Wednesday, November 9, 2011

Kadaimudi Naatheswarar Temple at Tirukkadaimudi (Ananda Tandavapuram) near Mayiladuturai (Paadal Petra Stalam)

அருள்மிகு கடைமுடிநாதர் திருக்கோயில்

மூலவர்: கடைமுடிநாதர்
அம்மன்: அபிராமி
பாடியவர்கள்: திருஞானம்பந்தர் 
தேவாரப்பதிகம்
கொய்யணி நறுமலர்க் கொன்றை யந்தார் மையணி மிடறுடை மறையவனூர் பையணி அரவொடு மான்மழுவாள் கையணி பவனிடங் கடை முடியே.
 -திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 18வது தலம். 
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

தலபெருமை:வளையம் அணிந்த தெட்சிணாமூர்த்தி : மேற்கு பார்த்து அமைந்த சிவதலம் இது. இத்தலத்தில் காவிரி நதி இத்தலத்தில் மேற்கு நோக்கி ஓடுவது விசேஷம். உலகம் அழியும் இறுதிக்காலத்திலும் காப்பாற்றுபவராக இங்கு சிவபெருமான் அருளுகிறாராம். எனவே இவருக்கு "கடைமுடிநாதர்' என்று பெயர் வந்ததாக சொல்கின்றனர். இவர் பதினாறு பட்டைகளுடன் அமைந்து "சோடஷ லிங்க' அமைப்பில் இருக்கிறார். இவரிடம் வேண்டிக்கொண்டால் பதினாறு பேறுகளையும் பெறலாம் என்பர். பிரகாரத்தில் உள்ள நவக்கிரகம் வலது புறம் திரும்பிய ஆவுடையார் மீது அமைந்திருக்கின்றன. எண்கோண வடிவில் உள்ள ஆவுடையாரில் கிரகங்கள் ஒவ்வொன்றும் நேர்வரிசையில் இல்லாமல், முன்னும் பின்னுமாகவும் அமைந்திருப்பது சிறப்பான அமைப்பு.
இங்கு கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி இடது காதில் வளையம் அணிந்தும், வலது காதில் வளையம் இல்லாமலும் காட்சி தருகிறார். இவரைப்போலவே பைரவரும் வலது காதில் வளையம் இல்லாமல் இருப்பது வித்தியாசமான அமைப்பாகும்.
இங்கு அம்பாள் வரப்பிரசாதியாக இருக்கிறாள். தெற்கு நோக்கியிருக்கும் இவளது சன்னதி எதிரேயும் ஒரு வாசல் இருக்கிறது. திருமணத்தடை உள்ளவர்கள் இவளுக்கு வித்தியாசமான பிரார்த்தனை செய்கின்றனர். திருமணமாகாத பெண்கள் இவளுக்கு தாலி கட்டி வேண்டிக்கொள்கின்றனர். வரன் அமைந்த பிறகு மீண்டும் அம்பாள் கழுத்திலிருக்கும் தாலியை தங்களது கழுத்தில் கட்டி அம்பாளை வணங்கிவிட்டு, மீண்டும் அதனை அம்பாளுக்கே கட்டிவிடுகின்றனர். இவ்வாறு செய்வதால் பெண்கள் சுமங்கலிகளாக இருப்பர் என்பது நம்பிக்கை.

தல வரலாறு:ஆணவம் கொண்டதால் சிவனிடம் சாபம் பெற்ற பிரம்மா, பூலோகத்தில் பல இடங்களில் சிவபூஜை செய்து வழிபட்டார். அவர் இத்தலத்திலும் சிவனை மனதில் நினைத்து வழிபட்டார். சிவன், அவருக்கு ஒரு கிளுவை மரத்தின் அடியில் காட்சி தந்தார். பிரம்மா தனக்கு மன்னிப்பு கேட்டபோது, தகுந்த காலத்தில் விமோசனம் கிடைக்கப்பெறும் என்று ஆறுதல் கூறினார். பின் பிரம்மாவின் வேண்டுதல்படியே அவர் இத்தலத்தில் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார்.
பிற்காலத்தில் கண்ணுவ மகரிஷியும் இத்தலத்தில் சிவனை வழிபட்டு முக்தி பெற்றார்.

திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டுபவர்கள் இங்கு சிவனை வழிபட்டு மன அமைதி பெறலாம்.

போன்:+91- 4364 - 283 261, 283 360, 94427 79580.

Vaideeswaran Temple at Vaideeswaran Koil near Chidambaram (Navagraha Stalam, Paadal Petra Stalam)

அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில்


மூலவர்:வைத்தியநாதர்
அம்மன்:தையல்நாயகி
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், குமர குருபரர், படிக்காசு தம்பிரான், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், ராமலிங்க அடிகள், வடுகநாத தேசிகர், தருமையாதீனம்
தேவாரப்பதிகம்
கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப் பாதத்தை தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம் வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப் போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே.
-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 16வது தலம். 

தல சிறப்பு:இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள 5 கோபுரங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. இங்குள்ள மரகதலிங்கம் புகழ்பெற்றது. மூலவருக்கு முன் தங்கம், வெள்ளியால் ஆன இரண்டு கொடிமரங்கள் உள்ளன. பொதுவாக நவக்கிரகங்கள் திசை மாறி இருக்கும். ஆனால் இங்கு நவக்கிரகங்கள் அனைத்தும் சிவன் சன்னதிக்கு பின்புறம், ஒரே நேர்கோட்டில் நின்று வைத்தியநாதருக்கு அடங்கி, கிரக பலனை பக்தர்களுக்கு சாதகமாக்கி நோய் மற்றும் தோஷங்களை நீக்குவதாக நம்பிக்கை. மற்ற கோயில்களில் நவக்கிரக சன்னதி சிவன் சன்னதியின் முன்பக்கமாகவே அமைக்கப்பட்டிருக்கும். இங்கு மட்டுமே பின்பக்கம் உள்ளது. அங்காரகன்(செவ்வாய்) பகவான் இங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

தலபெருமை:சித்தாமிர்த தீர்த்தம் : இத்தல இறைவனுக்கு சித்தர்கள் அமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டு பல வரங்கள் பெற்றனர். அப்போது சிந்திய அமிர்தம் இங்குள்ள தீர்த்த குளத்தில் கலந்துள்ளது. எனவே இக்குளம் சித்தாமிர்த தீர்த்தம் எனப்படுகிறது. உடலில் ஏற்படும் அனைத்து வகையான நோய்களுக்கும் இந்த தீர்த்தத்தில் நீராடினால் குணமாகும் என்பது நம்பிக்கை. இதில் 18 தீர்த்தங்கள் கலந்துள்ளன.

சதானந்த முனிவர் இங்குள்ள தீர்த்த கரையில் தவம் இருந்த போது, தவளையை பாம்பு விழுங்க முயற்சித்து, இவரது தவத்திற்கு இடையூறு செய்தது. கோபத்தில் இவர் விடுத்த சாபத்தினால் இந்த தீர்த்தத்தில் பாம்பு, தவளை இருப்பதில்லை.

புள்ளிருக்கு வேளூர் : வைத்தீசுவரன் கோயிலுக்கு புள்ளிருக்கு வேளூர் என்ற பெயரும் உண்டு.புள் - சடாயு என்ற பறவையும், இருக்கு - இருக்கு என்ற வேதமும் வேள் - முருகப்பெருமானும், ஊர் - சூரியனும் இறைவனை வழிபட்டு அருள் பெற்ற காரணத்தால் இத்தலப்பெயர் புள்ளிருக்கு வேளூர் என்று பெயர் வந்தது

நோய் தீர்க்கும் திருச்சாந்து : 4448 வகையான வியாதிகளை தீர்த்து வைக்கும் மருத்துவத்தின் தலைமை பீடம் இது. இங்கு புற்று மண், அபிஷேக தீர்த்தம், வேப்ப இலை, அபிஷேக சந்தனம், அபிஷேக விபூதி இவைகளை கொண்டு "திருச்சாந்து' எனப்படும் உருண்டை தயாரிக்கப்படுகிறது. இதைச் சாப்பிட்டால் தீராத நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை. தோல் நோய்களுக்கு, இங்குள்ள புனுகு எண்ணெய் வாங்கி தேய்த்து நீராடுகின்றனர்.

