்கில் காட்டிற்குள் சுயம்புவாக எழுந்தருளியுள்ளதையும் மன்னனுக்கு உணர்த்தினார் சிவன். அதன்பின் மன்னன் இத்தலத்தில் கோயில் எழுப்பினான்.
வாசி எனும் கருவியால் வெட்டுப்பட்ட சிவன் என்பதால் இவர், "வாசீஸ்வரர்' என்றழைக்கப்படுகிறார்.


புராண வரலாறு : மது, கைடபர் எனும் இரு அசுரர்கள் பிரம்மாவின் வேதத்தை கடலுக்கு அடியில் மறைத்து வைத்து விட்டனர். இதனால் பிரம்மாவால் படைப்புத் தொழிலைசெய்யமுடியவில்லை. எனவே,  மகாவிஷ்ணு மத்ஸ்ய (மீன்) அவதாரம் எடுத்துச் சென்று அவர்களை அழித்து வேதத்தை மீட்டு வந்தார். இதனால் அவரை தோஷம் பிடித்தது. இத்தோஷம் விலக சிவனிடம் வேண்டினார். அவர் பூலோகத்தில் இத்தலத்தை சுட்டிக்காட்டி தன்னை வழிபட்டுவர தோஷம் நீங்கும் என்றார். அதன்படி மகாவிஷ்ணு இங்கு வந்தார். இங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டு தோஷம் நீங்கப்பெற்றார். சிவனும் சுயம்புவாக எழுந்தருளினார்.

தடைபட்ட திருமணங்கள் நடக்கவும், தோஷங்கள் நீங்கவும் பிரார்த்திக்கின்றனர்.  பிரார்த்தனை நிறைவேறியவுடன் விநாயகர் சபையில் 11, ஸ்ரீசக்கரத்தில் 5 நெய் தீபங்கள் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

போன்: +91- 98944 - 86890

Oonreeswarar Temple at Poondy near Chennai (Padal Petra Stalam)

அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோயில்

மூலவர்: ஊன்றீஸ்வரர்
அம்மன்: மின்னொளி அம்பாள்
பாடியவர்கள்:சுந்தரர்
தேவாரப்பதிகம் 
பிழையுளன பொறுத்திடுவர் என்றடியேன் பிழைத்தக்கால் பழியதனைப் பாராதே படலம் என்கண் மறைப்பித்தாய் குழைவிரவு வடிகாதா கோயிலுளாயே என்ன உழையுடையான் உள்ளிருந்து உளோம்போகீர் என்றானே.
-சுந்தரர்

தேவாரப்பதிகம் பெற்ற தொண்டை நாட்டு  தலங்களில் 17 வது தலம்.

தல சிறப்பு: சிவன் கிழக்கு பார்த்தபடி சுயம்பு லிங்கமாக அருளுகிறார். சுந்தரருக்கு ஊன்றுகோல் கொடுத்தவர் என்பதால் இவருக்கு "ஊன்றீஸ்வரர்' என்று பெயர். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வித்தியாசமாக இவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுகின்றனர். கருவறைக்கு முன்புறம் உள்ள நந்தியின் வலது கொம்பு ஒடிந்தே இருக்கிறது. அருகில் சுந்தரர் இடது கையில் ஊன்றுகோல் வைத்தபடி காட்சி தருகிறார். கண்பார்வை இழந்த கோலத்தில் இருக்கும்படியாக இவரது சிலை சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இங்குள்ள விநாயகர் வலம்புரி விநாயகர். இக்கோயில் முதலில் பூண்டிக்கு அருகே உள்ள திருவளம்புதூர் ஏரியின் அருகே இருந்தது. பிற்காலத்தில் இக்கோயில் பூண்டி பகுதியின் மத்தியில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு பிரதான வாசலுக்கு நேரே மின்னொளி அம்பாள் சன்னதி இருக்கிறது. ஒரே இடத்தில் நின்று சுவாமி, அம்பாள் இருவரையும் வழிபடும்படி அமைந்துள்ளது. பிரகாரத்தில் சண்முகர் ஆறு முகங்களுடன் வள்ளி, தெய்வானையுடனும், நின்ற நிலையில் நவக்கிரகங்கள், மகாலட்சுமி ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் இருக்கின்றனர். பைரவர் எட்டு கைகளுடன் கால பைரவராக தெற்கு பார்த்தபடி இருக்கிறார்.
இவருக்கு அஷ்டமி நேரத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடக்கிறது. இக்கோயிலுக்கு அருகிலேயே பாடல் பெற்ற தலங்களான கூவம், திருப்பாசூர் ஆகிய தலங்கள் அமைந்திருக்கிறது.

