Friday, November 11, 2011

Karkatakeswarar Temple at Tirundudevankudi near Kumbakonam (Paadal Petra Stalam)

அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:கற்கடேஸ்வரர்
அம்மன்: அபூர்வநாயகி, அருமருந்துநாயகி
பாடியவர்கள்: சம்பந்தர்
தேவாரப்பதிகம்
மருந்துவேண் டில்லிவை மந்திரங் கள்ளிவை புரிந்துகேட் கப்படும் புண்ணியங் கள்ளிவை திருந்துதே வன்குடித் தேவர்தே வெய்திய அருந்தவத் தோர்தொழும் அடிகள் வேடங்களே.
 -திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 42வது தலம்.

தல சிறப்பு:இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். பொதுவாக கோயில்களில் ஒரு அம்பாள் மட்டுமே இருப்பாள். ஆனால் இங்கு இரண்டு அம்பிகையர் அடுத்தடுத்த சன்னதிகளில் காட்சி தருகிறன்றனர். சுவாமியின் திருமேனியில் நண்டு ஐக்கியமான துளையும், இந்திரனால் வெட்டுப்பட்ட காயமும் இருக்கிறது.

இத்தலவிநாயகர் கற்கடக விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், சுதை வடிவில் நடராஜர் இருக்கின்றனர். நவக்கிரக சன்னதி கிடையாது.
சிவனை வணங்கிய இந்திரன் தவறை உணர்ந்து திருந்தியதால் இத்தலம், "திருந்துதேவன்குடி' என்றழைக்கப்படுகிறது. இப்பெயரைச் சொன்னால் உள்ளூர்வாசிகளுக்கு தெரிவதில்லை. "நண்டு கோயில்' என்றுதான் இப்பகுதி மக்கள் சொல்கிறார்கள்.

தலபெருமை:
பிணி நீக்கும் சிவன்: காலவெள்ளத்தில் இவ்விடத்தில் சுயம்புலிங்கம் மண்ணிற்குள் மறைந்தது. ஒருசமயம் இப்பகுதியை சோழ மன்னன் ஒருவன் ஆட்சி செய்து வந்தான். ஒருசமயம் அவனுக்கு வாதநோய் உண்டானது. பல வைத்தியங்கள் பார்த்தும் நோய் குணமாகவில்லை. சிவபக்தனான அம்மன்னன், நோய் தீர அருளும்படி சிவனிடம் வேண்டினான். ஒருசமயம் வயதான மருத்துவ தம்பதியர் அவனது அரசவைக்கு வந்தனர். மன்னனிடம் சென்ற அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த விபூதியை, தீர்த்தத்தில் கரைத்து கொடுத்தனர். அந்த மருந்தை சாப்பிட்ட உடனே மன்னன் நோய் நீங்கி எழுந்தான். மருத்துவ தம்பதியரை தனது அரசவையில் ராஜ வைத்தியராக தங்கும்படி வேண்டினான். அவர்கள் கேட்காமல் கிளம்புவதாக கூறினர். எனவே மன்னன் அவர்களுக்கு பொன்னும், பொருளும் பரிசாக கொடுக்க எடுத்து வந்தான். அதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வியந்த மன்னன் அவர்களிடம், "தாங்கள் விரும்புவது எதுவாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள். அதை நிறைவேற்றி வைப்பது என் கடமை!' என்றான். பின்னர் அவர்கள் இவ்விடத்திற்கு அழைத்து வந்து சுவாமி இருந்த இடத்தில் கோயில் எழுப்பும்படி கூறினர். மன்னனும் ஒப்புக்கொண்டான். அப்போது லிங்கத்தின் அருகில் சென்ற இருவரும், அதனுள் ஐக்கியமாயினர்.

அதன்பின்பு வந்தது சிவ, பார்வதி என உணர்ந்த மன்னன் இவ்விடத்தில் கோயில் எழுப்பினான். இவரிடம் வேண்டிக்கொள்ள பிணிகள் நீங்கும் என்பது நம்பிக்கை. சம்பந்தர் இவரை "பிணி நீங்கும் சிவன்' என்று பதிகம் பாடியுள்ளார்.

இரட்டை அம்பிகையர் தலம்: பொதுவாக கோயில்களில் ஒரு அம்பாள் மட்டுமே இருப்பாள். ஆனால் இங்கு இரண்டு அம்பிகையர் அடுத்தடுத்த சன்னதிகளில் காட்சி தருகிறன்றனர். மன்னன் இவ்விடத்தில் கோயில் எழுப்பியபோது, ஏற்கனவே இங்கிருந்த அம்பிகையை காணவில்லை. எனவே புதிதாக ஒரு அம்பிகையை பிரதிஷ்டை செய்தான். மருத்துவர் வடிவில் வந்து அருளியவள் என்பதால், "அருமருந்து நாயகி' என்று பெயர் சூட்டினான். ஆனால் சிறிது நாட்களிலேயே தொலைந்த அம்பிகை சிலை கிடைத்தது. அதனையும் இங்கு பிரதிஷ்டை செய்தான் மன்னன். இவள் அபூர்வநாயகி என்று அழைக்கப்பட்டாள். இவளே இங்கு பிரதான அம்பிகையாக கருதப்படுகிறாள்.

யோக சந்திரன்: புனர்பூசம், பூசம், ஆயில்ய நட்சத்திரம் மற்றும் கடக ராசிக்காரர்களுக்கான பரிகார தலம் இது. சுவாமியின் திருமேனியில் நண்டு ஐக்கியமான துளையும், இந்திரனால் வெட்டுப்பட்ட காயமும் இருக்கிறது.