வைத்தியநாதர் தன்னை வணங்கும் மக்களின் சாதாரண வியாதிகளை மட்டுமின்றி,  பிறவிப்பிணியையே தீர்த்து விடுபவர். இவரை வணங்கினால் மன அமைதி, வேலைவாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, திருமண பாக்கியம், குழந்தை வரம், தோஷ நிவர்த்தி ஆகியன உண்டாகும். வைத்தியநாதர் பல மாநில மக்களுக்கு குல தெய்வமாக விளங்குகிறார். கோயிலின் கிழக்கேயுள்ள நுழைவிடத்தில், ஆதிவைத்தியநாதர் அருள்பாலிக்கிறார்.மேற்கு பார்த்த சிவன் சன்னதியை தரிசித்தால், அது  ஆயிரம் கிழக்கு பார்த்த சிவன் சன்னதிகளை தரிசித்த பலனைத்தரும் என்பது ஐதீகம்.  வைத்தியநாதரும் மேற்கு நோக்கி உள்ளார். முருகப்பெருமான் இறைவனை வழிபட்டு சூரனை அழிக்க வேல் வாங்கிய தலம். இராமர் வழிபட்டு அருள் நலமுற்ற தலம்

செவ்வாய் தோஷ நிவர்த்தி : இந்தக் கோயிலிலுள்ள அங்காரகன் சன்னதியில் செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை மற்றும் பல சிரமங்களை அனுபவிப்போருக்காக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் திசை 7 வருடம் நடக்கும். நிலம் வாங்க, கடன் தொல்லை நீங்க, மூட்டு வலி குணமாக இவரை வணங்குவது சிறப்பு.

செவ்வாய் தோஷம் நீங்க, முருகன் வழிபாடு, கார்த்திகை மற்றும் செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பது, துவரை, செப்பு பாத்திரம் ஆகிய பொருள்கள் தானம் செய்வது, அங்காரகனுக்கு அபிஷேகம் செய்து சிவப்பு நிற ஆடை அணிவித்து வழிபாடு செய்வது நல்லது.

சடாயுகுண்டம் : இத்தலத்தில் சம்பாதி சடாயு என்ற கழுகரசர்கள் இறைவனை வழிபட்டு அருள் பெற்றுள்ளனர். சடாயுவின் வேண்டுகோளின்படி இராமபிரான் இத்தலத்தில் (விபூதி குண்டத்தில்) சிதையடுக்கிச் சாடாயுவின் உடலை வைத்து தகனம் செய்ததனால் இவ்விடம் சடாயு குண்டம் எனப்பட்டது.

வீரசேனன் என்ற அரசன் சயரோத்தினால் பீடிக்கப்பெற்ற சித்திர சேனன் என்ற தன் மகனுடன் இத்தலத்திற்கு வந்து நீராடி இக்குண்டத்திற்கு அதிரசம் வடை முதலியன நிவேதனம் செய்து வேதிகையையும் பொன்னால் திருப்பணி செய்து குண்டத்திலுள்ள நீற்றை அள்ளி எடுத்துத் தானும் அணிந்து தன் புதல்வனுக்கும் அணிவித்து நோய் நீங்கப்பெற்று நலமுற்றான்.

செல்வ முத்துக்குமாரர் : வைத்தியநாதருக்கும் தையல்நாயகிக்கும் செல்லப்பிள்ளையாதலால், இங்குள்ள முருகன் "செல்வ முத்துக்குமாரர்' என அழைக்கப்படுகிறார். சூரபத்மனை அழிப்பதற்காக இத்தல இறைவனை பூஜித்து வரம் பெற்றுள்ளார்.  செல்வமுத்துக்குமாரர் சன்னதியில் தினமும் நடக்கும் அர்த்தஜாம பூஜையின் போது புனுகு, பச்சைக்கற்பூரம், சந்தனம், எலுமிச்சை, பன்னீர், புஷ்பம், பால் சாதம், பால் ஆகியவற்றுடன் விசேஷ பூஜை செய்யப்படும்.
முருகன் திருவடியில் சாத்தப்படும் சந்தனத்தை வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும். முருகனுக்கு முக்கியத்துவம் உள்ள தலம் என்பதால், இங்கு அனைத்து விழாக்களும் முத்துக்குமார சுவாமிக்கு தான். தினமும் காலையிலும், அர்த்தஜாம பூஜையின் போதும் முதலில் முருகனுக்கு பூஜை செய்த பிறகே, சிவனுக்கும் அம்மனுக்கும் பூஜை நடக்கும். முத்துக்குமாசுவாமிக்கு தைமாதம் செவ்வாய்கிழமை ஆரம்பித்து 10 நாள் விழா நடக்கும். பங்குனியில் கோயிலின் பிரமோற்ஸவம் 28 நாள் நடைபெறும்.

மகாலட்சுமிக்கு சன்னதி உள்ளது.நவகிரக தலங்களில் இது அங்காரக தலம் ஆகும். மிகப்புகழ்பெற்ற பிரார்த்தனை தலம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சுவாமி மேற்கு பார்த்த சந்நிதி. இங்கு தரப்படும் வில்வம், விபூதி, புற்றுமண்
தைலம் ஆகியவற்றைக் கொண்டு தரப்படும் மருந்து வெண்குஷ்ட ரோகம் குணமாகிறது. செல்வ முத்துக் குமாரராக இத்தலத்தில் முருகன் தன் தகப்பனாரைப் பூஜிக்கிறார். இத்தலத்தில் நவகிரகங்கள் வரிசையாக இருக்கும். எல்லா தலங்களிலும் சுவாமிக்கு முன்புற பிரகாரத்தில்தான் இருக்கும். ஆனால் இங்கு மட்டும் நவகிரகங்கள் சுற்றுப்பிரகாரத்தில் சுவாமிக்கு பின்புறம் உள்ளது. இராமர் பூஜித்த தலம் இது. தையல் நாயகி அம்மனை வணங்கினால் குழந்தைகளுக்கு உண்டாகும் "பாலதோஷம்' நீங்கும். செவ்வாய்க்கிழமைகளில் ஆடு வாகனத்தில் அங்காரகன் எழுந்தருள்வார். மருத்துவத்துறையில் படிப்பவர்கள் இங்கு வழிபாடு செய்ய ஏராளமாக வருகின்றனர்.

தல வரலாறு:அங்காரகனுக்கு வெண்குஷ்ட நோய் வந்தது.அப்போது அசரீரி ஒன்று ஒலித்தது.வைத்தீசுவரன் கோயில் சென்று ஒருமண்டலம் சித்தாமிர்த குளத்தில் குளித்துவிட்டு வைத்தியநாதசுவாமியை வணங்கினால் ரோகம் குணமாகிவிடும் என்று கேட்டது.

இதையடுத்து அங்காரகனும் இங்கு வந்து வழிபட்டு நோய் குணமானது.இந்த வைத்தியத்துக்கு சுவாமி மருந்து தயார் செய்தபோது பார்வதி தைல பாத்திரம் கொண்டு வந்ததால் அம்பாளுக்கு தைல நாயகி என்று பெயர் வந்தது.இங்கு மொத்தம் ஐந்து சந்நிதிகள் உள்ளன.

1. கற்பக விநாயகர். இவரை வழிபட்டால் என்ன வரம் கேட்டாலும் தருவார்.

2. செவ்வாய் தோசம் உள்ளவர்கள் அங்காரகனை வழிபட்டால் திருமண வரம் கிடைக்கப் பெறுவர் .

3. வைத்தியநாதசுவாமி சர்வ ரோக நிவாரணி.இவரை வணங்கினால் தீராத பிணிகள் எல்லாம் தீரும்.

4. செல்வ முத்துக் குமரர் என்ற முருகப்பெருமானை வணங்கினால் புத்திர பாக்கியம் தொழில் விருத்தி கிடைக்கும்.

5.தையல் நாயகி அம்பாளை வணங்கினால் குழந்தைகளுக்கு பாலா தோசம் என்ற குறை நீங்கும்.தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் இது.

தென்னிந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள மக்கள் பலருக்கு இத்தலத்து ஈசன் குலதெய்வமாக இருப்பதால் இங்கு பல மாநிலத்து பக்தர்களும் வந்து வழிபடுகின்றனர். உடற்பிணி, உடம்பில் கட்டிகள், பருக்கள், வடுக்கள் ஆகியவை நீங்க இத்தலத்தில் பிரார்த்தனை செய்து இங்கு தரும் புனுகு எண்ணெய் வாங்கி பூசிக்கொள்கின்றனர். தன்வந்திரி சித்தர் ஜீவசமாதி அடைந்த தலம் என்பதால் இங்கு உடம்பில் ஏற்படும் பல்வேறு வகைக்குறைபாடுகள் நீங்கி நலம் பெறுகின்றனர்.