 தலபெருமை: 

மின்னொளி அம்பாள்: சுந்தரர் கண் தெரியாமல் ஊன்றுகோலை வைத்துக்கொண்டு தடுமாறியபோது, அம்பாள் அவருக்கு வழிகாட்டி கூட்டிச் செல்வதற்காக கிளம்பினாள். ஆனால், சிவன் தடுத்து விட்டாராம். இதனை உணர்த்தும் விதமாக அம்பாளின் இடது கால் சற்றே முன்புறம் நகர்ந்து இருக்கிறது.
பின் அம்பாள் சுந்தரரிடம், "மனிதர்கள் தவறு செய்வது இயற்கை. ஒவ்வொருவர் செய்யும் தவறுகளும் அவர்களுடைய ஊழ்வினைகளுக்கேற்பவே நிகழ்கிறது. தற்போது கண்கள் பறிக்கப்பட்டிருப்பதும் ஒரு ஊழ்வினைப்பயனே. எனவே, கலங்காது செல்லுங்கள்.
தகுந்த காலத்தில் அவர் அருளால் பார்வை கிடைக்கும்' என்று தாய்மை உணர்வுடன் இனிய சொற்கள் பேசி சுந்தரரை சாந்தப்படுத்தினாள். மேலும் சுந்தரர் தடுமாறாமல் நடந்து செல்ல வழியில் மின்னல் போன்ற ஒளியை காட்டி வழிகாட்டினாளாம். இதனால் அம்பாள் "மின்னொளி அம்பாள்' என்றும், "கனிவாய்மொழிநாயகி' என்றும் அழைக்கப்படுகிறாள்.
இந்த அம்பாள் மிகவும் வரப்பிரசாதியானவள்.

நம்பிக்கை கோயில்: வாழ்க்கையில் பிடிப்பு இல்லாதவர்கள், மன உளைச்சலால் அவதிப்படுபவர்கள், குடும்பம், தொழிலில் விருத்தி இல்லாதவர்கள் சுவாமியிடம் வேண்டிக்கொண்டால் மன அமைதியும், வாழ்க்கையின் மீது விருப்பமும் வரும் என்கிறார்கள். வாழ்க்கையே இருண்டுவிட்டதாக கவலையில் இருப்பவர்களுக்கு அம்பாள் ஒளி கொடுத்து வாழ வைக்கிறாள் என்பது நம்பிக்கை.
பொதுவாக தங்கள் மீதே நம்பிக்கை இல்லாதவர்களுக்கு நம்பிக்கை தந்து அவர்களை வாழவைக்கும் தலமாக இக்கோயில் திகழ்கிறது. எனவே, இக்கோயிலை "நம்பிக்கை கோயில்' என்றும் சொல்கின்றனர்.