கோயில் நுழைவுவாயில் சந்திரன் சன்னதி உள்ளது. இவர் யோக நிலையில், "யோக சந்திரனாக' காட்சி தருகிறார். ஜாதகத்தில் சந்திர தசை உள்ளவர்கள் இவருக்கு வெண்ணிற வஸ்திரம் சாத்தி வழிபட்டால், தோஷம் நீங்குவதாக நம்பிக்கை.

தல வரலாறு:ஒரு சமயம் துர்வாச மகரிஷி, சிவபூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற ஒரு கந்தர்வன் துர்வாசரின் முதிய தோற்றத்தைக் கண்டு பரிகாசம் செய்தான். அவரது பூஜை கலையும் விதமாக கை தட்டி அழைத்தான். ஆனாலும் துர்வாசர் திரும்பவில்லை. கந்தர்வனோ விடுவதாக இல்லை. நண்டு போல நடந்து காட்டி அவரை மேலும் கேலி செய்தான்.
கோபம் கொண்ட துர்வாசர், அவனை நண்டாக பிறக்கும்படி சபித்துவிட்டார். வருந்திய கந்தர்வன் மன்னிப்பு வேண்டினான். சிவலிங்க பூஜை செய்து வழிபட்டால், விமோசனம் கிடைக்கும் என்றார். அதன்படி நண்டு வடிவில் இத்தலம் வந்த கந்தர்வன், சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளியிருப்பதைக் கண்டான்.
தினமும் அருகிலுள்ள புஷ்கரிணியில் மலர் பறித்து, சுவாமிக்கு படைத்து வழிபட்டு வந்தான். இதனிடையே, அசுரர்களை அழிக்கும் சக்தி வேண்டி இந்திரன், தன் குருவின் ஆலோசனைப்படி இங்கு சிவபூஜை செய்ய வந்தான். இங்கிருந்த புஷ்கரிணியில் தினமும் 1008 மலர் பறித்து சிவலிங்கத்திற்கு படைத்து பூஜித்து வந்தான். நண்டு வடிவில் வந்த கந்தர்வன் சிவனுக்கு மலர் படைக்கவே, தினமும் இந்திரனின் பூஜையில் ஒரு மலர் குறைந்தது.
இந்திரனுக்கு காரணம் புரியவில்லை. ஒருசமயம் நண்டு பூஜை செய்வதை  பார்த்துவிட்டான். தான் பூஜை செய்யும் லிங்கத்தை பூஜிக்கும் தகுதி பிறருக்கு கிடையாது என ஆணவம் கொண்ட அவன், நண்டை கொல்ல முயன்றான். நண்டு, சிவபூஜைக்காக லிங்கத்தின் பாணம் மீது ஏறியபோது, வாளால் வெட்ட முயன்றான். அப்போது சிவன், லிங்கத்திற்குள் துளை ஏற்படுத்திக் கொடுக்கவே, கந்தர்வன் அதற்குள் புகுந்து விமோசனம் பெற்றான். அப்போது இந்திரனின் வாள், லிங்கத்தின் மீது பட்டு காயம் உண்டானது. தவறை உணர்ந்த இந்திரன் மன்னிப்பு வேண்டினான். சிவன் அவனை மன்னித்ததோடு, ""ஆணவத்துடன் இருப்பவர்களால் ஒரு செயலிலும் வெற்றி பெற முடியாது. பணிவு குணமே நன்மை தரும்,'' என்று அறிவுறுத்தி காட்சி தந்தார். கற்கடகத்திற்கு (நண்டு) விமோசனம் தந்தவர் என்பதால் இவர், "கற்கடேஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.

கிரக தோஷங்கள் நிவர்த்தியாக கற்டேஸ்வரருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். இந்த எண்ணெயை உண்டகொண்டால் நோய் நீங்குவதாகவும் நம்பிக்கை இருக்கிறது.

போன்:+91- 435 - 2000 240, 99940 15871

Thursday, November 10, 2011

Prana Nathar Temple at Tirumangalakkudi near Kumbakonam (Paadal Petra Stalam)

அருள்மிகு பிராணநாதேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:பிராணநாதேசுவரர்
அம்மன்: மங்களாம்பிகை
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
தேவாரப்பதிகம்
பொலியும் மால்வரை புக்கெடுத் தான்புகழ்ந்து ஏத்திட வலியும் வாளொடு நாள்கொடுத்தான் மங்கலக்குடிப் புலியின் ஆடையின் னானடி ஏத்திடும் புண்ணியர் மலியும் வானுலகம் புகவல்லவர் காண்மினே.
-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 38வது தலம். 

தல சிறப்பு:ங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக கோயில்களில் சிவலிங்கத்தில், ஆவுடையாரை விட சற்று உயரம் குறைந்ததாகத்தான் பாணம் இருக்கும். ஆனால் இக்கோயிலில் பாணம், ஆவுடையாரைவிட உயர்ந்ததாக இருக்கிறது. இரவில் திருக்கல்யாணம் : மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் போன்ற கோயில்களில் காலையில் திருக்கல்யாணம் நடந்து, மதிய வேளையில் திருக்கல்யாண விருந்து வைக்கப்படும். ஆனால், இக்கோயிலில் இரவில்தான் திருக்கல்யாணம் நடக்கிறது. பங்குனியில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தின் ஏழாம் நாளன்று திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு மேல் மாப்பிள்ளை அழைப்பு, சுவாமி, அம்பாள் மாலை மாற்றும் வைபவமும், ஊஞ்சல் காட்சியும் நடக்கிறது. இரவு 9 மணியளவில் சுவாமி, அம்பிகை திருக்கல்யாணமும், அதன்பின் திருமண விருந்தும் நடக்கும்.