செல்வமுத்துக்குமாரர் சந்நிதியில் அர்த்தசாமபூஜையில் முருகனின் திருவடிகளில் சாத்தப்பெறும் நேத்திரப்படி சந்தனமும் திருநீறும் நோய்கள் தீர்க்க வல்லது. இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் வைத்தியநாத சுவாமியை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, திருமணவரம், குழந்தை வரம், தோச நிவர்த்தி ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார். 

இவரது சந்நிதியில் தரப்படும் வைத்தியநாதர் மருந்தை வாங்கி தினமும் சாப்பிட்டு வந்தால் தீராத நோய்கள் பல தீருவதாக கூறுகிறார்கள். செவ்வாய் தோஷத்தால் பாதிப்படைந்தவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு. 

போன்: +91- 4364- 279 423.

Bhrammapureeswarar Temple at Sirkali near Chidambaram (Paadal Petra Stalam)

அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில்

மூலவர்: சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர்
அம்மன்: பெரியநாயகி, திருநிலைநாயகி
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், கணநாதர், நம்பியாண்டார் நம்பிகள், பட்டினத்தார், சேக்கிழார், அருணாசல கவிராயர், மாரிமுத்தா பிள்ளை, முத்து தாண்டவ தீட்சிதர்
தேவாரப்பதிகம்

1. தோடுடைய செவியன்விடை யேறியோர்
தூவெண் மதிசூடிக்
காடுடைய சுடலைப்பொடி பூசியென்
உள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்து
ஏத்தஅருள் செய்த
பீடுடைய பிரமாபுரமேவிய
பெம்மான்இவன் அன்றே.

தெளிவுரை : தோடு என்னும் அணியை அணிந்துள்ள, உமாதேவியை இடப்பாகம் உடைய சிவபெருமான் இடபவாகனத்தில் ஏறி, தூய வெண்மதியைச் சூடி திருவெண்ணீறு மேனியில் பொலிய என் உள்ளத்தைக் கவர்ந்தவன். அப்பெருமான், ஒரு காலத்தில் நான்முகனுடைய வழிபாட்டினை ஏற்று அருள் செய்தவன். அவனே எனக்குக் காட்சி தந்தருளியவன். அவன் இவனே அல்லவா !

2. முற்றல்ஆமையிள நாகமோடுஏனம்
முளைக்கொம்புஅவை பூண்டு
வற்றலோடுகல னாப்பலி தேர்ந்தெனது
உள்ளம்கவர் கள்வன்
கற்றல்கேட்டல்உடை யார்பெரியார்கழல்
கையால்தொழுது ஏத்தப்
பெற்றம்ஊர்ந்தபிர மாபுரமேவிய
பெம்மான்இவன் அன்றே.

தெளிவுரை : ஆமையோடு, நாகம் முதலானவைகளை ஆபரணமாகக் கொண்டு திருஓடு ஏந்தி பிச்சை கொள்ளும் சிவபெருமான், என் உள்ளத்தைக் கவர்ந்தவன். நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்தவர்களும், கேள்வி ஞானம் பெற்றவர்களும், திருத்தொண்டு செய்யும் பெருமக்களும் கரங்கூப்பி வணங்கி நிற்க இடபவாகனத்தில் காட்சி தரும் பெருமான் இவனல்லவா ?

3. நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர்
நிலாவெண் மதிசூடி
ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன்
உள்ளம்கவர் கள்வன்
ஊர்பரந்தஉல கின்முதலாகிய
ஓரூர்இது என்னப்
பேர்பரந்தபிர மாபுரமேவிய
பெம்மான்இவன் அன்றே.

தெளிவுரை : கங்கை தங்கும் சடையில் குளிர்ந்த வெண்ணிலவைச் சூடி, அழகிய வளைகள் கைகளிலிருந்து நழுவிச் செல்லுமாறு என் உள்ளத்தையும் மேனியையும் உருகச் செய்து கவர்ந்தவன் சிவபெருமான். உலகிலுள்ள ஊர்கள் யாவும் பிரளய காலத்தில் அழிந்தாலும், அழியாது எப்போதும் நிலவும் பிரமபுரத்தில் இருக்கும் பெருமான் இவனல்லவா !

4. விண்மகிழ்ந்தமதில் எய்ததும்அன்றி
விளங்குதலை யோட்டில்
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தெனது
உள்ளம்கவர் கள்வன்
மண்மகிழ்ந்தஅர வம்மலர்க் கொன்றை
மலிந்தவரை மார்பில்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய
பெம்மான்இவன் அன்றே.

தெளிவுரை : வானத்தில் பரந்து சென்று துன்புறுத்தும் தன்மையில் மகிழ்ச்சி கொண்ட முப்புரக் கோட்டைகளை எரித்ததும் அன்றி, பிரமனுடைய கபாலத்தைப் பிச்சைப் பாத்திரமாகக் கொண்டு பிச்சையேற்று என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு, அரவமும் கொன்றை மலரும் மார்பினில் பொலிய உமாதேவியை மகிழ்ந்து இடப்பாகத்தில் வைத்து பிரமாபுரம் மேவிய பெருமான் இவனல்லவா !

5. ஒருமைபெண்மைஉடை யன்சடையன்விடை
ஊரும்இவன் என்ன
அருமையாகஉரை செய்யஅமர்ந்தெனது
உள்ளம்கவர் கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ள மதிந்ததோர்
காலம்இது என்னப்
பெருமைபெற்றபிர மாபுரமேவிய
பெம்மான்இவன் அன்றே.

தெளிவுரை : ஒரே வடிவத்தில் பெண்ணுருவும் ஆணுருவும் கொண்டு இரு உருவங்களைக் காட்டுபவனாகி, சடைமுடியுடன் இடபத்தில் அமரும் சிவபெருமான் அருமையான உரைகளைக் சொல்லும் பொருட்டு எனது உள்ளம் அமர்ந்து என்னைக் கவர்ந்தவன். ஊழிக் காலத்திலும் அழியாத பெருமையுடைய பிரமாபுரம் மேவிய பெருமான் இவனல்லவா !

6. மறைகலந்தஒலி பாடலோடு ஆடலர்
ஆகிமழு வேந்தி
இறைகலந்தஇன வெள்வளைசோரஎன்
உள்ளம்கவர் கள்வன்
கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர்
சோலைக்கதிர் சிந்தப்
பிறைகலந்தபிர மாபுரமேவிய
பெம்மான்இவன் அன்றே.

தெளிவுரை : வேத ஒலி முழங்க, பாடலுடன் ஆடலும் செய்து மழு ஏந்தி இருப்பவன் ஈசன். அவன் என்னுடைய கைகளில் உள்ள வளைகள் தாமே கழன்று விழும்படி என் உள்ளத்தைக் கவர்ந்து உருகச் செய்தவன். அடர்ந்த சோலைகள் திகழ்ந்து நறுமணம் வீச நிலவின் தன்மையுடைய பிரம்மபுரத்தில் மேவிய பெருமான் இவனல்லவா !

7. சடைமுயங்குபுன லன்அனலன்எரி
வீசிச்சதிர் வெய்த
உடைமுயங்குஅர வோடுஉழிதந்துஎனது
உள்ளம்கவர் கள்வன்
கடல்முயங்குகழி சூழ்குளிர்கானல்அம்
பொன்னஞ்சிறகு அன்னம்
பெடைமுயங்குபிர மாபுரம்மேவிய
பெம்மான்இவன் அன்றே.

தெளிவுரை : சடையில் கங்கையும் கரத்தில் நெருப்பும் ஒளிதந்து பெருமை கொள்ளவும், நாகமானது இறுகப் பற்றி உடலின் மீது திரியவும் காட்சி தந்து என் உள்ளத்தைக் கவர்ந்த சிவபெருமான், உப்பங்கழி பொருந்திய சோலையில் அன்னப் பறவைகள் தம் பேடைகளுடன் கூடியுள்ள பிரமாபுரத்தில் இருப்பவன். அவன் இவனல்லவா !

8. வியர்இலங்குவரை உந்திய தோள்களை
வீரம்விளை வித்த
உயர்இலங்கைஅரை யன்வலிசெற்றுஎனது
உள்ளம்கவர் கள்வன்
துயர்இலங்கும்உல கில்பலஊழிகள்
தோன்றும்பொழுது எல்லாம்
பெயர்இலங்குபிர மாபுரமேவிய
பெம்மான்இவன் அன்றே.