தல வரலாறு:
திருவாரூரில் பரவையாரை மணந்து கொண்ட சுந்தரர், திருவொற்றியூரில் சிவசேவை செய்து வந்த சங்கிலியார் எனும் பெண்ணை சிவனை சாட்சியாக வைத்து அவளைவிட்டு பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்து மணந்து கொண்டார். ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவொற்றியூரை விட்டு திருவாரூருக்கு கிளம்பினார்.
சுந்தரர் திருவொற்றியூர் தலத்தின் எல்லையை விட்டு வெளியேறியபோது, சிவன் அவரது இரண்டு கண்களையும் பறித்துக் கொண்டார். சத்தியத்தை மீறியதால் தன் கண்கள் பறிபோனதை உணர்ந்த சுந்தரர் சிவனிடம் தனக்கு கண்களை தரும்படி வேண்டினார். அவரோ கண்கள் தரவில்லை.
இரண்டு கண்களும் தெரியாமல் தட்டுத்தடுமாறியபடியே திருவாரூர் செல்லும் வழியில் இத்தலம் வந்தார் சுந்தரர். இங்கு சிவனிடம் தனக்கு கண்கள் தரும்படி கேட்டார். சிவனோ அமைதியாகவே இருந்தார். சுந்தரர் விடவில்லை.
பரம்பொருளாகிய நீங்கள் இங்குதான் இருக்கிறீர்களா? இருந்தால் எனக்கு கண் தருவீர்களே! என்று சொல்லி வேண்டினார். சுந்தரரின் நிலையைக் கண்டு இரங்கிய சிவன், அவருக்கு ஒரு ஊன்று கோலை மட்டும் கொடுத்து "நான் இங்குதான் இருக்கிறேன். நீங்கள் செல்லுங்கள்' என்றார்.

தன் நண்பனான சிவன் தனக்கே அருள் செய்யாமல் விளையாடுகிறாரே என்று எண்ணிய சுந்தரருக்கு கோபம் வந்துவிட்டது. அவர் தனக்கு கண் தரும்படி சிவனிடம் வாக்குவாதம் செய்தார். சிவனோ இறுதிவரையில் அவருக்கு கண் தரவில்லை.
கோபம் அதிகரித்த சுந்தரர், சிவன் கொடுத்த ஊன்றுகோலை ஓங்கி வீசினார். அப்போது ஊன்றுகோல் அங்கிருந்த நந்தியின் மீது பட்டு விட்டது. இதனால் நந்தியின் கொம்பு ஒடிந்து விட்டது. பின் சுந்தரர் தன் யாத்திரையை தொடர்ந்து இங்கிருந்து காஞ்சிபுரம் சென்றார்.

திருமணத்தடை உள்ளவர்கள், கண் பார்வையில் குறைபாடு கொண்டவர்கள் சுவாமி, அம்பாளுக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.  சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி, சிறப்பு அபிஷேகங்கள் செய்து வழிபடலாம்.

போன்: +91- 44 - 2763 9725, 2763 9895.

Tripurantakaswamy Temple at Koovam (Kadambattur) near Tiruvallur (Padal Petra Stalam)

அருள்மிகு திரிபுராந்தகர் திருக்கோயில்

மூலவர்:திரிபுராந்தகர்
அம்மன்:திரிபுராந்தக நாயகி
பாடியவர்கள்: திருஞான சம்பந்தர்
தேவாரப்பதிகம் தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம் வகுத்தவன் வளர்பொழில் கூக மேவினான் மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்தறச் செகுத்தவன் உறைவிடம் திருவிற் கோலமே.
-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 14வது தலம்

தல சிறப்பு: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.இப்பகுதியில் மழை வரும்போது சுவாமியின் மேனி வெண்ணிறமாகவும், ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு சிவப்பு நிறமாகவும் மாறுவதாக சொல்கிறார்கள். சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ள பஞ்சபூத தலங்களில் இது "அக்னி தலம்' ஆகும்.

இங்குள்ளவிமானம் கஜபிருஷ்டம் எனப்படுகிறது. திருஞானசம்பந்தர் தனது பதிகங்களில் சிவன் திரிபுராந்தக அசுரர்களை வதம் செய்த வரலாறை குறித்து பாடியுள்ளார். சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகனும், வித்யுன்மாலியும் கருவறைக்கு முன்புறம் துவார பாலகர்களாக இருக்கின்றனர்.
ராஜகோபுரத்திற்கு நேரே காத்தல் தாண்டவம் ஆடிய நடராஜர் தனிச்சன்னதியில் இருக்கிறார். அம்பாள், சுவாமிக்கு வலது புறத்தில் தனிச்சன்னதியில் கிழக்கு பார்த்தபடி நின்ற கோலத்தில் இருக்கிறாள். இதனை சுவாமி, அம்பாளை திருமணம் செய்த கோலம் என்கிறார்கள்.
இவளுக்கு முன்புறத்தில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அம்பாளிடம் வேண்டிக்கொண்டால் திருமணத்தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
அம்பாளின் கருவறை விமானம், கோபுரம் போன்ற அமைப்பில் வித்தியாசமாக இருக்கிறது. பிரகாரத்தில் சண்முகர் ஆறு முகங்களுடன் வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இங்குள்ள பைரவர் நாய் வாகனம் இல்லாமல் காட்சி தருகிறார்.