தலபெருமை:பஞ்ச மங்கள ஷேத்திரம் :  இத்தலம் பஞ்ச மங்கள ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
1. இந்த ஊரின் பெயர் மங்கலக்குடி, 2. அம்பாள் பெயர் மங்களாம்பிகை, 3. இக்கோயில் விமானம் மங்கள விமானம் 4. இத்தலத்தின் தீர்த்தத்தின் பெயர் மங்கள தீர்த்தம், 5. இத்தலத்து விநாயகர் பெயர் மங்கள விநாயகர் என்பதால் இத்தலம் மங்களமே உருவாக இருப்பதால் மங்கள ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
கிரகங்கள் வழிபட்ட சிவன் : ஒருசமயம் காலமாமுனிவருக்கு உண்டாகவிருந்த நோயை நவக்கிரகங்கள் தடுத்ததால், அந்நோய் கிரகங்களுக்கு பிடிக்கும்படி பிரம்மா சாபம் கொடுத்தார். எனவே, அவர்கள் பூலோகத்தில் இத்தலம் வந்து சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருந்த சிவனை வேண்டி, தவமிருந்து சாபவிமோசனம் பெற்றனர். இவ்வாறு கிரகங்களின் தோஷம் போக்கிய சிவனாக, இத்தலத்தில் சிவன் அருளுகிறார்.
நின்ற லிங்கம் : பொதுவாக கோயில்களில் சிவலிங்கத்தில், ஆவுடையாரை விட சற்று உயரம் குறைந்ததாகத்தான் பாணம் இருக்கும். ஆனால் இக்கோயிலில் பாணம், ஆவுடையாரைவிட உயர்ந்ததாக இருக்கிறது.  அகத்தியர் இத்தலத்திற்கு வந்தபோது அவருக்கு சுவாமி உயர்ந்தவராக காட்சி தந்தாராம். இதன் அடிப்படையில் பாணம் மட்டும் பெரிதாக இருப்பதாக சொல்கிறார்கள். குள்ள முனிவரான அகத்தியர், சுவாமியின் பாணத்தின் மீது தன் கையை உயர்த்திதான் மலர் வைத்து பூஜித்தாராம். முதல்கோயில் : கிரகங்கள் வழிபட்ட இத்தலத்தில், நவக்கிரகத்திற்கு சன்னதி கிடையாது. இங்கிருந்து சற்று தூரத்தில், நவக்கிரக திசையான வடகிழக்கில் கிரகங்களுக்கென தனிக்கோயிலே (சூரியனார் கோயில்) அமைந்திருக்கிறது. மொத்தத்தில் ஒரே கோயிலே, இவ்வாறு இரட்டைக்கோயிலாக தனித்தனியே, அமைந்திருக்கிறது.இதில் பிராணநாதர் கோயிலே பிரதான கோயில் ஆகும். கிரக தோஷமுள்ளவர்கள் முதலில் பிராணநாதரை வழிபட்டு, அதன்பின்பே சூரியனார் கோயிலில் வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.
எருக்கு இலையில் தயிர் சாத பிரசாதம் : நவக்கிரகங்கள் இங்கு சிவனுக்கு எருக்க இலையில் தயிர் சாத நைவேத்யம் படைத்து வழிபட்டதாக ஐதீகம். எனவே, இக்கோயிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உச்சிகால பூஜையின்போது, உப்பில்லாத தயிர் சாதத்தை சுவாமிக்கு நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றனர். பித்ரு தோஷம் (முன்னோர்களுக்கு முறையான தர்ப்பணம் போன்ற சடங்குகள் செய்யாதவர்கள்) உள்ளவர்கள் சுவாமிக்கு தயிர்சாத நைவேத்யம் படைத்து வழிபடுகிறார்கள். மரகதலிங்கம் : நடராஜர் சன்னதியில் மரகதலிங்கம் ஒன்று இருக்கிறது. தினமும் உச்சிக்காலத்தில் மட்டும் இதற்கு பூஜைகள் செய்கின்றனர். அப்போது வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு நைவேத்யம் படைத்து, வலம்புரி சங்கில் பால், பன்னீர், தேன், சந்தனம் ஆகிய நான்கு திரவிய அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேக தீர்த்தத்தை பருகினால் நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.
தாலி தரும் தாய் : அம்பிகை மங்களாம்பிகை தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி அருளுகிறாள். இவளே இங்கு வரப்பிரசாதியாவாள். இவளது பெயரிலேயே கோயிலும் அழைக்கப்படுகிறது. அம்பிகையின் வலது கையில் எப்போதும் தாலிக்கயிறு அணிவிக்கப்பட்டிருக்கிறது. அம்பிகையை வழிபடும் பெண்களுக்கு, இதையே பிரசாதமாக கொடுக்கின்றனர். இதனால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் அமையும், திருமணமான பெண்கள் நீண்டகாலம் தீர்க்கசுமங்கலியாக வாழ்வர் என்பது நம்பிக்கை. இந்த அம்பிகை தன்னை வேண்டுபவர்களுக்கு தாலி தரும் தாயாக இருந்து  அருளுகிறாள். சுமங்கலிப்பெண்கள், அம்பிகையிடம் இருந்து தாலியை வாங்கி தங்கள் கழுத்தில் அணிந்து கொண்டு, ஏற்கனவே அணிந்திருக்கும் தாலியை அம்பாள் பாதத்தில் வைத்து பூஜை செய்கின்றனர். இதனால் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. சந்தன அலங்காரம் : நவராத்திரியின்போது கோயில்களில் அம்பாள் உற்சவர் சிலைக்கு ஒவ்வொருநாளும் ஒவ்வொரு அலங்காரங்கள் செய்வர். ஆனால், இங்கு மூலஸ்தானத்தில் இருக்கும் அம்பிகைக்கே அலங்காரம் செய்யப்படுகிறது. அப்போது இவளது சிலைக்கு வஸ்திரம், ஆபரணங்கள் என எதுவும் சாத்தப்படாமல் சந்தனக்காப்பு மட்டும் செய்யப்படுகிறது. அந்த சந்தனத்திலேயே பட்டுத்துணிகளுக்கு பயன்படுத்தப்படும் வண்ண சாயங்களை சேர்த்து வஸ்திரம் மற்றும் ஆபரணங்கள் அணிந்ததைப்போல அலங்கரிக்கின்றனர். சந்தனத்திலேயே, இவ்வாறு அம்பிகை சர்வ அலங்காரத்துடன் காட்சி தருவதை காண கண் கோடி வேண்டும். ஒவ்வொரு வருடமும் தை மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையன்று முழுதும் அம்பிகையை சந்தனக்காப்பு அலங்காரத்தில் தரிசிக்கலாம். விசேஷ நாட்கள் தவிர மற்ற நாட்களில் பக்தர்கள் இந்த அலங்காரம் செய்யலாம்.