தெளிவுரை : சினத்தின் வயப்பட்டு வீரத்தைக் காட்டும் வகையில் கயிலையைப் பெயர்த்த இலங்கை அரசனுடைய வலிமையை அழித்து எனது உள்ளத்தைக் கவர்ந்த ஈசன், வினையின் கன்மத்தைச் சேர்த்துத் துயரை விளைவிக்கும் இந்த உலகில் ஊழிக்காலத்திலும் அழியாமல் நிலைத்து நின்று தனது சிறப்பினை நல்கும் பதியாகிய பிரமபுரத்தில் மேவியவன். அவன் இவனல்லவா !

9.தாள்நுதல் செய்துஇறை காணியமாலொடு
தண்தாமரை யானும்
நீணுதல்செய்துஒழிய நிமிர்ந்தான் எனது
உள்ளம்கவர் கள்வன்
வாள்நுதல்செய்மக ளிர்முதலாகிய
வையத்தவர் ஏத்தப்
பேணுதல்செய்பிர மாபுரமேவிய
பெம்மான்இவன் அன்றே.

தெளிவுரை : திருவடியைக் காணத் திருமாலும் திருமுடியைக் காணப் பிரமனும் முயற்சி செய்ய, அவர்கள் செயல் பயனற்றவாகச் செய்யும் வகையில் நீண்டு வளர்ந்தவனாகிய ஈசன் எனது உள்ளத்தைக் கவர்ந்தவன். வாள்போன்ற நெற்றியை உடைய மகளிர் முதலாக உலகத்தவர் அனைவரும் ஏத்தப் பேணிக் காக்கும் பிரமாபுரம் மேவிய பெருமான் இவன் அல்லவா !

10. புத்தரோடுபொறி யில்சமணும்புறம்
கூறநெறி நில்லா
ஒத்தசொல்லஉல கம்பலிதேர்ந்தெனது
உள்ளம்கவர் கள்வன்
மத்தயானைமறுக அவ்உரிபோர்த்ததோர்
மாயம்இது என்னப்
பித்தர்போலும்பிர மாபுரமேவிய
பெம்மான்இவன் அன்றே.

தெளிவுரை : புலன் உணர்வுகளை நீத்த புத்தரும் சமணரும் நன்னெறியில் அமையாத மாற்றுக் கருத்துக்களைக் கூறிடினும் பிச்சையேற்று எனது உள்ளத்தைக் கவர்ந்து, செருக்குற்ற யானையை அழித்து அதன் தோலைப் போர்வையாக்கிக் கொண்டு பின்னர் மாயை காட்டிப் பித்தனைப் போன்று பிரமாபுரம் மேவிய பெருமான் இவனல்லவா !

11. அருநெறியமறை வல்லமுனியகன்
பொய்கையலர் மேய
பெருநெறியபிர மாபுரமேவிய
பெம்மான்இவன் தன்னை
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம்
பந்தன்உரை செய்த
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை
தீர்தல்எளி தாமே.

தெளிவுரை : மறைவல்ல பிரமன் பூசித்த பிரமாபுரம் மேவிய பெருமானை ஒன்றிய மனத்தினால் உணர்ந்து ஞானசம்பந்தன் உரைத்த திருநெறிய இத் தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவருடைய தொல்வினை எளிதாகத் தீரும்.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 14வது தலம்.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

தலபெருமை:ஊழிக்காலத்தில் உலகம் அழிந்த பின் சிவபெருமான் 64 கலைகளையும் ஆடையாக தரித்து, "ஓம்' என்ற பிரணவமந்திரத்தை தோணியாக்கி, உமா மகேஸ்வரராக வருகையில், ஊழிக்காலத்திலும் அழியாத இந்த சீர்காழி தலத்தை பார்த்தார்.


இதுவே எல்லாவற் றிற்கும் மூல க்ஷேத்திரம் என்று தோணியுடன் இத்தலத் தில் எழுந்தருளி தோணியப்பர் என பெயர் பெற்றார். அம்பாள் திருநிலை நாயகி எனப்பட்டாள். இங்கு சிவனை பிரம்மா பூஜித்ததால் பிரம்மபுரீசுவரராக லிங்க வடிவிலும், ஆணவங் களை அழிப்பவராக சட்டை நாதராகவும், பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளாக அருள்பாலிக்கிறார். இவர்கள் தான் சம்பந்தருக்கு காட்சி கொடுத்து அருள்பாலித்தவ ர்கள். இது குரு மூர்த்தம் எனப்படும். உச்சியில் உள்ள அடுக்கில் சட்டைநாதர் அருள்பாலிக்கிறார். இவர் சிவனின் அம்சங்களில் பைரவ அம்சமாக திகழ்கிறார்.

மகாபலி கரவர்த்தியை அழித்த தோஷம் விஷ்ணுவிற்கு பிடித்து கொண்டது. விஷ்ணு வேறு, தான் வேறு இல்லை என்பதால் அவரது தோலை, சிவன் சட்டையாக அணிந்து கொண்டார். ஆனால், விஷ் ணுவை சிவன் அழித்து விட்டதாக நினைத்து மகாலட்சுமி தலையில் பூ வைத்து கொள்ளாமல் ஆழ்ந்த கவலையில் இருந்தாள். இப்போதும் கூட இவரது சன்னதிக்கு வரும் பெண்களை பூ வைத்துக் கொள்ள அனுமதிப்பதில்லை. ஆண்கள் சட்டை அணியக்கூடாது. சட்டங்களுக்கெல்லாம் இவரே அதிபதி என்பதால், வழக்குகளில் பிரச்னை உள்ளவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு.


பிரம்மனுக்கு ஏற்பட்ட அகங்காரம் நீக்கிய தலம். பிரளய காலத்தில் பார்வதிக்கு ஞான உபதேசம் செய்த தலம். இத்தல அம்மன் மகாலட்சுமி சொரூபமாக சக்தி பீடத்தில் 11வது பீடமாக அமர்ந்துள்ளார். இங்கு வந்து வணங்கினால் தான் என்ற அகங்காரம் நீங்கி ஞானம் கிடைக்கும். பிரம்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, மூலவர், உற்சவர் என அனைவருமே மூலஸ்தானத்தில் கைலாய காட்சியில் உள்ள ஒரே தலம் சீர்காழி தான். காசியை காட்டிலும் மிகப்பெரிய பைரவ க்ஷேத்திரம்.

இங்கு அசிதாங்க பைரவர், ருருபைரவர், சண்டபைரவர், குரோத பைரவர், உண்மத்த பைரவர், சம்ஹார பைரவர், பீஷண பைரவர், அகால பைரவர் என அஷ்ட பைரவர்களும் உருவமாக உள்ளனர்.   எனவே தான் காழியில் பாதி காசி என்பர். இவர்களது சன்னதிக்குள் சட்டை அணிய அனுமதியில்லை. அஷ்டமி திதிகளில் சிறப்பு பூஜை உண்டு.


18 சித்தர்களில் ஒருவரான சட்டை முனி சித்தர் இங்கு ஜீவ சமாதி ஆகி உள்ளார். சிவன் கோயில் பிரகாரத்தில் இவரது ஜீவ சமாதிக்கு மேல் ஒரு பீடம் உள்ளது. இங்கிருந்தபடியே உச்சியிலிருக்கும் சட்டைநாதரை தரிசிக்க முடியும். வெள்ளிக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு இந்த பீடத்திற்கு அபிஷேகம் நடக்கும். இரவு 12 மணிக்கு இதற்கு புனுகு சட்டம் சாத்தி, வடை மாலை அணிவித்து, பாசி பருப்பு பாயசம் நைவேத்யம் செய்யப் படுகிறது.

குன்றுக்கோயில் உருவான வரலாறு : உரோமச முனிவர் கயிலை சென்று, சிவனை நோக்கி தவம் செய்து, ""இறைவா! பக்தர்களின் குறை தீர்க்க தென்திசையில் தேவியுடன் எழுந்தருளி கயிலை தரிசனம் தரவேண்டும்,'' என வேண்டினார். ஒருசமயம் ஆதிசேஷனுக்கும் வாயு தேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி நடந்தது. இதில் ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளால் கயிலையை மூடிக்கொண்டார். வாயுவால் மலையை அகை கூட முடியவில்லை. தேவர்களின் வேண்டுகோளின் படி ஆதிசேஷன் ஒரு தலையை மட்டும் தூக்க, வாயுவின் வேகத்தினால் சிறு பகுதி பெயர்ந்தது. இறைவனின் அருளால் இந்த சிறு மலையை 20 பறவைகள் சீர்காழிக்கு கொண்டு வந்து சேர்த்தன. காலவித்து என்னும் மன்னனுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. கயிலை சென்று இறைவனை வணங்கினால் தான் புத்திர பாக்கியம் கிடைக்கும் என பெரியவர்கள் கூறினர். அவன் சின்னக் கயிலையான சீர்காழிக்கு வந்து இறைவனை வணங்கி, குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெற்றான்.