தலபெருமை:

வில் ஏந்திய சிவன்: சுவாமியின் தலையில் கூரம் பட்ட இடத்தில் காயத்தழும்பு இருப்பதால், லிங்கத்தை தொட்டு பூஜை செய்வதில்லை. தலைக்கு மேல் பச்சைக் கற்பூரம் மட்டும் தூவி, பாலபிஷேகம் செய்கின்றனர்.
இத்தலத்தில் சிவன் தவக்கோலத்தில் இருக்கிறாராம். எனவே, இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் குறிப்பாக தவளைகள் மட்டும் வாழ்வதில்லை. தவளை எழுப்பும் சத்தம் சிவ தவத்திற்கு தொந்தரவாக இருக்கும் என்பதால் தவளைகள் வசிப்பதில்லை என்கிறார்கள்.
திரிபுராந்தக வதத்திற்கு சென்ற சிவன் என்பதால் சுவாமி "திரிபுராந்தகர்' என்றும், அம்பாளை "திரிபுராந்தகி அம்மன்' என்றும் பெயர் பெற்றுள்ளனர்.
சக்கர அச்சு முறிந்து நின்றபோது, போருக்கு கையில் வில்லுடன் சென்ற சிவன், தேரில் இருந்து இறங்கி கையில் வில் ஏந்திய கோலத்திலேயே இங்கு நின்றார். எனவே, இங்குள்ள சிவனுக்கு "திருவிற்கோலநாதர்' என்றும், தலத்திற்கு "திருவிற்கோலம்' என்றும் பெயர் உள்ளது.
சித்திரையில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தின் போது மட்டும் சுவாமி வில்லை ஏந்தியபடி காட்சி தருகிறார். சிவனின் இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது. தர்க்க மாதா: முஞ்சிகேசர், கார்கோடர் என்ற இரு முனிவர்களின் வேண்டுதலுக்காக சிவன், திருவாலங்காட்டில் ஊர்த்துவ தாண்டவ நடனம் ஆடி காளியின் செருக்கை அடக்கினார். இதனால் அவள் மிகுந்த கோபத்துடன் இருந்தாள். அவளிடம் சிவன், தான் இத்தலத்தில் ரக்ஷா (காத்தல்) நடனம் ஆடப்போவதாகவும், அப்போது தன்னை தரிசித்து கோபம் அடங்கி மகிழும்படி கூறினார். அதன்படி சிவன் இத்தலத்தில் காத்தல் நடனம் ஆடியபோது, காளி சுவாமியை தரிசித்து அமைதியடைந்தாள்.
இவள் இக்கோயிலுக்கு அருகில் சற்று தூரத்தில் தனிச்சன்னதியில் "தர்க்க மாதா' என்ற பெயரில் அருளுகிறாள். சிவனுடன், தர்க்கம் புரிந்து அவருடன் போட்டியிட்டவள் என்பதால் இவளுக்கு இப்பெயர் ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.