தல வரலாறு:பதினோறாம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரியாக இருந்த அலைவாணர் என்ற மந்திரி மன்னனிடம் அனுமதி பெறாமல் வரிப்பணத்தில் இக்கோயிலை கட்டினார்.
இதை அறிந்த மன்னன் கோபம் கொண்டு மந்திரியை சிரச் சேதம் செய்ய உத்தரவிட்டார்.  கொலையுண்ட மந்திரி தன்னை திருமங்கலக்குடியில் தகனம் செய்யுமாறு ஏற்கனவே கூறியிருந்ததால் அவரது உடல் திருமங்கலக்குடிக்கு எடுத்து வரப்பட்டது.
ஊரின் எல்லைக்கு வரும்போது மந்திரியின் மனைவி மங்களாம்பிகை கோயிலில் சென்று தனது கணவரின் உயிரை திரும்பத்தருமாறு வேண்டினார்.அவளது பிரார்த்தனை பலிக்கும் என்று அசரீரி கேட்டது.அதுபடி மந்திரி உயிர் திரும்பபெற்றார். மகிழ்ச்சியில் கோயிலுக்குள் சென்று பிராணநாதேசுவரரை கட்டிப்பிடித்து ஜீவதாயகன் என்று கூறி பூஜித்தார். அன்று முதல் இங்குள்ள பிம்பமானது பிராணநாதேசுவரன் (ஜீவதாயகன்)என்ற பெயரால் அழைக்கப்பெற்றார். கணவர் உயிரை தந்த அம்பாள் மங்களாம்பிகை என்றழைக்கப்பட்டாள்.
இங்கு வந்து வழிபடும் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் உண்டாக வேண்டும் என்று மந்திரியும் மனைவியும் வேண்டிக்கொள்ள அதுபடியே சுவாமியும் அம்பாளும் அருளியதாக வரலாறு கூறுகிறது.

• rana Nathar Temple at Tirumangalakkudi near Kumbakonam (Paadal Petra Stalam)


Wednesday, November 9, 2011

Patanjaleeswaraswamy temple at Kalnattampuliyur near Chidambaram (Paadal Petra Stalam)

அருள்மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:பதஞ்சலீஸ்வரர்
அம்மன்:கோல்வளைக்கையம்பிகை
பாடியவர்கள்:சுந்தரர்
தேவாரப்பதிகம்
விடை அரவக்கொடி ஏந்தும் விண்ணவர்தம் கோனை வெள்ளத்து மாலவனும் வேத முதலானும் அடியிணையும் திருமுடியும் காண அரிதாய சங்கரனைத் தத்துவனைத் தையல் மடவார்கள் உடைஅவிழக் குழல்அவிழக் கோதை குடைந்தாடக் குங்குடங்கள் உந்திவரும் கொள்ளிடத்தின் கரைமேல் கடைகள் விடுவார் குவளை களைவாருங் கழனிக் கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே.
-சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 32வது தலம். 
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்

தல சிறப்பு:இத்தலத்தில் அம்பாள் கோல்வளைக்கையம்பிகை தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். இவளை "அம்புஜாட்சி', "கானார்குழலி' என்ற பெயர்களிலும் அழைக்கின்றனர். சுந்தரர் தனது பதிகத்தில் அம்பாளைக் குறித்தும் பாடியுள்ளார். இவளது சன்னதிக்கு வலப்புறத்தில் சனீஸ்வரர் தனிச்சன்னதியில் இருக்கிறார். சனிதோஷம் உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனைகள் செய்து கொள்கின்றனர்.