மூன்றடுக்கு சன்னதி : இக்கோயில் மூன்று அடுக்குகளைக் கொண்ட குன்றுக்கோயிலாக விளங்குகிறது. கீழ் தளத்தில் பிரம்மபுரீஸ்வரர், திருநிலை நாயகி அருள்பாலிக்கின்றனர். இது லிங்க மூர்த்தம் எனப்படும். இவருக்கு 6 கால பூஜை நடக்கிறது. படைக்கும் தொழிலைச் செய்த பிரம்மா, தானே உலகில் பெரியவன் என அகங்காரம் கொண்டார். இந்த அகங் காரத்தைப் போக்குவதற்காக சிவபெருமான், பிரணவ மந்திரத்தை பிரம்மனுக்கு மறக்க செய்தார். இதனால் வருந்திய பிரம்மன் இத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். இதனால் இத்தல இறைவன் பிரம்மபுரீஸ்வரர் ஆனார்.


நடு அடுக்கில், உமா-மகேஸ்வரர் உள்ளனர். இவரை "தோணியப்பர்' என அழைக்கிறார்கள். இவருக்கு 4 கால பூஜை நடக்கிறது. இந்தக் குன்றையும் . "தோணிமலை' என்கின்றனர்.

தல வரலாறு:சமயக்குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர், சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர்- பகவதி அம்மையார் தம்பதியரின் மகனாகப் பிறந்தார். இவரை முருகனின் அம்சம் என்றும், இளைய பிள்ளையார் என்றும் வழங்குவர்.


இவர் தனது மூன்றாவது வயதில் தந்தையுடன் இத்தலத்திலுள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராட வந்தார். தந்தை இவரை குளக்கரையில் உட்காரவைத்து விட்டு, தான் மட்டும் நீராடச் சென்றார். அப்போது சம்பந்தருக்கு பசி ஏற்பட, "அம்மா! அப்பா!' என அழுதார். இவரது அழுகுரல் கேட்ட சிவன், பார்வதியை நோக்கி குழந்தையின் பசிக்கு பால் கொடுக்குமாறு கூறினார். அதன்படி சிவனுடன் சம்பந்தருக்கு தரிசனம் தந்து மெய்ஞானம் கலந்த பாலை புகட்டினாள் அம்பிகை. பசி தீர்ந்த சம்பந்தர் வாயில் பால் வழிய அமர்ந்து விட்டார். குளித்து விட்டு வந்த தந்தை, ""பால் கொடுத்தது யார்? யாராவது ஏதாவது கொடுத்தால் வாங்கிச் சாப்பிடக்கூடாது என்பது உனக்குத் தெரியாதா? அபச்சாரம் செய்து விட்டாயே,'' எனச்சொல்லி குச்சியால் சம்பந்தரை அடிக்க கையை ஓங்கினார்.
அப்போது சம்பந்தர், சிவனும் பார்வதியும் தரிசனம் தந்த திசையை காட்டி, ""தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடி காடுடைய சுடலைப்பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன் ஏடுடைய மலரான் உனை நாட்பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரம்மாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே'' என்று பாடினார். தந்தை அசந்து போனார்.


தன் குழந்தைக்கு இறைவனே காட்சி தந்து பாலூட்டியது அறிந்து பரவசப்பட்டார். இத்தலத்தைபற்றி சம்பந்தர் 67 பதிகங்களும், திருநாவுக்கரசர் 3 பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

வழக்குகளில் பிரச்னை உள்ளவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு.
குழந்தை இல்லாதவர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம் 

போன்: +91- 4364-270 235, +91- 94430 53195

Velladainathar Temple at Tirukkurukaavoor (Sirkali) near Chidambaram (Paadal Petra Stalam)

அருள்மிகு வெள்ளடைநாதர் திருக்கோயில்

மூலவர்:வெள்ளடைநாதர்
அம்மன்: காவியங்கண்ணி
பாடியவர்கள்: சம்பந்தர், சுந்தரர்
தேவாரப்பதிகம் 
பண்ணிடைத் தமிழ் ஒப்பாய் பழத்தினில் சுவையொப்பாய் கண்ணிடை மணியொப்பாய் கடுஇருள் சுடரொப்பாய் மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே
-சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 13வது தலம். 

தல சிறப்பு:இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக காட்சிதருகிறார். திருஞானசம்பந்தருக்காக இங்கு தை மாத அமாவாசையன்று கங்கை நதி கிணற்றில் பொங்கியது. இதன் அடிப்படையில் தற்போதும் தை அமாவாசையன்று ஒருநாள் மட்டும் இந்த தீர்த்தம் திறக்கப்படுகிறது. அன்று மட்டுமே பக்தர்கள் இதில் நீராட அனுமதிக்கிறார்கள். மற்ற நாட்களில் இந்த தீர்த்தத்தை திறப்பது கிடையாது.

தலபெருமை:
ஒருநாள் மட்டும் நீராடும் தீர்த்தம்: மூலஸ்தானத்தில் வெள்ளடைநாதர் சதுர பீடத்தில், சிறிய பாணலிங்கமாக காட்சி தருகிறார்.
அன்று காலையில் சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருந்து திருஞானசம்பந்தரின் உற்சவ மூர்த்தி இந்த தீர்த்தத்திற்கு வருகிறார். அப்போது இக்கோயிலிலுள்ள சிவனும், அம்பாளும் அவருக்கு காட்சி தந்து தீர்த்தம் கொடுக்கின்றனர். அதன்பின்பு மாலையில் சம்பந்தர் மீண்டும் சீர்காழி திரும்புகிறார். இந்த வைபவம் வெகு விமரிசையாக இங்கு நடக்கிறது.

அன்னமிட்ட "கை': சிவத்தல யாத்திரை சென்ற சுந்தரர், இத்தலத்திற்கு வந்தார். அப்போது இப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. எனவே, அவரால் இக்கோயிலை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, இத்தலத்து சிவனை தரிசிக்காமல் சென்றுவிட்டார்.
வழியில் அவருக்கு பசியெடுத்தது. அப்போது ஒரு முதியவர் அவர் முன்பு சென்றார். சுந்தரரிடம் அவர் அருகில் ஓரிடத்தை சுட்டிக்காட்டி, தான் அவ்விடத்தில் சிவனடியார்களுக்கு அன்னம் பரிமாறுவதாகவும், அங்கு வந்து சாப்பிட்டுவிட்டு செல்லும்படியும் கூறினார்.
அதன்படி சுந்தரரும், அவருடன் சென்ற அடியார்களும் சாப்பிடச் சென்றனர். அவர்களை முதியவர் உபசரித்தார். அதன்பின்பு சாப்பிட்ட களைப்பில் அன்னப்பந்தலில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார் சுந்தரர். சற்றுநேரம் கழித்து அவர் விழித்தபோது, அங்கு அன்னதான பந்தலோ, சாப்பாடு பரிமாறியதற்கான தடமோ தெரியவில்லை. வியந்த சுந்தரர், தனக்கு அன்னம் பரிமாற வந்தது சிவன்தான் என அறிந்து கொண்டார். பின்பு சிவனை வேண்டவே, அவர் இத்தலத்தை அடையாளம் காட்டினார். அதன்பின்பு இங்கு வந்த சுந்தரர், சிவனை வேண்டி பதிகம் பாடினார்.
சுந்தரருக்கு, சிவன் அன்னம் பறிமாறிய விழா சித்ராபவுர்ணமியன்று நடக்கிறது. இங்கு சிவனிடம் வேண்டிக்கொள்ள அன்னத்திற்கு குறையில்லாத நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை.