தல வரலாறு:
பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய திரிபுர (மூன்று) அசுரர்கள் சேர்ந்து தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தினர்.
அசுரர்களை எதிர்க்க முடியாத தேவர்கள், அவர்களை அழித்து தங்களை காக்கும்படி சிவனிடம் வேண்டினர். தேவர்களை காப்பதற்காக சிவன் அசுரர்களை அழிக்க ஒரு வில்லை ஏந்திக்கொண்டு தேரில் சென்றார்.
எந்த ஒரு செயலை செய்யும் முன்பாக முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கிவிட்டு அல்லது மனதிலாவது நினைத்துவிட்டோதான் செல்ல வேண்டும் என்பது நியதி.
இது சிவனுக்கும் பொருந்தும். ஆனால் அசுரர்களை அழிக்க வேண்டும் என்ற வேகத்தில் விநாயகரை நினைக்காமல் சென்றார் சிவன். அவருடன் சென்ற தேவர்களோ சிவனே நம்முடன் இருக்கும்போது வேறென்ன வேண்டும்? என்ற எண்ணத்தில் அவரை வணங்காமல் சென்றனர்.
கோபம் கொண்ட விநாயகர், அச்சிறுப்பாக்கம் தலத்தில் தேர்ச்சக்கரத்தின் அச்சை முறித்து விட்டார். அப்போது தேரின் கூரம் (ஏர்க்கால்) இத்தலத்தில் முறிந்து நின்றது. இது விநாயகரின் செயல்தான் என உணர்ந்த சிவன், அவரை மனதில் நினைத்து செல்லும் செயல் சிறப்பாய் நடந்திட காவலனாய்  இருக்கும்படி வேண்டினார். பின், விநாயகர் தேர் அச்சை சரிசெய்ய, சிவன் திரிபுர அசுரர்களை அழித்தார். கூரம் (ஏர்க்கால்) பூமியில் பதிந்த இடத்தில் சிவன் சுயும்புவாக எழுந்தருளினார். கூரம் முறிந்து நின்ற இடமென்பதால் இத்தலம் "கூரம்' என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் "கூவம்' என்று மருவியது.

திரிபுராந்தகரிடம் வேண்டிக்கொண்டால் ஆளுமைத் திறன் வளரும், தீய குணங்கள், ஆணவம், துன்பங்கள் நீங்கும், குடும்பம் ஒற்றுமையுடன் இருக்கும் என்பது நம்பிக்கை.
சிவனின் தேர் அச்சை முறித்த விநாயகர் "அச்சிறுத்த விநாயகராக' பிரகாரத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். புதிய செயல்கள் தொடங்கும் முன்பு இவரிடம் வேண்டிக்கொண்டால் அச்செயல் தடையின்றி நடக்கும் என்பது நம்பிக்கை.
சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரங்கள் சாத்தி, சிறப்பு அபிஷேகங்கள் செய்கின்றனர்.

போன்: +91- 44 - 2752 3019, 98423 - 09534.

Ratnasabhapathi Temple at Tiruvalankadu near chennai (Paadal Petra Stalam, Cosmic Dance, Ratna Sabha)

அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:வடாரண்யேஸ்வரர், தேவர்சிங்கப்பெருமான்
அம்மன்: வண்டார்குழலி
பாடியவர்கள்:திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர்
தேவாரப்பதிகம் 

கூடினார் உமைதன் னோடே குறிப்புடை வேடங் கொண்டு சூடினார் கங்கையாளைச் சுவறிடு சடையர் போலும் பாடினார் சாமவேதம் பைம்பொழில் பழனை மேயார் ஆடினார் காளி காண ஆலங்காட்டு அடிகளாரே.
-திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 15வது தலம்

தல சிறப்பு: சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நடராஜப்பெருமான் நித்தமும் நடமாடும் பஞ்ச சபைகளுள் இது ரத்தின சபை.இறைவனால் "அம்மையே' என அழைக்கப்பெற்று சிறப்பிக்க பெற்ற காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து வந்து நடராஜரின் திருவடியின் கீழிருந்து, சிவனின் ஆனந்த இன்ப வெள்ளத்தில் திளைத்திருக்கும் திருக்கோயில் இது.

முன் காலத்தில் ஆலமரக்காடாக இருந்து அதில் இறைவன் சுயம்புவாக தோன்றி, நடனம் செய்த படியால் இத்தல இறைவன் "வடஆரணயேஸ்வரர்' என்றழைக்கப்படுகிறார்.

காரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம் பெற்ற சிறப்புடையது. தாமரை மலர் விரித்தாற் போல் அமைந்து அதன் மேல் அமைந்துள்ள "கமலத்தேர்' இங்கு தனி சிறப்பு.