தலபெருமை:
கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள இக்கோயிலுக்கு "மதூகவனம்' என்றும் பெயருண்டு. கருவறையில் சிவன் சிறிய லிங்கமாக இருக்கிறார்.
தமிழ் வருடப்பிறப்பின் போது 3 நாட்கள் சூரியன் தன் ஒளியை சூரியன் மீது பரப்பி பூஜிக்கிறார். தண்டகாரண்ய முனிவர்கள் இங்கு சிவனை வழிபட வந்தபோது, மணல்கள் எல்லாம் லிங்கங்களாக அவர்களுக்கு தெரிந்ததால், வெளியில் இருந்தே சிவனை தரிசித்துவிட்டு சென்றார்களாம். எனவே, இத்தலத்து மண்ணை மிகவும் விசேஷமானதாக கருதுகிறார்கள். மண்ணை எடுத்துச்சென்றால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும், பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இங்குள்ள நடராஜர், தனது இடது காலை முன்புறமாக தள்ளி தூக்கி நிறுத்தி, உடலை பின்புறமாக சாய்த்தபடி இருக்கிறார். பதஞ்சலிக்காக சிவன், மகிழ்ந்து நடனமாடியதால் இவ்வாறு காட்சியளிப்பதாக சொல்கிறார்கள்.
பதஞ்சலி, நடராஜர் சன்னதிக்கு எதிரே நால்வருடன் சேர்ந்து இருக்கிறார். நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு சுவாமி மற்றும் பதஞ்சலியிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இதனால், தோஷம் நீங்குவதாக நம்பிக்கை.
இத்தலத்திற்கு அருகிலேயே வியாக்ரபாதர் வழிபட்ட ஓமாம்புலியூர் தலம் இருக்கிறது. ஒரே வரிசையில் சிதம்பரம், கானாட்டம்புலியூர், ஓமாம்புலியூர்  ஆகிய மூன்று தலங்கள் அமைந்திருப்பது சிறப்பு. வரப்பிரசாதியான இந்த அம்பாளுக்கு புத்திர பாக்கியம் இல்லாத பெண்கள் அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தி வளையல்கள் அணிவித்து வழிபடுகிறார்கள். இதனால், குழந்தை பேறு கிடைப்பதாக நம்புகிறார்கள்.

தல வரலாறு:
பாற்கடலில் பள்ளிகொண்டி ருக்கும் மகாவிஷ்ணுவை தாங்கும் ஆதிசேஷன், சிவனின் நடன தரிசனம் காணவிரும்பி பதஞ்சலி முனிவராக அவதாரம் செய்தார்.சிவன், அவருக்கு சிதம்பரத்தில் தன் நடனக்காட்சி காட்டியருளினார். ஒருசமயம் பதஞ்சலி நடராஜரை தரிசித்தபோது, அவரை இத்தலத்திற்கு வரும்படி கூறவே, இத்தலத்திற்கு வந்தார் பதஞ்சலி. சிவனை வேண்டி தவம் செய்தார். அவருக்கு சிவன் தன் நடனத்தை காட்டி அருள் செய்தார். அப்போது சிவன் பதஞ்சலியிடம், ""என் தாண்டவங்களை கண்டு மகிழ்ந்தீரா? இப்போது திருப்திதானே!'' என்றார்.
""தங்கள் நடனம் என்றும் எனக்கு சலிக்காதது. அந்நடனத்தை நான் என்றும் தரிசித்துக் கொண்டிருக்க வேண்டும்,'' என்று வேண்டிக்கொண்டார் பதஞ் சலி. சிவன், அவர் விரும்பியபடியே பல தலங்களில் தான் தரிசனம் தருவதாக கூறினார். மேலும் அவருக்கு மரியாதை செய்யும்விதமாக அவரது பெயரையே தனக்கும் சூட்டி, "பதஞ்சலீஸ்வரர்' என்ற பெயர் பெற்றார்.

நன்றாக பணி செய்தும் சரியான மரியாதை கிடைக்காமல் இருப்பவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பணி உயர்வு, இடமாற்றம் வேண்டுபவர்களும் சுவாமியை வழிபடலாம். 

போன்: +91 4144 208 508, 208091, 93457 78863.

Neelakantar Temple at Iluppaippattu (Tiruppunkur, Vaideeswaran Kovil) near Chidambaram (Paadal Petra Stalam)

அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:திருநீலகண்டேஸ்வரர், படிகரைநாதர்
அம்மன்: அமிர்தவல்லி, மங்களாம்பிகை,
பாடியவர்கள்:சுந்தரர்
தேவாரப்பதிகம்
உங்கைகளாற் கூப்பி உகந்தேத்தித் தொழுமின் தொண்டீர் மங்கையொர் கூறுடையான் வானோர் முதலாய பிரான் அங்கையில் வெண்மழுவன் அலையார்கதிர் மூவிலைய பங்கைய பாதனிடம் பழமண்ணிப் படிக்கரையே
-சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில்இது 30வது தலம். 

தல சிறப்பு:இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு தர்மன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட பஞ்சலிங்கங்கள் உள்ளது.