சாந்த துர்வாசர்: இங்குள்ள காவியங்கண்ணி அம்பிகைக்கு, "சுகப்பிரசவ நாயகி' என்ற பெயரும் உண்டு. இவளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, அதையே பிரசாதமாக எடுத்துச்செல்கிறார்கள். இதனால், சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.
பிரகாரத்தில் துர்வாசர், சாந்த கோலத்தில் சிரித்தபடி காட்சி தருகிறார். இவர்  இடது கையில் ஏடு வைத்து, வலக்கையில் அருள் செய்தபடி காட்சி தருவது விசேஷம். சிவலோக நாதர், பூலோகநாதர், பைரவர், சூரியன், சந்திரன், மாவடி விநாயகர் ஆகியோரும் உள்ளனர்.

தல வரலாறு:சைவ சமயம் தழைக்க பாடுபட்ட சம்பந்தர், மதுரையில் சமணர்களுடன் வாதிட்டு வென்றார். அவருடன் வாதத்தில் தோற்ற சமணர்கள் கழுவேற்றப்பட்டனர். இவ்வாறு சமணர்களை கழுவேற்றிய பாவம் நீங்க சம்பந்தர், காசிக்குச் சென்று கங்கையில் புனித நீராட விரும்பினார்.
தான் காசிக்கு செல்ல அருளும்படி சீர்காழி தலத்தில் சிவனிடம் வேண்டினார். சம்பந்தருக்கு காட்சி தந்த சிவன், அவரை சீர்காழிக்கு செல்ல வேண்டாமென்றும் இத்தலத்தில் அவருக்கு கங்கையை வரவழைத்துக் கொடுப்பதாகவும் கூறினார். அதன்படி இங்கு வந்த சம்பந்தர் சிவனை வேண்டினார்.
அவருக்கு காட்சி தந்த சிவன், இங்கிருந்த கிணற்றில் கங்கையை பொங்கச் செய்தார். அதில் நீராடிய சம்பந்தர், பாவம் நீங்கப்பெற்றார். பிற்காலத்தில் இத்தலத்தில் கோயில் எழுப்பப்பட்டது.

தெரியாமல் செய்த பாவத்தால் வருந்துபவர்கள் இங்கு வேண்டிக்கொள்ள மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இங்கு சிவனிடம் வேண்டிக்கொள்ள அன்னத்திற்கு குறையில்லாத நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை. 

போன்: +91- 9245 612 705.

Monday, November 7, 2011

Swetaranyeswarar Temple at Tiruvengadu near Chidambaram (Navagraha Stalam, Paadal Petra Stalam)

அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:சுவேதாரண்ய சுவாமி
அம்மன்:பிரமவித்யாநாயகி
பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர் 
தேவாரப்பதிகம்
கண்காட்டு நுதலானும் கனல்காட்டும் கையானும் பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டும் சடையானும் பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும் வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும் கொடியானே. 

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 11வது தலம். 

தல சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் நவகிரகதலத்தில் இது புதன் தலமாகும். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. இவர் திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் என பெயரும் உண்டு.

தலபெருமை:காசிக்கு சமமான தலங்கள் ஆறு. அதில் ஒன்று திருவெண்காடு. இத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம் எல்லாமே மூன்று. நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய ஸ்தலமாகும். 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோர மூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காணலாம். இவர் நவதாண்டவம் புரிந்தார். எனவே, இதை ஆதி சிதம்பரம் என்பார்கள்.

இங்கு நடராஜ சபையும் ரகசியமும் உண்டு. சிதம்பரத்தை போல நடராஜருக்கு அருகில் பெருமாளுக்கு தனி சன்னதி உண்டு. இந்திரன், ஐராவதம், விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் வழிபட்டுள்ளார்கள். பட்டினத்தார் சிவதீட்சை பெற்றதும், மெய்கண்டார் அவதரித்ததும் இங்குதான்.

சுவேதாரண்யர் (திருவெண்காடர்) :திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் ஆகிய பெயர்களும் இவருக்கு உண்டு. இவரே இத்தலத்தின் நாயகர். லிங்க வடிவில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.

நடராஜர் :  இங்குள்ள நடராஜரை ஆடவல்லான் என்று கல்வெட்டு கூறுகிறது. இத்தலம் ஆதிசிதம்பரம் என்றே அழைக்கப்படுகிறது. இங்கும் தில்லை சிதம்பரம் போன்றே நடராஜர் சபை அமைந்து உள்ளது.ஸ்படிக லிங்கமும், ரகசியமும் இங்கும் உள்ளது. தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது.

அகோர மூர்த்தி : ஆலயத்தின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி. இவர் மருத்துவாசுரனை அடக்குவதற்காக சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர். இவரது வீரக் கோலம் இங்கு சிறப்பாக இருக்கிறது.

சிவபெருமான் தன் பக்தர்கள் பொருட்டு 64 வித உருவங்களில் காட்சியளித்து வருகிறார்.இது 43 வது உருவம் ஆகும்.இறைவனின் வீரச் செறிவை காட்டும் கோலம்.பெயரில் சற்று கடுமை இருந்தாலும் அருள் நிலையில் இந்த மூர்த்தி உள்ளார். மூலவரைப் போலவே உற்சவரும், நடப்பவர் ஒருவர் இடது காலை முன்வைத்து எப்படி வலது காலைப் பெயர்த்து அடியெடுத்து வைக்க முனைவாரோ அதே போல் பெருமான் தன் நடையழகைக் காட்டும் விதமாக உள்ளார் என்பது சிறப்பு.
அட்ட வீரட்டதலங்களில் இத்தலம் சேராவிட்டாலும் சிவபெருமானின் வீரச்செயல் நிகழ்ந்த தலம் இது.இந்த அகோர மூர்த்தியை திருவெண்காடு தலத்தை தவிர்த்து வேறு எங்கும் கண்டு விட முடியாது.

பிரம்ம வித்யாம்பாள் : இத்தலத்தின் தன்னிகரில்லா தலைவி இவள்.திருவெண்காடரின் சக்தி வடிவம் இவள். மாதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி மாதங்கி என்ற பெயருடன் சுவேதாரண்யரை நோக்கி தவம் இருந்து தன் கணவனாக பெற்றார். பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்தயாம்பிகை யானாள். கல்வியில் சிறந்து விளங்க இவளை வழிபாடு செய்வது சிறப்பு.

நான்கு திருக்கரங்களில் இடது மேற்கரத்தில் தாமரைப்பூ(செல்வச் செழிப்பு) வலது மேற்கரத்தில் அக்கமாலை(யோகம்) அணி செய்வதைக் காணலாம்.கீழ்க்கரம் அபய கரம்.இடது கீழ்கரம் திருவடிகளின் பெருமையை பேசுவதாகும்.பணிந்தார் எவரும் தெய்வம் போல உயரலாம் என்பதாகும்.பெருமை வாய்ந்த சக்தி பீடங்களுள் இதுவும் ஒன்று.

காளிதேவி : சுவேத வனத்தில் எழுந்தருளிய மாசக்தியாதலால் சுவேதன காளி என்று அழைக்கப் படுகிறாள். எட்டு கரங்கள், பாசம், சக்கரம், வாள், உடுக்கை, கேடயம், கபாலம் ஆகிய படைக் கலன்களை தாங்கியுள்ளார். பாவத்தில் எடுப்பும் மிடுக்கும் கொப்பளிக்கிறது. உடலின் சாய்வுக்கு ஏற்ப வலக்காலைப் பீடத்தின் மீது உயர்த்தி வைத்துக் கொண்டு இடக்காலைத் தொங்க விட்டிருக்கிறார். பக்தியோடு கலையை ஆராதிப்பவர்களுக்கு இவள் அருள் புரிகிறாள்.

துர்க்கை தேவி : துர்க்கையின் உருவைக் கண்ட மாத்திரத்தில் மேற்கண்டு அடிவைக்க மனம் வராது. மகிஷனை அழித்த இந்த மாதேவி இப்படியும் கூட அழகினளாக இருப்பாளா என்ற ஆச்சர்யம் வரும். இவள் தன் எட்டு கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு உடையவளாக காட்சி தருகிறாள்.

புதன் பகவான் : வித்தயாகரகன் எனப்படும் புதன் பகவான் அன்னை வித்யாம்பிகையின் அரசாட்சிக்குட்பட்டவர் போன்றும் தாயின் அரவணைப்போடும் கூடி வீற்றிருக்கும் சேய் போன்றும் அனையர் கோயிலுக்கு இடது பாகத்தில் தன் கோயிலை அமைத்துக் கொண்டு அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் திருவெண்காடரை புதன் தன் அலி தோசம் நீங்கி நவகோள்களில் ஒருவரானார் என்பது புராண வரலாறு.இவர் செய்த மாதவத்தின் பயனாகவே ரிக் வேதத்தின் ஐந்தாவது காண்டத்துக்கு அதிபதி ஆனார்.திருவெண்காடு நவகிரக தலங்களில் மிகவும் புகழும் சிறப்பும் பெறக் காரணமாக அமைந்தவர்.