தல வரலாறு:
சும்பன், நிசும்பன் என்ற இரு அசுரர்கள் ஆலமரங்கள் அதிகமாக உள்ள காட்டில் தங்கி தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்தனர். இதனால் பாதிப்படைந்தவர்கள் சிவ பார்வதியிடம் சென்று முறையிட்டனர்.
பார்வதி தேவி தன் பார்வையால் காளியை தோற்றுவித்து அரக்கர்களை அழித்து விட்டு, அவளையே ஆலங்காட்டிற்கு தலைவியாக்கினாள். அரக்கர்களை அழித்து அவர்களது ரத்தத்தை உண்ட காளி, பல கோர செயல்களை புரிந்தாள். இதனால் முஞ்சிகேச கார்க்கோடக முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் கோர வடிவம் கொண்டு ஆலங்காட்டை அடைந்தார். அவரை கண்ட காளி, ""நீ என்னுடன் நடனமாடி வெற்றிபெற்றால் இந்த ஆலங்காட்டை ஆளலாம்,''என்றாள். சிவனும் காளியுடன் ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். அப்போது தன் காதில் இருந்த மணியை கீழே விழவைத்து, பின் அதை தன் இடக்கால் பெருவிரலால் எடுத்து மீண்டும் தன் காதில் பொருத்தினார்.

இதைக்கண்ட காளி, இது போன்ற தாண்டவம் தன்னால் ஆட இயலாது என தோற்று விடுகிறாள். அப்போது காளியின் முன் இறைவன் தோன்றி,""என்னையன்றி உனக்கு சமமானவர் வேறு யாரும் கிடையாது. 
எனவே இத்தலத்தில் என்னை வழிபாடு செய்ய வருபவர்கள், முதலில் உன்னை வழிபாடு செய்த பின் என்னை வழிபட்டால் தான் முழு பலன் கிடைக்கும்,''என்று வரமளித்தார். அன்றிலிருந்து காளி தனி கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள்.

நடனக்கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவர்கள் வணங்க வேண்டிய தலம்.
கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையை பலப்படுத்தும் தலம்.

போன்:  +91- 4118-272 608.

Thursday, September 29, 2011

Palaasavana Nathar Temple at Tirunaaloor Mayaanam near Kumbakonam (Paadal Petra Stalam)

அருள்மிகு பலாசவனநாதர் திருக்கோயில்


மூலவர்:ஞானபரமேஸ்வரர், பலாசவனநாதர்
அம்மன்: ஞானாம்பிகை, பெரிய நாயகி
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
தேவாரபதிகம் பத்துத் தலையோனைப் பாதத் தொருவிரலால் வைத்து மலையடர்த்து வாளோடு நாள் கொடுத்தான் நத்தி னொலியோவா நாலூர் மயானத்தென் அத்தனடி நினைவார்க்கு அல்லல் அடையாவே.
 -திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 96வது தலம். 

தல சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆபத்தம்ப முனிவர் பூசித்தது. நான்கு வேதங்களும் வழிபட்ட சிறப்பினது. இலிங்கத்தின் திருமுடியில் சில வேளைகளில் பாம்பு ஊர்வதாகக் கூறுகின்றனர்.

சோழர்காலத்து ஏகதளக் கற்றளியாகிய இக்கோயில் மிக்க கலையழகுடையது. சோழர் காலக் கலைப்பணியைச் சேர்ந்தது.
முதல் ஆதித்தன் காலத்துத் திருப்பணியைப் பெற்றது. கருவறை சதுரமானது.
சிகரம் உருண்டைவடிவுடையது. தூண்களும் போதிகைகளும் சிற்ப அழகு உடையவை.

தல வரலாறு: சோழர் காலத்தில் சதுர்வேதி மங்கலமாக இருந்த ஊர், தமிழில் "நால்வேதியூர்' என்று வழங்க தொடங்கி "நாலூர்' என்று மருவி இருக்கலாம்.  வேதங்களில் சிறப்புற்று விளங்க இத்தலம் வந்து பூஜித்தால் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.
நான்கு மயானங்களில் இதுவும் ஒன்று.
மற்ற மூன்றும்
1. கச்சி மயானம்,
2. கடவூர் மயானம்.
3. காழி மயானம் என்பவை.

திருமணத்தடை நீங்க, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனை பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் சிவனுக்கும் அம்மனுக்கும் வஸ்திரம் சாற்றி, அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

போன்: +91 94439 59839