தலபெருமை:கணவனை காத்த அம்பாள்: பாற்கடலை கடைந்தபோது, வாசுகி பாம்பு களைப்பில் விஷத்தை கக்கியது. தேவர்களை காப்பதற்காக விஷத்தை சிவன் விழுங்கினார்.
அவ்விஷம், சிவனின் உடம்பில் சேராமல் இருப்பதற்காக அம்பாள், சிவனுக்கு பின்புறமாக இருந்து அவரது கண்டத்தை (தொண்டைக்குழி) பிடித்து நிறுத்தினாள். விஷம் கழுத்திலேயே தங்கியது.
இதன் அடிப்படையில் இத்தலத்தில் சிவன் சன்னதிக்கு பின்புறம் அமிர்தவல்லிக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. அமிர்தத்தில் கலந்திருந்த விஷத்தை நிறுத்தியவள் என்பதால் இப்பெயரில் அழைக்கப்படுகிறாள்.
கணவனை காத்த அம்பாள் என்பதால் இவளிடம் வேண்டிக்கொண்டால் பெண்களுக்கு கணவன் மீது பாசம் அதிகரிக்கும், தீர்க்க சுமங்கலிகளாக வாழலாம் என்பது நம்பிக்கை. இவள் தன் இடது கையால் பாதத்தை காட்டியபடி அருளுவது சிறப்பு.
 
பஞ்சலிங்க தலம்: பொதுவாக சிவன் கோயில்களில் ஒரு மூலவர் மட்டுமே இருப்பார். அரிதாக சில தலங்களில் இரண்டு மூலவர்கள் இருப்பர். ஆனால், இங்கு ஐந்து சிவன் தனித்தனி சன்னதிகளில் இருக்கிறார். தர்மர் வழிபட்ட சிவன் நீலகண்டேஸ்வரர், அர்ஜுனன் வழிபட்ட சிவன் படிகரைநாதர், பீமனால்வழிபடப்பட்டவர் மகதீஸ்வரர், நகுலன் வழிபட்டவர் பரமேஸ்வரர், சகாதேவன் வழிபட்டவர் முத்துகிரீஸ்வரர் என்ற பெயர்களில் அருளுகின்றனர். இவர்களில் நீலகண்டேஸ்வரர், படிகரைநாதருக்கு அம்பிகை சன்னதி உண்டு. படிகரைநாதர் சன்னதியிலேயே மங்களாம்பிகை தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். பீமன் வழிபட்ட சிவன், சோடஷலிங்கமாக, 16 பட்டைகளுடன் இருக்கிறார். பதினாறு செல்வமும் பெற இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

நளன் வழிபாடு: ஐந்து மூர்த்திகளும் மூலவராக இருந்தாலும், நீலகண்டேஸ்வரர், படிகரைநாதர் இருவரும் பிரதான மூர்த்திகளாக வணங்கப்படுகின்றனர். இவர்களுக்கு எதிரில் மட்டுமே நந்தி இருக்கிறது. சகாதேவன் வழிபட்ட முத்துகிரீஸ்வரர், தெற்கு நோக்கி இருக்கிறார். சாஸ்திரம், ஜோதிடம் கற்பவர்கள் இவரிடம் வேண்டிக்கொள்கின்றனர்.
சனிபகவானால் பிடிக்கப்பட்ட நளமகாராஜன், ஏழரைச்சனியின் முடிவு காலத்தில் சிவதலங்களுக்கு சென்று தரிசித்து வந்தார். திருக்கடையூர் செல்லும் முன்பு அவர் இத்தலத்தில் பஞ்சலிங்கங்களை தரிசனம் செய்தார். அப்போதே தனக்கு சனியின் ஆதிக்கம் குறைந்திருப்பதை உணர்ந்து கொண்டாராம். எனவே, இங்கு வேண்டிக்கொண்டால் சனியின் ஆதிக்கம் குறையும் என்பது நம்பிக்கை.

தல வரலாறு:பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்தபோது, இங்கு சிலகாலம் தங்கியிருந்தனர். சிவபூஜை செய்ய விரும்பிய அவர்கள், இங்கு தேடிப்பார்த்தும் லிங்கம் லிங்கம் கிடைக்கவில்லை. எனவே, அவர்கள் ஐந்து பேரும் ஒரு இலுப்பை மரத்தின் அடியில், இலுப்பைக்காயில் விளக்கேற்றி சிவனை மானசீகமாக (மனதில் நினைத்து) வணங்கினர்.
சிவன் அவர்கள் ஐந்து பேருக்கும் தனித்தனி மூர்த்தியாக காட்சி தந்தார். அவர்கள் சிவனிடம், தங்களுக்கு அருளியதைப்போலவே இங்கிருந்து அருள் செய்ய வேண்டுமென வேண்டிக்கொண்டனர்.
சிவனும் ஐந்து மூர்த்திகளாக எழுந்தருளினார். தற்போதும் இக்கோயிலில் ஐந்து லிங்கங்கள் தனித்தனி சன்னதியில் இருக்கிறது.

நோய்கள் நீங்குவதற்கு, பணியில் சிறப்பிடம் பெறுவதற்கு இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
பதினாறு பேறுகளும் பெற சோடஷலிங்க சன்னதியில் வழிபடுகிறார்கள். 

போன்: +91-92456 19738.

Veeratteswarar temple at Tirukurukkai near mayiladudurai (Paadal Petra Stalam, Veeratta Stalam)

அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:வீரட்டேஸ்வரர்
அம்மன்: ஞானம்பிகை
பாடியவர்கள்: திருநாவுக்கரசர்
தேவாரப்பதிகம்
நீற்றினை நிறையப் பூசி நித்தலும் நியமஞ் செய்து ஆற்றுநீர் பூரித்தாட்டும் அந்தணனாரைக் கொல்வான் சாற்றுநாள் அற்றதென்று தருமரா சற்காய்வந்த கூற்றினைக் குமைப்பர் போலுங் குறுக்கை வீரட்டனாரே.
-திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 26வது தலம். 