பிள்ளையிடுக்கி அம்மன்:திருஞான சம்பந்தர் இத்தலத்தின் வட எல்லைக்கு வந்த போது அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின. எனவே இத்தலத்தில் காலை வைக்க பயந்து "அம்மா' என்றழைத்தார்.

இவரது குரலைக்கேட்ட பெரியநாயகி இவரை தன் இடுப்பில் தூக்கி கொண்டு கோயிலுக்குள் வந்தார். சம்பந்தரை இடுப்பில் தாங்கிய வடிவில் பெரியநாயகியின் சிலை அம்மன் கோயிலின் பிரகாரத்தில் உள்ளது.

புதனுக்கு தனி சன்னதி: நவக்கிரகங்களில் புதன் பகவான், கல்வி, அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றை தர வல்லவர். இவருக்கு இத்தலத்தில் தனி சன்னதி உள்ளது. புதனின் தந்தையான சந்திரனின் சன்னதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும், புதன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது.

ஜாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் புத்திரபாக்கியம் கிடைக்காது. அத்துடன் அறிவுக்குறைபாடும், நரம்புத்தளர்ச்சியும் ஏற்படும். இப்படி குறைபாடுகள் உள்ளவர்கள் இங்கு வந்து சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி புதன் பகவானை வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம். இசைக்கு அதிபதியான புதனை இசைக்கலைஞர்களும், திரைப்படக்கலைஞர்களும் வழிபட்டு பயன் பெறுகின்றனர். நவகிரகங்களில் இது புதன் சிவபெருமானை  பூஜித்து பேறு பெற்ற தலம். மிகப்புகழ்பெற்ற பிரார்த்தனை தலம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தலம் காசிக்கு இணையான ஆறு தலங்களில் முதன்மையானது.காசியில் உள்ள 64 ஸ்நானக் கட்டடங்களுக்கு இணையான மணிகர்ணிகை ஆறு இங்குள்ளது.
இத்தலத்தில் மூர்த்திகள்(திருவெண்காடர், அகோரமூர்த்தி, நடராஜர்), சக்தி(துர்க்கை, காளி, பிரம்மவித்யாம்பாள்),தீர்த்தம் (அக்னி தீர்த்தம்,சூர்ய தீர்த்தம்,சந்திர தீர்த்தம்) தலவிருட்சம்(வடவால், வில்வம், கொன்றை ) என்று மும்மூன்றாக அமையப்பெற்ற சிறப்பு உள்ளது.

காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. அட்டவீரட்டத்தலம் போன்றே இங்கும் சிவபெருமான் மருத்துவாசுரனை சம்காரம் செய்து வீரச்செயல் புரிந்துள்ளார். ஆதி சிதம்பரம் என்ற பெயரும் பெருமையும் பெற்ற தலம் இது.

சப்த விடத்தலங்களில் இத்தலமும் ஒன்று. வால்மீகி ராமாயணத்தில் இத்தலம் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது.எனவே யுகம் பல கண்ட கோயில் இது. சிலப்பதிகாரத்திலும் இத்தலம் பற்றி கூறப்பட்டுள்ளது. எனவே சமண வைணவ காவியங்களில் கூறப்பட்டுள்ள சைவ சமயக் கோயில் இது என்ற பெருமை பெற்றது.

பட்டினத்தார் இத்தலத்தில் வந்து திருவெண்காட்டு நாதரே அவருக்கு குருநாதராக இருந்து சிவதீட்சை தந்த தலம். இத்திருவிழா, இத்தலத்தில் இப்போதும் நடைபெறுகிறது. பட்டினத்தாருக்கு திருவெண்காடர் என்ற பெயர் பெற காரணமாக இருந்து கோயில் இது.

தல வரலாறு:பிரம்மனிடம் பெற்ற வரத்தால் மருத்துவன் என்னும் அசுரன் தேவர்களுக்கு துன்பத்தை விளைவித்தான்.சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண் காட்டில் வாழ்ந்து வந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்தும் போர் செய்தான்.அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்று ரிடப தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான்.ரிடப தேவர் சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டார். அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார்.இந்த அகோர உருவை கண்ட மாத்திரத் திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான். சரணடைந்த அசுரன் அகோர மூர்த்தியின் காலடியிலும் காயம் பட்ட ரிடப தேவர் சுவேதாரண்யவரர் சுவாமி நிறுத்த மண்டபத்திலும் இன்றும்காணலாம். தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் இது.

இங்கு கல்வி, தொழிலுக்கு அதிபதியான புதனுக்கு தனி ஆலயம் உள்ளது. கல்வி மேன்மையடைய, தொழில் சிறக்க, பிணி நீங்க, பிள்ளைப்பேறு பெற புதனை வழிபட்டால் மேன்மையடைவது உறுதி.
இத்தலத்தில் உள்ள வடவால் ஆல விருட்சத்தின் அடியில் ருத்ர பாதம் உள்ளது.21 தலைமுறையில் வருகின்ற பிதுர் சாபங்கள் நீங்கும். இதன் பெயர் ருத்ர கயா. காசியில் இருப்பது விஷ்ணு கயா.பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கும்.குழந்தைப் பேறு , திருமண வரம் ஆகியவை இத்தலத்தில் கைகூடுகிறது.மேலும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் குணமாகும்,கல்வி மேன்மை, நா  வன்மை ஆகியவை கிடைக்கும்.பேய் ,பிசாசு தொல்லைகள் நீங்கும்.
இத்தலத்தில் வழிபடுவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.


போன்: +91-4364-256 424

Sivalokatyagesar Temple at Aachalpuram near Nagapattinam (Paadal Petra Stalam)

அருள்மிகு சிவலோகத்தியாகர் திருக்கோயில்

மூலவர்:சிவலோகத்தியாகர்
அம்மன்: திருவெண்ணீற்று உமையம்மை, சுவேத விபூதி நாயகி
பாடியவர்கள்:சம்பந்தர்
தேவாரப்பதிகம்
அன்புறு சிந்தைய ராகி அடியவர் நன்புறு நல்லூர்ப் பெருமண மேவிநின் இன்புறும் எந்தை இணையடி ஏத்துவார் துன்புறுவார் அல்லர் தொண்டு செய்வாரே.
-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 5வது தலம். 
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்

தலபெருமை:சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு வேத நெறி தழைத்தோங்கவும், சைவத்துறை விளக்கம் பெறவும் திருஞான சம்பந்தர் அவதரித்த தலம் சீர்காழி. அதேபோல் தனது திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவருடன் தானும் சிவ ஜோதியில் கலந்த தலம் ஆச்சாள்புரம்.இவரை உடலால் சிறியவர், உணர்வால் பெரியவர் என சேக்கிழார் போற்றுகிறார்.
ஆச்சாள், ஆயாள் என்பது அம்பிகையின் பெயர்கள். ஆச்சாளே நேரில் வந்து ஞானசம்பந்தரின் திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு திருநீறு அளித்ததால் அம்மனுக்கு திருவெண்ணீற்று உமையம்மை என்ற திருநாமமும், இத்தலத்திற்கு ஆச்சாள்புரம் என்ற பெயரும் ஏற்பட்டது.

வசிஷ்டர், பராசரர், பிருகு, ஜமத்கனி முனிவர் ஆகியோர்களுக்கு இறைவன் கயிலை காட்சி காட்டி அருள்புரிந்து உள்ளார். பிரம்மா இங்கு வந்து வழிபட்டு படைப்பு தொழிலை கைவரப்பெற்றார். விஷ்ணு வந்து வழிபட்டு அசுரர்களை வெல்லும் வரம் பெற்றார். இந்திரன் போகம் பெற்றான். சந்திரன் அபயம் பெற்றான். கங்கா தேவி தவம் செய்து இங்குள்ள வாசலில் எழுந்து இறைவனை வழிபட்டாள். இங்கு வந்து வழிபட்டால் வினைகள் நீங்கும். பந்த பாசம் விலகும். சம்பந்தருக்கு சிவஜோதியில் கலக்க செய்த இறைவனை வழிபடுபவர்களுக்கு முக்தி நிச்சயம்.