தல சிறப்பு:ஆவுடையாரில் தாமரை மலர் இருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சம். அட்டவீரட்ட தலம் என்ற சிறப்பும் பெருமையும் பெற்ற கோயில் இது. சிவபெருமான் வீரச்செயல்கள் புரிந்த அட்ட வீரட்டத்தலங்களில் ஒன்றான இங்கு காமனை எரித்துள்ளார். ரதி, மன்மதன் உற்சவத் திருமேனிகள் இத்தலத்தில் உள்ளன. தீர்த்தவாகு முனிவர் என்ற முனிவர் இறைவனுக்கு திருமுழுக்காட்ட கங்கையை கொண்டு வந்த சிறப்பு பெற்ற தலம்.

இத்தலவிநாயகர் குறுங்கை கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

காம சம்கார மூர்த்தி : அட்டவீரட்டத்தலங்களில் இங்கு சிவபெருமான் காமனை எரித்தார் என்பது வரலாறு.காம தகன மூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். காம தகன மூர்த்தி இடக்காலை மடித்து, வலக்காலைத் தொங்கவிட்டு வலக்கை அபய முத்திரையுடன், இடக்கையை மடக்கிய கால் மீது வைத்து அமர்ந்த நிலையில் தரிசனம் அளிக்கிறார்.

சம்காரத்தினால் பெயர் பெற்ற ஊர்கள் :  இந்த திருக்குறுக்கை என்ற ஊரைச் சுற்றியுள்ள ஊர்கள் பெயர்கள் இத்தலத்து வரலாற்றோடு சம்பந்தப்பட்டவை.சிவபெருமானின் தவத்தை கலைக்க மன்மதன் அதற்காக தன் கையில் கங்கணம் கட்டிக் கொண்ட இடம் கங்கணம் புத்தூர்.
பால் சாப்பிட்ட இடம் பாலாக்குடி.வில் எடுத்த இடம் வில்லினூர். குறி பார்த்த இடம் காவளமேடு. தன்னோடு வந்தவர்களோடு ஐவநல்லூரில் கூடி இங்கிருந்து வில் விடு என்று கூறினார்களாம்.
அந்த இடம் சரியாக இல்லை என்று கூறி மேட்டுக் கொற்கை என்ற இடத்துக்கு வந்து நின்று குறி பார்க்கையில் பின்பக்கமிருந்தும் இல்லாது  முன்பக்கமிருந்தும் இல்லாது ஒரு ஓரமாக நின்று மன்மதன் கணை விட்டாராம்.

தலபெருமை:பெருமாளின் புத்திர சோகத்தை போக்கியதால் இத்தலத்தில் புத்திர காமேஷ்டி யாகம் நடத்தப்படுகிறது. இறைவன் யோகேஸ்வரர் என்றும், அம்பாள் ஞானாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர்.
இங்கு சிவன் யோக மூர்த்தியாக இருப்பதால் நினைத்தவுடன் சென்று எளிதாக பார்க்க இயலாது. எப்படியாவது தடங்கல் வந்து விடும். அதையும் மீறி நாம் சுவாமியை தரிசித்து விட்டால் நமக்கு யோக நிலை கைகூடும் என்கிறார்கள். சுவாமி அனுக்கிரக மூர்த்தியாக இருப்பதால், தெரியாமல் தவறு செய்பவர்கள் இவரை வணங்கினால் நமது தவறை மன்னித்து அனுக்கிரகம் புரிகிறார்.
இங்குள்ள குறுங்கை கணபதிக்கு மட்டும் இங்கு கஜபுஷ்ட விமானம் இருக்கும். பூர்வ ஜென்ம தோஷ பரிகாரம், புத்திர காமேஷ்டி யாகம், 70 வயதில் செய்யக்கூடிய பீமரதசாந்தி கல்யாணம் ஆகியன இத்தலத்தில் முக்கியமானவை. யோகேஸ்வரரை வணங்கினால் இழந்த சொத்துக்கள் மீண்டும் கிடைக்கும், காம குரோதங்கள் விலகும்.

இறைவனின் நெற்றிக்கண் மகரக் கொடியோனை சுட்டு எரித்தது(அனங்கன்) பின் வணங்கி மறுபிறவி எடுத்த தலம்.

தல வரலாறு:சிவபெருமான் தியானம் செய்து கொண்டிருந்தார். அவரது தியானத்தால் உலகம் வெப்பத்தால் தகித்தது. இதை உணர்ந்த தேவர்கள் முருகப்பெருமானிடம் சென்று முறையிட்டனர்.ஆனால் முருகனோ தன்னால் தந்தையின் தவத்தை கலைக்க முடியாது என்று ஒதுங்க கடைசியில் மன்மதனிடம் சென்று எப்படியாவது அவரது தியானத்தை கலைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
அதன்படி மன்மதன் நடக்கப்போவது தெரியாமல் தனது அறியாமை மேலிட தன்னிடம் உள்ள வில்லை எடுத்து சர்வேசுவரன் மீது தன் கணைகளைத் தொடுத்தார்.ஆனால் கணையோ புஷ்பமாக மாறி வந்து விழுகிறது.
உடனே ஈசுவரன் மன்மதன் இருக்கும் இடம் நோக்கி ஒரு பார்வை பார்த்தார். அவ்வளவுதான். எம்பெருமானின் நெற்றிக்கண் மன்மதனை சுட்டு எரித்து விட்டது. பஸ்பமாகிப் போய்விட்டார். அதன்பின் ரதி ஈசனிடம் என் கணவரை மீட்டுத்தர வேண்டும் என்று கேட்க, உனது வேண்டுகோளுக்காக ஒருநாள் மட்டும் மன்மதனை உண்டுபண்ணி தேய்பிறையில் தெய்வலோகத்திற்கு அனுப்பிவிடுவதாக கூறினார்.அதுபடி மன்மதன் உயிர்பெற்றதாக வரலாறு கூறுகிறது.