காக முனிவர் இத்தலத்தை காலால் மிதிப்பதற்கு பயந்து தலையால் நடந்து வந்து நிருதி திசையில் அமர்ந்து தவமிருந்தார். சம்பந்தர். திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலநக்கநாயனார் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.

திருநீறு பிரசாதம்: இந்த அம்மனின் சன்னதியில் திருநீறு தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதைப் பூசினால் நோய் விலகும், முன்ஜென்ம பாவம் விலகும், தரித்திரம் நீங்கி சரித்திரம் படைக்கலாம், பெண்களுக்கு தாலி பாக்கியம் நீடித்திருக்கும் என்பது ஐதீகம்.

தல வரலாறு:சீர்காழியில் சிவபாதஇருதயரின் மகனாக அவதரித்தவர் சம்பந்தர். இவருக்கு 16 வயது நடக்கும் போது, இவரை திருமணம் செய்து கொள்ளும்படி தந்தை கூறினார். முதலில் மறுத்த சம்பந்தர், பின் "இறைவனின் விளையாட்டு தான் இது', என்று சம்மதித்தார். மயிலாப்பூரில் சிவநேச செட்டியாரின் மகளை பெண் பார்த்து முடித்தனர். அவள் திடீரென இறந்து போனாள். அவளுக்கு உயிர் கொடுத்த சம்பந்தர் அவளை தன் மகளாக ஏற்றார். அப்பெண் இறைப்பணியில் மூழ்கி விட்டார்.
இதன்பிறகு, நல்லூரில் உள்ள நம்பியாண்டார் நம்பியின் மகள் மங்கை நல்லாள் நிச்சயித்தார் சிவபாத இருதயர். ஞானசம்பந்தரும் மணக்கோலம் பூண்டார். ஆச்சாள்புரம் கோயிலில் திருமணம் நடக்க இருந்தது. திருநீலக்க நாயனார் மணவிழா சடங்குகளை செய்தார். சம்பந்தர் அக்னியை வலம் வரும் போது
""இருவினைக்கு வித்தாகிய இல்வாழ்க்கை நம்மை சூழ்ந்ததே, இனி இவளோடும் அந்தமில் சிவன் தாள் சேர்வேன்'' என்று கூறி, "கல்லூர்ப் பெருமணம்' என தொடங்கும் பதிகம் பாடி சிவனின் திருவடியில் சேரும் நினைவோடு இறைவனை வழிபட்டார். அப்போது எல்லாம் வல்ல ஈசன் ஜோதிப்பிழம்பாக தோன்றி,""நீயும் உனது மனைவியும் திருமணம் காண வந்தோர் அனைவரும் இந்த ஜோதியில் கலந்து விடுக''என்று அருள்புரிந்தார்.
இந்த காட்சியைக்கண்ட ஞான சம்பந்தர் மெய்சிலிர்த்து
""காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது
வேத நான்கினு மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே''
எனத் தொடங்கும் நமசிவாய திருப்பதிகம் பாடி அனைவருக்கும் சிவலோகம் வழங்கி, தாமும் தன் துணைவியார் மங்கை நல்லாளுடன் சிவஜோதியில் கலந்தார். இந்த பதிகம் தான் சம்பந்தர் தன் வாழ்நாளில் பாடிய கடைசிப்பதிகமாகும்.
ஆண்டு தோறும் வைகாசி மூல விழாவில் இந்த காட்சி திருவிழாவாக நடக்கிறது.

இத்தல இறைவனை தரிசித்து செல்லும் பக்தர்களின் வாழ்க்கையில் தரித்திரம் நீக்கி, முக்தி கிடைப்பது நிச்சயம்.

போன்: +91- 4364 - 278 272

Uchi Natheswarar Temple at Tirunelvayil(Sivapuri) near Chidambaram (Paadal Petra Stalam)

அருள்மிகு உச்சிநாதர் திருக்கோயில்

மூலவர்:உச்சிநாதர் என்ற மத்யானேஸ்வரர்
அம்மன்:கனகாம்பிகை
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்
தேவாரப்பதிகம்
மறையி னார்மழு வாளி னார்மல்கு பிறையி னார்பிறை யோடி லங்கிய நிறையி னாரநெல் வாயிலார்தொழும் இறைவனாரெம் துச்சி யாரே.
-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 3வது தலம்.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

தலபெருமை:சிவபெருமான் அகத்தியருக்கு காட்சி தந்த தலங்களில் இதுவும் ஒன்று. சிவலிங்கத்தின் பின்புறம் சிவ பார்வதி திருமணக்கோலத்தில் அருளுகின்றனர். சம்பந்தர் சிதம்பரத்தில் தங்கியிருந்த காலத்தில் தினமும் இத்தலம் வந்து தரிசனம் செய்துள்ளார்.
சிதம்பரம் நகருக்குட்பட்ட ஒரு பகுதியில் நெல் வயல்கள் அதிகம் இருந்தன. அப்பகுதி"திருநெல்வாயில்' என அழைக்கப்பட்டது. தற்போது சிவபுரி எனப்படுகிறது. இங்கு தான் கோயில் அமைந்துள்ளது.
சக்தியிடம் ஞானப்பால் அருந்திய ஞானசம்பந்தருக்கு இறைவன் உணவளித்த தலம் இது.

தல வரலாறு:திருஞானசம்பந்தர், சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர்- பகவதி அம்மையார் தம்பதியரின் மகனாகப் அவதரித்தார்.
தனது மூன்றாம் வயதில் தந்தையுடன் சீர்காழி சட்டைநாதர் கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தத்திற்கு வந்தார். தந்தை இவரை குளக்கரையில் உட்காரவைத்து விட்டு, தான் மட்டும் நீராடச் சென்றார். அப்போது சம்பந்தருக்கு பசி ஏற்பட, "அம்மா! அப்பா!' என அழுதார்.
இவரது அழுகுரல் கேட்ட சிவன், பார்வதியை நோக்கி குழந்தைக்குப் பால் கொடுக்குமாறு கூறினார். அதன்படி சிவனுடன் சம்பந்தருக்கு தரிசனம் தந்து மெய்ஞானம் கலந்த பாலை புகட்டினாள் அம்பிகை. பசி தீர்ந்த சம்பந்தர் வாயில் பால் வழியன்அமர்ந்து விட்டார்.
குளித்து விட்டு வந்த தந்தை, ""பால் கொடுத்தது யார்? யாராவது ஏதாவது கொடுத்தால் வாங்கிச் சாப்பிடக்கூடாது என்பது உனக்குத் தெரியாதா? அபச்சாரம் செய்து விட்டாயே,'' எனச்சொல்லி குச்சியால் சம்பந்தரை அடிக்க கையை ஓங்கினார். சிவபார்வதி தரிசனம் தந்த திசையை நோக்கி கையை நீட்டிய சம்பந்தர், "தோடுடைய செவியன்' என்று பதிகம் பாடினார். தன் குழந்தைக்கு அம்பாளே பாலூட்டியது அறிந்து பரவசப்பட்டார் சிவபாதர். சம்பந்தருக்கு 12 வயதில் திருமணம் நிச்சயமானது.

மணமகள், உறவினர் மற்றும் சிவனடியார்கள் 63 பேருடன் சிதம்பரத்திலிருந்து ஆச்சாள்புரம் சிவன் கோயிலுக்கு அவர் சென்றார். செல்லும் வழியில், மதிய நேரம் உச்சிப்பொழுதாகி விட்டதால் பசியின் காரணமாக இவர்கள் அனைவரும் சிவபுரி திருத்தலத்தில் தங்கினர்.
சம்பந்தரும், அவருடன் வந்தவர்களும் பசியுடன் இருப்பதை அறிந்த இத்தல இறைவன், கோயில் பணியாளர் வடிவில் வந்து அனைவருக்கும் அறுசுவை விருந்தளித்தார். இதனால் இத்தல இறைவன் "உச்சிநாதர்' என்றும் "மத்யானேஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார்.
அம்மன் கனகாம்பிகை. இப்பகுதி மக்கள் இக்கோயிலை "கனகாம்பாள் கோயில்' என்று அழைக்கின்றனர்.

இக்கோயிலில், குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டினால், காலம் முழுமைக்கும் அந்தக் குழந்தையின் வாழ்வில் உணவுப்பிரச்னை வராது என்ற நம்பிக்கை இருக்கிறது.

போன்: +91- 98426 24580.