 இங்கு மூலவரான சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.

இத்தல மூர்த்தியான காமதகன மூர்த்தியை வழிபட்டால் உடல் பலம் பெறும்.நோய் நொடி விலகும். தியான பலமும், மனோபலமும் கிடைக்கும் இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் வீரட்டேசுவரரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.

மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி , உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

திருமண வரம், குழந்தை வரம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் வழிபடலாம். 

போன்: +91- 4365-22389

Airavateswarar Temple at Melaittirumanancheri (Tiruvelvikkudi) near Mayiladuturai (Paadal Petra Stalam)

அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:ஐராவதேஸ்வரர்
அம்மன்:சுகந்த குந்தளாம்பிகை
பாடியவர்கள்: சுந்தரர்
தேவாரப்பதிகம்
இன்பம் உண்டேல் துன்பம் உண்டு ஏழைமனை வாழ்க்கை முன்பு சொன்ன மோழைமையான் முட்டை மனத்தீரே அன்பர் அல்லால் அணிகொள் கொன்றை அடிகள்அடி சேரார் என்பர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே.
-சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 24வது தலம். 
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

தலபெருமை:சிவனுக்கு அணிவிக்கப்பட்ட தாமரை மலரை கைகளில் ஏந்தியபடி தேவலோகத்தில் துர்வாச முனிவர் வந்தார். அசுரர்களை வென்ற இந்திரனுக்கு பரிசாக அளித்தார். இந்திரன் அதை அலட்சியப்படுத்தினான்.
இதனால் கோபம் கொண்ட முனிவர் பாண்டிய மன்னன் எறியும் கைவளையால் இந்திரனின் முடி சிதறுமாறு சாபமிட்டார். பதறிப்போன இந்திரன் மன்னிப்பு கேட்க, இந்திரனின் தலைக்கு வருவது முடியோடு கழியும் என்று சாபவிமோசனம் தந்தார்.
தாமரை மலரை புறக்கணித்ததில் இந்திரனின் ஐராவத யானைக்கும் பங்குண்டு. துர்வாசரால் சபிக்கப்பட்ட யானை பூமிக்கு வந்து பல இடங்களில் சுற்றி திரிந்தது. பல தலங்களில் பூஜையும் செய்தது. கடைசியாக இத்தலத்திற்கு வந்து இறைவனை பூஜித்து துயரம் நீங்கியது. எனவே இங்குள்ள இறைவன் "ஐராவதேஸ்வரர்' என அழைக்கப்படுகிறார். அம்மனின் திருநாமம் "சுகந்த குந்தளாம்பிகை' என்ற "மலர் குழல் நாயகி'. இந்திரனும் இழந்த பொன், பொருள், பதவியை பெற்றான்.
"வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்மின் மனத்தீரே! அத்தர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே' என்று பாடி அனைவரையும் சுந்தரர் இந்த கோயிலுக்கு அழைக்கிறார். அந்த அழைப்பை நாம் ஏற்றால் தோழனின் மகிழ்ச்சியை காணும் சிவன் நமது குறைகளை போக்கி அருள்புரிவார். வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள்,  ஐராவதம் யானை வழிபட்டதால் இங்குள்ள கர்ப்பக்கிரகம்   யானை சுற்றும் அளவிற்கு மிகவும் பெரிதாக உள்ளது. திருமண வரவேற்பை இத்தலத்தில் நடத்தினால், தம்பதியர் நலம் பலபெற்று வாழ்வர் என்பது நம்பிக்கை.

தல வரலாறு:திருவேள்விக்குடியில் பரத முனிவர் சிவபார்வதி திருமணத்தை நடத்தி வைத்தார். மணம் முடிந்ததும் தான் குடியிருக்கும் மேல திருமணஞ்சேரிக்கு வர இறைவனுக்கு அழைப்பு விடுத்தார். இறைவனும் ஒப்புக் கொண்டார். இறைவனும், அம்மையும் வருகிறார்கள் என்றால் கேட்கவா வேண்டும். பிரமாதமான வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து விட்டார்.
மணக்கோலத்தில் வந்த தெய்வத்தம்பதியினரை பரதமுனிவர் எதிர்கொண்டு அழைத்தார். இதனால் இத்தலம் "எதிர்கொள்பாடி' என அழைக்கப்பட்டது. தற்போது "மேலக்கோயில்' என்று அழைக்கிறார்கள்.

பொருளை பறி கொடுத்தவர்கள், பதவி பறி போனவர்கள் இங்கு வழிபட்டால் மிகவும் சிறப்பு.
திருமணம் நடைபெறாமல் தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால், இந்திரன், ஐராவதத்தின் சாபம் நீக்கியது போல் இவர்களையும் காத்து அருள்புரிவான்.
வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள், வியாபாரத்தில் நஷ்டம் அடைந்தவர்கள் இங்கு வந்து வழிபட்டு செல்வது மிகவும் சிறப்பு. 

போன்: +91- 4364-235 487.